#திருக்_குர்ஆனின்_இதயமான_சூறா_யாஸீனில்_கூறப்பட்ட_இறைநேசர்_ஹபீபுன்_நஜ்ஜார்_ரலியல்லாஹு_அன்ஹு
தோற்றம்:- ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கி.மு 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள். இவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்க பாரம்பரியமுடையவர்களாகவும், உடல் நிலை குன்றியவர்களாகவும் இருந்தார்கள்.சில இமாம்களின் கருத்துப்படி ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இயற்பெயர்:- ஹபீப் பின் முர்ரா இவர்கள் தச்சுத் தொழில் செய்து வந்ததன் காரணமாக நஜ்ஜார் என்று சொல்லப்படுகிறது. சில இமாம்களின் கருத்துப்படி சிலை செய்து விற்பவராக இருந்தார்கள் ஆனால் சிலை வணங்குபவராக இல்லை என்றும் உள்ளது.
சிறப்புகள்:-
அல்லாஹ்விற்கு மாறு செய்யாத மூவர்களில் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர் ஆவார்கள்.
கல்புல் குர்ஆனாக(குர்ஆனின் இதயமாக) சூறா யாசீனுக்குறியவர் என்ற சிறப்பை ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்று இருக்கிறார்கள்.
முஹம்மது நபிﷺ அவர்களை நபியாவதற்கு முன்பே ஈமான் கொண்ட மூவர்களில் ஒருவராக ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திகழ்கிறார்கள்.
அந்தாக்கியா:-
அந்தாக்கியா நகரம் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்.
கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தாக்கியாவை நிறுவினார். இந்நகரம் மிகுந்த வளர்ச்சியடைந்து, மேற்கு ஆசியாவில் அலெக்சாந்திரியா நகரையே விஞ்சும் அளவுக்கு விரிவுற்றது. அந்தாக்கியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகர்களுள் ஒன்றாகும் (பிற நகர்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). அந்நகர மக்கள் "அந்தாக்கியர்" என்று அழைக்கப்பட்டனர்
ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வால் அழிக்கப்படும் முன் இருந்த அந்தாக்கியா என்னும் இந்நகரில் கடைக்கோடியில் வாழ்ந்துவந்தார்கள். இந்நகரத்தில் இவர்கள் வாழும் காலத்தில் அந்தீகஸ் இப்னு அந்தீகஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்! இந்த மன்னனின் தந்தை பெயரும் மன்னனின் பெயரும் ஒரே பெயர் தான். இவர் கொடுங்கோல் மன்னனாகவும் சிலை வணங்குபவராகவும் இருந்தார்.
அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள்:-
அந்தீஸ் இப்னு அந்தீகஸ் மன்னன் ஆட்சியில் அல்லாஹ் மூன்று நபிமார்களை அந்த மக்களுக்கு அனுப்பினான். அவர்கள் பெயர் பின்வருமாறு,
1. சாதிக் அலைஹிஸ்ஸலாம்
2. ஷதூக் அலைஹிஸ்ஸலாம்
3. ஸலூம் அலைஹிஸ்ஸலாம்
ஆனால் அந்த மக்கள் அல்லாஹ் அனுப்பிய நபிமார்களை பொய்யாக்கினார்கள்!
இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்!
وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.(Ya Sin 36:13)
إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.(36:14)
قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ
(அதற்கு அம்மக்கள்;) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.(Ya Sin 36:15)
قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ
(இதற்கு அவர்கள்;) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்.(Ya Sin 36:16)
وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
"இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை" (என்றும் கூறினார்).(Ya Sin 36:17)
قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
(அதற்கு அம்மக்கள்;) கூறினார்கள்; "நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்."(Ya Sin 36:18)
قَالُوا۟ طَٰٓئِرُكُم مَّعَكُمْۚ أَئِن ذُكِّرْتُمۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.(Ya Sin 36:19)
*_இறைநேசர் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறை நம்பிக்கை:-_*
இவ்வாறு மக்கள் அந்த மூன்று நபிமார்களை பொய் பித்து கொண்டு இருக்கையில் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மக்களிடம் வந்தார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடல் நலம் குன்றியவராக இருந்தார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மக்களிடம் அல்லாஹ் அனுப்பிய மூன்று நபிமார்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார்கள்!
ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிமார்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறியதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்
وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); "என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்.(Ya Sin 36:20)
ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ
"உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்" (என்றும் அவர் கூறினார்).(Ya Sin 36:21)
وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ
"அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.(Ya Sin 36:22)
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا وَلَا يُنقِذُونِ
"அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.(Ya Sin 36:23)
إِنِّىٓ إِذًا لَّفِى ضَلَٰلٍ مُّبِينٍ
"(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.(Ya Sin 36:24)
إِنِّىٓ ءَامَنتُ بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ
"உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்."Ya Sin 36:25
என்று ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆனால் அந்த மக்கள் இவற்றை செவியேற்காமல் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று விட்டார்கள்.
*_ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொல்லப்பட்டதை இமாம்கள் சொல்லி காட்டுகிறார்கள்:-_*
ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அந்த மக்கள் கீழே போட்டு அவர்களுடைய வயிற்றிலே மிதித்து கொன்றார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வயிற்றில் மிதித்தது எத்தகையது என்றால் அவர்கள் குடல் வெளியேறும் அளவுக்கு கொடுமைபடுத்தி கொன்றார்கள். மேலும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடல் நலம் குன்றியவராக இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَۖ قَالَ يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."(Ya Sin 36:26)
ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஷஹீதான பின்னர் அல்லாஹ் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறிய போதும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை அடித்து கொன்ற தன் சமுதாயத்தினர் மீது குரோதம் கொல்லாமல் தான் சொர்க்கத்தில் பிரவேசித்ததை தன்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று அல்லாஹ்விடம் கூறினார்கள்.
இதனாலேயே ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் *_இறந்த பிறகும் பேசியவர்_* என்று கருதப்படுகிறார்கள்.
*_அந்தாக்கியாவின் அழிவு:-_*
ஆனால் அல்லாஹ் தன்னுடைய நபிமார்களை பொய்பித்தவர்களையும் தன்னுடைய இறைநேசரை கொன்ற அந்த அந்தாக்கியா மக்களை அழிக்க நாடினான். அல்லாஹ் ஹசரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்தாக்கியா என்னும் ஊருக்கு அனுப்பினான்.
ஹசரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த நகரத்தின் கோட்டை நுழைவு வாயிலின் தூண்களை பிடுங்கி எறிந்தார்கள். பிறகு மிகப்பெரிய சப்தம் (போரொலியை) எழுப்பினார்கள்! அந்நகரமும் நகரமக்களும் சாம்பலாயினர்.
இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,
وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.(Ya Sin 36:28)
إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَٰمِدُونَ
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.(Ya Sin 36:29)
ஆகவே அல்லாஹ்வின் நபிமார்களை பொய்பித்ததாலும், அல்லாஹ்வின் நேசர்களை பகைத்தற்காகவும் அல்லாஹ் அழிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக மாறியது அந்தாக்கியா நகரம். அல்லாஹ் கூறுகிறான் எவர் என் நேசரை பகைக்கிறார்களோ அவர்களுடன் அல்லாஹ் யுத்தம் பிரகடனம் செய்வதாக கூறி இருக்கிறான். ஆகவே வலீமார்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி அல்லாஹ் குர்ஆனில் இந்த வரலாற்றை நினைவூட்டி எச்சரிக்கை செய்கிறான்.
*_வலீமார்களை நினைவு கூர்வதை அல்லாஹ் வலியுறுத்தி இருக்கிறான்:-_*
இன்று நாம் வலீமார்களின் தர்ஹா ஸியாரங்களுக்கு சென்றால் குர்ஆனின் கல்பாக விளங்கும் யாஸீன் சூராவை ஓதுவதும் அந்த கல்புல் குர்ஆனான யாசீன் சூராவில் வலியுல்லாஹ் ஹசரத் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நினைவு கூறும்படி அல்லாஹ் வைத்து இருக்கிறான். இது ஹசரத் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் விளங்கலாம்.
ஆக அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட அந்தாக்கியா நகரம் பிற்காலத்தில் அதாவது ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சீடர்களான ஹவாரீயூன்களில் மூவரை தூதர்களாக மீண்டும் அனுப்பி அந்த மக்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக ஏற்றுக் கொண்ட நகரங்களில் அந்தாக்கியா முதன்மையான நகரமாக மாறியது என்பைதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிய முடிகிறது.
மேலும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் உள்ளவர்கள் என்ற சிலரது கருத்தை விட ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்புக்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்தார்கள் என்ற கருத்தே வலிமையாக உள்ளது.
காரணம்:-
ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுப்பிய மூன்று தூதர்களையும் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அந்தாக்கியா மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்கள் அனுப்பிய தூதர்களையும் அவர்கள் பொய்பிக்க இல்லை. ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்ட நகரங்களில் முதன்மையான நகரமாக விளங்கும் நான்கு நகரங்களில் அந்தாக்கியாவும் ஒன்றாக விளங்கியது. ஆகவே அல்லாஹ் அவர்களை அழிக்கவில்லை. ஆகவே அழித்ததாக கூறும் அந்த அந்தாக்கியா ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்புகுக் 4 நூற்றாண்டிற்கு முன் இருந்த அந்தாக்கியா என்பது அதுவே அழிக்கப்பட்டது என்பது வலிமையான கருத்தாக உள்ளது!
எல்லாம் வல்ல அல்லாஹ் இறைநேசர்களின் மீதான அன்பும் கருணையும் அதிகரித்து இறைநேசரான ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பொருட்டால் நம்மை அல்லாஹ்வின் லஃனத்தில் இருந்து பாதுகாப்பானாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!
நன்றி-இறைநேசர்கள்
No comments:
Post a Comment