*வரலாற்றில் ஓர் ஏடு-341*
பெருமானாரின் குலக்கொழுந்து இமாம் ஹஸன் (ரலி) அவர்களுடைய பேரர் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களுக்கு ஹிஜ்ரி 145ம் ஆண்டு மக்காவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களும் அவர்களின் துணைவியார் ஜைனப் (ரஹ்) அவர்களும் மகிழ்ச்சி அடைந்து *நஃபீஸா* என பெயரும் வைத்தனர்.
நடக்கும் பருவத்தை நஃபீஸா அடைந்த போது அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு மதீனா வந்து, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித ரவ்ளாவின் முன் நின்று *("தலைவரே! தங்கள் பேத்தியை தாங்கள் பொருந்திக் கொள்ள வேண்டும்!" என்று கூறி)* ஜியாரத் செய்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
(ஒரு அறிவிப்பில் இரவில் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் *"உம்முடைய மகளை நான் பொருந்திக் கொண்டேன். அல்லாஹ்வும் உம் மகளை பொருந்திக் கொள்வான்!"* என கூறினார்கள்.)
வளர்ந்து எட்டு வயதை அடைகிற போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழாவாக ஆனார் நஃபீஸா.
பருவ வயதை அடைவதற்குள்ளாக அரபி இலக்கணம், இலக்கியம் போன்ற கல்வியைப் பயின்றார் நஃபீஸா.
பருவ வயதை அடைந்ததற்குப் பின்னர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் முஅத்தாவையும், ஹதீஸ் துறைக்கல்வியையும் பயின்று ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றார்கள்.
திருமண வயதைத் தொட்டு நிற்கிற போது மிகச் சிறந்த மார்க்க மேதையாக திகழ்ந்தார்கள்.
பலரும், பல செல்வந்தர்களும், பல பாரம்பர்யமான குடும்பத்தினரும் பெண் கேட்டு வந்த போதும் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்ட ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்கள்.
இறுதியாக இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரர் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்களின் மகனார் இஸ்ஹாக் அல் முஃதமன் (ரஹ்) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.
திருமணம் முடித்த பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நஃபீஸா (ரஹ்) அவர்கள் மதீனாவில் பல்வேறு மார்க்க சேவைகளை மக்களுக்கு ஆற்றி வந்தார்கள்.
எங்கு காணினும் இவர்களின் மார்க்க அறிவும், ஹதீஸ், தஃப்ஸீர் புலமையும் பரவலாக பேசப்பட்டு வந்தது. மதீனாவில் மிகப்பெரிய புகழை நஃபீஸா (ரஹ்) அவர்கள் பெற்றார்கள்.
வணக்க வழிபாடுகளில் மிகப்பெரிய பேணுதல் உள்ளவர்களாக திகழ்ந்ததோடு, எந்நேரமும் குர்ஆனை ஓதக்கூடியவர்களாகவும், அதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாகவும் விளங்கினார்கள்.
முப்பது ஹஜ் செய்திருக்கும் அவர்கள் இரவு வணக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
அவர்களின் 48 வது வயதில் ஹிஜ்ரி 193 ல் மதீனாவில் இருந்து மிஸ்ருக்கு கணவரோடு இடம் பெயர்ந்தார்கள். அங்கேயும் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். பல்வேறு மார்க்க மேதைகள் இவர்களிடம் கல்வி பயின்றார்கள்.
அதில் குறிப்பிடும் படியாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் பிஷ்ர் இப்னுல் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் நஃபீஸா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் வகுப்பில் பங்கேற்று ஹதீஸ் துறை சம்பந்தமான கல்வியைப் பெற்றார்கள்.
குறிப்பாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் இருந்து சில நபிமொழிகளை அறிவிக்கவும் செய்கின்றார்கள்.
மிஸ்ருக்கு வந்த புதிதில் ஆண்களும், பெண்களும் திரளாக வந்து அவர்களிடத்திலே கல்வி கற்க வருவதும் போவதுமாய் இருப்பார்கள். மிகப் பெரிய இட நெருக்கடி ஏற்பட்ட போது நஃபீஸா (ரஹ்) அவர்கள் மக்களிடம் *"அடிக்கடி வருவதை குறைத்துக் கொள்ளுமாறு"* கூறினார்கள்.
அப்போது மிஸ்ரின் ஆளுநராக இருந்த ஸாரி இப்னு அல் ஹிகம் அவர்கள் நேரில் வந்து *"உங்கள் மார்க்க சேவைக்காக நானே ஒரு விசாலமான வீட்டை வாங்கித் தருகின்றேன்!"* என்று கூறி ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தார்கள்
மேலும், நஃபீஸா (ரஹ்) அவர்கள் அஹ்லே பைத்தாக இருந்ததால் அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் ஒருவரை அனுப்பி *துஆ செய்யுமாறு* வேண்டிக்கொள்வார்கள். அனுப்பப்பட்ட அவர் வருவதற்குள்ளாகவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நோய் குணமாவதை உணரவும் செய்தார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது முன்பு போல ஒருவரை அனுப்பி நோய் குணமாக துஆச் செய்யுமாறு நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் கோரிக்கை வைத்த போது *"அல்லாஹ் அவருக்கு அவனுடைய சங்கையான திரு(முகத்தை) அனுபவிக்கச் செய்வானாக!"* என்று துஆச் செய்தார்களாம்.
இதை அந்த நபர் வந்து சொன்ன போது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து வஸிய்யத் செய்தார்கள்.
அந்த வஸிய்யத்தில் *தம்முடைய ஜனாஸாத் தொழுகையில் நஃபீஸா (ரஹ்) அவர்கள் பங்கேற்று தனக்காக துஆச் செய்ய வேண்டும்* என்று குறிப்பிட்டார்கள்.
அதே போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) இந்த உலகத்தை விட்டு விடை பெற்றதன் பின்னர் அவர்களின் ஜனாஸா நஃபீஸா (ரஹ்) அவர்களின் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டு அங்கேயே ஜனாஸாத் தொழுகையும் நடத்தப்பட்டது. நஃபீஸா (ரஹ்) வீட்டிலிருந்தவாறே ஜனாஸாத் தொழுகையை பின் தொடர்ந்து தொழுதார்கள்.
*"அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுக்கு அருள் புரிவானாக! இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் உளூவை அழகிய முறையில் செய்யக்கூடியவராக இருந்தார்கள்!"* என்று சிலாகித்துக் கூறி துஆச் செய்து விட்டு கடுமையாக அழுதார்களாம்.
மிஸ்ருக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து மகத்தான மார்க்க சேவை செய்து, பேணுதலான வாழ்க்கையை மேற்கொண்ட அம்மையார் ஹிஜ்ரி 208ம் ஆண்டு தங்களது பாட்டனார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வயதான 63ம் வயதில் நோய் வாய்ப்படுகின்றார்கள்.
அந்நிலையிலும் நோன்பு வைத்திருந்த அம்மையாரை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து விட்டு *"நீங்கள் உடனடியாக நோன்பு திறக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு மருத்துவம் பார்க்க முடியும்!"* என்று கூறினார்கள்.
நோன்பு திறக்க மறுத்த நஃபீஸா (ரஹ்) அவர்கள் *"அல்லாஹ்விடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக 'நான் நோன்பு வைத்த நிலையில் என் ரூஹ் பிரிந்து, ரப்பை சந்திக்க பிரியப்படுவதாக' நான் பிரார்த்தித்து வருகின்றேன்!"* என்று கூறினார்கள்.
மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் நோன்பு திறக்க மறுத்துவிடவே அங்கிருந்து மருத்துவர்கள் கிளம்பி விட்டார்கள்.
இதற்கிடையே தங்களின் வீட்டிலேயே தனக்கான மண்ணறையை அவர்களே தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
மருத்துவர்கள் கிளம்பியதும் குர்ஆனைக் கையில் எடுத்து சூரா அல் அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள் 128வது வசனமான *"அவர்களுக்கு அவர்களது ரப்பிடம் – இறைவனிடம் தாருஸ்ஸலாம் – சாந்தியின் இல்லம் உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லறங்களுக்காக! மேலும், அவன் அவர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்!"* என்ற வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது, நோன்பு நோற்றிருந்த நிலையில் அம்மையாரின் ரூஹ் பிரிந்தது.
இன்னா லில்லாஹ்…
தீனறிந்த மக்களுக்கு மத்தியில் *நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா* என்றழைக்கப்படும் அம்மையாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!!
(நூல்: அல் மவாயிளு, வல் இஃ(த்)திபாரு பி திக்ரில் ஹி(த்)ததி வல் ஆஸார் லி இமாமி அல் மக்ரீzஸீ)