ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 17 February 2020

ஆட்சியாளர் அபூபக்கரின் எளிமை

#ஒளி_வீசும்_நட்சத்திரங்கள் 

#செய்யதினா_அபூபக்கர்_சித்திக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்.

#அண்ணல் எம்பெருமானார் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. 

#அது_மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது...!!

அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு  பின் அபூபக்கர் சித்திக்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள்.!
 
அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.

மதீனாவை ஆட்சி செய்த  அபூபக்கர்(ரலியல்லாஹூஅன்ஹூ) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார்கள். 

அதைக் கண்ணுற்ற அவரின் தோழர் உமர் கத்தாப்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள், ‘தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?’ என்று வினவினார்கள்..!

‘உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்’ என்றார்.

‘ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும்போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை’ என்று உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்  ஆவேசமாக சொன்னார்கள்.

அதற்கு அபூபக்கர் (ரலியல்லாஹூஅன்ஹூ )அவர்கள், 

‘உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? 

எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன்’ என்றார்கள்.

‘அப்படியானால் தாங்கள் அரசாங்க கஜானாவிலிருந்து வேலை செய்வதற்கான எந்தப் பயனையும் அனுபவிப்பதில்லையா?’ என்று உமர் ரலியல்லாஹூ அன்ஹூ வினவினார்கள்.

‘நிச்சயமாக இல்லை. நபிகள் நாதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்  அரசாங்க கஜானாவில் இருந்து தன் சுய தேவைக்காக எதனையும் பயன்படுத்தியதில்லை.

தனக்கு மட்டுமல்ல, தன் வம்சாவழியினர் அனைவருக்குமே அதை ‘ஹராம்’ என்று தடை செய்திருக்கிறார்கள்.!

அவர்கள் நடைமுறைப்படுத்தாத ஒரு வழிமுறையை எப்படி நான் கையாள்வேன்?’ என்றார்கள் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ..

பின்னர், ‘இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது....!!
 
அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள்  காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலியல்லாஹூஅன்ஹூ ) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம்’ என்றார் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ..!!
 
பிறகு இருவருமே அபூஉபைதா (ரலியல்லாஹூஅன்ஹூ ) அவர்களை அணுகினார்கள்.

விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள், ‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் ஆகும் என்றாக்கப்படவில்லை.

 
குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. 

எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலியல்லாஹூஅன்ஹூ ) அவர்கள் மாதாமாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம்..!

 வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை’ என்று தீர்ப்பு சொன்னார்கள்.

அதோடு ஒரு சிறு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

அரசாளும் மன்னனாயிருந்தாலும், மதி நுட்பத்தால் ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்கிறார் என்றால், 

அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பதுதான் நபித்தோழர்கள் கலீபாக்களாய் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது. 

அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்  அந்தத் தீர்ப்புக்கு தலைச்சாய்த்தார்கள்.

சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.,,

அப்போது, அன்னாரின் துணைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் முன் வைத்தார்கள்.

‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார் அபூபக்கர்(ரலியல்லாஹூஅன்ஹூ) அவர்கள்.

‘யாரும் தரவில்லை. நானேதான் தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் மனைவியார்.

‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கடிந்து கொண்டார்கள் அபூபக்கர் சித்திக்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள்.

அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். அளவிற்கு அதிகமாய்ப் பெற்ற தொகையில் செய்த இனிப்பையும் உண்ண மறுத்துவிட்டார்கள்..!

நபித்தோழர்களின் இது போன்ற நன்னடத்தைகள் இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அபூபக்கர் (ரலியல்லாஹூஅன்ஹூ அவர்கள் )அவர்கள், தான் மரணிக்கும் தருவாயில் தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த,,,

அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள், மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்..!

அவர்களின் பின்னால் அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர்(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் ‘அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். 

இனி ஆட்சிக்கு வரும் எவரும் அவர் வகுத்த எளிமையை மீற முடியாது. இப்பொருட்கள் தவிர்த்து எதனையும் நான் பயன்படுத்தமாட்டேன்’ என்றார்கள்....!!

ஸுப்ஹானல்லாஹ்..!!

#பரிசுத்தமான கலீபாக்கள் வாழ்க்கை  அல்லாஹ் ரஸூலுக்கு கட்டுபட்ட இறையச்சம்  உடையதாக இருந்தது...!!

(நூல்: ஸஹாபாக்கள் வரலாறு)

(கீழே உள்ள படம் அபூபக்ர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வீடு..மதினா)

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

ஸித்றத்துல் முன்தஹா

Wednesday, 12 February 2020

வீர மங்கை உம்மு ஹகீம்

வீராங்கனை
===========

ஹிஜ்ரி 14ஆம் வருடம். டமஸ்கஸ் நகருக்கு அருகில் இருக்கும் முர்ஜுஸ் ஸஃபர் எனும் பகுதி. ரோமப் படை எப்போது வேண்டுமென்றாலும் போர் தொடுக்காலம் எனும் பதட்டச் சூழல்.

விதவையான உம்மு ஹகீம் (ரலி) அவர்களை தளபதி காலித் பின் சயீத் (ரலி) மணமுடிக்க நாடினார். முதலில் மறுத்து பின்னர் சம்மதம் தெரிவித்தார் உம்மு ஹகீம் (ரலி).

மணமுடித்த அன்றே தாம்பத்திய வாழ்வைத் துவங்க நாடினார் சயீத் (ரலி). ஆயினும் உம்மு ஹகீமுக்கு உள்ளுக்குள் ஒரு தயக்கம். மறுத்தார்.

உம்மு ஹகீம் (ரலி): "இந்த ரோமப் படையை அல்லாஹ் தோற்கடிக்கும் வரை காத்திருக்கலாமே".

சயீத் (ரலி): "இந்தப் போரில் நான் ஷஹீதாவேன் என்று என் உள்மனம் உரக்கக் கூறுகிறது".

"அவ்வாறெனில் தங்கள் விருப்பம்".

துவங்கியது இல்லற வாழ்வு. மறுநாள்... தோழர்களுக்கு வலீமா விருந்து படைக்கப்பட்டது. விருந்து முடிந்த சற்று நேரத்திலேயே.. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க ரோமப் படையினர் தயாராக நிற்கின்றார்கள் என்ற செய்தி வருகிறது.
 
ஆயுதம் தரித்தார் புதுமாப்பிள்ளை. போர் களம் நோக்கி விரைந்தார். வீராவேசமாகப் போரிட்டார். எனினும் அவர் மனம் கூறியது போன்றே அந்தப் போரில் ஷஹீத் ஆகும் பாக்கியம் பெற்றார்.

மணப்பெண் உம்மு ஹகீம் அந்நேரம் என்ன செய்துகொண்டிருந்தார்? வெட்கத்தை ஆடையாக மூடிக்கொண்டு மணவறையில் இருந்தாரா..? இல்லை. போர்களத்தில் அங்குமிங்கும் ஓடியாடி காயமடைந்த வீரர்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தார் மணப்பெண்.

நேற்றுதான் திருமணம் நடந்தது. இன்று கணவன் ஷஹீத் ஆகிவிட்டார். செய்தி கிடைத்ததும் உம்மு ஹகீம் என்ன செய்தார் தெரியுமா?

தமது ஆடையை இறுக்கிக் கட்டினார். திருமணத்திற்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்து ஒரு பெரிய தடியை உருவினார். ரோம வீரர்களை ஆக்ரோஷத்துடன் தாக்கத் துவங்கினார். ஆண் வீரர்களைப் போன்று போரிட்டார்.

கையில் வைத்திருந்த தடியால் ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு ரோம வீரர்களைக் கொன்றார். இந்த வீராங்கனையின் ஆக்ரோஷத்தைப் பார்த்த ரோம வீரர்கள் போர் களம் விட்டு விரண்டோடத் துவங்கினர். அதேவேளை, முஸ்லிம் வீரர்களுடைய உள்ளங்களில் இந்தக் காட்சி புது இரத்தம் பாய்ச்சியது. பெரும் வெற்றி கிட்டியது.

என்ன ஒரு மணப்பெண்..! என்ன ஒரு வீரம்!! அதுதான் எவ்வளவு அற்புதமான திருமண நாள்!!!

"ஏழு பேரைக் கொன்ற வீர மங்கை" என்று பட்டப் பெயர் சூட்டி உம்மு ஹகீமை வரலாறு உச்சி முகர்கிறது.

சங் பரிவார் உருவாக்க முயலும் கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஷாஹீன் தோட்டத்தில் போராடும் இன்றைய வீரமங்கைகள் நினைவுக்கு வந்தால்.. ஒன்றை மறந்து விடாதீர்கள்.. 

நாம் கோழைகள் அல்ல! வீரம் செறிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாம். உம்மு ஹகீமின் சகோதரிகள்தான் இன்றை ஷாஹின் தோட்டத்தின் வீர மங்கைகள் என்பதையும் நினைவில் வையுங்கள்!

நூஹ் மஹ்ழரி
14-02-2020

வீரத் தாய் அஃப்ரா (ரளி)

#இஸ்லாமிய வரலாறு போற்றும் வீர ஸஹாபா பெண்மணிகள்.

#அஃப்ரா பின்த் உபைத் ரலியல்லாஹு  அன்ஹா*

#மதீனாவைச் சேர்ந்தவர்கள் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தின் நஜ்ஜார் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாரித் இப்னு ரிஃபாஆ என்பவருடன் இவருக்கு முதல் திருமணம் நிகழ்வுற்றது. 

#இந்தத்_தம்பதியருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர் - முஆத், முஅவ்வித், அவ்ஃப். இந்த மூன்று சகோதரர்களுமே முஆத் இப்னு அஃப்ரா, முஅவ்வித் இப்னு அஃப்ரா, அவ்ஃப் இப்னு அஃப்ரா என்றே தாயின் பேறு ('குன்னியத்') பெயரால் அறியப்பட்டிருக்கிறார்கள்.

#பின்னர் அல்-ஹாரிதிடம் மணவிலக்குப் பெற்ற அஃப்ரா அம்மையார்  மதீனாவிலிருந்து கிளம்பி மக்காவுக்குச் சென்றுவிட்டார். அங்கு மக்காவைச் சேர்ந்த அல்-புகைர் இப்னு அப்து யாலீல் அல்லைதீ என்பவருடன் மறுமணம் நிகழ்ந்திருக்கிறது...!!

#இருவருக்கும் நான்கு மகன்கள் பிறந்தனர் - ஆகில், காலித், இயாஸ், ஆமிர். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சிப்பெற்று ரகசியமாய்ப் பரவிக் கொண்டிருந்த ஆரம்பத் தருணங்களிலேயே இந்நால்வரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்...!!!

#அதனால் முதல் முஸ்லிம்கள் என்று ஏற்பட்டுப்போன சிறப்பு ஒருபுற மிருக்க, பதின்மூன்று ஆண்டுகள் கழித்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன்களில் இவர்களும் இணைந்துகொள்ள, அவர்களோடு இணைந்து கொண்டது ‘ஹிஜ்ரத்’ சிறப்பும்..*

இஸ்லாமிய வரலாற்றின் முதல் முக்கியப் போரான பத்ருப் போர். முந்நூற்று பதின்மூன்று பேர் கொண்ட முஸ்லிம் படை பத்ரு நோக்கிச் சென்றது. அந்தப் படையில் அஃப்ரா அம்மையாரின்  அனைத்து மகன்களும் ஆஜர்!

#தாய்ப்பாலுடன், வீரத்தைக் கலக்கி ஊட்டியிருந்திருக்கிறார் அஃப்ரா ரலியல்லாஹு அன்ஹா.

#பத்ருக் களத்தில் ஒருபுறம் ஆயிரத்துக்கும் மேலான போர் வீரர்களுடன் வலிமை வாய்ந்த, வெறிகொண்ட குரைஷிப் படை. மறுபுறம் மிகச் சொற்ப வீரர்களுடன், 

#போதுமான போர்த்தளவாட வசதிகூட இல்லாமல் முஸ்லிம்களின் எளிய படை. ஆனால் அவர்களின் நெஞ்சம் மட்டும் ஈமானிலும் வீரத்திலும் புடைத்திருந்தது...!!

#இறை நாட்டப்படி
பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில் பரவிக் கிடந்தன.

#குரைஷியர்களில் இறந்தவர்கள், சிறைபிடிக்கப் பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் ஓடிப் போயிருந்தார்கள்..!!!!

#கொடியவன் அபூஜஹ்லு என்ன ஆனான் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்கள்,,, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...!!

“#அபூஜஹ்லு என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?”

உடனே கிளம்பி ஓடினார்கள்,?? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.,,, சடலங்களுக்கு இடையே தேட, குற்றுயிராகக் கிடந்தான் அபூஜஹ்லு.,,,,

அவன் மேல் ஏறி அமர்ந்த இப்னு மஸ்ஊத், அவன் தலையைக் கொய்ய, அவனது கதைக்கு பெரியதொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது....!!!

அபூஜஹ்லின் மரணம் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான செய்தி. அவர்களுக்குள் உற்சாகம் தொற்ற வைத்த நிகழ்வு. குரைஷித் தலைவர்களில் ஒருவனான, வலிமையான, அபூஜஹ்லை அந்தப் போரில் வீழ்த்திச் சாய்த்து, உருக்குலைத்தது யார் என்று முஸ்லிம்கள் விசாரிக்க,,,,,

“இரண்டு இளைஞர்களாம்;
சகோதரர்களாம்”
என்று விவரம் தெரியவந்தது.

“யார் அவர்கள்?”

“முஆத், முஅவ்வித். அஃப்ராவின் மகன்களுள் இருவர்.”

முஆத், முஅவ்வித் மட்டுமின்றி அந்தச் சகோதரர்கள் அனைவருமே அவர்களின் தாயார் அஃப்ராவின் பெயரால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது இங்கு ஒரு சுவையான தகவல். 

இன்னாரின் மகன் இன்னார் என்று தந்தையின் பெயரைக்கொண்டே அமைவது அரபு குல வழக்கம். இந்தச் சகோதரர்களுக்கு மட்டும் விலக்காய் அந்தச் சிறப்பு அமைந்தது,

‘எப்பேறு பெற்றாள் இத்தாய்’ !

நபியவர்களிடம் அஃப்ரா ரலியல்லாஹூ அன்ஹா கேட்ட ஒற்றைக்கேள்வி அப்படித்தான்

குரைஷிகளில் எழுபதுபேர் கொல்லப்பட்டு, எழுபதுபேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர்....

முஸ்லிம்களின் தரப்பில் இழப்பு, பதினான்கு தோழர்கள். பதினான்கில் மூன்று பேர் அஃப்ராவின் மகன்கள் - முஆத், முஅவ்வித், அஃகீல்.

“நம் சமுதாயத்தின் பிர்அவ்னைக் கொல்வதற்குப் பங்காற்றிய அஃப்ராவின் இரு மகன்களின் மீதும் அல்லாஹ் தன் கருணையைப் பொழிவானாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.

அவனைக் கொல்வதில் வேறு யார் யார் பங்காற்றினார்கள் என்று கேட்கப்பட்டபோது,

“வானவர்களும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும்.”

மூன்று மகன்களை இழந்த சோகத்தில் இருக்கும் அஃப்ராவின் இல்லத்துக்கு நபியவர்களின் மனைவி அன்னை ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா சென்று ஆறுதல் கூறி உதவியிருக்கிறார். 

ஆனால், உயிர்த் தியாகிகளுக்கான ஒப்பற்ற மறுமை வாழ்வைப்பற்றி கேட்டு உறுதி பூண்டிருந்த அஃப்ரா ரலியல்லாஹு  அன்ஹாவுக்கு  இந்த இழப்பு அளித்த தாக்கத்தைவிட, 

தம் மூன்று புதல்வர்கள் உயிர்த் தியாகிகளாகிப் போனது ஆறுதலாகவும் பெரும் ஆனந்தமாகவுமே இருந்திருக்கிறது. 

அவரது கவலையெல்லாம் போரிலிருந்து உயிருடன் திரும்பிவிட்ட மற்ற மகன்களைப் பற்றி என்பதுதான் பேராச்சரியம்....!

நபியவர்களைச் சந்தித்த அஃப்ரா ரலியல்லாஹு  வினவினார். ஒற்றைக் கேள்வி.,,

 “அல்லாஹ்வின் தூதரே! உயிருடன் இருக்கும் என் மகன்கள் இறந்துபோன என் மகன்களைவிட தாழ்ந்தவர்களா?”

“இல்லை” என்றார்கள் நபியவர்கள்.

அந்த ஒற்றை பதிலில் நிம்மதி அடைந்தது அந்தத் தாயின் நெஞ்சு!

மகன்கள் பட்டம் பெறவேண்டும்; பெரும் பதவி அடைய வேண்டும்; செல்வந்தனாக வேண்டும்  என்ற எந்த  எண்ணமும்  இல்லை...!!!

இறைவனுக்காகவும் அவன் தூதருக்காகவும் தம் உடல், பொருள், உயிர், என்பதெல்லாம் மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளையும் அணிவகுத்து அனுப்பி மகிழ்ந்திருக்கிறார்கள் அந்த அன்னையர்.!!

*பிள்ளைகளின் மனத்திலும் உடலிலும் வீரத்தைப் பூசிப்பூசி உரமேற்றியிருக்கிறார்கள்*

அதனால்தான் இறந்துபோன மகன்களை நினைத்துப் பெருமிதமும், உயிருடன் மீந்து நிற்கும் மகன்களை நினைத்து வருத்தமும் அடைந்திருக்கிறார் தியாகிகளின் வீரத்தாய் அஃப்ரா பின்த் உபைத் ரலியல்லாஹூ  அன்ஹா அவர்கள்...!!

பிற்காலத்தில் யமாமா, மஊனாக் கிணறு போர்களில் மற்ற நான்கு மகன்களும்கூட வீரமரணம் எய்தியாகக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
‘எப்பேறு பெற்றார்கள் இத்தாய்’! ரலியல்லாஹு அன்ஹா!
(ஸஹாபாக்களின் சரிதை)

இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்க சோலைகளாகும்... அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.

அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.

அல்குர்ஆன் 98:8,9

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது 
யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

ஸித்றத்துல் முன்தஹா