ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 20 January 2022

தியாகப்பெண்மணிகள்

பெருக்கெடுத்து ஓடிய பேரருள்கள்!
===========================

மனைவி மரணித்தபோது உமர் முக்தார் அழுதார்.
மக்கள் கேட்டனர்: "ஏன் அழுகின்றீர்?"

அவர்: "இத்தாலியர்களுக்கு எதிரான போரில் இருந்து ஒவ்வொரு முறையும் கூடாரத்திற்கு நான் திரும்பி வரும்போதெல்லாம், கூடாரத்தின் வாயில் திரையை எனக்காக அவர் உயர்த்திப் பிடிப்பார். ஏன் இவ்வாறு செய்கின்றீர்? என்று நான் அவரிடம் கேட்டபோது: அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கு முன்பாகவும் எனது கணவரின் தலை குனியக் கூடாது. தலை நிமிர்ந்துதான் இருக்கவேண்டும் என்பதற்காக. ஆகவேதான் அழுகிறேன்".

கன்ஸா (ரலி). இஸ்லாத்திற்கு முன் சகோதரரின் மரணத்திற்காக இவர் அழுத அழுகை அரபுத் தீபகற்பத்தையே அதிர வைத்தது. இஸ்லாத்திற்குப் பின்.. அவரது நான்கு மகன்கள் ஒரே போரில் ஷஹீத் ஆகின்றார்கள். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. "இறை மார்க்கத்திற்காக அல்லவா எனது மகன்கள் உயிர் விட்டனர். அல்லாஹ் நற்கூலி தருவான். மறுமையில் அவர்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன்" என்றார்.

உம்மு கல்லாத் (ரலி). போரில் கணவனும், பிள்ளைகளும் சகோதரனும் ஷஹீதாகின்றார்கள். ஆயினும் போர்க்களத்தில் இருந்து திரும்புவோரிடத்தில் அவர் கேட்ட கேள்வி: "அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கின்றார்கள்?" என்பதுதான். "அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள்" என்ற பதில் வந்தபோது. "அல்ஹம்து லில்லாஹ்! அது போதும். இனி எந்தத் துன்பம் வந்தாலும் எனக்கு அது தூசிதான்" என்றார்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் கொலை செய்து உடலை சிதைத்துவிடுவான் என்ற பதட்டம் நிலவியபோது, தாயார் அஸ்மா (ரலி) அவர்களிடம், "என்ன செய்வது? என்று ஆலோசனை கேட்கிறார் மகன். அவர் கூறினார்: "அருமை மகனே! ஆட்டை அறுத்தபின் தோலை உரித்தால் அதற்கு வேதனைத் தெரியவாபோகிறது? ஹஜ்ஜாஜுக்கு எதிரான போரில் ஒருபோதும் நீ பின்வாங்காதே. அவன் உன்னைக் கொலை செய்தாலும் சரியே".

செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி). கணவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். கரத்தாலும் கருத்தாலும், உடலாலும் உடமையாலும் கணவருக்கு பெரும் உறுதுணையாக நின்றவர். அபூதாலிப் பள்ளத்தாக்கில் மூன்று வருட ஊர்விலக்கு. உணவு தடுக்கப்பட்டபோதும்.. இலைகளைத் தின்று உதடுகள் வெடித்தபோதும்.. ஊறப்போட்ட தோல்களைச் சாப்பிட்டு வயிறு புண்ணாகிப்போனபோதும்.. அதிருப்தியின் ரேகைகளே தென்படாமல் அனைத்தையும் புன்னகையால் எதிர்கொண்டவர். வரலாற்றில் மிகச் சிறந்த மனைவி. 

இஸ்லாம் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடையுமா என்று தெரியாத காலத்தில் இஸ்லாத்திற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த முதல் உயிர் தியாகி ஸுமைய்யா (ரலி).

ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெருக்கெடுத்து ஓடிய பேரருள்கள் இவர்கள். பெரும் முன்மாதிரிகள். 

இதுபோன்ற நாயகிகள் இன்று எவ்வளவு தேவைப்படுகின்றார்கள்..?

தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னால் தொலைந்துபோன நம் சகோதரிகளுக்கு இந்த  வரலாறுகளை யார் சொல்லிக்கொடுப்பது?