ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 12 February 2020

வீர மங்கை உம்மு ஹகீம்

வீராங்கனை
===========

ஹிஜ்ரி 14ஆம் வருடம். டமஸ்கஸ் நகருக்கு அருகில் இருக்கும் முர்ஜுஸ் ஸஃபர் எனும் பகுதி. ரோமப் படை எப்போது வேண்டுமென்றாலும் போர் தொடுக்காலம் எனும் பதட்டச் சூழல்.

விதவையான உம்மு ஹகீம் (ரலி) அவர்களை தளபதி காலித் பின் சயீத் (ரலி) மணமுடிக்க நாடினார். முதலில் மறுத்து பின்னர் சம்மதம் தெரிவித்தார் உம்மு ஹகீம் (ரலி).

மணமுடித்த அன்றே தாம்பத்திய வாழ்வைத் துவங்க நாடினார் சயீத் (ரலி). ஆயினும் உம்மு ஹகீமுக்கு உள்ளுக்குள் ஒரு தயக்கம். மறுத்தார்.

உம்மு ஹகீம் (ரலி): "இந்த ரோமப் படையை அல்லாஹ் தோற்கடிக்கும் வரை காத்திருக்கலாமே".

சயீத் (ரலி): "இந்தப் போரில் நான் ஷஹீதாவேன் என்று என் உள்மனம் உரக்கக் கூறுகிறது".

"அவ்வாறெனில் தங்கள் விருப்பம்".

துவங்கியது இல்லற வாழ்வு. மறுநாள்... தோழர்களுக்கு வலீமா விருந்து படைக்கப்பட்டது. விருந்து முடிந்த சற்று நேரத்திலேயே.. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க ரோமப் படையினர் தயாராக நிற்கின்றார்கள் என்ற செய்தி வருகிறது.
 
ஆயுதம் தரித்தார் புதுமாப்பிள்ளை. போர் களம் நோக்கி விரைந்தார். வீராவேசமாகப் போரிட்டார். எனினும் அவர் மனம் கூறியது போன்றே அந்தப் போரில் ஷஹீத் ஆகும் பாக்கியம் பெற்றார்.

மணப்பெண் உம்மு ஹகீம் அந்நேரம் என்ன செய்துகொண்டிருந்தார்? வெட்கத்தை ஆடையாக மூடிக்கொண்டு மணவறையில் இருந்தாரா..? இல்லை. போர்களத்தில் அங்குமிங்கும் ஓடியாடி காயமடைந்த வீரர்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தார் மணப்பெண்.

நேற்றுதான் திருமணம் நடந்தது. இன்று கணவன் ஷஹீத் ஆகிவிட்டார். செய்தி கிடைத்ததும் உம்மு ஹகீம் என்ன செய்தார் தெரியுமா?

தமது ஆடையை இறுக்கிக் கட்டினார். திருமணத்திற்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்து ஒரு பெரிய தடியை உருவினார். ரோம வீரர்களை ஆக்ரோஷத்துடன் தாக்கத் துவங்கினார். ஆண் வீரர்களைப் போன்று போரிட்டார்.

கையில் வைத்திருந்த தடியால் ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு ரோம வீரர்களைக் கொன்றார். இந்த வீராங்கனையின் ஆக்ரோஷத்தைப் பார்த்த ரோம வீரர்கள் போர் களம் விட்டு விரண்டோடத் துவங்கினர். அதேவேளை, முஸ்லிம் வீரர்களுடைய உள்ளங்களில் இந்தக் காட்சி புது இரத்தம் பாய்ச்சியது. பெரும் வெற்றி கிட்டியது.

என்ன ஒரு மணப்பெண்..! என்ன ஒரு வீரம்!! அதுதான் எவ்வளவு அற்புதமான திருமண நாள்!!!

"ஏழு பேரைக் கொன்ற வீர மங்கை" என்று பட்டப் பெயர் சூட்டி உம்மு ஹகீமை வரலாறு உச்சி முகர்கிறது.

சங் பரிவார் உருவாக்க முயலும் கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஷாஹீன் தோட்டத்தில் போராடும் இன்றைய வீரமங்கைகள் நினைவுக்கு வந்தால்.. ஒன்றை மறந்து விடாதீர்கள்.. 

நாம் கோழைகள் அல்ல! வீரம் செறிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாம். உம்மு ஹகீமின் சகோதரிகள்தான் இன்றை ஷாஹின் தோட்டத்தின் வீர மங்கைகள் என்பதையும் நினைவில் வையுங்கள்!

நூஹ் மஹ்ழரி
14-02-2020

No comments:

Post a Comment