* அஹ்லுல் பைத் என்றால் யார்?
இது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாரை குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவர்.
என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை என்ற வசனம் இறங்கிய போது, யா ரசூலல்லாஹ்!! நாங்கள் அன்பு வைக்க கடமையாக்கப்பட்ட உங்களின் குடும்பத்தார்கள் யார்? என்று ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள், அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه என்று பதிலளித்தார்கள்.
ஒரு முறை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலி رضي الله عنه, பாத்திமா رضي الله عنه, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோர் இருந்தனர். அப்போது அவ்விருவரையும் தமது மடியில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, “நபியுடைய குடும்பத்தார்களே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.” 33: 33
இந்த ஆயத்தை ஓதிய பிறகு இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லுல் பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தபடுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
இதிலிருந்து நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தவர்களை அல்லாஹுதஆலா பரிசுத்தப்படுத்தியும், பாவம் என்பதே இன்னதென அறியாதபடியும் ஒரு குறைவும் இல்லாத படியும் செய்திருப்பது இந்த வசனங்களின் மூலம் நமக்கு தெளிவாகிறது.
உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)
என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.
என்று நபிகள் நாயகம்
صلى الله عليه وسلم
அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.
* அஹ்லுல் பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி
• முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)
• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)
அஹ்லுல் பைத்துகளின் மகத்துவம்
• ஃபாத்திமா رضي الله عنه அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.
(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)
• ஹஸன், ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.
(திர்மிதி, மிஷ்காத்)
* கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் உடல் அமைப்பை கொண்ட அருமை பேரர்கள்.
ஸெய்யதுனா ஹஸன் رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். என்று இமாம் அலி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, மிஷ்காத்)
* அஹ்லுல் பைத்துகளை பின்பற்ற வேண்டும்
“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)
ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)
நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் நிரப்பமான கூலியை பெறவேண்டும் என்று விரும்பினால் அவர், “இறைவா! நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மீதும், முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும், அவர்களின் பிச்சிளங்களின் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்துகளின் மீதும் ஸலவாத்து சொல்வாயாக. என்று கேட்க வேண்டும். (மிஷ்காத் 87) எனவே தொழுகையில் பெருமானார் மீது ஸலவாத்து சொல்லும்போது அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்ல வேண்டும். என்று ஏவப்பட்டுள்ளோம். இந்த கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, “ரசூலுல்லாஹ்வின் அஹ்லுல் பைத்துகளே! உங்களை நேசிப்பதே ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். என்று இறை வசனம் இறங்கி இருப்பதும் உங்கள் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்” என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள்.
* அஹ்லு பைத்துகள் சிறந்த வஸீலாவாகும்.
“பெருமானாரின் பரிசுத்த குடும்பத்தினர் தான் நான் இறைவனை சென்றடைவதற்குரிய வஸீலாவாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொருட்டால் மறுமை நாளையில் எனது பட்டோலை வலது கரத்தில் கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கின்றேன்” என்று இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
குர்ஆனையும் ஹதீஸ்களையும் நன்றாக ஆய்ந்து தெளிந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமக்கு மறுமையில் வெற்றி கிடைப்பதற்கு தமது வணக்கத்தையோ தாம் இஸ்லாத்திற்கு செய்த பெரும் சேவைகளையோ வஸீலா என்று கூறவில்லை. மாறாக அஹ்லு பைத்துகள் தான் எனக்கு வஸீலா என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் வணக்கங்களை வஸீலாவாக்குவதை விட அஹ்லு பைத்துகளை வஸீலாவாக்குவது மிக்க மேலானது.
பெருமானாரின் குடும்பம் மீது அன்பு.
என் ஆத்மா எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். பெருமானாரின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி)
*ஸாதாத்துமார்கள் என்றால் யாரை குறிக்கும்?
ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு கூறப்படும். அஸ்ஸய்யிதானி என்பது அலி رضي الله عنه அவர்களின் அருமைச் செல்வங்களான ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோரை குறிக்கும்.
பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார்கள்.
* ஸாதாத்துமார்களின் சிறப்பு
ஸாதாத்துமார்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்த இரத்தத்தில் இருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கின்றது. என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களின் மரியாதையை குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. எனவே ஸாதாத்துமார்களை பற்றி மாண்புகளை நாம் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பது மிக பெரிய கடமையாகும்.
: அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)
• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)
• உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
(தைலமி)
இப்போது கூறப்பட்ட நபிமொழிகளின் படி நாங்கள் அஹ்லுல் பைத்துகளிடம் அன்பாக நடந்துக்கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களை பற்றிப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல், செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும். என்றும் உணர்த்துகிறது.
* தொழுகையில் அஹ்லுல் பைத்துகள் மீது ஸலவாத் சொல்லாவிட்டால்
“நாயகமே! நாங்கள் எங்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது எவ்வாறு சொல்ல வேண்டும்?” என்று ஸஹாபா பெருமக்கள் கேட்க, அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஸலவாதே இப்ராஹிமாவை ஒதிகாட்டி தனது குடும்பத்தாரின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 405 வது ஹதீஸ் விளக்கம்)
கியாமத்து நாள் வரை தொடர்ந்து வரும் சந்ததிகள்.
கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதத்தை நிலை நாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார்.
(மிஷ்காத்)
மஹ்தி அலைஹி ஸலாம் என் பிச்சிளத்தை சார்ந்தவர். ஃபாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர்.
(மிஷ்காத் – 470)
* பரிசுத்தமான பாரம்பரியம்
இவ்வுலகில் வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் எவரும் தமது பரம்பரைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து தமது பாரம்பரிய பட்டியலை பாதுக்காத்து வைத்திருப்பதில்லை. ஆகவே சிலருக்கு தன் தந்தையுடைய தந்தையின் பெயரே தெரியாது. ஆனால் இவ்வுலகின் பல திக்கிலும் பரவி இருக்கின்ற ஸாதாத்மார்கள் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் முதல் தாம் வரையுள்ள பாரம்பரியப்பட்டியலை ஆதாரத்துடன் அழகுற கூறுவதை காண முடியும். இதுவும் ஸாதாத்மார்களை இவ்வுலகில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கும் இடையில் எவ்வித கலப்படமும் இன்றி நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்தமான உதிரத்தில் உதித்திக் கொண்டு இருப்பவர்கள் என்பதற்கும் நல்ல சான்றாகும்.
அஹ்ரார்கள்.
அஹ்ரார்கள் என்பதற்கு சுதந்திரமானவர்கள் என்பது அகராதி பொருள். அதாவது நரகத்தில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்கள் என்பதாகும். அவர்கள் நரகில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு இரு காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று இவ்வுலகிலேயே இறைவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பது. இரண்டாவது பெருமானாரின் புனிதமிகுந்த சதைத் துண்டிலிருந்து உற்பத்தியானவர்களாக இருப்பது.
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தார்களை சகல அசுத்தங்களிலிருந்தும் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி விட்டதாக வல்ல ரஹ்மான் திரு மறையில் குறிப்பிட்டு காட்டுகின்றான். அஹ்ஸாப் – 33
இறைவனால் இவ்வுலகிலேயே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் எப்படி நரகம் செல்ல முடியும்? மேலும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரை பார்த்து நரகம் தீண்டாது என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கையில், நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சதைத்துண்டாக இருக்கின்ற பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளான ஸாதாத்துமார்களையும் நரகம் எப்படி தீண்டும்?
* வள்ளல் நபி صلى الله عليه وسلم அவர்கள் வம்சத்தின் வளாமார் விஷேசம்
இவ்வுலகில் உதித்த வலிமார்களில் பெரும்பான்மையானவர்கள் அஹ்லு பைத்தை சார்ந்தவர்களாக இருப்பது இந்த வம்சத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக் காட்டாகும். இலட்சக்கணக்கான இதயங்களில் ஈமானிய தீபத்தை ஏற்றி நானிலம் போற்றும் நாதாக்களாக இருக்கின்ற கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஏராளமான குதுபுமார்கள்
இப்புனிதம் நிறைந்த பாரம்பரியத்தில் பூத்த பெருமைக்குரிய மலர்களாகும்.
* ஸாதாத்துமார்களின் சேவை
ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸைய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்களின் பேரப்பிள்ளைகளான அஹ்லு பைத்துகள் பஸராவிலிருந்து இடம் பெயர்ந்து உலகின் நாளா பகுதிக்கும் சென்று தீன் பனி புரிந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் வியாபார நோக்கோடும் பல பாகங்களுக்கும் சென்று அதனூடே தீன் பணியை நிலைநாட்டினார்கள். கவாரிஜிகள் போன்ற கொள்கை கெட்ட கூட்டத்தாருடன் போராடி இஸ்லாமிய நேரிய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்ட கடும் பாடுபட்டார்கள். மேலும் நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். இதற்கு கர்பலா நிகழ்ச்சியோன்றே போதுமான ஆதாரமாகும். தங்களின் பாட்டனாரால் நட்டப்பட்ட இஸ்லாம் என்ற விருட்சத்தை பேணி பாதுகாத்து வளர்த்து வரும் விஷயத்தில் பேரர்களான அஹ்லுல் பைத்துகள் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் இருந்து வருகிறார்கள்.
அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால், என்னை அன்பு வையுங்கள், எனது அன்பை பெற வேண்டுமானால், என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (திர்மிதி 3814, மிஷ்காத் 573
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள்! எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விசயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்.
முஸ்லிம் – 5920, மிஷ்காத் 567
ஸாதாத்துமார்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?
ஸாதாத்துமார்களிடம் இருந்து தென்படுகின்ற பாவங்கள் வெளிப்படையில் பாவங்களைப் போன்று தெரிந்தாலும் அந்தரங்கத்தில் பாவங்கள் அல்ல. மாறாக இறை நியதிபடி நடக்கின்ற காரியங்கள் என்று நினைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களை பாவங்களை விட்டும் நீக்கி மிகவும் பரிசுத்தபடுத்தி விட்டதாக அல்லாஹ் கூறியிருக்கிறான். (அஹ்ஸாப் 33) எனவே அவர்கள் நமது பொருட்களை எடுத்துக்கொண்டு தரமருத்தால் கூட அவர்களை பிடித்து சிறையில் தடுத்து வைப்பதோ, அல்லது நீதிபதியிடம் அழைத்துச் செல்வதோ கூடாது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நபியவர்களின் சதைத்துண்டு. என்பதை மறந்து விடக்கூடாது என்று முஹியத்தீன் இப்னு அரபி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
(நூருல் அப்சார் 128)
No comments:
Post a Comment