ஹலால் என்றால் என்னவென்று முஸ்லிம்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்கு ஹலால் என்கிற வார்த்தையை எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா?
ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.
மேலும் ஏன் ஹலால் செய்யப்பட்ட உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதும் பல முஸ்லிம்களுக்கு தெரியாது.
பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைத்துக் கொண்டு இருகின்றார்கள்,
அவ்வாறல்ல.
ஹலால் என்பது உணவுக்காக விலங்குகள் கொல்லப்படும் முறையைக் குறிப்பதாகும்.
உண்ணத்தகுந்த ஒரு விலங்கையோ, பிராணியையோ சரியான முறைப்படி அறுக்க வேண்டும். வெட்டக் கூடாது. அறுப்பதற்கும் வெட்டுவதற்கும் வேறுபாடுகள் உள்ளது.
ஒரு விலங்கை வெட்ட வேண்டுமென்றால் முழு சக்தியையும் பிரயோகிக்க வேண்டும். அறுப்பதற்கு அவ்வளவு சக்தியை உபயோகிக்கத் தேவையில்லை.
ஹலால் என்கிற சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று பொருளாகும்.
அந்த முறையின் படி விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்ணுவார்கள்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, யூதர்களும் இம்முறையில் அறுக்கப்பட்ட இறைச்சியைத் மட்டும் தான் உண்ணுவார்கள்.
உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். அந்த உணவுகளில் எதற்கு அனுமதி வேண்டும்?
ஹலால் செய்யும் முறை என்றால் என்ன?
ஹலால் என்பது உண்ணத் தகுந்த விலங்குகளை அதன் கழுத்துப் பகுதியில் கூர்மையான கத்தியை கொண்டு அறுப்பதாகும்.
ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்படும் போது கழுத்துப் பகுதியில் உள்ள மூச்சுக் குழல் (Wind Pipe), கழுத்து பெரு நரம்பு (Carotid Artery), ஜுக்லார் நரம்பு (Jugular Veins) ஆகிய மூன்றும் அறுக்கப்படும்.
அவ்வாறு அறுக்கப்படும் போது கழுத்தின் பின் பகுதியில் உள்ள தண்டுவடம் என்னும் பிடரிப் பகுதி துண்டிக்கப்படக் கூடாது. இது தான் ஹலால் செய்யும் முறை.
கழுத்து பகுதியில் உள்ள மூச்சுக் குழலும், நரம்புகளும் அறுக்கப்படும் போது பிராணிகளின் இரத்தம் ஏறக்குறைய முழுமையாக வெளியேற்றப்படும். ஹலால் செய்யப்படுவதன் நோக்கமே விளங்குகளின் இரத்தைதை வெளியேற்றுவது தான்.
ஏன் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும்?
மனிதர்கள் உணவுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிராணிகளை உண்ணும் போது அந்த உணவே அவர்களுக்கு தீங்காக அமைந்து விடக்கூடாது.
அனைத்து உயிரினங்களின் இரத்தில் தான் நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் கலந்திருக்கும்.
அதனால் தான் நாம் நோய்களை கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்கின்றோம்.
மேலும் இரத்தத்தில் யூரிக் ஆசிட், மற்றும் சிறுநீரில் வெளியேறக் கூடிய அத்தனை கழிவுகளும் சேர்ந்திருக்கும்.
இந்த நோய்க் கிருமிகள் அந்த உணவை சாப்பிடுபவர்களையும் தாக்கி பலவித நோய்களை ஏற்படுத்தும். (Swine Flu, Bird Flu, Anthrax, Etc.,)
நமது இரத்தத்தில் யூரிக் ஆஸிட் அதிகமானால் மூட்டுக்களில் வலிகள் உண்டாகும்.
சிலர் இரத்தை பொரித்து சாப்பிடுகின்றார்கள். இது மிகவும் ஆரோக்கிய கேடான செயலாகும். இவர்களுக்கு மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி போன்ற நோய்கள் தொற்றக் கூடும்.
பிராணிகளை அறுக்கும்போது ஏன் தண்டுவடம் துண்டிக்கப்படக் கூடாது?
கழுத்து பின்பகுதியில் உள்ள தண்டுவடத்தில் தான் மூளைக்கு செல்லும் அனைத்து நரம்புகளும் உள்ளன.
தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், மூளையிலிருந்து இருதயதிற்கு வரும் சிக்னல் தடைபடும். அதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதய இயக்கம் உடனே நின்றுவிடும்.
மூச்சு குழலும், இரத்தக் குழாயும் ஒருசேர துண்டிக்கப்படும் போது இருதயத்தின் பம்பிங் செயல்பாடு தடைபடாது. அப்போது இதயம் சுருங்கி விரியும் போது பிராணிகளின் தசை நார்கள் சுருக்கப்பட்டு அதன் இரத்தம் வெளியேற்றப் படுகிறது.
இதயத்தின் பம்ப்பிங் செய்யும் செயல்பாடு நின்றுவிட்டால் உடலில் ஆங்காங்கு உள்ள இரத்தம் அங்கேயே தேக்கம் கொண்டு தங்கிவிடும். இரத்தில் உள்ள நோய்க் கிருமிகளும் அதன் உடலிலேயே தங்கிவிடும்.
ஹலால் முறையில் பிராணிகள் அறுக்கப்படும் போது
இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது.
முறையாக அறுக்கப்படாத உணவு வகைகளால் மார்பக புற்று நோயும் பெருங்குடல் புற்று நோயும் வரும் சாத்தியங்கள் உண்டு என்று புகழ்பெற்ற கெய்ரோ பல்கலைக் கழகத்தின் ஊட்டச் சத்து பிரிவின் தலைவி Dr. மஹா எம். ஹாதி அவர்கள் எச்சரிக்கின்றார்.
மேலும் ஹலால் முறையில் கால்நடைகள் அறுக்கப்படுட்டு அதன் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் வெளியேற்றப் படுவதால் இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும். குளிர்சாதன வசதி இல்லாத அந்த காலத்தில் இம்முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் மற்றவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, கழுத்தை நெறித்தோ, தலையை திருகியோ, தடியால் அடித்தோ, ஆயுதங்களால் குத்தியோ இன்னும் இது போன்ற பல வழிகளில் பிராணிகளை கொள்ளுகின்றனர். இது ஆரோக்கியமற்றது மட்டுமல்லாமல் பிராணிகளுக்கு மிகுந்த வேதனையை கொடுக்கக் கூடிய செயலாகும்.
ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகள் கொல்லப்படுவது ஏற்புடையதல்ல. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தியை கொண்டு அறுத்துத் தான் பிராணிகளைக் மரணிக்கச் செய்ய வேண்டும்.
கத்தி மிகவும் கூர்மையானதாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது பிராணிகள் வலியை உணராதவாறு மிகவும் வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
இதுபோல் குரல் வலையில் முறையாக அறுப்பதால்
கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை.
உதாரணமாக ஒருவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி கையோ, காலோ இழந்து விட்டால் அந்த நேரத்தில் அவரால் அதை உணரமுடியாது. சிறிது நேரக் கழித்து தான் அவருக்கு புரியவரும். அல்லது இரத்தப்போக்கின் காரணமாக அந்த நபர் மயக்கமுற்று விடுவார்.
அதுபோல் பிராணிகள் அறுக்கப் படும்போது அந்த வலியை அவைகள் உணரும் முன்பே மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டுவிடும். அதனால் அவைகளுக்கு வலி தெரிவதில்லை.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆகியோர் ஒரு ஆய்வை நடத்தினார்கள்.
உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
அவ்விளங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளின் மூளையின் நிலையையும், இருதயத்தின் நிலையையும் EEG, ECG கருவிகள் படம் பிடித்துக் காட்டின.
இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அங்கு தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த உரக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை பதிவு காட்டியது.
அந்த நிலை விலங்குகளின் உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது என்று தெரிந்தது.
மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஆராய்ச்சி கருவிகள் பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிகளுக்கும் அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.
இதே போன்று British Farm Advisory Council என்னும் அமைப்பும் விலங்குகள் அறுக்கப்படுவதை ஆராய்ச்சி செய்து மேற்கூறிய அதேபோன்ற தகவல்களை வெளியிட்டது.
மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.
ஹலால் இல்லாத மற்ற முறைகளில் கொல்லப்படும் விலங்குகள், உடனே நிலை குலைந்து போய் கடுமையான வலியால் அவதியுறுவதை EEG பதிவுகள் காட்டியது.
மேலும் விலங்குகளின் இதயம் உடனே நின்று விடுகிறது. அதனால் அதன் உடலில் உள்ள மிகுதியான ரத்தம் அதன் சதைகளிலேயே தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உண்ணதக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்படுவது தான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் ஹலால் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகி்றது.
சரி வலி இல்லையென்றால் அறுக்கப்பட்ட பிராணிகள் ஏன் துடிக்கிறது?
உடலில் எங்காவது அடிபட்டாலோ அல்லது இரத்தப் போக்கு ஏற்பட்டாலோ உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் அனைத்தும் ஒருங்கினைந்து பாதிப்படைந்த இடத்தை சரி செய்வதற்காக அந்த பகுதியை நோக்கி செல்லும்.
அப்போது இருதயத்தின் பம்பிங் காரணமாக தசைகள் சுருக்கம் ஏற்பட்டு, இரத்தம் வேகமாக பாதிப்படைந்த பகுதியை நோக்கிச் செல்லும்போது உடல் வெட்டி வெட்டி இழுப்பது போல் தோண்றும். எனவே பிராணிகள் துடிப்பது வலியின் காரணமாக அல்ல.
உதாரணமாக ஒரு ஹோஸ் பைப்பில் வேகமாக தண்ணீர் செல்லும் போது இதே போன்று வெட்டி இழுக்கும் நிலையைக் காணலாம்.
இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட உணவை மட்டும் தான் சாப்பிடுவார்கள்.
அதேபோல் தானாக செத்த விலங்குகளையும் சாப்பிட மாட்டார்கள்.
ஒரு பிராணி தானாக சாகிறதென்றால் அதன் இரத்தம் கெட்டுப் போய் நோய்வாய்பட்டு தான் இறக்க நேரிடும். மேலும் நோய்க் கிருமிகள் அடங்கிய அந்த இரத்தமும் அதன் மாமிசங்களில் உறைந்திருக்கும். அதனால்தான் தானாக செத்ததை சாப்பிட கூடாது என இஸ்லாம் எச்சரிக்கிறது.
அடுத்து உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.
ஆரோக்கியத்தின் காரணமாகத் தான்ஹாலால் செய்யப்பட்ட பிராணிகளை உண்ண வேண்டும் என்றால், ஹலால் முறையில் அறுக்கப்படாத மீன்களை எப்படி சாப்பிடலாம்?
உயிரினங்களில் மூன்று வகைகள் உள்ளன. அவைகள்....
1. நிலத்தில் வாழக்கூடியது.
2. நீரில் மட்டும் வாழக்கூடியது.
3. நீரிலிம் நிலத்திலும் வாழக்கூடியது.
மீன் என்பது நீரில் மட்டும் வாழக்கூடிய ஒரு உயிரினமாகும். அதற்கு அறுத்தால் பீரிட்டு ஓடக்கூடிய இரத்தம் கிடையாது. மேலும் மீன்கள் நீரைவிட்டு வெளியே வந்ததும் அதன் உடல் சற்று சுருங்க ஆரம்பிக்கும். அதன் காரணமாக அதில் உள்ள குறைவான, கசியக் கூடிய இரத்தம் அனைத்தும் எபிகிளாடிஸ் என்னும் தொண்டைப் பகுதிக்கு வந்துவிடும். அந்த பகுதியை யாரும் சாப்பிட மாட்டார்கள். இதன் காரணமாக மீன்களை ஹாலால் முறையில் அறுக்கத் தேவை இல்லை.
அனைத்தயும் அறிந்த இறைவன், தான் படைத்த படைப்பினங்களை பற்றியும், அவனின் பலஹீனங்களை பற்றியும் நன்கு அறிந்துள்ளான். எனவே மனிதகுலத்தின் நன்மைகாக அவனுக்கு தீங்கு ஏற்படாதவாறு சில கட்டளைகளை வகுத்துள்ளான். அதில் ஒன்று தான் இந்த ஹலால் முறை உணவு. எனவே அனைவரும் இதை பின்பற்றுவதில் தவறில்லை. நன்றி🐐🐐🐐🐋🐋🐋
No comments:
Post a Comment