ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 13 December 2018

இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு


அரபிகள் நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தென்கிழக்காசிய கடல் வணிகத்தின் மூலம் இந்தியாவைப் பற்றி அறிந்திருந்ததுடன், அவர்களுடன் தொடர்புகளையும் பேணி வந்தனர். இதனால் நபியவர்களின் காலத்திலேயே இஸ்லாமானது அங்கு அறிமுகமாயிற்று. நபித் தோழர்களான உக்காஸா(ரழி) மற்றும் தமீம் அல் அன்சாரி(ரழி) ஆகியோரின் அடக்கஸ்தலங்கள் தென்னிந்தியாவின் பறங்கிப் பேட்டை மற்றும் கோவனத்தில் அமைந்துள்ளமை இதற்கு ஆதாரமாகும்.

வரலாற்றுத் தகவல்களின் படி, பாவாத மலையை தரிசிக்க வந்த முஸ்லிம் அரபிகள், சேரமன் பெருமாள் எனும் தென்னிந்திய மன்னரை சந்தித்து இஸ்லாத்தைப் போதிக்கவும், அவர் அதை ஏற்று அப்துர் ரஹ்மான் என பெயரையும் சூட்டிக்கொண்டார். இஸ்லாத்தைக் கற்றுக் கொள்ள மக்காவுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் அவர் மரணிக்கவே, இவருடன் சென்றவர்கள் இந்தியாவிற்கு திரும்பி, மஸ்ஜித் ஒன்றை கட்டியதுடன் இஸ்லாத்தைப் பிரச்சாரமும் செய்து வந்தனர். மேலும் உமையா காலப்பகுதியில் ஈராக்கின் கவர்ணராக இருந்த ஹஜ்ஜாஜின் கொடுமைகளை சகிக்க முடியாத பனூ ஹாஸிமிக்களில் சிலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கொங்கன், கண்னியா குமாரி போன்ற பகுதிகளில் குடியேறி வாழ்ந்ததாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருந்தது.

கி.பி 712ல் முஹம்மத் இப்னு காஸிம் தலமையிலான முஸ்லிம் படையினர் இந்தியாவை கைப்பற்றியது முதல் முஸ்லிம்களின் ஆட்சியும், அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களும் அங்கு ஆரம்பமாகியது. இவ்வாறு இந்தியா முஸ்லிம்களால் கைப்பற்றப்பட பின்வருபவை அடிப்படைக் காரணிகளாய்க் காணப்பட்டன.

இக்காலத்தில் இந்தியாவில் உதயன் (இவனை அரேபியர் தாஹிர் என அழைத்தனர்) எனும் மன்னனின் கொடுங்கோல் ஆட்சி நிலவி வந்தது. அவனது ஆட்சிக்குட்பட்ட மக்களை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்தினான். அதனால் அம்மக்கள் அவனை வெருக்கத் தொடங்கினர். மேலும் இவன், தனது நாட்டின் கரையோரம் செல்லும் முஸ்லிம்களின் கப்பல்களை கொள்ளையடித்ததுடன் அதில் பிரயாணித்தவர்ளை கைதும் செய்தான். அத்தோடு நில்லாது பேராசை பிடித்த இவன், அண்மையிலிருந்த நாடுகளின் மீது அடிக்கடி போர் தொடுத்தும் வந்தான். இந்தவகையில், இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டிருந்த 'முக்ரான்' (தற்போதைய பாகிஸ்தானின் பலூஜிஸ்தானின் பகுதி - இது உமர்(ரழி) காலத்தில் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது) மீதும் அடிக்கடி போர் தொடுக்கத் தொடங்கினான். இதனால் அதன் கவர்ணர் ஹாரூன், உதயனுக்கு எதிராக போர் தொடுக்க அணுமதி கோரி, கலீபா அப்துல் மலிக்கிற்கு கடிதம் ஒன்றை அணுப்பி வைத்தார். இதன் விளைவாக கலீபாவால் முஹம்மத் இப்னு காஸிம் தலமையில் அணுப்பபட்ட படையினருடன் முக்ரான் பிரதேச படையினரும் இணைந்து சுமார் 12,000 பேருடன் சென்ற இஸ்லாமியப் படை 100,000 பேர் கொண்ட உதயனின் படையைத் தோற்கடித்து இஸ்லாமிய ஆட்சியை அங்கு நிலை நாட்டியது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்தியாவானது, கி.பி 712 முதல் 856 வரை உமையா மற்றும் அப்பாஸிய ஆட்சிக்குட்பட்ட இஸ்லாமிய கிலாபத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. பின்னர் ராஜா போஜா மற்றும் பல குஜராத் மன்னர்கள் பல பகுதிகளிலும் போரிட்டு முஸ்லிம் படையினரை முறியடித்ததால் கி.பி 856ல் இந்தியாவின் பல பகுதிகள் சுயாதீன ஆட்சிப்பிரதேசங்களாக மாறின. கி.பி 1026 வரை இந்நிலை அங்கு நீடித்தது.

ஆப்கானிஸ்தான் பகுதியில் தோன்றிய கஸ்னவி சிற்றரசின் மன்னர், சபுக்தகீனின் மூத்த மகனான 'கசினி முஹம்மதால்' கி.பி 1027ல் கைப்பற்றப்பட்ட இந்தியா, அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவர் இந்தியாவை வெற்றி கொள்ள 17 முறை படையெடுத்து தோல்வி கண்டு, 18வது தடவையே அது சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் கி.பி 1190 காலப்பகுதியில் பிரித்வி ராஜ், ஜெய் சந்த், பிம் தேவ் போன்ற இராஜ புத்திரர்களை வென்று இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி, கேரிய சிற்றரசு மன்னரான 'முஹம்மத் கோரி' அவற்றை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

கி.பி 1206ல் முஹம்மத் கோரி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது துருக்கிய இன அடிமையான, 'குத்புத்தீன் ஐபக்' டெல்லியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அது முதல், டெல்லியை தலைநகராகக் கொண்டு பின்வரும் ஐந்து பரம்பரைகள் இந்தியாவை ஆட்சி செய்தன. ஐபக் (கி.பி 1206-1290), கில்ஜிக் (கி.பி 1290-1321), துக்ளக் (கி.பி 1321-1412), ஸைய்யித் (கி.பி 1412-1447), லோடி (கி.பி 1447-1526). இவ் ஆட்சிக்காலப் பகுதியானது, டெல்லி சுல்தானியம் என வரலாற்றில் அறியப்படுகிறது. இவர்களுக்குப் பின் கி.பி 1526ம் ஆண்டில் ஆப்கான் பகுதியிலிருந்த படையெடுத்து வந்த முகலாயர்கள் லோடிப் பரம்பரையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.

முகலாயர் ஆட்சிக்காலம் (கி.பி 1526 - 1858)

முகலாயர் (Mogul or Mughal
‎என்பது பாரசீக மொழியில் மங்கோலியர் என்பதைக் குறிக்கும் 'முகல்' எனும் சொல்லின் அடிப்படையில் தோன்றியதாகும். மொகலாயர் ஆட்சியை இந்தியாவில் தோற்றுவித்த ஸாஹிருத்தின் பாபர், மங்கோலிய தாய்க்கும் துருக்கிய அல்லது பாரசீக தந்தைக்கும் பிறந்தவர். அத்துடன் அவருக்குப் பின் வந்த ஏனைய ஆட்சியாளர்களும் இவரின் பரம்பரையில் வந்தவர்களே. இதனால் இவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களாவர்.

கி.பி 1526ம் ஆண்டு காபூலிலிருந்து படையெடுத்து வந்த ஸாஹிருத்தின் பார்பர், முதலாவது பனிபட் போரில் டில்லி சுல்தான் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து, மொகலாய அரசைத் இந்தியாவில் தோற்றுவித்தார். இப்றாஹீம் லோடியின் ஆட்சியை விரும்பாத, இந்தியாவின் இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் வேண்டு கோலிற்கினங்கவே பார்பர் படையெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியவின் வரலாற்றில் மகச்சிறப்புமிக்க காலப்பகுதியாக இந்த முகலாயர்களின் ஆட்சிக்காலம் காணப்பட்டது. சுமார் 3 நூற்றாண்டு கால இவர்களது ஆட்சியில், இந்தியாவானது பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியுற்று செழிப்புற்றது. அந்தவகையில் அழகியல், அறிவியல், விவசாயம் போன்ற பல்வேறு துறைகள் வளர்ச்சியுற்றன. அரசியல், பொருளாதார, சமய, சமூக துறைகளில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. இராணுவத்துறை சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக பல்லின சமூகத்திற்கு மத்தியில், சமய சகிப்புத் தன்மை மேலோங்கி காணப்பட்டது. இதுவே அங்கு நீண்டகால ஆட்சியொன்றை முகலாயர் தொடர்வதற்கு காரணமாகவும் அமைந்தது எனலாம்.

முகலாயர்கள் இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பிலான ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்தினர். இஸ்லாமிய கலாசார முறைகள் பேணப்பட்டன. முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாட்டு அம்சங்களிலும் இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றியதுடன் அதனை ஒரு கௌரவமாகவும் கருதினர். சாதிப்பாகுபாடு நிறைந்திருந்த இந்தியாவில் சமத்துவத்தை நிலைநாட்ட முகலாயர் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கவரப்பட்ட இந்துக்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இதற்கு மாற்றமான எந்த முறையாலும் இஸ்லாம் அங்கு பரவவில்லை.

முகலாயர்கள் இந்தியாவை கி.பி 1526 முதல் 1857 வரை ஆட்சி செய்தபோதும் ஒளரங்கஜீபின் ஆட்சிகாலம் வரைக்குமான முதல் 2 நூற்றாண்டுகளே சிறப்பு மிக்கதாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பின்வரும் ஆறு பேரரசர்களால் இந்தியா ஆளப்பட்டது. பாபர் (1526-1530), ஹூமாயூன் (1530-1540 -1556), அக்பர் (1556-1605), ஜஹாங்கீர் (1605-1627), ஷாஜஹான் (1627-1658), ஒளரங்கஜீப் (1658-1707). கி.பி 1707க்கு பின்னரான காலப்பகுதியில் அவர்களின் ஆட்சி படிப்படியாக பலவீனமடைந்து 1857ல் வீழ்ச்சியடைந்தது.

ஸாஹிருத்தீன் பாபர் (கி.பி 1526 - 1530)

துருக்கிய மொழிச் சொல்லான 'பாபர்' எனும் பதத்திற்கு புலி என்பது பொருளாகும். தன் பெயரின் பொருளுக்கேற்ப வலிமை மற்றும் துணிவு மிக்கவராகவே ஸாஹிருத்தின் பாபர் விளங்கினார். இவர் மங்கோலிய பேரரசை உருவாக்கிய ஜெங்கிஸ் கானின் பரம்பரையில் வந்த தாய்க்கும் தைமூரிய பரம்பரையைச் சேர்ந்த துருக்கிய அல்லது பாரசீக தந்தைக்கும் முதல் மகனாக கி.பி 1483ல் பிறந்தார். இவரது தந்தை ஒமர் ஷேக் மிர்சா பெர்கானாப் பகுதியின் (தற்போதைய உஸ்பெகிஸ்தானின் ஒரு பகுதி) ஆட்சியாளராக இருந்தார். பாபரின் தந்தை கி.பி 1494ல் அகால மரணமடைந்ததால் தனது 11வது வயதிலேயே பெர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியேற்பட்டது.

பார்பர் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் பெர்கானாப் பகுதியின் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதனால் அருகிலிருந்த சமர்கந்த் பகுதியைக் கைப்பற்றி அங்கு தனது ஆட்சியை நிலை நாட்டினார். கி.பி 1501ல் தான் இழந்த பெர்கானாப் பகுதியை மீட்டெடுக்க முயற்சித்த போது, சமர்கந்த் பகுதியையும் பார்பர் இழக்க நேரிட்டது. பின்னர் 1504ல் காபூல் பிரதேசத்தின் மீது போர் தொடுத்து கைப்பற்றியதும் அதன் ஆட்சியாளரானார். 1526ல் டெல்லியை ஆட்சி செய்து வந்த இப்ராஹீம் லோடிக்கு எதிராகப் படை நடாத்திச் சென்றார். பஞ்சாப் ஆளுனர் தௌலத் கான் மற்றும் இப்ராஹீம் லோடியின் உறவினர் அலாவுதீன் ஆகியோரின் உதவியுடன் லோடியைத் தோற்கடித்து டில்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார். இப்படையெடுப்பு முதலாம் பனிபட் போர் எனப்படுகிறது. அதன் பின் 1527ல் கான்வாப்போர், 1528ல் சந்தெரிப்போர், 1529ல் கோக்காரா நதிப்போர் போன்றவற்றில் ஈடுபட்டு குஜராத், மாவளம், பீகார் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டார்.

பாபரின் பெரும் தொடர் வெற்றிகளுக்கான அடிப்படைக் காரணங்களாக, அவர் சிறந்ததொரு படைத் தளபதியாகவும் யுத்த அணுபவமிக்க போர் வீரராகவும் காணப்பட்டமை, நன்கு பயிற்றப் பட்டிருந்த இவரது படையினர் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணியதோடு போரில் வெற்றிபெர வேண்டுமென்பதில் ஒரு முகப்பட்டிருந்தமை, இவர்கள் நவீனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருந்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பாபர் ஆட்சி பீடமேறியதும், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டினார், நாட்டு மக்களோடு மிக நல்ல முறையில் நடந்து கொண்டார். மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாத்தார். திருடர்களையும் வழிப்பறிக் கொள்ளையர்களையும் ஒடுக்கினார், குறுநில மன்னர்களின் துன்புறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாத்தார், கல்விக் கூடங்களை அமைத்தார். இவரது காலத்தில் நீதித்துறை திறன்பட செயற்பட்டதுடன் குற்றச்செயல்களும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.

பாபர் இயல்பிலேயே அன்பு, வீரம், சகிப்புத்தன்மை போன்ற குணங்களைக் கொண்டவராகவும் கலை, கவிதை, இலக்கியம், பேச்சு, கட்டடக்கலை, வரலாறு என பல்துறை ஆற்றல் மிக்கவராகவும் காணப்பட்டார். போர், காதல், மது போன்ற தலைப்புக்களில் துருக்கி மற்றும் பாரசீக மொழிகளில் கவிதைகளை எழுதினார். மேலும் துருக்கி மொழியில் தனது வரலாற்றை 'பாபர்நாமா' எனும் பெயரில் எழுதியதுடன் ஹனபி மத்ஹபைத் தழுவி சட்ட நூலொன்றையும் எழுதினார். இவரது தளபதியால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி மிகப் பிரபலமானதாகும்.

இவ்வாறு பல்வேறு சாதனை வெற்றிகளைப் புரிந்த பாபர் தனக்கு ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு நோயின் காரணமாக 1530ல் மரணமடைந்தார். பாபர் மரணப் படுக்கையில் இருந்தபோது தனது மகன் ஹூமாயூனை அடுத்தவாரிசாக நியமனம் செய்திருந்தார்.

ஹூமாயூன் (கி.பி 1530 - 1556)

நாஸிருத்தீன் ஹூமாயூன் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மஹிம் பேகம் மற்றும் பாபருக்கு மூத்தமகனாக கி.பி 1508ல் காபூலில் பிறந்தார். சிறுவயதிலேயே அரபு, பாரசீகம், துருக்கி போன்ற மொழிகளையும் சோதிடம், கணிதம் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ச்சியுற்றார். அன்புள்ளம், ஈகைக் குணம், பிறரை மன்னிக்கும் தயாள குணம், எவருக்கும் தீங்கு செய்யா உள்ளம் போன்ற பண்புகளைக் கொண்டவராகவும் காணப்பட்டார்.

பாபரின் மரணத்தைத் தொடர்ந்து 'ஷாஹ் நஸீருத்தீன் ஹூமாயூன்' எனும் பெயருடன் கி.பி 1530ல் ஆக்ராவில் வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் ஆட்சிப் பீடமேறியது முதல், இவரது ஆட்சியைக் கவிழ்க்க ராஜபுத்திரர்களும், ஆப்கானியரும், உடன் பிறந்தவர்களும் திட்டமிட்டு செயற்பட்டனர். அந்தவகையில் இவருக்கெதிராகப் போர்களும் சதிகளும் புரட்சிகளும் எதிர்ப்புக்களும் தோன்றின. இவற்றைச் சரியான திட்டங்களின்றி எதிர்க்க முற்பட்டமையும் எதிரிகளை அன்புக்கரம் கொண்டு இவர் அரவணைத்தமையும் இவரது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

கி.பி 1540ல் கன்னோசிப் எனும் போரில் 'ஷேர் கான்' என்ற பென்கால் அரசர் ஹூமாயூனைத் தோற்கடித்து ஆட்சிப் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டார். ஆட்சியை இழந்த ஹூமாயூன் கி.பி 1540 முதல் 1555 வரை ஊரூராக பல்வேறு தரப்பினரிடமும் ஆட்சியை மீற்க உதவிகேட்டு அலைந்து திரிந்தார். இக்காலப்பகுதியில் இவரால் காபூல், கந்தகார், மேவாத் பகுதிகளுக்கு ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த இவரின் உடன் பிறந்த சகோதரர்கள் கூட இவருக்கு உதவ முன்வரவில்லை. இறுதியாக கி.பி 1555ல் பாரசீக 'சுர் ஷா' மன்னரின் உதவியோடு முதலில் தனது சகோதரர்களிடமிருந்து காபூல் மற்றும் கந்தகாரையும் பின்னர் டில்லியையும் கைப்பற்றிக் கொண்டார்.

பல ஆண்டு போராட்டத்தின் பின் ஆட்சியைக் கைப்பற்றிய போதும், துரதிஸ்டவசமாக கி.பி 1556ல் மாடிப்படியிலிருந்து நினைவிழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். மறு நாள் மரணமடைந்தார். இவர் மரணித்தபோது இவரது மகன் அக்பர் போர் முகாமொன்றில் வெகுதொலைவில் இருந்ததனால், அவர் வந்து சேரும்வரை சுமார் 17 நாட்கள் ஹூமாயூனின் மரணம் வெளியில் யாருக்கும் தெரியாது இரகசியமாக பேனப்பட்டது. அக்பர் வந்து சேர்ந்த பிற்பாடே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

ஹூமாயூனின் ஆட்சிக்காலம் முழுவதும் குழப்பங்கள் நிறைந்த காலமாகவே அமைந்திருந்ததால், நாட்டின் அபிவிருத்திக்கு அவரால் பெரியளவில் சேவையாற்ற முடியவில்லை. எனினும் இவர் கட்டிடக் கலை, ஓவியக்கலை மற்றும் இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். இதனால் இவரது காலத்தில் அத்துறைகள் சிறப்புற்று விளங்கின.
‎அக்பர் (கி.பி 1556 - 1605)

இந்தியாவில் ஆட்சி செய்த புகழ்மிக்க அரசர்களுள் ஒருவரான ஜலாலுத்தீன் முஹம்மத் அக்பர் கி.பி 1542ல் அமர்கோட் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை ஹூமாயூன், அக்பருக்கு கல்வியை போதிக்க அப்துல்லதீப் எனும் பாரசீக அறிஞரை முழுநேர ஆசிரியராக நியமித்திருந்தார். எனினும், இயல்பிலேயே அறிவுக் கூர்மை மற்றும் நினைவாற்றலைக் கொண்டு காணப்பட்ட இவர், படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மாறாக குதிரைச் சவாரி, அம்பெய்தல், வேட்டையாடுதல் போன்றவற்றிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

தந்தை ஹூமாயூனின் மரணத்தையடுத்து 1556ல் ஆக்ராவில் வைத்து அக்பர் ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். அவ்வேலை அக்பர் 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுவராக இருந்ததார். இதனால் ஆரம்பத்தில் ஆட்சிப் பொறுப்பானது ஹூமாயூனின் முக்கிய வெற்றிகளுக்கு துணை நின்ற தளபதியும் அக்பரின் உறவினராகவும் உதவியாளராகவும் இருந்த பைராம்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டில் பைரம்கானின் தலமையில் சென்ற முகலாயப் படையினர் ஹேமு மன்னனுடன் 2ம் பணிபட் போரில் போரிட்டு வெற்றிபெற்றனர். இதன் மூலம் டெல்லி மற்றும் ஆக்ரா பகுதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டு, இந்திய துணைக்கண்டத்தில் முகலாயரின் ஆட்சி வலுவடைந்தது.

18 வயதையடைந்ததும் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுக்க விரும்பிய அக்பர், பைரம்கானிடம் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டினார். ஆனால் பைரம்கான் அதற்கு மறுப்புத் தெரிவித்து கலகம் செய்யதார். எனினும், அக்பர் அவரைத் தோற்கடித்ததுடன் அவருக்கு மன்னிப்புமளித்தார். அதன் பின் அக்பர், பைரம்கான் அமைச்சுப் பதவி எதுவுமில்லாமல் அங்கு நிலைத்திருக்கலாம் அல்லது மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று வரலாம் என இரண்டு வாய்ப்புக்களை வழங்கினார். அதில் இரண்டாவதை ஏற்று குஜராத் வழியாக மக்காவுக்கு பயணிக்கையில், பட்டான் எனுமிடத்தில் வைத்து, ஹேமுவின் ஆப்கானிய படைத்தலைவர் ஹாஜி கான் மேவாதி என்பவனால் கொல்லப்பட்டார். 2ம் பணிபட் போரில் கொல்லப்பட்ட ஹேமுவினது அல்லது தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கவே இவன் பைரம்கானை கொலை செய்தான். அதன் பின் அக்பர் பைரம்கானின் மகனான, அப்துல் ரஹீம் கானுக்கு தனது அமைச்சரவையில் முக்கிய பதவியை வழங்கினார்.

ஆட்சிப் பொருப்பை ஏற்றதன் பின் குவாலியர் கோட்டை, மாளவம், கோண்டுவானா, சிதூர், குஜ்ராத், கிழக்கு வங்கம், மேவார், காஷ்மீர், தக்காணம், அஹ்மத்நகர், காந்தேஷ் போன்ற பகுதிகள் மீது அக்பர் படையெடுத்து அவற்றை வெற்றி கொண்டு தனது ஆட்சிப்பகுதியை விரிவு படுத்திக் கொண்டார்.

தனது பலத்தை மேலும் பெருக்கிக் கொள்ளவும் இந்து முஸ்லிம் உறவை பலப்படுத்தும் முகமாகவும், அக்பர் இராஜபுத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார், அவர்களில் பலரை தனது நிர்வாகத்தில் உயர் பதவிகளில் அமர்த்தினார், தனதாட்சிக்குப் பணிந்த ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் மகள் மற்றும் ஏனைய இந்து ஆட்சியாளர்களின் புத்திரிகளையும் மணந்துகொண்டார். அத்துடன் தனது உறவினர்களையும் இந்துப் பெண்களை மணக்கச் செய்தார். 1582ல் இந்து, இஸ்லாமிய, பௌத்த, யூத, சமன, பாரசீக மதங்களைச் சார்ந்த அறிஞர்களை ஒன்று கூட்டி ஒரு பொதுவான மதத்தை உருவாக்குமாறு கூறினார். அது சாத்தியப்படாமல் போகவே, இஸ்லாமிய மற்றும் இந்து சமயக் கொள்கைகளை கலந்து 'தீனே இலாஹி' (இறை ஒருமைப்பாடு) எனும் மதத்தை தானே உருவாக்கினார். (வஹ்ததுல் வுஜூத் சிந்தனைத் தாக்கத்துக்குட்பட்டிருந்த ஜிஸ்திய்யாத் தரீக்காவின் கருத்தியல் தாக்கத்தால் தான் அக்பரிடம் இச்சிந்தனை தோன்றியதாக சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்). இவரது இச்சிந்தனைப் போக்கு ஷரீஅத்துக்கு முரணாக காணப்பட்டதால் மார்க்க மேதைகளால் இவர் விமர்சிக்கக்கப்பட்டார்.

அக்பர் தனதாட்சிக்காலப்பகுதியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவற்றுள் பின்வருபவை முக்கியமானவைகளாகும். ஜிஸ்யா வரியை இல்லாமல் செய்தார், உடன் கட்டையேறும் மரபைப் பெண்கள் மீது திணிப்பதையும் குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தார், திருமணத்தில் கணவன், மனைவியின் விருப்பத்தைக் கட்டாயமாக்கினார், திருமண வயதை ஆண்களுக்கு 16 எனவும் பெண்களுக்கு 14 எனவும் நிர்ணயித்தார், பிள்ளைப்பேறு இல்லாதவர்களை மட்டுமே பலதாரமணம் செய்ய அணுமதித்தார். பண்டைய இலக்கிய நூல்களைப் பாடசாலைகளில் கற்பிக்க வழிசெய்தார், கணிதம், மருத்துவம், வானியல், வரலாறு, மனைப் பொருளியல் முதலான பாடங்களைப் போதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஏனைய மன்னர்களைப் போல இவரும் இந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்தார். அந்தவகையில், ராணி ஜோத்பாய் மாளிகை, பீர்பால் இல்லம், தீவானிகாஸ், செங்கோட்டை, தீவானே ஆம், யானை வாசல், ஹிரான் மினார், லாகூர் கோட்டை, அலகாபாத் கோட்டை மற்றும் தனது மகன் ஸலீமின் பிறப்பையொட்டி ஆக்ராவில் 7 மைல் சுற்றளவு கொண்ட மூன்று பக்கங்கள் சுவரால் சூழப்பட்ட ஒரு சிறு நகர் போன்றவற்றை நிறுவினார்.

இவ்வாறு, பெரும் வெற்றிகளைப் பெற்று, வலிமை மிக்க பேரரசொன்றை நிறுவிய மன்னர் அக்பர், சுமார் 50 வருடகால ஆட்சியின் பின் தனது 63வது வயதில் மரணமடைந்தார். இவரது அடக்கஸ்தலம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.

ஜஹாங்கீர் (கி.பி 1605 - 1627)

அக்பரின் 3வது மகனான நூருத்தீன் முஹம்மத் சலீம் கி.பி 1569ல் ஆக்ராவில் பிறந்தார். இவரது தாய் ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் மகள் ஜோதாபாய் ஆவார். இவருக்கு கல்வி போதிப்பதற்காகவேண்டி நியமிக்கப்பட்டிருந்த பைராம்கானின் மகன் அப்துர் ரஹீமின் உதவியுடன் தனது இளமைப் பருவத்திலேயே பாரசீகம், துருக்கி, ஹிந்தி முதலாம் மொழிகளையும் இலக்கியம், வரலாறு, கணிதம், புவியியல், உயிரியல், இசை, ஓவியம், தாவரவியல் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

அக்பரின் வேண்டுகோலிற்கினங்க அவரது மரணத்தின் பின், 1605ல் 'நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி' எனும் பட்டப் பெயரோடு இவர் ஆட்சி பீடமேறினார். ஜஹாங்கீர் என்ற பாரசீகப் சொல்லிற்கு 'உலகை வெற்றி கொள்பவன்' என்பது பொருளாகும்.

ஆட்சிக்கு வந்ததும் ஜஹாங்கீர் பலசீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றுள் பின்வருபவை முக்கியமானவைகளாகும். சுங்க மற்றும் இறக்குமதி வரிகளை தடை செய்தார். கொள்ளை மற்றும் வழிப்பறி நிகழும் இடங்களில் பொதுக்கிணறுகள், பள்ளிவாயல்களை அமைத்து மக்களை நடமாடச் செய்தார். கைதிகளை விடுதலை செய்தார். கலைஞர்களை வரவைத்து அழகிய கட்டிடங்களை கட்டுவித்ததுடன் ஓவியங்களையும் தீட்டுவித்தார். வாரிசின்றி மரணிக்கும் செல்வந்தர்களின் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரித்து, அவற்றை பிரதேச கல்வி நிலையங்களின் வளர்ச்சிக்கு பயண்படுத்தும் முறையை அறிமுகம் செய்தார். நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார். ஆக்ரா கோட்டையில் ஒர் மணியைத் தொங்கவிட்டிருந்தார், நீதி வேண்டுவோர் அதை அசைத்து மணியோசை செய்தால் அரசரே நேரில் வந்து அவர்களின் குறைகளைத் தீர்த்து வைத்தார்.

‎மேலும், இவரது காலத்தில் கப்பல் கட்டுதல், உலோகத் தொழில், புடவைக் கைத் தெழில், தோல் பதனிடுதல், சீனி மற்றும் காகித உற்பத்தி சாலைகள் போன்றவை தொடங்கப்பட்டன. குடிசைக் கைத்தொழில் ஊக்குவிக்கப்பட்டது, தொழிற் கூடங்களில் அன்பளிப்புப் பொருற்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்க ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி தொடர்புகள் பேணப்பட்டன. வணிக நிறுவணங்களை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு அணுமதியும் வழங்கப்பட்டது.

முன்னைய முகலாய மன்னர்களைப் போலவே, ஜஹாங்கீரும் பல படையெடுப்புக்களை மேற்கொண்டு வங்காளம், மேவார், அஹ்மத் நகர், தெக்கான் போன்ற பிரதேசங்களையும் அக்பர் வெற்றி கொள்ளத் தவரிய கங்கிரா கோட்டை மற்றும் காஷ்மீரின் கிஸ்ட்வார் பகுதியையும் வெற்றி கொண்டார். எனினும், ஹூமாயூன் காலத்தில் கைநழுவி அக்பரால் மீண்டும் கைப்பற்றப்பட்ட கந்தகார் பிரதேசம் இவரது காலத்தில் பாரசீகர்களிடம் பரிபோனது.

தனது இளம்வயதிலிருந்தே ஜஹாங்கீர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியவராக காணப்பட்டார். காலப்போக்கில் அளவுக்கு மீறி மதுவருந்தியதால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். இதனால் ஓய்வுக்காக வேண்டி காஷ்மீர் சென்று, அங்கிருந்து வரும் வழியில் கி.பி 1627ல் மரணமடைந்தார்.

ஷாஜஹான் (கி.பி 1627  - 1657)

ஜஹாங்கீரின் மூன்றாவது புதல்வாரான மிர்ஸா குர்ரம்(ஷாஜஹான்) கி.பி 1592ல் லாகூரில் பிறந்தார். இவரது தாய் பல்மதி, ராஜா உதைசிங்கின் மகள் ஆவார். இலக்கியம் மற்றும் அழகியல் துறைகளில் அதிக ஆர்வம் காட்டிய ஷாஜஹான் பாரசீக மொழி, அரசியல், சமயம், மருத்துவம் ஆகிய வற்றையும் விரும்பிக்கற்றார். தனது தந்தையின் காலத்தில் இடம்பெற்ற அதிகமான போர்களில் இராணுவத் தளபதியாக தலைமையேற்று படையை வழிநடத்தினார். தந்தை ஜஹாங்கீரின் மரணத்தின் பின், பல்வேறு எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் முறையடித்து கி.பி 1628ல், 'அபுல் முஸாபிர் ஷஹாபுத்தீன் முஹம்மது ஷாஜஹான்' எனும் பட்டப் பெயருடன் ஆட்சி பீடமேறினார்.

ஷாஜஹானின் ஆட்சிக் காலம் முகலாய ஆட்சியின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டு வருமானம் உயர்ந்தது. மக்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டது. குடிமக்களுக்கு துன்பம் விளைவித்த கவர்னர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டனர். மன்னர் இந்துக்களுடன் நெருங்கிப்பழகியதோடு அவர்களை உயர் பதவிகளிலும் அமர்த்தினார். இதனால் பரந்த பேரரசாகக் காணப்பட்ட அவரது ஆட்சிப்பதியெங்கும் அமைதியும் செழிப்பும் நிலவியது.

இவரது ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலையத் துறை உச்சநிலையை அடைந்தது. அந்தவகையில் இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகக் காணப்படும், வெண்சலவைக் கற்களாலான தாஜ்மஹலலையும் முத்து மஸ்ஜித், ஜாமிஆஹ் மஸ்ஜித், அலி மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஜஹான்பாத் (ஆக்ராவிலிருந்து மாற்றப்பட்ட புதிய தலைநகரமான டில்லி) போன்வற்றையும் நிர்மாணித்தார். டெல்லி, லாகூர், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் எழில்மிகு பூங்காக்களை அமைத்தார். தனித் தங்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் நவரத்திணங்கள் பதிக்கப்பட்ட பிரகாசமிக்க மயிலாசனத்தில் இருந்து ஆட்சி செய்தார். மேலும் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஆதரித்ததுடன் அவர்களுக்கு அதிக பரிசில்களையும் வாரி வழங்கினார்.

ஷாஜஹான் இவ்வாறு ஆடம்பரத்துக்காக வேண்டி அரச சொத்துக்களை வீனாகப் பயண்படுத்தியதால் பிற்காலத்தில், அவரது மகன் ஒளரங்கசீப்பால் சிறை வைக்கப்பட்டார். ஸ்ட்ராங்குறி மற்றும் சீத பேதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல் பலவீனமடைந்து கி.பி 1666ல் மரணமடைந்தார்.

‎ஒளரங்கஜீப் (1658 - 1707)

ஷாஜஹான் மற்றும் மும்தாஜிற்கு மூன்றாவது மகனாக கி.பி 1618ல் குஜராத்தின் தோஹாத் எனுமிடத்தில் முஹியத்தீன் முஹம்மத் ஒளராங்கஜீப் பிறந்தார். ஸஅதுல்லாஹ் கான், ஹாஷிம் ஜெய்லானி, முல்லா ஜீவன், முஹம்மது கானோஜி, அப்துல் ஹமீத் சுல்தான்பூரி ஆகிய கல்விமான்களிடம் கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.

இயல்பாகவே சாந்த குணமுடையவராகக் காணப்பட்ட ஒளராங்கஜீப், இளமை முதலே ஆழ்ந்த மார்க்கப்பற்றுள்ளவராகவும், சூபித்துவத்தில் நாட்டம் உடையவராகவும், ஆடம்பரங்களைப் புறக்கணித்து எளியமையாகவே வாழ்பவராகவும் காணப்பட்டார். இதனால் இவரை மக்கள் 'பக்கீர் இளவரசன்' என்றே அழைத்தனர். மேலும் தனது 24வது வயதில் காடுகளுக்குச் சென்று தனித்து தியானத்தில் ஈடுபடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். சிறந்த வீரராகவும் துணிவுள்ளவராகவும் இருந்த இவரிடத்தில் யானைகளை அடக்கும் வல்லமை காணப்பட்டது. 16வது வயதில் 10,000 குதிரைப் படையினருக்கும் 4,000 காலாட்படையினருக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஷாஜஹானின் காலத்தில் பல்க் பிரதேசத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கும் இவரே தளமையேற்றுச் சென்றார். அரச அந்தஸ்துப் பெற்ற சிவப்புக் கூடாரத்தைப் பயன்படுத்தும் அணுமதியும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தனது 18வது வயதில் தெக்கான் பகுதியைக் கைப்பற்றியதுடன் அதன் கவர்ணாகவும் இருந்தார். பின்னர் 1645ல் குஜ்ராத்தின் கவர்ணராகவும் பதவி வகித்தார்.

கி.பி 1657ல் ஷாஜஹான் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றெண்ணிய அவரது பிள்ளைகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வேண்டி போராட்டம் செய்தனர். ஒளரங்கஜீபின் சகோதரர்களில் ஒருவரான தாராஷிகா என்பவர் ஷாஜஹானின் பெயரைப் பயன்படுத்தி சில மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். மறுபுறத்தில் எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தனர். தனது ஏனைய சகோதரர்கள் ஆட்சிக்கு வந்தால் மார்க்க விரோதச் செயல்களில் ஈடுபடலாம் என அறிஞர்கள் எச்சரித்ததை அஞ்சிய ஒளரங்கஜீப், முராத் எனும் தனது சகோதரரோடு இணைந்து தாராஷிகாவுடன் போரிட படையெடுத்தார். இதையறிந்த தாராஷிகாவும் ஷாஜஹானும் அவரை எதிர்த்து படையணுப்பினார்கள். இப்படையினரை எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட ஒளரங்கஜீப் 1658ல் ஆலம்கீர் எனும் பட்டப்பெயருடன் ஆட்சி பீடமேறினார். ஆலம்கீர் என்பதற்கு அகிலத்தை அடக்கி ஆள்பவர் என்பது பொருளாகும்.

ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சேவைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். அந்தவகையில், அக்பரால் உருவாக்கப்பட்ட தீனே இலாஹியை இரத்துச் செய்தார். இந்தியாவை  இஸ்லாமிய பிரதேசமாக பிரகடனம் செய்தார். மது மற்றும் இசையின் பகிரங்க பயண்பாடுகளை தடை செய்தார். அரசவையில் காணப்பட்டுவந்த வீண் பகட்டுக்கள் அனைத்தையும் நீக்கினார். ஒவ்வொரு நாளும் அரண்மனை ஜன்னல் அருகே நின்று பொதுமக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கத்தை நிறுத்தினார். அரசரின் தரிசனத்தைப் பெறுவதை இந்துக்கள் இறை வழிபாடு போன்று கருதி விரதம் அனுஷ்டித்துக் காத்திருந்ததாலேயே இவர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டார். பைத்துல் மால் நிதியை தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்துவதைத் விட்டும் தவிர்ந்து கொண்டார். ஷாஜஹான் ஆடம்பரத்துக்காக வேண்டி அரச சொத்துக்களை வீனாகப் பயண்படுத்தியதால், தந்தை என்றும் பாராது அவரை சிறையிலிட்டு நீதியை நிலை நாட்டினார். தனது ஆட்சியைக் கவிழ்க்க மதத் தீவிரவாத போக்குடைய சிவாஜி போன்ற துரோகிகளால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களை முறையடித்தார். இவரது காலத்து மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் அனைத்தையும் சேர்த்து 'பதாவா ஆலம்கீரி' எனும் பெயரில் வெளியிட்டார்.

தனக்கு ஆட்சியதிகாரங்கள் கிடைத்த போதும் ஒளரங்கஜீப் முன்பு போல எளிமையாகவே வாழ்ந்தார். அறிஞர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டே தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றார். தனது கையால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளை விற்றே தனது வாழ்க்கையை நடாத்தி வந்தார். இவ்வாறு அவர் எழுதிய இரண்டு குர்-ஆன் பிரதிகளை மஸ்ஜிதுந் நபவிக்கு அணுப்பியதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவரது காலத்தில் முகலாயப் போரரசு காபூல் முதல் தமிழ்நாடு வரை பரந்து காணப்பட்டது.

இவ்வாறு மகத்தான சேவைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒளரங்கஜீப்  நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 1707ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது உடல் அவர்  விருப்பப்படியே எவ்விதமான ஆடம்பரமுமின்றி மிக எளிமையான முறையில் தௌலதாபாத் எனுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒளரங்கஜீப், தனக்குப் பின் தனது புதல்வர்களில் யார், எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை தெளிவாக உயிலில் எழுதியிருந்தார். எனினும் அவரது பிள்ளைகள் அதைப் பின்பற்றத் தவறியதுடன் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டனர். இதனால் அவர் மரணித்து சில வருடங்களிலேயே மொகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் வீழ்ச்சியடைந்தது.

முகலாயர்களின் வீழ்ச்சி

1739ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த ஈரானைச் சேர்ந்த நாதிர் ஷாவின் படையை எதிர்கொள்ள முடியாது, முகலாயர் அவர்களுடன் சமாதானத்துக்கு உடன்பட்டனர். எனினும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஈரானியப் படையெடுப்புகளின் விளைவாக 1761ல் இடம்பெற்ற 3வது பனிபெட் போருடன் மொகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் நிரந்தரமாக  வீழ்ச்சியடைந்தது.

இந்தவகையில், ஈரானியப் படையெடுப்புகள், பிற்பட்ட காலங்களில் ஆட்சிக்கு வந்த திறமையற்றவர்களால் பரந்த பேரரசு பல துண்டங்களாக பிளவு பட்டமை, இதனால் மன்னர்களுக்கு மத்தியில் அரசியல் ஆதிக்கப் போட்டிகள் ஏற்பட்டமை, ஆட்சியாளர்களிடம் இஸ்லாம் பிரதிபலிக்காமை, அரபுகளுடனான தொடர்பு அற்றுப் போனமை, ஆட்சியாளர்கள் நிலம், ஆட்சி, செல்வம் போன்றவற்றையே இலக்காகக் கொண்டு செயற்பட்டமை, படைகளின் ஒழுங்கின்மையும் பலவீனவும், பொருளாதார சீர்குலைவு, சீக்கியர்களின் எழுச்சி, மராட்டியர்களின் ஆதிக்கப் படர்ச்சி, மேல்சாதிய சிந்தனை கொண்டவர்களின்(யூத, பாரசீகப் பரம்பரையினரான பிராமணர்கள்) கைக்கூலிகளாக செயற்பட்ட சிவாஜி போன்ற மதத்தீவிரப் போக்குடையோரின் சதிவேளைகள் மற்றும் நம்பிக்கைத் துரோகங்கள் போன்ற பல்வேறு காரணிகளும் இவர்களின் வீழ்ச்சிக்கு வழி வகுத்திருந்தன. மேலும் முகலாயப் பேரரசின் இத்தகைய பலவீனமான நிலைதான் ஆங்கிலேயர்களின் காலனித்துவம் இந்தியாவில் ஏற்பட்டமைக்கான மிகப் பிரதான காரணிகளில் ஒன்றாகக் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்தியாவை சுமார் 8 நூற்றாண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இக்காலப்பகுதியில், 600 இராச்சியங்களாக இருந்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் ஆள்வதற்கு வழிகாட்டினர், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிராமணிய மரபுகளை ஒழிக்க முயற்சித்தனர், உருது மொழி உருவாக காரணமாக அமைந்னர், மொகலாயக் கலை என்று ஒரு கலையை வழங்கினர், இந்திய கலாசாரத்தில் இஸ்லாமிய பண்பாடுகளைப் புகுத்தினர். இவ்வாறு, இந்தியாவின் வளர்ச்சியையும், மக்களின் நலனையும் அடிப்படையாகக் கொண்டு பல துறைகளிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டனர்.

1 comment: