🌹 ﷽ - الصــلوة والسلام عليك يارسول الله ﷺ 🌹
இஸ்லாத்தில் இசை ஹலாலா? ஹராமா?
இஸ்லாத்தின் பார்வையில் இசை ஹலாலா ஹராமா (கூடுமா கூடாதா?)
♦ இக்கட்டுரையின் மூலம் எம் நோக்கம் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இசை பற்றிய தவறான கருத்தினை நீக்குவதே ஆகும். ஆரம்பமாக இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும்.
இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா? எனவேதான் “எல்லா இசையும் கூடாது என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களிடம் பறவைகளின் பாடல்களும் கூடாது என்று கூற சொல்லுங்கள்” என்று அறிஞர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறி உள்ளார்கள். எனவே எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய வேண்டியுள்ளது.
♦ இசை ஹராம் என்று இந்த கருத்தை முன்வைப்போர் எடுத்துக் கொள்ளும் ஆதாரங்களில் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது ‘இசை உள்ளத்தில் நிபாக் தனத்தை தோற்றுவிக்கும்’ என்ற ஹதீஸினை ஆகும். இந்த ஹதீஸின் உண்மை தன்மையை அறியாமலே அவர்கள் இந்த கருத்தினை முன் வைக்கின்றனர் என்பது இன்ஷா அல்லாஹ் பின்வரும் விடயங்களின் மூலமாக நன்கு விளங்கும். இந்த ஹதீஸுக்கு இமாம்கள் விளக்கம் தரும்போது 'தீய எண்ணங்களை தூண்டும் விதத்தில் அமைவனவும், இவ்வுலக இன்பத்தில் மூழ்கும் விதமாகவும் மொத்தத்தில் இறைவனின் சிந்தனையை இல்லாதொழித்து ஷைத்தானிய்யத்தான எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் இசையே' நிபாக் தனத்தை உண்டு பண்ணக்கூடியதும் மார்க்கம் தடுத்ததுமாகும்.
அதனைத் தவிர்ந்த இஸ்லாமிய கீதங்கள், இஸ்லாமிய பாடல்கள் என்பவை நிச்சயமாக இறைவனின் சிந்தனையை உண்டு பண்ணுமே தவிர ஷைத்தானிய்யத்தான தன்மையை எவ்விதத்திலும் உண்டு பண்ணாது.அது மாத்திரமா நாம் ஓதும் குர்ஆனும் ஒருவகையான இசை கலந்த தொனியில்தான் வெளிப்படுகிறது. இதனாலயே ஸூபியாக்களில் பெரும்பாலானவர்கள் இசை நிபாக் தனத்தை உருவாக்கும் என்ற கருத்திற்கு மாற்றமான கருத்தினை கொண்டு இஸ்லாமிய இசை உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது, செய்த பாவங்களின்பால் கைசேதத்தை தூண்டிவிடுகிறது, அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் ஒத்தாசையாக இருக்கிறது போன்ற கருத்துக்களை அதிகமாக வலியுறுத்தியும்.நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். தமது செயற்பாடுகளில் இசையை மிக முக்கிய வழிமுறையாக அவர்கள் கைக்கொள்கின்றனர்.
♦ என்றாலும் மேல் கூறியது போன்று அல்லாமல் இறை சிந்தனையை சிதைக்கக்கூடிய சினிமா, நாடகப் பாடல்கள் மற்றும் ஏனைய இவ்வாறான பாடல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹு அலைஹி) ‘இசை உள்ளத்தில் நிபாக் தனத்தை தோற்றுவிக்கும்’ என்ற கருத்தை ஹதீஸாக ஏற்றுக்கொண்டால் அதனை வித்தியாசமானதொரு கோணத்திலேயே அணுக வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்கள். அதற்காக இசையை ஹராமான ஒன்றாகக் கருதிவிட முடியாது.
அழகான ஆடைகளை அணிவது, வசதியான வாகனங்களில் பயணிப்பது, வசதியான வீடு வாசல்கள் கட்டுவது போன்றன இஸ்லாத்தில் ஆகுமான செயல்களாக இருப்பினும் மனித உள்ளத்தில் பலவகையான நோய்களை ஏற்படுத்தக் கூடிய செயல்களாக அமைந்திருக்கின்றன. எனினும் அழகான ஆடை அணிவதை யாரும் ஹராம் எனக் கூறியதில்லை.
♣ இஸ்லாத்தில் எந்த மாதிரியான இசை கூடும்? எந்த மாதிரியான இசை கூடாது?
இசை பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் காலத்தில் அன்னவர்களின் முன்னாள் பாடப்பட்டுள்ளது. அப்போது அன்னவர்கள் அதனை தடுக்கவில்லை. அனுமதித்து உள்ளார்கள். அதேநேரம் பல நேரங்களில் இசை கூடாது என்ற கருத்துப்படவும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறி உள்ளார்கள்.
எனவே எது கூடும், எது கூடாது என்று கேள்வி எழும்போது, எந்த இசை ஒருவனுக்கு இறைவனை பற்றிய சிந்தனையை தூண்டுகிறதோ, ஒருவன் இறைவனை அடைய வழிவகுக்கிறதோ, இறைதூதர்களையும் இறைநேசர்களையும் புகழவும் அவர்கள் பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களை நேர்வழிப்படுத்தவும் பயன்படுகிறதோ, மேலும் ஆகுமான காரியங்களில் ஆகுமான முறையில் பாடப்படுகிறதோ அவை இஸ்லாத்தில் கூடுமான இசை முறையாகும்.
அதேபோல, எந்த இசை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டும், மோசமான உலக இச்சைகளை உள்ளத்தில் ஏற்படுத்தவும், பெண்களை பற்றிய மோகத்தை அதிகரிக்கவும், காமம், போதை போன்ற தடுக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் பாடப்படுகிறதோ, மேலும் இறைவனின் சிந்தனையை இல்லாதொழித்துவிடுகின்றதோ இப்படியான இசைதான் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இசைகள் ஆகும்.
♣ நல்லவர்களை புகழ்து பாடப்படும் இசை
ஹஸ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:
எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள்.
நூல்: ஸஹிஹுல் புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி
இங்கு கவனிக்க வேண்டியது, எல்லா இசையும் கூடாது என்று இருந்தால், நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் அச்சிறுமிகளை இசையோடு பாட வேண்டாம் என்று தடுத்து இருப்பார்கள். ஆனால், அன்னவர்கள் தமது பணிவின் காரணமாக அந்த வார்த்தைகளை கூற வேண்டாம் என்றும் மாறாக முதலில் இசையோடு பாடிக்கொண்டு இருந்ததை போல பத்ர் யுத்தத்தில் மரணித்த தியாகிகளை புகழ்ந்து பாடும்படியும் கூறி அனுமதித்து உள்ளார்கள்.
♣ பண்டிகைகளின் போது, சந்தோஷ மேலீட்டால் பாடப்படும் இசை
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
நூல்: ஸஹிஹ் முஸ்லிம் 1619
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
இந்த ஹதீஸிற்கு சிலர் இப்படி விளக்கம் கொடுக்கின்றனர். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கூறும்போது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள், ஷைத்தானின் இசைக் கருவிகள் என்பதை மறுக்கவில்லை, மாறாக, பெருநாள் என்பதால் அனுமதித்தார்கள் என்று கூறுகின்றனர். இல்லை, அது தவறாகும். அவை ஷைத்தானின் கருவிகளாக இருந்தால், ஷைத்தான் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை சின்னஞ்சிறு சிறுமிகள் அறியாமல் செய்யும்போது, அன்னவர்கள் அக்குழந்தைகளை தடுத்து, அக்குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லிக்கொடுத்து அக்குழந்தைகள் இசைப்பதை தடுத்து இருப்பார்கள். மாறாக, தவறு நடைப்பெறும்போது ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு அனுமதிப்பது, நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருபோதும் இல்லாத ஒரு பண்பாகும். மேலும் வேறு சந்தர்ப்பங்களிலும் தஃப் (கஞ்சிரா) அடித்து சிறுமிகள் பாடும்போதும் அவற்றை அனுமதித்து உள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
♣ திருமண வைபவங்களில் இசைக்கப்படும் இசை
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் ஆயிஷாவிடம், 'திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!' என வினவினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹிஹுல் புகாரி.
ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருவர் வந்து (திருமணத்தில்) இசைப்பதையும், கேளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா? என வினவினார். அதற்கு, 'ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே!' என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: தப்ரானி, பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133
மேலே சொன்னப்பட்ட இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலம், திருமண வைபவங்களில் சில வகையான இசைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது. அதனால்தான், இன்றும் அரபு நாடுகளில் முஸ்லிம் திருமண வைபவங்களில் தஃப் (கஞ்சிரா) அடித்து இசைக்கப்படுகிறது.
ஆனால், ஒன்றை மட்டும் நன்றாக விளங்க வேண்டும். இவையெல்லாம், கண்டிப்பாக இஸ்லாம் ஆகுமாக்கிய வழிகளில் மட்டுமே செய்யவேண்டும். ஆண், பெண் கலத்தல், ஆபாசமான உடைகள், ஆபாசமான நடனங்கள், அசிங்கமான வார்த்தைகள் எதுவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் முழுக்க முழுக்க ஹராமாகும். ஆகையால் உண்மயை உணர்ந்து சத்தியக்கொள்கை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆவில் இறுதி நாள் வரையில் வாழ்வதற்கு இறைவன் எம் அத்துனை பேருக்கும் தௌபீக் செய்வானாக.
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
No comments:
Post a Comment