ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 30 March 2017

வரலாற்று ஒளியில் ரஜப் மாதம்

வரலாற்று ஒளியில் ரஜப்
💧💧💧💧💧💧💧💧💧💧

இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.    இம்மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் இஸ்லாமிய     வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போர் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு மாதங்களில் ரஜப் மாதமும் அடங்கும்.
நபி(ஸல்) அவர்களின்  மிஃராஜ்  பயணம் இம்மாதத்தில் நடந்தேறியது. அல்லாஹ் கூறுகிறான்:-

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير

(அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன்.அவன் தன்னுடைய  அடியாரை கஃபத்துல்லாஹ்விலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரகத் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றோம். நிச்சயமாக  அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(பனி இஸ்ராயீல் : 1) .

நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு  அளித்துவந்த அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் மற்றும் அவர்களின் அருமை மனைவியான கதீஜா  (ரலி) ஆகியோரின் மறைவால் நபி(ஸல்) அவர்கள் துயருற்றிருந்தார்கள்.    குறைஷிகளிடமிருந்து வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.    இந்த காலகட்டத்தில் தான் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் விண்ணுலகிற்கு அழைத்துச்சென்று தன்னுடைய அத்தாட்சிகளை காண்பித்தான். நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னர் தலைமைப்பொறுப்பு பனி இஸ்ராயீல் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கஃபத்துல்லாஹ்விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு   அழைத்து சென்ற நிகழ்ச்சியானது தலைமைப்பொறுப்பு    நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு அவர்களின் உம்மத்திற்கு கிடைக்கப்போகிறது என்பதை யூதர்களுக்கு உணர்த்தியது.
இஸ்ரா- வ- மிஃராஜ்  சம்பவத்திற்கு பின்னர்  நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியிலே முன்னேற்றம் ஏற்பட்டது. அவ்ஸ், கஸ்ரஜ் மக்களிடமிருந்து  நபி(ஸல்) அவர்களுக்கு அதன் துவக்கம் ஏற்பட்டது. அவர்களின் உதவியோடு மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற போர்களிலே தபூக் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் தபூக் போர்  நடைபெற்ற காலகட்டம் மிகக் கடுமையான கோடை காலமாக இருந்தது. முஸ்லிம்கள் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும் அது பேரீத்தம் பழங்களின் அறுவடைக் காலமாகவும் இருந்தது.
அதே போன்று   மதீனாவிலிருந்து  நீண்ட தூரம் பயணித்து  ஷாம் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது இஸ்லாமிய நிலப்பகுதிக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அரசிற்கு மாபெரும் பின்னடைவை தரும்  என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் இஸ்லாமிய வீரர்கள் தபூக் களத்தை நோக்கி அணிவகுத்தார்கள். ஆனால் ரோமர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அஞ்சி நடுங்கியவர்களாக இஸ்லாமிய இராணுவத்தை சந்திக்க துணிவின்றி சிதறி ஓடினார்கள்.
ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்களெல்லாம் இனி முஸ்லிம்களுக்கு தான் அடிபணிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தனர். இவ்வாறாக இஸ்லாமிய எல்லைப்பகுதி  நாளுக்கு நாள் விரிவடைந்து ரோமப்பகுதிக்கு சென்றடைந்தது.

 ஐரோப்பிய  சிலுவைப்படையினரின்  ஆக்கிரமிப்பில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த முஸ்லிம்களின் முதல்  கிப்லாவான அல்குத்ஸ் (ஜெருசலேம்)  இம்மாதத்தில் தான் மீட்கப்பட்டது.  ஹிஜ்ரி 583 ரஜப் மாதத்தில்  மாவீரர் சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்களின் தலைமையில் அடைந்த இம்மாபெரும் வெற்றியானது ஐரோப்பியர்களை
குலைநடுங்கவைத்தது. அதன் பிறகு அதனை எதிரிகளால் நெருங்க இயலவில்லை.
முதல் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் பாலஸ்தீனை உஸ்மானியா கிலாஃபத்திலிருந்து பிரிட்டன் ஆக்கிரமித்தது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யூபிக்காக அல்குத்ஸ் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

இம்மாதத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வாக ஹிஜ்ரி 1342,ரஜப்  28 (மார்ச் 3, கி. பி.1924 )ல் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியின் மூலம்  கிலாஃபத் வீழ்த்தப்பட்டது.
முஸ்லிம்களின் ஒரே தலைமையாகிய விளங்கிய  கிலாஃபத் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருந்தன. கிலாஃபத் வீழ்த்தப்பட்டதோடு  முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே தலைமையும் பறிபோனதால் இஸ்லாத்தின் எதிரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவர்களின் வெறுப்புணர்வை அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படையாகவே உமிழ்ந்தனர்.
இது குறித்து அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாஃபத்தை வீழ்த்திய  பின்னர் 1924 ஜூன் 24  ல் லாஸன்  மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு  முஸ்லிம்களின் மீதான  தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது.
ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம் “.

     ஆங்கிலேயர்க்கு எதிராக அழைப்பு விடுத்தமைக்காகவும், அன்றைய உஸ்மானியா கிலாஃபத்திற்கு  ஆதரவாக  அழைப்பு விடுத்தமைக்காக வும் 1911 முதல் 1915  வரை தன்னுடைய வாழ்வை சிறையில் கழித்த மௌலானா முஹம்மது அலி ஜவஹர் தலைமையில்தான் 1919 ஆம் ஆண்டு கிலாஃபத் இயக்கம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. கிலாஃபத்தை வீழ்த்த பிரிட்டன்  துடித்துக் கொண்டிருந்தபோது அதை கட்டிக்காக்க இந்திய துணைக்கண்டத்து முஸ்லிம்கள் அரும்பாடுபட்டனர். கிலாஃபத் இயக்கத்தில் உலமாக்களும் பங்கு பெற்றிருந்தனர். கிலாஃபத் வீழ்த்தப்பட்ட மறுதினம் மௌலானா முஹம்மது அலி ஜவஹர் பின்வருமாறுகூறினார்.

"கிலாஃபத்  நிர்மூலமாக்கப்பட்டு விட்டதால் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் என்னென்ன  விளைவுகள்  ஏற்படும்  என்பது  கணிக்கமுடியாத ஒன்றாகும். இதனால்  இஸ்லாத்திற்கும், அதன் நாகரிகத்திற்கும் மாபெரும் அழிவு ஏற்படும் என்று என்னால் உறுதியாக கூற இயலும். இஸ்லாமிய ஒற்றுமையின் அடையாளமான  மதிப்புமிக்க அமைப்பை தகர்ப்பது என்பது இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கும்.
தனித்துவமிக்க இந்த கட்டமைப்பு தகர்க்கப்பட்டுவிட்டதால் பிரிவினைக்கும் மக்கள் புரட்சிக்கும் வழிவகுத்து விடும் என்று நான் அஞ்சுகிறேன்.
(மார்ச் 4, 1924டைம்ஸ்)

முஸ்லிம்களின் கட்டமைப்பை சிதைத்ததோடு இஸ்லாத்தின் எதிரிகள் அடங்கவில்லை.  இஸ்லாமிய நிலப்பகுதியை பலநாடுகளாக கூறுபோட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைத்தார்கள்.
அவர்களின் விருப்பம்போல் செயல்படும் கைப்பாவைகளை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள் அவர்களின் ஏஜண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கு மாற்றமான முதலாளித்துவ சித்தாந்தம் முஸ்லிம்கள் மீது
'பலவந்தமாக' திணிக்கப்பட்டது. முஸ்லிம்களின் உயிர், உடைமை, கண்ணியம் ஆகியவற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்தவர்களை ஒடுக்கினார்கள்.
(இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கத் துடிக்கும் எதிரிகள்,
என்னதான் அடைக்கினாலும். - ஒடுக்கினாலும்
இஸ்லாத்தை மேலோங்க வைப்பதே எங்களின்
'தலையாய பணி - கட்டாயக் கடமை' என்ற உறுதியை ஏற்று வாழும்
முஸ்லிம்களாகிய)
இந்த உம்மத் மறுமலர்ச்சிக்காக தன்னை தயார் படுத்திவருகிறது.
இதை முஸ்லிம் உலகு உணர்த்தி வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கிலாஃபத் வரும் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்.

ثم تكون خلافة على منهاج ا لنبوة…..                                       "……..நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலாஃபத்  ஏற்படும்".(முஸ்னத் அஹ்மத்)

No comments:

Post a Comment