ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 4 May 2018

கால் ஊனம் என்று கவலைப்பட வேண்டாம்

• ஊனமுற்றோர் • பெற்றோர் • மற்றோர் - 03

▪ கால் ஊனம் என்று
   கவலைப்பட வேண்டாம்!

அம்ர் பின் ஜமூஹ் (ரளி), தனது உயிரை சத்திய இஸ்லாமுக்காக தியாகம் செய்ய பேரார்வம் கொண்டவர். அதற்கான வாய்ப்பு பத்ருப்போர் மூலம் வந்தது. ஆனால், அவரது கால்கள் சரியாக இயங்காமல் இருந்தது. அத்துடன் அவரது முதுமை மற்றும் இயலாமையைக் காரணம் காட்டி அவரது மகன்கள் அவரை இல்லத்தில் இருக்கச் செய்து விட்டு, பத்ருக்களம் சென்றனர்.

அடுத்து உஹதுப்போரின் போதும் அவரது மகன்கள் அவரைத் தடுத்தனர். எனவே அவர் நபியவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நான் கால் ஊனமானவன் என்பதைக் காரணம் காட்டி எனது மகன்கள் என்னை 'ஷஹாதத்' எனும் நற்பேறை அடையவிடாமல் தடுக்கின்றனர்.
போரில் கலந்து ஷஹீதாகி நாளை மறுமையில் நான் எனது இந்த 'ஊனக் காலுடனேயே' சுவனத்தில் உலாவ விரும்புகிறேன் என்று கூறி போருக்கு அனுமதி கேட்டார்.

இது கேட்ட நபியவர்கள் மகன்களிம், 'அவரை அவரது போக்கில் விட்டுவிடுங்கள். இறைவன் ஒருவேளை அவரது மனம் விரும்பியவாறு ஷஹாதத் விருப்பத்தை நிறைவேற்றலாம்' என்று கூறினார்கள்.மகன்களும் சம்மதித்து இறுதியில் முழு குடும்பமும் உஹதுக் களத்தைக் காணத் தயாரானது.

'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் மதிப்பினில் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?'என்பதற் கிணங்க அம்ர் பின் ஜமூஹ் (ரளி) போர்க்களம் நோக்கி (தவழ்ந்து) புறப்பட்டார்.

புறப்படும்போது கஃபாவை நோக்கி, 'இறைவா! எனக்கு வீரமரணத்தை வழங்கு. யுத்த களத்தி லிருந்து புறமுதுகிட்டு என்னை எனது குடும்பத்தின் பக்கம் மீளஅனுப்பிவிடாதே' என்று பிரார்த்தித்து விட்டே சென்றார். அவரது பிரார்த்த னையும் அங்கீகரிக்கப்பட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

▪ உடல் சிதைக்கப்பட்டுள்ளதே என
   உள்ளம் குமுறவேண்டாம்!

உஹதுப்போர் அன்று உறுப்புக்கள் சிதைக்கப்
பட்ட நிலையில் எனது தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. உடல் மீது ஒரு துணி போர்த்தப் பட்டிருந்தது. அப்போது நான் அத்துணியை நீக்கி எனது தந்தையைப் பார்க்க எண்ணினேன். ஆனால், எனது குடும்பத்தினர் என்னைத் தடுத்தனர். மீண்டும் நான் துணியை நீக்க முனைந்தேன். அப்போதும் அவர்கள் என்னைத் தடுத்தனர்.

நபியவர்கள் ஜனாஸாவை தூக்குங்கள்  என்றார்கள். தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபியவர்கள், ‘யார் அந்தப் பெண்’ எனக் கேட்டார்கள். அம்ருடைய மகளோ சகோதரியோ என்று அங்கிருந்தோர் கூறினர்.

நபியவர்கள், ‘நீ ஏன் அழுகிறாய்... நீ அழுதாலும் அழாவிட்டாலும், ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை
அவருக்காக விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார் கள் தெரியுமா' என்றார்கள். [ஜாபிர் (ரளி), புஹாரி 1293]

▪ அங்கமே பழுது பட்டாலும்
   அங்கலாய்க்க வேண்டாம்!

ஒருமுறை இறைத்தூதர் ஈஸா (அலை) ஒரு காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது சற்றுதூரத்தில் ஓர் உருவம் தென்பட்டது. அருகில் சென்று பார்த்தார்கள்.

கண்கள் இல்லை; காதுகளும் செவிடு; நடக்க கால்கள் இல்லை;  பிடிக்கக் கைகள் இல்லை. நாக்கு மட்டும் ஏதோ முணங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நெருங்கி, நாவு என்ன மொழிகிறது என்று கூர்ந்து கவனித்தார்கள் ஈஸா நபி.

அப்போது அவரது நாவிலிருந்து, 'அல் ஹம்து லில்லாஹி அலா நஃமாயிஹி - இறை  அருட்கொடைகளுக்கு அந்த இறைவனுக்கு நன்றி' என வெளிவந்து கொண்டிருந்தது.'உனக்கென்ன  இறைவன் அருட்கொடை வழங்கியுள்ளான். அவனுக்கு நீ நன்றி செலுத்த' என்று கேட்டார்கள் ஈஸா நபி.

அதற்கு அவர், 'எந்த உறுப்புகள் மனிதர்கள் பாவம் புரிய காரணமாக உள்ளனவோ அவற்றை எனக்கு இல்லாமல் செய்ததற்கு நான் நன்றி செலுத்த வேண்டாமா, இறைத்தூதர் அவர்களே' என்றாராம். (சுப்ஹானல்லாஹ்!)

No comments:

Post a Comment