*தாஹா நபி (ஸல்) பேசிய தமிழ் வார்த்தை..*
~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~
இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் நோயினால் அவதிப்பட்ட போது நபிகள் நாயகத்தின் மீது தாம் கொண்டிருந்த காதலை, பேரன்பினை பாமாலையாகச் சூட்டி மகிழ்ந்ததே "கஸீதத்துல் புர்தா" என்கிற அழகிய காவியம் . பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் இமாம் பூஸிரி (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி அவர்களின் உடலைத் தம் திருக்கரங்களால் தொட்டுத் தடவ அந்த ஆன்மிக உணர்வால் இமாம் பூஸிரி (ரஹ்) அவர்களின் நோய் பரிபூரண குணமடைந்தது. மேலும் நபி பெருமானார் (ஸல்) தம் போர்வையை தனக்கு போர்த்திய காட்சியையும் இமாம் பூஸரி(ரஹ்) அவர்கள் கனவில் கண்டுகளித்து பேருவகை கொண்டார்கள் .. என்பது நாம் அறிந்த உலகப் புகழ்பெற்ற வரலாறு.
அதேபோல் நம் தமிழகத்தில் அண்ணலாரின் மீது அழகிய கவிபாடி அண்ணலாரின் அருள் பெற்ற "தமிழக பூஸரி" இமாமின் வாழ்க்கை வரலாறு ஒன்றையும் இந்த சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் புகழ் பெற்ற புலவர் அருணகிரிநாதர் . அவர் கடவுளான முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை தன் பாட வகுப்பில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர் அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய மாணவர்களும் அதை ஆர்வத்தோடு கேட்பார்கள்.
ஒருநாள் தன் பாட வகுப்பில் “இந்த புகழ் பெற்ற திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் இதுபோன்ற ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா"..? என்று இறுமாப்புடன் மாணவர்களை பார்த்து கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காஸிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர்.
"உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று பார்ப்போம் ” என்று கூறினார் திருவடிக் கவிராயர்.
இது கதையல்ல.. முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம்.
சிறுவயதிலேயே சிறந்த ஒழுக்கமும், இறை ஞானமும் நிறைந்து விளங்கிய காஸிம் அவர்கள் திருப்புகழுக்கு மறுபுகழ் எழுத முடிவு செய்தார்.
அதுவும் அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காஸிம் . ஆனாலும் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனையும் , கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.
தான் எழுதப் போவது அகிலத்தின் தூதர் அண்ணலாரைப்பற்றி.. அதற்கு அல்லாஹ்வின் அருளும் அண்ணல் நபியின் அருளாசியும் வேண்டுமல்லவா..?
தினந்தோறும் காயல்பட்டணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று அதிகப்படியாக தொழுவார். பின்பு அண்ணலாரின் மீது அதிகம் ஸலவாத்தை ஓதுவார்.
முடிவில்..
“நபிகள் நாயகமே! உங்கள் புகழ் போற்றும் திருப்புகழை நான் இயற்ற வேண்டும். அதன் தொடக்க வாசகத்தைத் தாங்களே எனக்குச் சொல்லித்தர வேண்டும். அன்புகூர்ந்து ஆரம்பச் சொல்லை எனக்கு அறிவித்து தாருங்கள் அண்ணலே!” என்று மனமுருகி கேட்டுக்கொண்டே இருப்பார்.
காலம் கடந்து கொண்டே இருந்தது. ஒருநாள் கவலையில் கண்ணயர்ந்த காஸிம் அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்சி தந்து "பகரும்" என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள்.
அவ்வளவுதான்.. அண்ணலார் ஆரம்பித்து வைத்த அந்த ஒற்றை வார்த்தையை இவர் உச்சரிக்க தொடங்கியபோது கவிதை கொட்டத் தொடங்கியது.
அளவற்ற மகிழ்ச்சியடைந்த காஸிம் அவர்கள் நபிகள் நாயகத்தின் மீது திருப்புகழை வரிசையாக உச்சரிக்க தொடங்கினார்.
“பகரும்.. உருவிலி யருவிலி வெருவிலி சிறிதும் ஒருதலை பயிலிலி துயிலிலி பருவிணுனர்விலி துணையிலி யிணையிலி விரிவான பழைய சதுமறை முழுவது முணர்பவர் பசிய தமிழ்வளர் துறவற முளரெவரு பரவ வரிதரி தொரு பொருடிருவுள - வருளாலே”
இப்படியே அவர் பாடல் தொடர்ந்தது.
இடையில் நபிகளார் பிறந்த மக்கா நகரைக் குறிப்பிடும் ‘மக்கப் பதிக்கும்.. மக்கப் பதிக்கும்’.. என்ற சொல்லை மட்டுமே திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தது அவருடைய நாவு. அவருடைய சிந்தனை இன்னும் சிறப்பாக நபிகளை புகழ வார்த்தையை தேடியது.
அப்போதும் கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தோன்றி "முயர் சொர்க்கப்பதிக்கும்".. என்று கூற "மக்கப் பதிக்குமுயர் சொர்க்கப் பதிக்கும் இரசூலே" என்று தன் பாடலை தொடர்ந்து எழுதி முடித்தார்கள்.
மொத்தம் 141 பாடல்களுடன் திருப் புகழை நிறைவு செய்தார் காஸிம் என்கிற அந்த மாணவர்.
ஆசிரியர் திருவடிக் கவிராயரிடம் அண்ணல் நபி பற்றி எழுதிய தன் திருப் புகழை ஒப்படைத்தார் அவர்.
திரும்பத் திரும்ப அந்த சந்தக் கவிகளைப் பாடிப் பரவசமடைந்தார் அந்த ஆசிரியர். தனது மாணவரின் சிறப்பைப் பாராட்டி சாற்றுக்கவியும் பாடினார்.
“விண்மேல் கொடிகட்டித் தாவுநல் காசிம்புலவர் கொழுங்கவியே” என்று புகழ்ந்தார் .
நபிகள் நாயகத்தின் தமிழ்க் குரலைக் கேட்கும் பாக்கியத்தை பெற்ற அந்த காஸிம் என்கிற மாணவர்தான் இன்றைக்கும் வரலாற்றில் அண்ணலாரின் மீது மிகச்சிறந்த பாமாலை எழுதிய "காயல்பட்டினம் வரகவி, அருள்கவி காஸிம் புலவர் அப்பா ரலியல்லாஹூ அன்ஹு" என்று போற்றப்படுகிறார்கள்.
தன் வாழ்நாளின் பல நேரங்களில் அண்ணல் நபிகளாரை கண்ணுற்று இன்பம் கண்டவர்கள் "தன் வாழ்நாளின் இறுதியிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணவேண்டும். அதன்பின் வேறு எதையும் தான் உலகில் காண விரும்பவில்லை" எனவும் இறைவனிடம் துஆ கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இறைவனும் அவர்களது துஆவை கபூல் செய்தான்.
அண்ணல் நபிகளாரை கண்டபின் அவர்களின் கண்கள் மரணம்வரை திறக்கவே இல்லை.
"வரகவி காஸிம் புலவர் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹு" அவர்கள் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் அடங்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களது வாரிசான ஏழு தலைமுறையினரும் சிறந்த கவிஞர்களாக திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணல் நபிகளார் ஆரம்பித்துக் கொடுத்த கவிதை வரிகளைக் கொண்டு தன் திருப்புகழை தொடங்கிய காஸிம் புலவரின் வாரிசுகள் கவிஞர்களாக புகழ்பெற்று இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே..?
ஸல்லல்லாஹூ அலா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.
*செய்யது அஹமது அலி. பாகவி*
அருமையான பதிவு நன்றி
ReplyDelete