சூஃபி கவிஞர்:
தக்கலை பீர்முஹம்மது அப்பா ரலியல்லாஹு அன்ஹு.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணிகபுரத்தில் 1574 ல் பிறந்தார்கள். தந்தை பெயர் சிறுமலுக்கர்.இவர்கள் சுல்தான் அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வழித்தோன்றல்.
பீர் முகம்மது அப்பா அவர்கள் முறையாக கல்வி கற்றவரா என்பதும், யாரிடம் கற்றார் என்பதும் தெரியவில்லை. ஆனால், கற்றார்க்கும் வசப்படாத கவித்திறம் கொண்டிருந்தார்கள். உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அறிவிக்கும் தத்துவ மேதையாய், மெய்ஞ்ஞான வள்ளலாய் விளங்கினார்கள்
சிறுவயதிலேயே தேடல் மிக்கவராய், அவர் வீட்டிலிருந்து வெளியேறினார். கேரளத்துக் காடுகளில் கடுந்தவமியற்றினார்கள்.உண்ணாமல், உறங்காமல் ஆன்ம சாதனைகள் மேற்கொண்டு உயர்நிலை அடைந்தார்கள். பதினெட்டாண்டு காலம் சுயமாய் மேற்கொண்ட பயிற்சிகள் அவரைப் பக்குவப்படுத்தின. அங்கே அவர் தங்கியிருந்த யானைமலைப் பகுதி அவருடைய பெயரால் 'பீர்மேடு' என்று அழைக்கப்படுகிறது.
பீர் முகம்மது அப்பா அவர்கள், கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா அவர்களின் சம காலத்தவர்.
பீரப்பா தமிழில் 18000 பாடல்கள் இயற்றியுள்ளார். அவை, ஞானப் புகழ்ச்சி, ஞானமணி மாலை, மஃரிபத்து மாலை, ஞானரத்னக் குறவஞ்சி, ஞானப்பால், திரு மெய்ஞ்ஞான சரநூல், ஞானத் திறவுகோல் என்று பல நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. அவர்களின் பெரும்பாலான பாடல்கள் மறைபொருள் கொண்டவை (மெய்ஞ்ஞானக் கருத்துக்கள்)
மலையாள பூமியில் இருந்து தக்கலை என்னும் ஊர் திரும்பிய பீரப்பா, ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள்.குடும்பம் நடத்துவதற்கான பொருளை நெசவுத் தொழில் செய்து ஈட்டினார். அவர் பள்ளிவாசலில் தொழுகைக்குச் செல்லாமல், ஆன்ம விசாரம் பண்ணுவதாய் ஊர் மக்கள் குறைபட்டனர்.
பீரப்பாவிடம் வெறுப்பு கொண்ட சிலர் அதுபற்றி சதக்கத்துல்லா அப்பாவிற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி தக்கலை வந்து அப்பா அவர்களைச் சந்தித்தார்கள் சதக்கத்துல்லா அப்பா.
பீரப்பாவை சந்தித்த சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பீரப்பாவின் உன்னத ஞானம் சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. 'இவர் இறையருள் பெற்ற மகான்' என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். ஊராருக்கு அச்செய்தியை அறிவிக்கவும் செய்தார்கள்.அப்போதிருந்து தக்கலை வட்டாரம் மட்டுமின்றித் தமிழகமே பீரப்பாவை மதித்துப் போற்றுகிறது.
அவர்கள் இவ்வுலகில் இருந்து 1664 இல் மறைந்தார்கள். தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள்.
-சூஃபி ஞானம் -- தேடலும் கண்டடைதலும் -
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
அறிய வேண்டிய பதிவு. நன்றி
ReplyDelete