ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 5 May 2019

புனித ரமலானே வருக

.........

ரமலான் என்பது விஷப்பரிட்சைகளுக்கு மத்தியில் ஒரு விஷேசப் பரிட்சை!
இது ஏழையின் குடலை எக்ஸ்ரே எடுக்கும் முயற்சி.

இந்த பட்டினியில்தான் ஆன்மாவின் வயிறு நிரம்புகிறது..
இந்த  நோன்பில்தான் வயிற்றில் அடிப்பவனை வயிறு அடிக்கிறது.

சுமக்கும் வயிறுதான் என்றுமே புனிதமானது.. ஆனால் இன்று
சுமக்காத  வயிறும் புனிதம் பெறுகிறது.

புசிக்கிற வயிறு மட்டும் அல்ல ..
இங்கே பசிக்கிற வயிறும் நிம்மதி பெறுகிறது..

கூலி கிடைத்தால்தான் வயிறு நிரம்பும்..
ஆனால் ரமலானில் மட்டும்தான்
காலி வயிறுக்கே கூலி கிடைக்கிறது.

ஈவு, இரக்கமற்றது வயிறு... பசியால் எத்தனைபேரை கள்வனாக்கியிருக்கிறதுஎத்தனைபேரை கொலைகாரனாக்கியிருக்கிறது.....
எத்தனை பேரை  சிறைச் சாலை அனுப்பியிருக்கிறது!

காலா காலமாக மனிதன் அதிகம் தோற்றது அவனது வயிற்றிடம்தான் !ஆனால் ... அந்த வயிறு தோற்றதே நோன்பிடம்தான்..

இது இறையோடு உரையாட குடல் எழுதும் மடல்...

இங்கே ...
பணம் படைத்தவர்கள் கூட கல்லறையின் ஞாபகத்தில் சில்லரைகளை தள்ளி வைத்து விட்டு தாராளமாக தர்மம் செய்யும் மாதம் ..

வாதங்கள் செய்தால் .. "வைத்திருக்கிறேன் நோன்பு"... என்று வேண்டாத வார்த்தைகளை.. தவிர்க்க சொன்ன தாஹா நபி (ஸல் ) போற்றும் மாதம் இது...

முழு நாளும் உழைத்தாலும் ஒரு நூறை கூட சேமிக்க முடியாமல் தள்ளாடும் முஃமினான ஏழைக்கு.... சில நூறை கொடுத்து சிறப்பிக்கும் மாதம் ....

புனித ரமழானே....நீ  பரிவுடன் பரிமாறும் போது பசி கூட ருசிக்கிறது....
தாகத்தை விரும்பி    தவமிருக்கிறது நாக்குகள்!

அடங்கு அடங்கு.. என்று  ஐம்புலன்களுக்கும் கட்டளையிடும்      ஆசிரியன் நீ....!     சைத்தானை சங்கிலியிட்டு சொர்க்கவாசலை திறந்துவைக்கும் ஆச்சர்யம் நீ....!

இருபத்து மூன்றாண்டு இறங்கிய நல் வேதத்தின் இனிய துவக்கம் நீ.... அல்லவை கருக்கி நல்லதைப் பெருக்கும் அழகிய ஆக்கம் நீ.....!

எனக்கொரு வரம் வேண்டும் எழில் மிகு ரமழானே....      
வருகின்ற மறுமையிலே வள்ளல்நபி நாயகத்தின் கரம் கோர்த்து நடந்திடவே... இறைவனிடம் நற்சாட்சி பகர்வாயா அருள் பூக்கும் ரமழானே!!

புனித ரமலானே வருக வருக....
புவியில் ரஹ்மானின் அருளைத் தருக...

செய்யது அஹமது அலி. பாகவி

No comments:

Post a Comment