ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 1 February 2019

4 மத்ஹப் இமாம்களின் தியாகங்கள்

முன்மாதிரிச் சமுதாயம் :

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்கள். அதற்கு பிறகு ஸஹாபாக்கள் தியாகம் செய்தார்கள். இன்றைக்கு மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஸஹாபாக்களின் தியாகங்கள் கூட மறுக்கப்படும் நிலைதான். இந்த மார்க்கத்திற்காக உழைத்த, உயிரைக் கொடுத்த நபித்தோழர்களின் தியாகங்களை கூட புறக்கணித்து ஒரு தவறான சாயம் பூசப்படும் நிலையை நாம் பார்க்கின்றோம். ஆனால் அல்லாஹ் முதன் முதலில் இந்த மார்க்கத்தை இந்த உலகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கு முன்மாதிரிச் சமுதாயமாக அவர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்துகின்றான். இந்த மார்க்கத்திற்கு இப்படியெல்லாம் கூட தியாகங்களைச் செய்ய முடியும் என்று தியாகத்திற்கே உதாரணமாக அவர்கள் திகழ்ந்ததை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.

தமிழக மக்களின் நிலை :

ஸஹாபாக்களுக்குப் பிறகு தியாகிகளின் நீண்ட பட்டியல் இருக்கின்றது. அந்த தியாகிகளின் வரலாற்றிற்கும் தமிழக மக்களுக்கும் மத்தியில் மிக நீண்ட இடைவெளி உள்ளது. எப்படிப்பட்ட தியாகங்கள் செய்யப்பட்டு நம் வரை இஸ்லாம் வந்துள்ளது என்ற வரலாற்றுத் தகவல்கள் தமிழக மக்களை வந்தடையவில்லை. இந்த வரலாற்றுத் தொடர் விடுப்பட்டதற்கு உர்தூ, அரபி போன்ற மொழி அறியாமையின் காரணமும் ஒன்றாகும்.

ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றி நாம் அங்காங்கே ஒரு சில சம்பவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்குப்பிறகு அல்லாஹ், தாபிஈன்களில் சில மக்களை மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காகவே தேர்ந்தெடுக்கின்றான்.

தாபியீன்களில்...

• ஸயீத் இப்னு முஸய்யிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ-90 மரணம்)

• உர்வாபின் சுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி

• ஸாலிம் பின் அப்துல்லாஹ்பின் உமர் ரஹ்மதுல்லாஹி அலைஹி (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர்) (ஹிஜ்ரீ -106 மரணம்)

• காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ-106)

• உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ-101)

இவர்களெல்லாம் குர்ஆன், சுன்னா வழியில் ஷிர்க், பித்அத்துகளைக் களையெடுப்பதற்காக பாடுபட்டவர்களில் மிகவும் முயற்சி எடுத்தவர்கள் ஆவர்.

தபவுத் தாபியீன்களில்....

இமாம் அபூ ஹனீஃபா அன் நுஃமான் (ஹிஜ்ரி 80-150) :

இன்றைக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ஏதாவதொரு மத்ஹபின் வழிமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஒன்று. ஆனால் அவர்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளுக்கு மாற்றமில்லாதிருந்தால் அவை விவாதத்திற்கிடமின்றி அவற்றைப் பின்பற்றுவதில் எந்தத் தவறுமில்லை. அதே சமயம் தனது சட்டங்கள் குர்ஆனுக்கோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸுக்கோ மாற்றமாக இருந்தால் அவற்றைப் பின்பற்றுவது ஹராம் என்றும் அறிவித்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் குணச் சிறப்பியல்புகளைப் பார்ப்போம். இவருடைய பெயரால் அழைக்கப்படும் மத்ஹபுகள் இந்திய துணைக்கண்டம், மற்றும் துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவிலன் பல பகுதிகளிலும் பரவி நிற்கின்றன. அபூ ஹனீஃபா அன் நுஃமான் அவர்கள் ஈராக்கின் கூஃபா என்னும் நகரில் ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர் நேர்வழி பெற்ற அந்த நபித்தோழர்களின் இரண்டாவது சந்ததியில் பிறந்த சிறப்புக்குரியவராவார். இன்னும் அவர் சில நபித்தோழர்களிடமும், இன்னும் நபித் தோழர்களுக்குப் பின் வந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடமும் நேரடியாகக் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். இன்றைக்கு ஃபிக்ஹு என்றழைக்கக் கூடிய இஸ்லாமிய மார்க்க விளக்கச் சட்டங்களை முதன் முதலாகத் தொகுத்தளித்த பெருமை, இமாம் அபூ ஹனீஃபா அவர்களையே சாரும். இவற்றை அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஆதார ஒளியில் திரட்டினார்கள்.

காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு மார்க்கக் கல்வி அளித்தது, போக பகல் நேரங்களில் அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக விளங்கினார். மார்க்கக் கல்வியை போதிக்கும் ஆசிரியராகவும், வியாபாரியாகவும் சிறந்த முறையில் விளங்கினார், அவற்றில் தனது தனி முத்திரையைப் பதித்தார். வியாபாரத் தொடர்புகளை நேர்மையான முறையில் மட்டுமல்ல, நியாயமான முறையிலும், கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாகவும் நடந்து கொண்டார். வியாபாரத்தில் பெறப்படும் லாபம் நியாயமானதாக இருந்தாலும் கூட, தனது மனதுக்கு அது சங்கடத்தைத் தரும் என்றால், அத்தகைய லாபத்தைக் கூட பொறுத்தத்தாது அதனைத் தவிர்த்து விடுவார்.

ஒருமுறை பெண் அவரது கடைக்கு வந்து, தனது பட்டு உடையை விற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விற்றுத் தருவதாக வாக்களித்த அபூ ஹனீஃபா அவர்கள் அதன் அடக்க விலை குறித்து அந்தப் பெண்மணியிடம் கேட்ட பொழுது, அந்தப் பெண் 100 திர்ஹம் என்று கூறினார். ஆனால் அபூ ஹனீஃபா அவர்களோ, இந்த ஆடை அதனை விலை போகக் கூடியது என்று கூறி, அவர் கண் முன்பே 500 திர்ஹம்களுக்கு விற்று, அந்தப் பணத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கினார்.

மிகச் சிறந்த இஸ்லாமிய வாழ்க்கையை மேற்கொண்ட இமாம் அவர்கள், மக்களுடன் இரக்கத்துடனும் கனிவுடனும் நடந்து கொண்டதோடு, மக்கள் தொடர்பில் மிகச் சிறந்து விளங்கினார்கள். உடல் நலமில்லாதவர்களை அணுகி விசாரிப்பது, யாரையாவது பார்க்க இயலா விட்டால் அவரைப் பற்றி விசாரிப்பது போன்ற நற்குணங்களை தன்னுள் வளர்த்து வந்தார்.

ஒருமுறை இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்கார குடிகாரருக்கும் நடந்த சம்பவம் மிகவும் சுராஷ்யமானதொன்று. அந்த பக்கத்து வீட்டுக் குடிகாரர் எப்பொழுதும் குடித்து விட்டு, இரவு நேரங்களில் சப்தம் போட்டு பாடிக் கொண்டு, இவரை அதிகம் தொந்திரவு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு அந்தப் பக்கத்து வீட்டில் இருந்து எந்தப் பாட்டுச் சப்தமும் வரவில்லை, நிசப்தமாக இருந்தது. மறுநாள் காலை அவரைப் பற்றி விசாரித்த பொழுது, அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதாகத் தகவல் வந்தது.

இதனை அறிந்த மாத்திரத்தில் அபூஹனீஃபா அவர்கள் அந்தப் பகுதி கவர்னரிடம் சென்று, அந்தக் குடிகாரருக்காக வாதாடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்ததோடு, அவர் சிறையில் இருந்த நாட்களில் ஏற்பட்ட பொருளாதார நஷ்டத்தை ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி செய்தார். அபூ ஹனீஃபா அவர்களின் இந்தப் பேருதவி, அந்த குடிகாரரைச் சிந்திக்க வைத்தது. இவர் மீது பெருமதிப்புக் கொள்ள வைத்தது. அடுத்த நாள் முதல் இது நாள் வரை தான் செய்து வந்த பாவச் செயலுக்கு பிராயச்சித்தமாக, இஸ்லாமியக் கல்வியைக் கற்பதில் தனது நேரத்தினைச் செலவு செய்ய முடிவெடுத்த அவர், அபூ ஹனீஃபா அவர்கள் பள்ளிவாசலில் நடத்தி வரக் கூடிய இஸ்லாமிய வகுப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

எங்கே நாம் தவறிழைத்து விடுவோமோ என்று அவர் பயந்ததன் காரணமாக, கலீஃபாக்களும், கவர்னர்களும் அவரை நீதிமன்ற நீதிபதியாகவும், முக்கிய பொறுப்புக்களில் அமர்த்திய பொழுதும் அவர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதன் காரணமாக கலீஃபா ஜாஃபர் அல் மன்சூர் அவர்கள் இவரைச் சிறையிலும் அடைத்தார். அந்தச் சிறையிலேயே ஹிஜ்ரி 150 ல் மரணமடைந்தார்.

ஆட்சியும் அதிகாரமும் அவரை நான்கு சுவர்களுக்குள் அடைத்து அவரது உயிரைப் போக்கினாலும், இன்றைக்கு உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் அவரது சேவையை நினைவு கூர்ந்து கொண்டிருப்பதோடு, இஸ்லாமிய வரலாறு அவரை என்றென்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது.

இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி :

தாபியீன்களுக்குப் பிறகு தபவுத் தாபியீன்களின் காலம். அதில் தலையாய இடத்திலிருப்பவர் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். நான்கு மத்ஹப்களின் இமாம்களில் ஒருவராக பிரபலமாகியிருக்கும் இமாம் மாலிக் பின் அனஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த பூமியில் குர்ஆன், சுன்னாவை நிலைநாட்டுவதற்காக என்னவெல்லாம் தியாகங்களை மேற்கொண்டார்கள் என்பது பற்றி நமக்குக் கூறப்பட்டதோ? இல்லையோ? இமாம்களின் பெயரைச் சொல்லி விமர்சித்ததையும் அவர்களை துச்சமாகக் கருதி அவர்களைக் குறை கூறியதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

மத்ஹபுகளை விமர்ச்சிப்பது வேறு, இமாம்களை விமர்ச்சிப்பது வேறு, தன்னுடைய வாழ்க்கையில் ஐங்காலத் தொழுகையைப் பேணுதலாகத் தொழாதவர்களெல்லாம் இஸ்லாத்திற்காக தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த இமாம்கள் மீது மிக மோசமான வார்த்தைகள் துணிந்து உபயோகப்படுத்துவதை தமிழக மக்களுக்கு மத்தியில் மட்டும்தான் காணமுடிகிறது.

நம்முடைய பலவீனம், கல்வியின்மை, கல்விக்கும் நமக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இவற்றின் காரணத்தால் இஸ்லாத்திற்காக மிகப்பெரிய தியாகங்கள் செய்திட்ட, எவர்களுடைய முயற்சியினால் இன்று நாம் குர்ஆன், சுன்னாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோமா அப்படிப்பட்ட தியாகிகளை புறந்தள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய துணிவு சில தமிழக பேச்சாளர்கள் சிலரிடம் வந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்திற்காக எவ்வளவு பெரிய தியாகங்கள் செய்தார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை பாருங்கள்.

இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில் ஒரு கலீஃபா இறந்து விட, அடுத்ததாக ஜஃபர்பின் சுலைமான் என்பவருடைய ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஆட்சிக்கட்டிலிலிருந்து ஒரு நெருக்கடி வருகிறது. "ஒரு மனிதன் நிர்ப்பந்திக்கப்பட்டு தலாக் சொன்னால் அந்த தலாக் செல்லாது என்ற ஹதீஸை மக்களுக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாது" என்பது தான் அந்த நெருக்கடி. காரணம், அங்கு ஆட்சித் தலைவருக்கு நிர்ப்பந்தமாக பைஅத் வாங்கப்பட்டு வந்த சமயம் அது. நிர்ப்பந்தமான தலாக் செல்லாது எனும்போது நிர்ப்பந்தமாக வாங்கப்பட்ட பைஅத்தும் செல்லாது என்றாகிவிடும் அல்லவா? ஆனால் இமாம் அவர்கள் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த சுன்னாவை ஒருநாளும் மறைக்கவே மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார்கள்.

இறுதியில் ஆட்சியில் இருந்தவர்கள் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரையும் ஏவி விட்டு இமாம் அவர்களை ஒரு கழுதை மேல் ஏற்றி அமர வைத்து சாட்டையாலும், கற்களாலும் அடித்து ஊர்வலமாக ஓட ஓட விரட்டுகிறார்கள். அந்த நேரத்திலும் இமாம் அவர்கள் கலங்கவில்லை, கதறவில்லை அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த, உதித்த வார்த்தைகள் இதோ:

"என்னை யார் முன்னதாக அறிந்திருக்கின்றீர்களோ என்னை நீங்கள் அறிந்திருக்கீன்றீர்கள். என்னைப் பற்றிய அறிமுகம் எவருக்கு இல்லையோ அறிந்து கொள்ளுங்கள்; அஸ்பஹீ இனத்தைச் சேர்ந்த அபூஆமிரின் பேரனான அனஸின் மகன் மாலிக் நான் தான். நான் சொல்கிறேன் நிர்ப்பந்திக்கப்பட்டு வாங்கும் தலாக் செல்லாது" என்று இரத்தம் சொட்ட சொட்ட தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்கள். இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மக்களுக்கு சுன்னா சென்றடைய வேண்டும் என்பதற்காக தொகுத்த நூல் தான் "முஅத்தா மாலிக்" என்ற பிரபலமான நூலாகும்.

அவர்கள் ஹிஜ்ரீ 179-ல் வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய மாணவர் இமாம்ஷாஃபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வருகிறார்கள்.

இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி :

இவர்கள் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமும் வகீம் பின் ஜர்ராஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமும் கல்வியை கற்கிறார்கள். இது தவிர பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்று தமது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டு அவர்களும் ஒரு ஹதீஸ் நூலைத் தொகுக்கின்றார்கள். அதுதான் இன்று முஸ்னத் ஷாஃபியீ என்று அறியப்படும் நூலாகும். மேலும் "அர்ரிஸாலா" என்ற ஓர் அற்புதமான ஹதீஸ்கலை நூலையும் தொகுக்கின்றார்கள். அது மட்டுமல்ல ஹதீஸ் தொகுப்பிலேயே ஹதீஸ் கலையை உருவாக்கியவர்களே இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தான்.

இரண்டு ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தோன்றினால்அதை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு ஹதீஸ் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது என்றிருக்கும் பிரிதொரு ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழித்தார்கள் என்றிருக்கும். இஹ்ராம் அணிந்துவிட்டால் திருமணம் தடை என்று ஒரு ஹதீஸிலும் இஹ்ராம் அணிந்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று மற்றோர் ஹதீஸிலும் இருக்கும். இப்படி முரண்பாடாக வரக்கூடிய ஹதீஸ்களை எப்படி விளங்கிக் கொள்வது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் "இக்திலாஃபில் அஹாதீஸ்" என்ற நூலைத் தொகுக்கிறார்கள்.

ஆழமான தீர்வை தருகிறது அந்நூல். மேலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கப்ரு வழிப்பாட்டினர், சூஃபியாக்களின் கொள்கைகள் அனைத்தையும் தரைமட்டமாக்குவதற்காக கொள்கை ரீதியான பல புத்தகங்களைத் தொகுத்து இந்த சமுதாயம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனையிலிருந்து வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டிருக்கின்றார்கள் இமாம் அவர்கள். இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் பின் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 204-ல் வஃபாத்தாகிறார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி :

அதற்குப் பிறகு அப்பணியை சிரமேற்கொண்டு செயல்படவும் மார்க்கத்திற்காக தம்முடைய இன்னுயிரை நீத்திடவும் தயாராகிறார்கள் இமாம் ஷாபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றை படிக்கும் போது கல்விப்பணியில் இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இவர்களையெல்லாம் விஞ்சி நிற்பதை அறிய முடிகின்றது. தம்முடைய தந்தையிடமிருந்தும் தம்முடைய சகோதரரிடமிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்ட இமாம் அவர்கள் சுமார் 30,000 ஹதீஸ்களைக் கொண்ட முஸ்னத் அஹ்மத் என்ற மிகப்பெரிய ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுக்கின்றார்கள். இந்த ஹதீஸ்களை மக்களுக்கு போதிக்கும்போதெல்லாம் என்னுடைய சொந்த கருத்தை எழுதாதீர்கள் என மக்களை எழுதவிடாமல் தடுத்து விடுவார்கள். இதனாலேயே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சொந்தக் கருத்துக்களடங்கிய நூல் எதுவுமே இருக்காது. எல்லாம் ஹதீஸ் நூற்களாகத்தான் இருக்கும்.

தமது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹதீஸ்கள் மட்டுமே தொகுக்கப்படவேண்டும் என்று விரும்பிய இமாம் அவர்கள் அப்துல்லாஹ் என்ற தமது மகனாரிடம் "அப்துல்லாஹ்வே! இந்தப் புத்தகத்தை நீ மிக மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நூலாக அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். காரணம், இதில் நான் தொகுத்தளித்துள்ள 30,000 ஹதீஸ்களும் 7,00,000 ஹதீஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்" என்று கூறுகிறார்கள்.

இமாம் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த 30,000 ஹதீஸ்களைத்தான் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலாக நாம் பார்க்கிறோம். அஹ்மத் என்று வருவதெல்லாம் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தொகுப்பு நூலான முஸ்னத் அஹ்மத் என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ்கள்தாம். இமாம் அவர்கள் இந்த குர்ஆன், சுன்னாவை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட சிரத்தை எண்ணிலடங்காதது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபித்னா தோன்றுவதுபோல் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலகட்டத்திலும் மிகப்பெரிய பித்அத்(ஃபித்னா) தோன்றுகிறது.

மஃமூன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் "குர்ஆன் படைக்கப்பட்ட பொருள்" எனும் கூற்று பெரும் குழப்பமாக திகழ்ந்தது. குர்ஆன் படைக்கப்பட்ட பொருள் என்று சொன்னால் படைக்கப்பட்ட பொருட்கள் அழிவதைப் போன்று குர்ஆனும் அழிந்து போய்விடும் எனும் சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் அது அழிந்துவிடும் எனில் அல்லாஹ்வும் அழிந்து விடுவான் என்றாகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவே இத்தீய கொள்கையை ஒரு போதும் வளரவிடக்கூடாது என்று அக்காலத்தைய இமாம்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள்.இதில் பலரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மஃமூன் என்ற அரசனின் கடைசி காலத்தில் தான் (ஹிஜ்ரீ 218-ல்) இந்த ஃபித்னா தொடங்குகின்றது அவர் மரணிக்கின்றார். அவர் மரணித்தவுடன் இந்த ஃபித்னா இல்லாமல் ஆகிவிடும் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி எண்ணுகின்றார்கள்.

ஆனால் அதற்குப்பிறகு முஃதஸிம் என்பவர் ஆட்சிக்கு வருகிறார். இவரும் அந்தத் தீயக்கொள்கையில் உறுதியாக இருக்கின்றார். இக்கொள்கையை எதிர்க்கின்றவர்களை சிறையிடைக்கக் கட்டளையிடுகின்றார். அப்பொழுது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அவர்களுடன் முஹம்மத் பின் நூஹ் என்பவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பக்தாதுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாக முஹம்மத் பின் நூஹ் அவர்கள் வழியிலேயே வஃபாத்தாகி விடுகிறார்கள். எஞ் சியிருப்பது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும்தான். ஒரு சிலர் ஆட்சியாளருக்கு பயந்து கொண்டு இக்கொள்கையை விட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால் ஃபித்னாவை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இமாம் அவர்கள் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இமாம் அவர்கள் 30 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தப் பிறகு அரசன் முஃதஸிம் இமாம் அவர்களை சிறையிலிருந்து விடுவித்து என்ன நினைக்கின்றீர்கள்? கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்று விசாரிக்கின்றார்.

அதற்கு இமாம் அவர்கள் "எந்த மாற்றமும் இல்லை" என துணிந்து கூறுகின்றார்கள். அப்படியா னால் அங்குள்ள 2 கம்புகளில் ஏதேனும் ஒன்றில் கைவையுங்கள்! என்று கூறுகிறான். இமாம் அவர்களுக்குக் காரணம் புரியவில்லை ஒரு கம்பில் இமாம் கைவைத்து விடுகின்றார்கள். அதற்குப்பிறகு அந்தப் பகுதியிலுள்ள கோரமுகம் கொண்ட சில சாட்டை வீரர்கள் வருகின்றார்கள். இரக்கம் என்பதையே அல்லாஹ் அவர்களின் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டானோ என்னவோ இமாம் அவர்களை அடிக்க ஆரம்பிக்கின்றனர் ஒரு அடியிலேயே இமாம் அவர்கள் மயக்க முறுகிறார்கள் கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிகிறது. அடுத்து ஒரு அடி இப்படியே 30-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் சில நூல்களில் 80-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி உடம்பில் ஒரு இடம்கூட அடிவிழாமல் மிஞ்சவில்லை எனும் அளவிற்கு அடிக்கப் படுகிறது. இறுதியில் இமாம் அவர்களின் உடலுக்கு மருந்திடுவதற்காக மருத்துவர் வந்து அவர்களுடைய உடம்பில் சில சதைத்துண்டுகளை துண்டித்து எடுக்கின்றார். காரணம் அந்த சதைத்துண்டு களெல்லாம் செத்துப்போயிருந்தன, அதற்கு உயிர் இல்லை. அடித்துக் கொண்டிருக்கும் போதே சில சதைத்துண்டுகள் தொங்கிக் கொண்டும் இருந்திருக்கின்றது. பிறகு அதையெல்லாம் துண்டித்து எடுத்து விட்டுதான் மருத்துவம் செய்யப்படுகின்றது. பிறகு இமாம் அவர்களால் தொழக்கூட முடியாத நிலை இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம். இதுவே இமாம் அவர்களின் மரணப்படுக்கையாகி விடுகின்றது. இப்படி சத்தியத்திற்காக இமாம்கள் பட்ட கஷ்டங் களையும் யாருக்காகவும், எதற்காகவும் மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்ளாத நிலையையும் அவர்களின் வரலாற்றில் பார்க்கின்றோம். இமாம் அவர் கள் ஹிஜ்ரீ 241 வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகு யஹ்யா இப்னுமுயீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ 233) அலீ இப்னு மதீனீ ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ 234) என ஹிஜ்ரீ 200களில் இந்த மிகப்பெரிய அறிஞர்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய தியாகத்தை பதிந்திருகின்றார்கள்.

இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி :

அடுத்து இமாம்களுடைய மாணவர்களின் காலம் வருகின்றது அவர்கள்தான் குர்ஆன், சுன்னாவை நிலை நாட்டுவதற்கான அடுத்த தியாகிகள் கூட்டம். புகாரீ என்ற ஹதீஸ் நூலை நாம் பார்க்கின்றோம். அதை தொகுத்த இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேற்கண்ட தியாகிகளின் மாணவராக இமாம்களுக்கு அடுத்த கால கட்டத்தில் வருகின்றார்கள்.

1. இமாம் இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ : 256)

2. இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ : 261)

3. இமாம் அபூதாவூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ : 275)

4. இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ : 279)

5. இமாம் நஸாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி (ஹிஜ்ரீ : 303)

இவர்கள் அனைவரும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர்களாவர். மத்ஹபு இமாம்களின் மாணவர்கள் தான் இவர்கள். இந்த இமாம்கள் அனைவருமே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமிருந்தும் மற்ற அறிஞர்களிடமிருந்தும் ஹதீஸ்களைத் தேடிப் பெற்று மிகப்பெரும் தொகுப்பு நூல்களை நமக்குத் தந்து குர்ஆன், சுன்னாவை நிலை நாட்ட பாடுபட்டிருகின்றார்கள்.

இவர்களோடு தியாகங்கள் முடிந்து விட்டதா? என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment