*ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு*
எழுதியவர் – மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ)
சிரேஷ்ட விரிவுரையாளர் , றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
காத்தான்குடி – 05
*********************************************************************************
இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள்.
இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன் (ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின் உஸ்தாத்), இமாமுல் அவ்லியா (வலீமார்களின் தலைவர்) போன்ற பல பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.
அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹு அன்னவர்கள் இறாக்கிலுள்ள உம்மு அபீதா என்ற கிராமத்திலுள்ள அல்பதாயிஹ் என்ற இடத்தில் ஹிஜ்ரீ 512ம் ஆண்டு றஜப் மாதம் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸெய்யித் அலீ. தாயின் பெயர் உம்முல் பழ்ல் பாதிமா அந்நஜ்ஜாரிய்யஹ் றழியல்லாஹு அன்ஹுமா.
ரிபாயீ நாயகம் அன்னவர்கள் தந்தை வழியில் அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும், தாய் வழியில் நபீத் தோழர் அஸ்ஸெய்யித் அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.
தனது ஏழாவது வயதில் அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள். தனது தந்தையின் மரணத்தின் பின் அவர்களின் மாமா மன்சூர் அல்பாஸின் பொறுப்பில் அவர்கள் வளர்ந்தார்கள். இறையறிவுடனும், இறையச்சத்துடனும் வளர்ந்த இவர்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாக காணப்பட்டார்கள்.
பசித்தோருக்கு உணவளிக்கக் கூடியவர்களாக, உடையற்றோருக்கு உடை வழங்கக் கூடியவர்களாக, நல்லவனாயினும், கெட்டவனாயினும் அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கக் கூடியவர்களாக, ஜனாஸஹ் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியவர்களாக, ஏழைகளின் நிகழ்வுகளில் அவர்களுடன் ஒன்றாக அமரக் கூடியவர்களாக, கஷ்டங்களின் போது பொறுமை செய்யக் கூடியவர்களாக, பிறருக்கு உதவுபவர்களாக, யாரைச் சந்தித்தாலும் அவர்களுக்கு முதலில் ஸலாம் கூறுபவர்களாக, தனக்கு அநீதி செய்வோரை மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக, பணிவுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு அன்னவர்கள்.
மாத்திரமன்றி தான் நடந்து செல்லும் போது வலதிலோ, இடதிலோ திரும்பிப்பார்க்கமாட்டார்கள். மாறாக தலையைத் தாழ்த்தியவர்களாக நடந்து செல்வார்கள். பணிவு, பேணுதல், துறவறம் போன்ற குணங்கள் காணப்பட்டவர்களாக விளங்கினார்கள். ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். நாளைக் கென்று எதையுமே அவர்கள் சேமித்து வைத்தது கிடையாது. உளத் தூய்மையுடையவர்களாகத் திகழ்ந்தார்கள். பொறாமை, பெருமை, கோபம் போன்ற தீக்குணங்களை விட்டும் மற்றோரைத் தடுக்கக் கூடியவர்களாக செயற்பட்டார்கள். இதன் காரணத்தினால் ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்தார்கள். இறை சமூகத்தை நெருங்கினார்கள் ரிபாயீ நாயகம் அன்னவர்கள்.
ஒவ்வொரு வியாழக் கிழமை அதிகாலையிலும், அன்றய தினம் ழுஹ்ரிலிருந்து அஸ்ர் வரைக்கும் மக்கள் மத்தியில் பிரசங்கம் செய்யும் வழமையைக் கொண்டிருந்தார்கள் ரிபாயீ நாயகம் அன்னவர்கள். இவர்களின் பிரசங்க சபை மக்கள் வெள்ளம் நிறைந்ததாகவே காணப்படும். இதில் விஷேடமென்னவெனில் அவர்களின் சபையில் மிகத்தூரத்தில் இருப்பவனும் இவர்களின் அருகில் அமர்ந்திருப்பவன் போன்று இவர்களின் உரையை செவிமடுப்பான்.
எந்தளவென்றால் அவர்கள் வாழ்ந்த கிராமமான உம்மு அபீதாவைச் சூழவுள்ள கிராமத்து மக்கள் தங்களின் வீடுகளிலுள்ள மாடிகளில் அமர்ந்து கொண்டு அவர்களின் உரையை செவிமடுப்பார்கள் இது அவர்கள் பெற்ற தனிச் சிறப்பம்சமாகும். இது அவர்களின் அற்புதமாகக் கருதப்படுகிறது.
மாத்திரமல்ல அவர்களின் சபைக்கு காது கேட்காத செவிடன் வந்தால் அல்லாஹுத் தஆலா அவனின் செவிட்டுத் தன்மையை நீக்கி, அவர்களின் உரையை அவனுக்கு செவிமடுக்கச் செய்வான். அவனோ அவர்களின் உரையை செவிமடுத்து அதனைக் கொண்டு பிரயோசனமடைவான்.
மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் “அத்தரீகதுர் ரிபாயிய்யஹ்” ரிபாயிய்யஹ் தரீகஹ்வை ஸ்தாபித்தார்கள். அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு ஆன்மீக பயிற்சிகளைப் வழங்கி, அவர்களை இறை சமூகம் செல்வதற்குத் தகுதியானவர்களாக ஆக்கினார்கள்.
அவர்களுக்கு உளத்தூய்மை பற்றி எடுத்தோதினார்கள். அவர்களின் உபதேசங்களில் சிலவற்றை நாம் தொகுத்து வழங்குகிறோம்.
01 அல்லாஹுத் தஆலாவை உங்களின் உள்ளங்களைக் கொண்டு தேடுங்கள். அவன் பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறான்.
02 பெருமை கொள்ளாதீர்கள். அதைவிட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அது அனைத்து நன்மைகளையும் அழித்து விடும்.
03 அல்லாஹ்வை அதிகம் நினைத்துக் கொள்ளுங்கள். அவனை நினைப்பது அவனை சென்றடைவதற்கு காந்தம் போன்ற ஒன்றாகும்.
04 நிச்சயமாக உலகம் என்பது பார்வைக்குத் தோற்றக் கூடிய ஒன்றேயன்றி எதார்த்ததில் இல்லை. அதிலுள்ளவை அழியக் கூடியவை.
05 உறவினர்களுடன் ஒற்றுமையாயிருங்கள். அவர்களை கண்ணியம் செய்யுங்கள்.
06 உங்களுக்கு அநீதியிழைப் போரை நீங்கள் மன்னியுங்கள்.
07 உங்களிடம் பெருமையாக நடந்து கொள்பவனிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.
08 அதிகம் கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள்.
09 சிருஷ்டிகளுடன் மென்மையாகப் பேசுங்கள். கடினமாக பேசாதீர்கள்.
10 உங்களின் குணங்களை அழகுபடுத்துங்கள்.
11 பிறருக்கு இரக்கம் காட்டுங்கள். அப்பொழுது நீங்கள் இரக்கம் காட்டப்படுவீர்கள்.
12 அல்லாஹ்வுடன் இருந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுடன் அல்லாஹ்வைக் காண்பீர்கள்.
13 அல்லாஹ்வின் வாசலைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
14 உங்களின் உள்ளங்களை அல்லாஹ்வின் றஸுலின் பால் திருப்புங்கள்.
15 நேர்வழிகாட்டக் கூடிய உங்களின் ஷெய்ஹின் மூலம் அல்லாஹ்வின் உயர்ந்த வாசலிலிருந்து உதவியைத் தேடுங்கள்.
16 எதையும் எதிர் பார்க்காமல் இஹ்லாஸுடன் உங்களின் ஷெய்ஹுக்கு பணி செய்யுங்கள்.
17 அவர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.
18 அவர்களின் சமூகத்தில் அதிகம் பேசாதீர்கள்.
19 அவர்களை கண்ணியம் என்ற கண் கொண்டு நோக்குங்கள்.
20 கஷ்டங்களின் போது பொறுமை செய்யுங்கள்.
21 அல்லாஹ்வின் செயல்களைப் பொருந்திக் கொள்ளுங்கள்.
22 எல்லா நிலைகளிலும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள்.
23 கண்ணியமிக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
24 உங்களின் எல்லா விடயங்களிலும் அல்லாஹ்வை நினைத்துக் கொள்ளுங்கள்.
25 பொறாமை கொள்ளாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அதுவே பாவங்களின் தாயாகும்.
26 ஸூபீய்யாக்களை மறுத்துப் பேசாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன்.
27 மார்க்க அறிஞர்களுடன் உள்ள தொடர்பை துண்டித்து விடாதீர்கள். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து அவர்கள் சொல்வதை செவிமடுத்து கொள்ளுங்கள். அதன் படி நடவுங்கள்.
28 மார்க்க அறிஞர்களுடனான உலமாஉகளுடன் அதிகம் அமர்ந்திருப்பவனுக்கு அல்லாஹுத் தஆலா கல்வியையும், பேனுதலையும் அதிகரிக்கிறான்.
29 அல்லாஹ்வுக்காக எவன் இருக்கிறானோ அவனுக்காக அல்லாஹ் இருப்பான்.
30 அல்லாஹ்வின் நினைவில் எவனிருக்கின்றானோ அவனின் நினைவில் அல்லாஹ் இருப்பான்.
31 எங்களின் தரீகஹ் மூன்று அமசங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று – நாங்கள் எவரிடமும் கேட்க மாட்டோம்.
இரண்டு – எங்களிடம் யாராவது கேட்டால் அதைத் தட்டமாட்டோம். மூன்று – நாங்கள் எதையும் சேமித்து வைக்க மாட்டோம்.
அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹூ அன்னவர்களின் உபதேசங்கள் மூலம் மக்கள் நேர்வழி பெற்றனர். உலகெங்கிலும் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட “ரிபாயிய்யஹ் தரீகஹ்” பரவியது. மக்கள் இந்தத் தரீகஹ்வின் பால் ஈர்க்கப்பட்டனர். இதில் கூறப்பட்ட ஆன்மீக பயிர்சிகளை தமது வாழ்விலெடுத்து அவர்கள் ஜெயம்“ பெற்றனர். ஆன்மீகத்தில் முன்னேற்றம் கண்டனர்.
ரிபாயீ நாயகம் அன்னவர்கள் அல்லாஹ்வில் தன்னை அழித்தார்கள். அதன் காரணத்தினால் அன்மீகத்தில் உச்ச நிலைகளை அடைந்தார்கள். அவர்களிலிருந்து பல அற்புதங்கள் தோன்றின. அவை மட்டிட முடியாதவை. செத்த பிணங்களை உயிர்ப்பித்தார்கள். குருடர்களுக்கு பார்வையளித்தார்கள். நோயாளிகளுக்கு சுகம் வழங்கினார்கள். செவிடர்களின் காதுகளை செவிமடுக்கச் செய்தார்கள்.
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்களை முத்தமிடும் அருட் பாக்கியத்தைப் பெற்றார்கள் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹு அன்னவர்கள்.
ஹிஜ்ரீ 555ம் வருடம் ஹஜ் செய்யச் சென்றார்கள். ரிபாயீ நாயகம் அன்னவர்கள். ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸியாறத் செய்வதற்காக மதீனஹ் முனவ்வறஹ்வை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் றவ்ழஹ் ஷரீபஹ்விற்கு முன்னே நின்று எனது பாட்டனாரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக என்று கூறினார்கள். உடனே அண்ணல் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் கப்றிலிருந்த வண்ணம் அன்பு மகனே! உங்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக என பதிலளித்தார்கள். அருள் நபீயின் பதிலை செவிமடுத்த ரிபாயீ நாயகம் அன்னவர்கள் தங்களை மறந்தார்கள். முட்டுக் காலில் விழுந்து பின்வருமாறு பாடினார்கள்.
فِيْ حَالَةِ الْبُعْدِ رُوْحِيْ كُنْتُ اُرْسِلُهَا
تُقَبِّلُ الْأَرْضَ عَنِّيْ وَهِيَ نَائِبَتِيْ
وَهَذِهِ دَوْلَةُ الْأَشْبَاحِ قَدْ حَضَرَتْ
فَامْدُدْ يَمِيْنَكَ كَيْ تَحْظَى بِهَا شَفَتِيْ.
தூரமான நிலையில் எனது உயிரை நான்
அனுப்பக் கூடியவனாயிருந்தேன்.
அது எனக்காக இந்த பூமியை முத்தமிட்டது.
அது எனக்குப் பகரமாக வந்தது.
இப்பொழுது உடலுடன் நானே வந்திருக்கிறேன்.
எனது உதடு அருள் பெறுவதற்காக உங்களின்
வலது கரத்தை நீட்டுங்கள்.
என்னே அதிசயம்!! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் கப்ரிலிருந்து தங்களின் அருட்கரத்தை நீட்டினார்கள். ரிபாயீ நாயகம் அன்னவர்கள் அந்த அருட் கரத்தை முத்தமிட்டு அருள் பெற்றார்கள். இந்கு சம்பவத்தை அங்கு கூடியிருந்த சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் கண்களினால் கண்டு அருள் பெற்றார்கள். பாக்கியஸாலிகள் அங்கு கூடியிருந்த மக்கள்.
இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அங்கு சமூகமளித்திருந்த மக்களில் பின்வரும் இறைநேசர்களும் இருந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
01 அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் கைலானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு.
02 அஷ்ஷெய்ஹ் ஹயாத் இப்னு கைஸ் அல் ஹர்றானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு
03 அஷ்ஷெய்ஹ் ஹமீஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
04 அஷ்ஷெய்ஹ் அதீ இப்னு முஸாபிர் அஷ்ஷாமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு
ரிபாயீ நாயகம் அன்னவர்கள் பெற்றுக் கொண்ட இந்தப் பாக்கியம் அவர்களின் ஆன்மீக உயர் நிலையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜுமாதுல் ஊலா மாதம் நினைவு கூரப்படக்கூடிய ரிபாயீ நாயகம் அன்னவர்களின் சிறப்புக்கள் மட்டிட முடியாதவை.
ஹிஜ்ரீ 580ம் வருடம் ஜுமாதல் ஊலா மாதம் பிறை 12ல் உம்மு அபீதா என்ற இடத்தில் அவர்கள் வபாத்தானார்கள். அங்கே அவர்களின் கப்ர் இன்றும் ஸியாறத் செய்யப்படுகிறது.
அன்னாரின் பொருட்டினால் அல்லாஹுத் தஆலா நம்மனைவருக்கும் அருள் புரிவானாக.
http://www.shumsmedia.com/blog-post_28-2/
No comments:
Post a Comment