ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 17 May 2016

ஸுfபி மகான்களின் துஆக்களின் சக்தி! . ஸுfபி மகான் ஹழ்ரத் அபுல் ஹசன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன் வீட்டில் அமர்ந்திருந்தார்கள். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் நேரே அவர்களிடம் வந்து என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது. அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும். என் கழுதையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று கூறி நின்றான். . மகான் அவர்கள் திகைத்து விட்டார்கள். என்ன சொல்கிறாய் நீ? நான் இதுவரை உன்னைப் பார்த்த‌தும் கிடையாதே, அதுவுமின்றி உன்னுடைய கழுதையை நான் ஏன் திருடப் போகிறேன்? இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எல்லாம் என் மீது சாட்டிவிடாதே போ, போய் வேறெங்காவது தேடிப்பார் என்றார்கள். . என்னுடைய கழுதையை நான் வாங்காமல் நான் திரும்பிப் போக போவதில்லை. நீங்கள் என் கழுதையை திருப்பித் தராவிட்டால் நான் கூச்சல் போட்டு ஊரையே கூட்டி நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன் என்றான் நாட்டுப்புறத்தான். . ஹழ்ரத் அபுல் ஹஸன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் செய்வதறியாமல் நேரே ஆண்டவனிடம் முறையிடலானார்கள். இறைவா என்ன இது உன் வேடிக்கை? எல்லார் முன்பும் என்னை இழிவுபடுத்த நாடி விட்டாயா? சாதாரண மனிதனின் குற்றச்சாட்டைக் கொண்டு உன்னுடைய நேசனை எல்லோரும் வெறுத்தொதுக்க வேண்டுமா? உன்னுடைய நாட்டம் அதுதான் என்றால் நடுவில் குறுக்கிடுவதற்கு நான் யார்? உன்னுடைய விருப்பப்படியே செய் என்று வேண்டி நின்றார்கள். . அடுத்த நி‌மிடமே ஒருவன் ஓடோடி வந்து அந்தக் கிராமப்புறத்தானிடம் உன்னுடைய கழுதை கிடைத்து விட்டது என்றான். உடனே அவன் சூபி அவர்களின் காலைக் கட்டிக்‌ கொண்டு கூறலானான்; . குருவே என்னை மன்னித்து விடுங்கள். என் கழுதையை நீங்கள் திரு‌டவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கழுதைதான் எல்லாமாக உள்ளது. அதனால் அது எனக்குத் தேவை என்பதால் அதை எப்படி கண்டெடுப்பது என்று யோசித்தேன். உங்களிடம் வந்து உங்கள் மீது குற்றம் சாட்டினால் நீங்கள் எப்படியும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து என் கழுதையை மீட்டுத் தந்துவிடுவீர்கள் என நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆனாலும் தங்கள் மீது குற்றம் சாட்டியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றான். .

No comments:

Post a Comment