தி இந்து தமிழ் நாளிதழ்
26-10-17
அனல்-ஹக்:
நானே உண்மை
“எ
துவும் தேவையில்லை எவரும் தேவையில்லைஉயிரென மதிக்கும் நபரும் தேவையில்லை
என்றெல்லாம் ஒரு காதல்
இருந்தால், அதுவே
உண்மைக் காதல்.
அதில் இருவரும்
ஒருவரில் ஒருவர்
கரைந்து ஒன்றாகி
இருப்பர் என்றும்”
என்று மெய்ஞ்ஞானக் காதலில் மூழ்கித் திளைத்தபடி சொன்னவர் மன்சூர் அல் ஹலாஜ். இவர் தான் வாழ்ந்த காலத்தில் போற்றுதலையும் தூற்றுதலையும் ஒருங்கே பெற்றவர். சூபி வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய ஞானி என்றால் மிகையில்லை.
858-ம் வருடம் பெர்சியாவில் ஃபர்ஸ் மகாணத்தின் அல்-பேடா எனும் ஊரில் மன்சூர் அல் ஹலாஜ் பிறந்தார். முகம்மது நபி (ஸல்) அவர்களின் தோழரான அபு அயுப் அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்த அல் ஹலாஜின் தாத்தா ஸொராஷட்ரியன் மதத்தைச் சார்ந்தவர். அல் ஹலாஜின் தந்தை இவரது பால்ய பருவத்திலேயே ஈராக்கில் இருந்த ஜவுளி துறைக்குப் புகழ்பெற்ற வாசித் நகரில் குடும்பத்துடன் குடியேறினார். சிறிது நாட்களிலேயே அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர். அவருடைய தந்தை கம்பளி தொழிலில் ஈடுபட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றினார்.
அர்த்தம் தேடிய பயணம்
அல் ஹலாஜ் சிறு வயதிலேயே குரான் முழுவதையும் படித்து முடித்துவிட்டார். துறவு வாழ்க்கையின் மேல் பற்றுக்கொண்டிருந்தவருக்கு குரானைப் படித்து அறிந்தது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதன் உள்ளர்த்தங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவரது உள்மனம் அவரை உந்தித் தள்ளியது. அவரது பருவ வயதினில் (874-894) அவர் உலக வாழ்விலிருந்து மெல்ல விடுபட்டு, சூபி முறையைத் தனக்குப் போதிக்கக்கூடிய ஞானிகளின் துணையை நாட ஆரம்பித்தார்,
முதலில் குஷிஸ்தானில் இருந்த துஸ்தர் நகரில் தனிமையில் துறவு வாழ்வு வாழ்ந்த ஷா-அல்-தஸ்தூரியிடம் சூபி ஞானத்தைக் கற்றார். அதன் பின் பாஸ்ராவில் அல்-மர்க்கியின் சீடரானார். அந்தக் காலகட்டத்தில் அவர் அபு யாகூபின் மகளை மணம் முடித்தார். கடைசியாக பாக்தாத்தில் வசித்த, அறிவும் ஞானமும் நிரம்பப் பெற்றவரான அல்-ஜுனைத்திடம் கற்று தன் கற்றலை நிறைவுசெய்தார்.
அவரது வாழ்வின் அடுத்த காலகட்டத்தை (895-910) நெடிய பயணங்களிலும் பிரசங்கத்திலும் கற்பித்தலிலும் எழுதுவதிலும் கழித்தார். அவர் மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு அங்கு ஒரு வருடம் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்து ஃபார்ஸ், குஷிஸ்தான் மற்றும் கோரஸான் போன்ற நகரங்களில் பிரசங்கம் செய்தார். கடைசியாக இஸ்லாம் புகுந்திராத இந்தியா மற்றும் துர்கிஸ்தானுக்குக் கடல் மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டார்.
அதிர்வலையை ஏற்படுத்திய பேச்சு
முறையான அங்கீகாரம் இல்லாததால் சூபி வாழ்வு முறைக்கு இயல்பாகவே பெரும் எதிர்ப்பு அப்போது நிலவியது. அந்தக் காலகட்டத்தில், மிகவும் பரவசமடைந்த நிலையில் இவரிடம் இருந்து வெளிப்படும் பேச்சும் எழுத்தும் சமூக, அரசியல், மத, பொருளாதாரரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இவரது பரவச நிலை ஆட்சியாளர்கள் மத்தியிலும் மத போதகர்கள் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனால் இவரது எண்ணங்களும் நடவடிக்கைகளும் ஆத்திரமூட்டும் வண்ணம் அவர்களுக்குத் தோன்றின. முக்கியமாக இவரது கருத்துகள் பலவகைகளில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. இவை அனைத்தும் பின்னாளில் அவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமாயின.
ஆன்மிக அனுபவங்களின் மூலம் தான் கண்டுணர்ந்த ரகசியங்களைத் தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும் பாகுபாடின்றிப் பகிர்ந்தார். ஆனால், இது சூபி முறையின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று சூபி ஞானிகள் கருதினர். புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை சாமானியர்களிடம் பேசுவதால் ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துச் சொல்லி அவரது குருவான ஜுனைத் தொடர்ந்து எச்சரித்து வந்தார். ஆனால், அவரோ இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நிலையை எப்போதோ கடந்துவிட்டிருந்தார்,
இது தவிர, அப்போது, ஈராக்கில் ஹம்தான் ஹர்மத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஹர்மத் அமைப்பு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்தது. இன்னொரு புறம் தெற்கு மெஸபடோமியாவில் ஷன்ஞ் என்ற போராளிக் குழு பெரும் நாசத்தை விளைவித்துக்கொண்டிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடும் அரசுக்குச் சவால் விடும்படி இருந்தன. அல் ஹலாஜின் பயணங்களும் அவருடைய மனைவியின் குடும்பப் பின்புலமும் அந்த இரு குழுக்களுடன் இவருக்குத் தொடர்பு இருக்குமோ என்று ஆட்சியாளர்களைச் சந்தேகப்பட வைத்தது. மேலும், பாக்தாத் திரும்பிய பின் அரசியல் மற்றும் தார்மீக ஒழுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விளைந்த அவரது செயல்கள் அவரின் உடனடி கைதுக்கு வழிவகுத்தன. அதற்குப் பின் அவரைப் பற்றி ஆட்சியாளர்கள் கொண்டிருந்த அந்தச் சந்தேகப் பார்வை மாறவே இல்லை.
நானே உண்மை
அல்-ஹலாஜ் பெரும்பாலும் ஆன்மிக நிலையின் உச்சத்தில் தன்னிலை மறந்து மெய்ஞ்ஞானத்தில் மூழ்கி ஒரு பரவச நிலையில்தான் காணப்படுவார். அப்போது அவர் பேச்சு எந்தக் கட்டுப்பாடும் இன்றி வெளிப்படும். கைதுசெய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக அந்த மாதிரி ஒரு பரவச நிலையில் ‘அனல்-ஹக்’ என்று சொல்லி இருக்கிறார். இதன் அர்த்தம் ‘நானே உண்மை’ என்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஹக் என்பது இறைவனின் பெயர்களில் ஒன்று என்பதால் அது ‘நானே கடவுள்’ என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு சொல்வது இஸ்லாத்தைப் பொறுத்தவரை மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம். ஆனால், அவரோ அதற்கு விளக்கம் அளிக்கும் மனநிலையில் இல்லை. ஞானிகள் விளக்கம் அளிக்காதவரையில் அவர்களின் வார்த்தைகள் வெறும் ஓசை தானே? வார்த்தைகளில் அர்த்தம் தேடுவதே அபத்தம்தான். ஆனால், ஆட்சியாளர்களோ வெறும் ஓசைகளுக்கு அர்த்தம் கற்பித்துக்கொண்டனர். அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் விசாரணை நீண்ட காலம் நீடித்தது.
அவரது கைதுக்குப் பின் பல வருடங்கள் (911-922) பாக்தாத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உச்சத்தில் இருந்த வருடம் அது. அப்போது அரசனின் செல்வாக்கு குன்றி அரசு தள்ளாடிக்கொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் மக்களைத் திசை திருப்பும் விதமாக இவருக்கு 922-ம் வருடம் மார்ச் 26 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெருந்திரளாகக் கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில் இரண்டு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். இறுதியாக மார்ச் 28 அன்று விண்ணுலகுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆனால், உயிரற்ற உடலின் ரத்தநாளங்களின் வழியாகப் பீறிட்ட ரத்தமானது மரண மேடையில் அனல்-ஹக் என்று எழுதி வழிந்தோடியது. பயம் கொண்ட அரசன், உடம்பை எரிக்கச் சொன்னான். தீ ஜுவாலையோ உடலை அன்போடு தழுவி அனல்-ஹக் என்று ஓசை எழுப்பியபடி பெரும் புகையால் பாக்தாத்தை இருளாக்கியது. நெருப்பு அணைந்த பின், காற்றில் பயணித்த சாம்பலானது டைகிரிஸ் நதியின் மேல் அனல்-ஹக் என்ற வடிவில் படர்ந்து பாக்தாத்தையே விழுங்கும் வண்ணம் வீறுகொண்டு உயர்ந்தது. அல்-ஹலாஜ் சொல்லியிருந்தபடி, அவரது மேலாடையை நதியின் மேல் உதவியாளர் விரித்தார். அதன் பின்பு சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய நதியானது, தன்னுள் கரைந்த பேருண்மையை மெய்ஞான சமுத்திரத்தில் கலக்கும் முனைப்புடன் விரைந்து சென்றது...
வலிமிகுந்த அந்தக் கடைசி இரண்டு நாட்களும் அவர் மிகுந்த பரவச நிலையில் சந்தோஷமாகத் தன்னிலை மறந்துதான் இருந்துள்ளார். ஆம் வலி என்பது உடலுக்குத் தானே, “உனக்கும் எனக்கும் இடையே நான் மட்டும்தான் உள்ளேன். நீ மட்டும் நிறைந்திருக்க அந்த என்னை எடுத்துவிடு” என்று அதைத் துறந்தவருக்கு வலி ஏது?
குறிப்பு:
மன்சூர் ஹல்லாஜ் ரழியழ்ழாஹு அன்ஹூ அவர்களை கொல்லும் நாள் நான் இருந்திருந்தால் அவர்களை பாதுகாத்திருப்பேன் என்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸழ்ழாஹ் ஸிர்ரஹுல் அஸீஸ் கூறியதாக முஹ்யத்தீன் மாலையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..
(மெய்ஞானிகள் தொடர்வார்கள்)
No comments:
Post a Comment