ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 25 October 2017

இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...*

தன் மனைவியை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் குறை  கூற வந்த தோழருக்கு உன் மனைவியிடம் ஒரு குறை இருந்தால் பல நிறைகளும் இருக்கும்தானே .. அதை நினைத்து மனைவியு டனான வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழப்பழகு .. என்று கூறினார்கள் ...

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பித்துவிட்டீர்களா...?

*மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்.*...

செய்யது அஹமது அலி. பாகவி

No comments:

Post a Comment