ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 14 April 2017

இமாம் புகாரி நினைவாற்றல்

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 3

கலீபத்துல் காதிரி நக்ஷபந்தி, மௌலவி. பாஸில், ஷெய்க் ஏ.எல்.பதுறுத்தீன் ஸுபி (ஷர்க்கி, பரேலவி) ஹஸரத் அவரக்ள்

ஒரு முறை சமர்கந்தில் 400 முஹத்திதுகள் திரண்டு இமாம் புகாரி அவர்களை சத்திய சோதனை செய்வதற்கு முடிவு செய்தனர். ஹதீதுகளின் அறிவிப்பாளர்களையும், கருத்தையும் புரட்டி, மாற்றியமைத்து இமாமவர்களின் முன்வைத்தனர். ஏழு நாட்களாக இமாமவர்களை அனைத்து கோணத்திலும் சோதனை செய்தனர். ஒரு முறையாவது இமாமவர்களை தோல்வியுறச் செய்ய முடியவில்லை. யாவற்றையும் ஒழுங்குபடுத்தியும் செம்மையாகவும் செப்பினார்கள் செம்மல் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பகுதாத் சென்றவேளை அங்குள்ள முஹத்திதுகள் இமாமவர்களின் நினைவாற்றலின் வீச்சத்தை அளக்க ஆவலானார்கள். அதற்காக நூறு ஹதீதுகளைப் பொறுக்கி அதன் அறிவிப்பாளர்களையும் ஹதீதின் கருவையும் ஒன்றோடு ஒன்றாக மாற்றிக் குழப்பி அதனைத் துருவித் துருவிக் கேள்வி கேட்பதற்கு பத்து நிபுணர்களையும் நியமித்தனர்.

ஒவ்வொரு நிபுணருக்கும் பத்துப்பத்து ஹதீதுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. மேடைக்கு இமாமவர்கள் வருகை தந்தார்கள். அரங்கில் துறைபோகக் கற்ற முஹத்திதுகள், புகஹாக்கள், பொது மக்கள், படித்தவர்கள் என்று பல்லாயிரம் பேர் நிறைந்து காணப்பட்டனர்.

அரங்கில் மயான அமைதி நிலவியது. ஒருவர் எழுந்து ஏற்கனவே தயார் நிலையிலிருந்த பத்து ஹதீதுகளையும் ஒவ்வொன்றாக சமர்ப்பித்தார். அவர் முன் வைத்த ஒவ்வொரு ஹதீதையும் செவியேற்ற இமாமவர்கள் இந்த ஹதீதை நான் கேள்விப்படவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு பத்து ஹதீஸ் துறை நிபுணர்களும் தாங்கள் ஏலவே தயார் நிலையில் குழப்பி வைத்திருந்த ஹதீதுகளை எழுந்து கூறிக்கொண்டும் அதுபற்றி வினா எழுப்பிக் கொண்டுமிருந்தனர். அவையனைத்தையும் அமைதியாக உள்வாங்கிய இமாமவர்கள் நான் அதனை அறிந்திருக்கவில்லையே! என்று அடக்கத்துடன் பதில் கூறிக் கொண்டனர்.

இமாமவர்களின் பதில் சபையோரை சலிக்க வைத்துவிட்டது. இமாமவர்களின் பதிலின் நுட்பத்தை அறிஞர்கள் வியப்புடன் நோக்கினர். ஒருபக்கம் ஹதீதில் இமாமவர்கள் போதிய அறிவற்றவர் என்ற அதிருப்தி! மறுபக்கம் இமாமவர்களின் அறிவுக் கூர்மையின் வியப்பு!

பத்து ஹதீத் நிபுணர்களும் கேள்வி கேட்டு களைத்துப்போய் இருக்கையில் அமர்ந்ததும் இமாமவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

முதலாவதாக பத்து ஹதீதுகளை முன்வைத்தவரை நோக்கி, நீங்கள் முன்வைத்த பத்து ஹதீதுகளும் தவறானவை! சரியான ஹதீதுகளின் அறிவிப்பாளர் பட்டியலும் ஹதீதின் பொருளும் இப்படித்தான் உள்ளது என்று ஆரம்பித்து.

பத்தாவது நபரின் நூறாவது ஹதீதின் சரியான அறிவிப்பாளருடன் ஹதீதின் கருத்தையும் முன்வைத்தார்கள். இமாமவர்களின் அறிவுக் கூர்மையையும் அபார நினைவாற்றலையும் சபையோரும் அறிஞர்களும் வியந்து, வியந்து பாராட்டினர்.
ஆதாரம் : தபகாத்து ஷாபிஇய்யதுல் குப்றா, பாகம் -2 , பக்கம் 6

ஸலீம் இப்னு முஜாஹித் கூறுகின்றார்கள்,

ஒரு நாள் முஹம்மத் பின் ஸலாம் பேகன்தியின் ஹதீஸ் வகுப்பிற்குச் சென்றேன். சற்று முன்கூட்டி வந்திருந்தால் எழுபதினாயிரம் ஹதீதுகளை மனனம் செய்த ஆற்புத சிறுவனை தாங்களுக்குக் காட்டியிருப்பேன் என்று கூறினார். இதைக் கேட்டதும். உடன் வெளியேறி அவரைத் தேடினேன். ஒருவாறு அவரைக் கண்டுபிடித்தேன்.

தாங்களுக்கு எழுபதினாயிரம் ஹதீதுகள் மனனம் என்பது உண்மையா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். இதை விட அதிகமாக நினைவில் உள்ளன என்று இமாமவர்கள் பதில் கூறினார்கள். நான் அறிவிக்கும் ஸஹாபாக்களில் கணிசமானவர்களின் வரலாற்றை மிகத்தெளிவாக அறிந்துள்ளேன். அவர்கள் பிறந்த இடம், வபாத்தான இடம், கற்ற இடம், வாழ்ந்த இடம் அவர்கள் யார், யாரிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்புச் செய்துள்ளனர். உள்ளிட்ட அனைத்தையும் அறிந்திருப்பதுடன் நான் அறிவிக்கும் ஹதீதுகளை மூலப் பிரதிகளைப் பார்வையிட்ட பின்பே அறிவிக்கின்றேன். என்றும் கூறினார்கள். இவ்வாறு கூறும்போது இமாமவர்களின் வயது பதினாறு மட்டுமே.
ஆதாரம் : தபகாத்துஷ் ஷாபியத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 05

இக்காலப் பகுதியில் ஹதீஸைக் கற்கும் ஆர்வம் மேலோங்கியிருந்தது. இஸ்லாத்தில் ஆர்வமுள்ளவர்கள் சிறிதளவாவது ஹதீஸை மனனம் செய்வதில் ஆர்வம் காட்டலானார்கள். அதனால் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியல் இருபதையும் தாண்டி நின்றது.

முஹத்திதுகள் சரியானதாகப்பட்டதில் சிலதைத் தெரிவு செய்யலானார்கள். ஆனால் இமாமவர்களின் நிலை  அவ்வாறாக இருக்கவில்லை. அக்காலப் பகுதியில் எத்தனை ஸனதுகள் நடைமுறையிலிருந்ததோ அத்தனையையும் திரட்டி நினைவில் பதித்துக் கொண்டார்கள். இவற்றின் தரம், குறை, நிறை யாவற்றையும் விலாவாரியாக விளங்கியிருந்தார்கள். இதுபற்றிய குறிப்புக்கள் நிறையவே உண்டு. ஒரு சிலதை அடியிற் தருகின்றேன்.

யூஸுப் இப்னு மூஸா மறூஸி கூறுகின்றார்கள்,

நான் பஸறாவின் ஜாமிஃ மஸ்ஜிதில் இருந்தேன். ஒருவர் சப்தமிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்தார். அறிவைத் தேடுவோர்களே! முஹம்மத் இப்னு இஸ்மாயீல் இங்கே வருகை தந்துள்ளார்கள். யாராவது அவர்களிடம் ஹதீதைக் கேட்க விரும்பினால் உடன் சமூகமளிக்கவும் அறிவிப்புக்கேட்டு உடன் விரைந்து அங்கு சென்றேன்.

நலிந்து, மெலிந்த ஓர் இளைஞன் பள்ளியின் ஒரு மூலையில் தூணுக்குப் பக்கத்தில் மிகுந்த இறையச்சத்துடன் தொழுது கொண்டிருக்கின்றார். அவர்தான் இமாம் புகாரி என்று புரிந்து கொண்டேன். அழைப்பை ஏற்று ஏராளமானோர் பள்ளியில் திரண்டனர்.

நாங்கள் ஹதீதுகளை எழுத வேண்டும். அதற்கு ஒரு மஜ்லிஸை எங்களுக்கு ஏற்படுத்தித் தருமாறு இமாமவர்களிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தோம். மறுநாள் வைத்துக்கொள்வோம் என்று இமாமவர்கள் வாக்களித்தார்கள்.

மறுநாள் காலை ஸுப்ஹுக்குப் பின் சபை ஆரம்பித்தது. இமாமவர்கள் கூறினார்கள்.

பஸறாவாசிகளே! உங்கள் நகரத்திலிருக்கும் முஹத்திஸ்களிடமிருக்கும் ஹதீஸ்களை அவர்களிடமில்லாத ஸனதுடன் கூறப்போகின்றேன். எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

மன்ஸுரின் ஸனதுடன் கூடிய ஹதீதை மொழிந்தார்கள். இந்த ஹதீது வேறு ஸனதுடன் பஸறாவில் பிரபல்யமாகியிருந்தது. இவ்வாறு ஏராளமான ஹதீதுகளை மொழிந்தார்கள். ஒவ்வொரு ஹதீதையும் கூறும்போது, இந்த ஹதீது இந்த நகரத்தில், இன்ன ஸனதுடன் இன்னாரிடம் உள்ளது. அதனை அவரிடமில்லாத புதிய ஸனதுடன் இதோ முன்வைக்கின்றேன் பதிந்து கொள்ளுங்கள் என்றுரைத்தார்கள்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள், அதிகமான நபில் தொழுவார்கள், இரவில் விழித்திருந்து அதிகமாக குர்ஆன் ஓதுவார்கள். ரமழானில் இரவு பகலாக திருக்குர்ஆனை ஓதுவார்கள். தராவீஹ் தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஒரு திருக்குர்ஆனை ஓதி முடிப்பார்கள்.

இரவின் பிந்திய பகுதியிலிருந்து ஸஹர் வரை தினமும் ஒரு குர்ஆனை முழுமைப்படுத்துவார்கள். நோன்பு திறக்கும் வேளை அதனை தமாம் செய்வார்கள். திருக்குர்ஆனை தமாம் செய்யும்போது கேட்கப்படும் துஆ கபூலாகும் என்றும் கூறுவார்கள்.
ஆதாரம் : பத்ஹுல் பாரி முன்னுரை

ஒரு தினம் இமாம் அவர்கள் ஒரு தோட்டத்திற்கு பகல் உணவுக்காகச் சென்றார்கள். அங்கு ழுஹர் தொழுகைக்குப் பின் நபில் தொழ ஆரம்பித்தார்கள். தொழுது முடிந்த பின் தனது அங்கியின் ஓரத்தை உயர்த்தி இதனுள் ஏதோ ஒன்று இருப்பது போலிருக்கின்றது.சற்றுப் பாருங்கள் என்று அருகிலுள்ளவர்களிடம் கூறினார்கள்.

அங்கியை அகற்றிப் பார்த்தபோது ஒரு தேள் அங்கிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அது 16 விடுத்தம் தீண்டியிருந்தது. தேள் முதல் முறை தீண்டியதும் தொழுகையை நிறுத்தியிருக்கலாம் என்று யாரோ ஒருவர் இமாமவர்களிடம் கேட்ட போது �நான் ஒரு சூறாவை ஓதிக் கொண்டிருந்தேன். அதனை முடிக்கு முன் தொழுகையை நிறுத்தி விட என் மனம் இடம் கொடுக்கவில்லை என்றார்கள்�.
ஆதாரம் : கஸ்தலானி, பாகம் 01, பக்கம் 21

தாெடரும்

No comments:

Post a Comment