ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 9 May 2017

ஆமீனின் தத்துவம்

ஆமீனின் தத்துவம் அறிந்து சொல்லுவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் பொழுதில் பூமான் நபி ﷺ அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அன்னவர்களைக் காண வந்தார்கள். பரிசுத்தமாக, அழகாக இருந்தார்கள். சலாம் கூறினார்கள். நபிகளார் ﷺ அன்னவர்கள் கேட்டார்கள், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" அவர்கள் பதில் கூறினார்கள். "நீண்ட நெடுங்காலமாக வருகிறோம். நாங்கள் நெடுங்காலமாய் அல்லாஹ்வை வணங்கி வந்தோம். இதுவரை வந்த வேத வசனங்களிலும் சிறந்த, அழகான வேத வசனம் வந்திருப்பதை கேள்வியுற்றோம். 124,000 நூல்களிலும் இவையே அழகானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி காலத்தில் வெளியாகும், இறுதி நூலாக வெளியாகும் என்று அறிந்தோம். அல்லாஹ் உங்களுக்கு என்ன பரிசு தரவேண்டும் என்று கேட்கும்வரை ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். நாங்கள் சூரா அல்- பாத்திஹாவின் அந்த அழகிய திருவசனங்களையே கேட்க வேண்டும் என்று வேண்டி நின்றோம். அல்லாஹ் எந்த பதிலையுமே கூறவில்லை. நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் கூறினான், 'இந்த சூரா எனது நேசர் முஹம்மத் ﷺ அன்னவர்களுக்கும் அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கும் மாத்திரமே." 

"நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் மீண்டும், 'உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.'  'சூரா பாத்திஹா எங்களுக்கு தர முடியாது என்று இருப்பதால், நாங்கள் அன்னவர்களின் ﷺ உம்மத்தவர்களாக ஆகும்வரை நீண்ட காலம் வாழ வேண்டும். அன்னவர்களுக்கு சலாம் கூற வேண்டும்; ஒரே ஒருமுறையாவது அல்-பாத்திஹா சூராவைக் கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் மரணிப்பதில் திருப்தி அடைவோம்."

ஹிழுரு அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரே இவர்கள் இருவரும்.

அவர்கள் மாநபிகளார் ﷺ அன்னவர்களிடம் ஷஹாதா சொல்லிக் கொண்டார்கள். அத்துடன் திருப்தி அடைந்துக் கொண்டார்கள். இதன் பிறகு அவர்கள் நபிமார்கள் அந்தஸ்தை விட்டுவிட்டு முஹம்மத் ﷺ அன்னவர்களின் உம்மத் என்ற அந்தஸ்தை அடைந்தார்கள்.

"எங்களுக்காக சூரா பாத்திஹாவை ஒருமுறை ஓதுங்கள் நாயகமே." என்று கேட்டார்கள். அன்னவர்கள் ஓத அதைத் தொடர்ந்து அவர்களும் ஓதினார்கள். இறுதியில், "ஆமீன்" என்று மொழிந்தார்கள்.

அவர்கள் கேட்டார்கள், "யா ரஸூலல்லாஹ், சூரா அல்-பாத்திஹா ஓதுவதால் கிடைக்கக்கூடிய நற்கூலிகள் என்ன?"

நபிகளார்ﷺ அன்னவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் எனக்கு இறுதிநாள் வரை ஆயுளைத் தந்து நான் அதன் நற்கூலிகளை உங்களுக்கு விபரித்தாலும்கூட என் ஆயுள் போதாது. ஆகவே 'ஆமீனின்' நற்கூலிகளை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்."

"அலிப்' அவனது அர்ஷிலும் 'லாம்' அவனது குர்ஷியிலும்  'யா' லவ்ஹிலும் 'நூன்' கலத்திலும் எழுதப்பட்டுள்ளன. 'ஆமீனில்' இவை நான்கும் ஒன்றாக வருகின்றன."

"யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு இன்னும் கூறுங்கள்."

"அலிப்' இஸ்ராfபீல் அவர்களின் நெற்றியிலும்  'மீம்' இஸ்ராயீலின் நெற்றியிலும் 'யா' ஜிப்ரீலின் நெற்றியிலும் 'நூன்' அஸ்ராயீலின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. 'ஆமீன்' என்று யாராவது ஒருவர் கூறும்போது இந்த நான்கு வானவர்களிலிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்."

"இன்னும் சொல்லுங்கள் நாயகமே."

"அலிப்' தவ்ராத் வேதத்திலும் 'மீம்' ஸபூரிலும் 'யா' இன்ஜீலிலும் 'நூன்' குர்ஆனிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் பயபக்தியோடு பாத்திஹா சூராவை ஓதி 'ஆமீன்' என்று சொல்கிறாரோ அவர் இந்த நான்கு வேதங்களையும் ஓதிய நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்."

"இன்னும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா?"

"ஆம் நாயகமே, சொல்லுங்கள்."

"அலிப்' ஸையுதுனா அபூபக்ரின் நெற்றியிலும் 'மீம்' ஸையுதுனா உமரின் நெற்றியிலும் 'யா' ஸையுதுனா உதுமானின் நெற்றியிலும் 'நூன்' ஸையுதுனா அலியின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் 'ஆமீன்' என்றுக் கூறுவாரோ அவர் இந்த நான்கு ஸஹாபாக்களிடமிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக்கொள்வார்கள்."

இந்த இருவரின் ஆசை பூர்த்தியாகிவிட்டமையால், இருவரும் அல்லாஹ்விடம் தம் உயிரை எடுத்துவிடுமாறு பிரார்த்தனைபுரிய எத்தனித்தப்போது மாநபிகளார் ﷺ அன்னவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கூறினார்கள், "அல்லாஹ்வே உங்களிருவருக்கும் நீண்ட ஆயுளையும் வல்லமையும் தந்துள்ளான். என்னுடைய உம்மத்தவர்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு உங்களின் உதவி தேவை."

ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கு உதவி ஒத்தாசை புரியத்தான் அவர்களிருவருக்கும் நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுத்துள்ளான். இல்லியாஸ் அலைஹிஸ்ஸலாம் கடலில், ஹிழுரு அலைஹிஸ்ஸலாம் நிலத்தில் உதவி புரிவார்கள்.

-ஹஜ்ஜா ஆமினா ஆதில் கத்தசல்லாஹு சிர்ராஹ்
நன்றி: Ahmed Dede Pattissahusiwa
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

No comments:

Post a Comment