"பதின்மூன்று நூற்றாண்டுகளாக பழுதடையாமலிருந்த இரு புனித உடல்கள்..."
பக்தாதிலிருந்து 40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதன் காரணமாக அந்த ஊர் "ஸல்மான் பாக்" என்று அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயர் "மதாயின்". இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல் யமான் (றழியல்லாஹு அன்ஹு) ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள் உள்ளன. அருகே தஜ்லா நதி ஓடுகிறது.
ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரில் தண்ணீர் புகுந்தது. ஹஸ்ரத் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது. இந்த நிலையில் முதலாம் ஷா ஃபைசல் மன்னர் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு ஸஹாபாக்கள் தோன்றி "எங்களின் கப்ருகளை இடமாற்றுங்கள்" என்று கூறினார்கள்.
முஃப்தி சாஹிப் அவர்கள் கப்ரை தோண்டி புனித உடல்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற ஃபத்வா கொடுத்தார். மன்னர் அதற்கான தேதி முடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியினை காண துருக்கி மற்றும் எகிப்து நாட்டிலிருந்து அரசாங்க தூது குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வந்து சேர்ந்தனர். வெளிநாடுகளிலிருந்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு கொள்கை கோட்பாடுகளில் உள்ளவர்களுமாக சுமார் ஐந்து லட்சம் பேர் மதாயினில் ஒன்று கூடினர்.
அந்த சிறிய நகரம் இரண்டாம் பக்தாதாக காட்சி அளித்தது. ஹிஜ்ரி 1350. துல்ஹஜ் மாதம் கடைசி பத்தில் 1932 ஏப்ரல் மாதம் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு உலக நாடுகளின் தூதர்கள் ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னர் ஃபைசல் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித உடலும் பின்னர் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பூத உடலும் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டன. மன்னர் ஃபைசல் ஈராக்கின் தலைமை முஃப்தி துருக்கி குடியரசின் அமைச்சர் முக்தார் பட்டத்து இளவரசர் பாரூக் ஆகியோர் புனித உடல்களை மிகுந்த மரியாதையோடு பெற்று அதற்காக விஷேசமாக உருவாக்கப்பட்ட கண்ணாடி பேழையில் வைத்தார்கள்.
அந்த இரு ஸஹாபாக்களின் புனித உடலை பொதிந்திருந்த கஃபன் துணி மட்டுமல்ல அவர்களின் தாடி முடி கூட நல்ல நிலையில் புத்தம் புதிதாக இருந்ததை பார்த்தால் பதிமூன்று நூற்றான்டு காலத்திற்கு முன்புள்ள பழைமை வாய்ந்த ஒரு ஜனாஸாவாக அது இல்லாமல் சில மணி நேரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று புதிய ஜனாஸாக்களாக இருந்தன.
இதில் மிகுந்த ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அந்த இரு ஸஹாபாக்களின் கண்கள் புத்துயிரோடு ஒளி வீசிக்கொண்டிருந்தது தான். பல பேர் அதில் பார்வையை செலுத்தினர். ஆனால் அவர்களால் கூர்ந்து பார்க முடியவில்லை. பெரிய டாக்டர்கள் எல்லாம் இதைக் கண்டு வியந்தனர். ஏனெனில் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண், அதன் பார்க்கும் சக்தியை இழந்து விடும். ஆனால் இங்கு பதிமூன்று நூற்றாண்டு காலமாகியும் அவர்களின் கண்கள் அப்படியே கெடாமல் உள்ளது. ஜேர்மனை சார்ந்த கண் மருத்துவ நிபுணர் இதை கண்ணுற்று உடனே அந்த இடத்திலேயே தலைமை முஃப்தியின் கரம் பற்றி முஸ்லிமாகிவிட்டார். "இஸ்லாம் சத்தியமானது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன தேவையிருக்கிறது?" என்று கூறினார்.
புனித பேழையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவர்களின் முகத்திலிருந்து கஃபன் விலக்கப்பட்டது. அந்த புனித உடலுக்கு ஈராக் இராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் கூட்டம் கூட்டமாக வந்து எல்லோரும் ஜனாஸாவை பார்த்து மெய்சிலிர்த்து செய்வதறியாது திகைத்து நின்றனர். வாழ்க்கையின் கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைக்கப் பெற்றதை எண்ணி எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினர். பின்னர் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து ஜனாஸா தொழுகை நிறைவேற்றினர். மன்னர்களும் உலமாக்களும் புனித உடல்கள் வைக்கப்பட்டிருந்த அந்த பேழையை தங்களின் தோள் மீது சுமந்தனர்.
பிறகு உலக நாட்டு தூதர்கள் உயர் அதிகாரிகள் தோள்கொடுக்க தொடர்ந்து மற்றவர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப்பெற்றது. விமானங்கள் பூக்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தின. வழிநெடுக பெண்களும் பேழையை ஸியாரத் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்குள் இரண்டு புனித உடல்களும் "ஸல்மான் பாக்" கப்ருஸ்தானை அடைந்தது. "அல்லாஹு அக்பர்" என்னும் முழக்கம் விண்ணைப்பிளக்க இஸ்லாத்தின் உயிருள்ள இரு தியாகிகளின் புனித உடல்கள் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ருக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மறுநாள் பக்தாத் திரையரங்குகளில் இந்த விடயம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்ணுற்ற பக்தாத் வாழ் முஸ்லிமல்லாத பல பிரமுகர்களின் குடும்பங்கள் இஸ்லாத்தில் இணைந்தன.
(மஆரிஃப் மாத இதழ், ஜனவரி 1979, அஃஜம்கட் டெல்லி)
"மெளலானா உஸ்மான் மஃரூஃபியின் "ஏக் ஆலமீ தாரீக்" எனும் உர்து கிதாபிலிருந்து..."
No comments:
Post a Comment