ஆடும் மாடும் அல்ல இறையச்சம்...!
================================
தியாகத் திருநாள் வந்துவிட்டாலே நம்மில் பலர் ஆட்டையும் மாட்டையும் தேடித்தேடி ஓடுகிறோம். நமது தியாகத்தை இதன்மூலம் வெளிப்படுத்த நாடுகிறோம். நல்ல விஷயம்தான். ஆனால் ஆட்டையும் மாட்டையும் அறுத்துப் பலியிடுவதுடன் நமது தியாகம் முடிந்துவிட்டதாக நினைப்பதுதான் சோகம்.
இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாக வரலாறு வெறுமனே ஓர் ஆட்டை அறுப்பதற்கான வரலாறு அல்ல. மாறாக அது ஓர் அற்புதமான பாடம்.
ஆம். மகன் தூங்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது மலை மீது ஏற்றியோ அதுவும் இல்லையேல் நெருப்பில் வீசியோ கொல்லுமாறு
அல்லாஹ் கூறியிருக்கலாம். அப்படிச் செய்வதுகூட சுலபம்தான்.
ஆனால், தான் பெற்ற மகனை தனது கையால் அறுத்துப் பலியிடுமாறு கூறுவதைவிட பெரிய சோதனை என்ன இருக்க முடியும்..? அந்த மகனை வழியனுப்பி வைக்கும்போது பெற்றெடுத்த தாயாரின் மனோ நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
மறுப்பேதும் கூறாமல் இப்ராஹீம் (அலை) அல்லாஹ்வின் ஆணைக்கு ஒப்புக்கொண்டமைதான் நமக்கான பாடம்.தினமும் ஐவேளை தொழுகை குறித்த அல்லாஹ்வின் உத்தரவை அலட்சியப் படுத்தும் நாம்.. வருடத்திற்கு ஒருமுறை ஓர் ஆடு அல்லது மாட்டின் மூலம் நமது தியாகத்தை வெளிப்படுத்துகிறோம். அத்துடன் முடிந்தது நமது தியாகம். இந்த மார்க்கத்திற்காக நாம் என்ன தியாகம் செய்திருக்கின்றோம்..?
அப்பா மகன் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான மற்றுமோர் பாடம் அந்த தியாக வரலாறு.
அல்லாஹ்வின் உத்தரவுதானே என்று உடனடியாக செயல்படுத்தாமல் மகனிடம், "நீ என்ன நினைக்கிறாய்?” என்று ஆலோசனை கேட்கும் தந்தை.. "கனவுதானே..” என்று கூறாமல், "உங்கள் உத்தரவை உடனே செயல்படுத்துங்கள்” என்று கூறும் மகன்... எவ்வளவு அற்புதமான உறவு...!
நமக்கும் நமது பிள்ளைகளுக்குமான உறவு இப்படியா இருக்கிறது..? இதே நிகழ்வு நமக்கும் நமது மகனுக்கும் இடையே நடந்திருந்தால்.. "பைத்தியமாப்பா உனக்கு..?” என்று நம்மிடம் எதிர்கேள்வி கேட்டிருப்பான் நம் பிள்ளை. நமது வளர்ப்பு முறை அப்படி.
அப்பா மகனுக்குமான இந்த உறவையும் இஸ்லாத்திற்கான தியாகத்தையும் மறந்த நிலையில் கொடுக்கும் குர்பானியை என்னவென்று அழைப்பது...!?
நூஹ் மஹ்ழரி
27-08-2017
No comments:
Post a Comment