ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 13 November 2021

ஆண்டகை என ஏன் அழைக்கிறோம்

*"ஆண்டகை_ஆண்டவர்" என்று அவ்லியாக்களின் அரசரை குறிப்பிடுவது ஏன்..?* 

*இறைத்தூதரை குறிப்பிட நாயகம்_ பெருமானார் ஆகிய இரு சொற்களை கையாண்ட தமிழ் முஸ்லிம்கள் இறைநேசரைக் குறிப்பிட ஆண்டகை என்ற தமிழ்ச் சொல்லைக் கையாண்ட னர்.* 

*சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதியின் பதிப்பாசிரியரும், தமிழ் பேராசிரியருமான திரு. எஸ். அனவரத விநாயகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்து வெளியிட்ட கழகத் தமிழ்
கையகராதி ஆண்டகை எனும் சொல்லுக்கு *ஆண்மை தன்மை_யுடையோன் சிறந்தோன் ஆகிய பொருட்களை தருகின்றன....*

*தமிழ் இலக்கணத்திலுள்ள புணர்ச்சி விதி (அரபியில் இத்காம் என்பர்) யின் படி ஆண்தகை என்பது தான் ஆண்டகை என்றாயிற்று.. எனவே ஆண்டகை எனும் சொல்லைப் பதம் பிரிக்கும் போது ஆண்தகை என்று அமையும்...* 

*ஆண்டகை என்றால் ஆண்களிலேயே தகுதி மிக்கவர் என்பது பொருளாகும்..* 

*ஆன்மீகச் சொல் வழக்கில் இறை நேசர்களை அல்லாஹ்வின் ஆண்கள் (வீரச் சிங்கங்கள்) எனும் பொருளில் ரிஜாலுல்லாஹ் என்று குறிப்பிடுவது உண்டு. எனவே தான் மேற்கண்ட உயர்ந்த பொருட்களின் அடிப்படையில் இறைநேசச் செல்வர்களின் 
இணையற்ற தலைவரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை முஹ்யித்தீன் ஆண்டகை என்று தமிழ் முஸ்லிம்கள் குறிப்பிட்டு வருகின்றனர்...* 

*ஆண்டகை என்பதைப் போல ஆண்டவர் என்றும் இறைநேசச் செல்வர்கள் அழைக்கப்படுவதுண்டு. இந்தச் சொல் இறைநேசச் செல்வர்களுக்கு ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்? என்று சிலர் கேட்கின்றனர்..* 

*ஆண்டவர் என்றால் ஆட்சி செய்தவர் என்று பொருள்.*

*இறைநேசச் செல்வர்கள் ஆண்டவர்களானால் அவர்கள் மண்ணை ஆண்டவர்களா? இல்லை மனத்தை ஆண்டவர்கள்..* 

*கவ்து நாயகம் ரலியல்லாஹு நினைவுக் கவியரங்கம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற போது அதில் சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை சாஹிப் குறிப்பிட்டது போல்...* 

*மண்ணை ஆண்டவர்கள், மன்னாதி மன்னர்கள்..* 

*மண்ணுக்குள் மறைந்த பின்னர் மக்களும் மறந்தனர்.* 

*தன்னை ஆண்டவர்கள் தவஞான மேதைகள்.* 

*இன்னும் வாழ்கின்றனர் ஈமானோர் நெஞ்சுகளில்.* 

*என்ற உண்மையை எவராலும் மறக்கவியலாது.* 

*ஆம்!* 

*பாரசீக நாட்டை ஆண்ட ஹாரூன் ரஷீத், மாமூன் ரஷீத், முஃதஸிம் பில்லாஹ், முக்தஃபி அம்ரில்லா போன்ற மன்னர்களை இந்நாளில் யாரேனும் எண்ணிப் பார்த்து நினைவு விழா எடுக்கிறார்களா?*

     *இல்லை!* 

*பாரசீகத்தில் பாதுஷாவாக பகட்டுடன் வாழ்ந்த இவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்காத இதயத்தில் பதிக்காத இவ்வுலகம் அதே பாரசீகத்தில் பக்கீர்ஷாவாக பக்திப் பெருக்குடன் வாழ்ந்த ஏந்தல் முஹ்யித்தீன் ஆண்டகையை எண்ணிப் பார்த்து விழா எடுக்கிறது என்றால் என்ன காரணம்?* 

*அவர்களெல்லாம் மண்ணை ஆண்டவர்கள். இவர்கள் தன்னை ஆண்டவர்கள்.
தன் மனத்தை ஆண்டவர்கள்.
அவர்கள் மனத்திற்கு அடிமையானார்கள்.
இவர்கள் மனத்தை அடிமையாக்கினார்கள். அவர்கள் படைப்புகளை மனத்தில் நிறைத்தார்கள். இவர்களோ படைத்தவனையே 
தன் மனத்தில் நிறைத்தார்கள்..* 

*மண்ணை ஆண்டவர்களை விட மனத்தை ஆண்டவர்கள் மாண்பு பெற்றிடக் காரணம் மனத்தை ஆளுவதற்கு மாபெரும் வலிமை வேண்டும். ஆற்றல் வேண்டும். வானத்தை வில்லாக  வளைப்பதை விட, கடலினை கடுகுக்குள் நுழைப்பதை விட, மலைகளை பந்தாக உருட்டுவதை விட, பூமியை பாயாக சுருட்டுவதை விட, மனத்தை ஆளுவதும், அடக்குவதும் மாபெரும் வலிமை மிக்கதாகும்... இத்தகைய வலிமை மண்ணை ஆளுவதற்கு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் மண்ணை ஆளலாம்.மண்ணை ஆளுவதற்குரியவர்களை நாம் தேர்ந்தெடுக்கும். 

*தேர்தலில்
சுட்டுவிரலில் தொட்டுவைக்கும்
கரும்புள்ளி..*
வெறும் புள்ளிகளையும்
பெறும்புள்ளிகள் ஆக்கும்
கரும்புள்ளி! 
பெரும்புள்ளி களையும்
வெறும்புள்ளிகள் ஆக்குவதும்
இந்தக் கரும்புள்ளியே!! 

*என்று அகவிகடக் கவிஞர் தி. மு. அப்துல் காதர் அவர்கள் சுட்டிக் காட்டுவது நினைவு கூரத் தக்கதாகும்...* 

*எனவே தான் தன் இதயத்தை ஆண்டதால்_ஆண்டவராகிய_அருள்ஞான வேந்தர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அவர்கள் நற்றமிழ் இலக்கியங்களில் இலங்குவது போல் நமது இதயங்களிலும் இலங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...* 

*தகவல்: M. #சிராஜுத்தீன்அஹ்ஸனி.*

*மஹ்ழரா 150_வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரில்...* 

*#தேங்கை_ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஸ்ரத் அவர்கள் எழுதிய கட்டுரை.....*

No comments:

Post a Comment