இறைவனாக இருப்பவர் எப்படி சிலுவையில் அறையப்பட்டார்?
இமாம் அபுபக்கர் அல் பாக்கில்லானி ரஹ்... அவர்கள் விவாதம் செய்வதில் புகழ்பெற்றவர்.
அவர் ஒரு கிறித்தவ பாதிரியாரை சந்தித்தார் அந்தப் பாதிரியார், முஸ்லிம்களாகிய நீங்கள் இனவெறி பிடித்தவர்கள் என்றார்.
ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்று பாக்கில்லானி கேட்டார்
யூத கிறித்தவ பெண்களை திருமணம் முடிக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்; ஆனால் உங்களுடைய பெண்களை மற்றவர்கள் மணமுடிக்க அனுமதிப்பதில்லை ஏன்? என்று கேட்டார்.
பாக்கில்லானி கூறினார்: நாங்கள் யூதப் பெண்களை மணமுடிக்க காரணம், யூதர்களின் திருத்தூதர் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் நபியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதேபோன்று கிறிஸ்தவர்களையும் நாங்கள் மணமுடிக்கிறோம், காரணம் அவர்களின் தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் நாங்கள் நபியாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் எப்போது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக ஏற்றுக்கொள்கிறீர்களோ அப்பொழுது எங்களது பெண்களை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறோம் என்றார்.
கேட்ட பாதிரியார் பதில் சொல்ல தடுமாறினார்.
இன்னொரு சம்பவம்:
ஹிஜிரி 371 இல் நடந்தது.
அப்போதைய ஈராக் மன்னர் இமாம் அவர்களை அழைத்து கான்ஸ்டான்டினோபிளில் உள்ள கிறிஸ்தவர்களுடன் விவாதிக்க அனுப்பினார்.
ரோமானிய மன்னர், அபூபக்கர் அல்-பாக்கில்லானியின் வருகையைப் பற்றி கேள்விப்பட்டபோது, கதவின் உயரத்தை குறைக்கும்படி தனது ஊழியர்களுக்கு கட்டளையிட்டார்,
இதனால் இமாம் நுழைந்ததும், தலையையும் உடலையும் மண்டியிடுவது போலக் குனிய வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதனால் அவர் ரோமானிய மன்னருக்கும் அவரது ஆட்சிமன்றத்திற்கும் முன்பாக அவமானப்படுவார், என்பது மன்னரின் நோக்கம்.
இமாம் வந்தபோது, கதவின் உயரம் குறைக்கப்பட்ட சூழ்ச்சியை புரிந்து கொண்டார்; எனவே கதவை நோக்கி முதுகு தெரியுமாறு நின்று கொண்டு முன்னோக்கி குனிந்து அவரது பின்புறம் கதவு வழியாக அரசருக்கு தெரியும் விதமாக உள்ளே நுழைந்தார்.
அதைப் பார்த்த மன்னர் இமாமின் புத்தி சாதுர்யத்தை புரிந்துகொண்டார்.
உள்ளே நுழைந்த பாக்கில்லானி அவர்கள் அங்கிருந்த மூத்த பாதிரியார்களை நோக்கி, நலம் விசாரித்தார்: எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய மனைவி மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டார்.
மன்னருக்கு கோபம் ஏற்பட்டது. எங்களது பாதிரியார்கள் மண முடிக்க மாட்டார்கள், குழந்தைகளைப் பெற்று எடுக்க மாட்டார்கள், என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்.
அதற்கு பாக்கில்லானி அவர்கள்: அல்லாஹ் மிகப் பெரியவன்; உங்களுடைய பாதிரியார்களை மனைவி மக்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று புனிதப்படுத்துகிறீர்கள்; ஆனால் உங்களுடைய இறைவன், மர்யம் அவர்களை மணமுடித்து ஈஸாவை பெற்றெடுத்தான் என்று கூறுகிறீர்கள், இது என்ன நியாயம் ?என்று கேட்டார்.
மன்னரின் கோபம் அதிகமானது. ஆவேசமாக கேட்டார்: ஆயிஷா பற்றி உம்முடைய கருத்து என்ன? என்று கேட்டார்.
அதற்கு பாக்கில்லானி: ஆயிஷா அவர்கள் மீது நயவஞ்சகர்கள் அவதூறு கிளப்பினார்கள், அதேபோன்று மரியம் அவர்கள் மீது யூதர்கள் அவதூறு கிளப்பினார்கள்; ஆனால் இருவருமே தூய்மையானவர்கள்; எனினும் ஆயிஷா மணமுடித்தார், குழந்தை பெறவில்லை; மரியம் அவர்களோ குழந்தை பெற்றெடுத்தார், ஆனால் மணம் முடிக்கவில்லை;
இந்நிலையில் யதார்த்தமாக அவதூறு சொல்வதற்கு யார் தகுதியானவர்? ஆனால் இருவருமே தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். என்றாலும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? என்று கேட்டார்.
மன்னருக்கு பதில் சொல்ல முடியாமல் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.
தொடர்ந்து கேட்டார் மன்னர்: உம்முடைய தூதர் போரிட்டிருக்கிறாரா?
ஆம்;
அவர் போரை முன்னின்று வழி நடத்தி இருக்கிறாரா?
ஆம்;
அவர் வெற்றி பெற்றிருக்கிறாரா?
ஆம்;
அவர் தோல்வியுற்றிருக்கிறாரா ?
ஆம்;
ஆச்சரியமாக இருக்கிறது, இறைத்தூதர் தோல்வியை எப்படி தழுவினார்? என்று கேட்டார், மன்னர்.
உடனே பாக்கில்லானி அவர்கள் கேட்டார்கள்: இறைவனாக இருப்பவர், எப்படி சிலுவையில் அறையப்பட்டார் ? என்று.
ரோமானிய மன்னன் வாயடைத்துப் போனான்.
(தாரீஹு பஃதாத்)
(அபூ பக்ர் முஹம்மது அல்-பாக்கில்லானி: பிரபலமான இறையியலாளர், நீதிபதி, பன்னூல் ஆசிரியர், விவாதத் திறமை பெற்றவர். அவரது காலத்தில் பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக போராடி வெற்றி பெற்றவர்.
பிறப்பு: கி.பி 950, பாஸ்ரா, ஈராக்
இறந்தது: 5 ஜூன் 1013, பாக்தாத், ஈராக்,
அடக்கம் செய்யப்பட்ட இடம்: பாபுஸ் ஸாகிர், டமாஸ்கஸ், சிரியா)
No comments:
Post a Comment