உலமாக்கள் சபையும்
உலமாக்களும்.
=====================
மறைக்கப்படும் ஆலிம்களின்
தியாகங்கள்.
"எமது நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.. விடுதலைக்காக போராடுவதும் இந்த அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டுவதும் எமது கடமை" என்கிற ஷா அப்துல் அஜீஸ் அவர்களின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்ட பிரகடனத்துடன் இந்திய உலமாக்களின் வீர வரலாறு தொடங்குகிறது...
1857 முதல் சுதந்திரப் போர் வரை காலணி ஆட்சியை எதிர்த்த மாபெரும் கலகக்காரர்களாக ஆலிம்களே முக்கிய பங்காற்றினர்.
1857 சிப்பாய் போராட்டத்தில் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் போராளிகளில் 51200 பேர் உலமாக்கள்.
அதில் திருப்தியடையாத பிரிட்டிஷார் சண்டை முடிந்த பிறகும் உலமாவைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிலிட்டனர்.
டெல்லியில் மட்டும் 500 ஆலிம்கள் தெருவோர மரங்களில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டதாக எட்வர்ட் டைமஸ் இந்த அராஜகத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அன்றைய காலத்தில் மௌலவி, போராளி என்ற இரண்டும் வெவ்வேறல்ல..
இவற்றினால் கொஞ்சங்கூட அசராத அந்த ஆலிம்கள் தொடர்ந்து தங்களது போராட்ட வடிவங்களை முன்னெடுத்தனர். ஜம்மியத்துல் உலமா ஹிந்த் அமைப்பின் ஸ்தாபகரும் தேவ்பந்த் அரபுக் கலாசாலையின் முதல் பட்டதாரியுமான மௌலானா மஹ்மூதுல் ஹசன் அவர்கள்1877ல் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்காக தமது சக ஆலிம்கள், மாணவர்களை உள்ளடக்கிய 'சம்ரதுத் தர்பியத்' (பயிற்சியின் விளைவு) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் பிரிட்டிஷாருக்கு தொல்லை கொடுத்தது.. முதல் உலகப்போருக்கான முஸ்தீபுகள் தொடங்கிய காலத்தில், துருக்கி கிலாபத்தை வலுவிழக்கச் செய்யும் ஆங்கிலேய ஏகாதிபத்திய சதியை உணர்ந்து கொண்ட மௌலானா அந்நிய நாடுகளின் உதவியோடு இந்திய விடுதலைக்கான முயற்சியில் இறங்கினார்.. தனது நம்பிக்கைக்குரிய மௌலானா உபைதுல்லா சிந்தியை காபூலுக்கு அனுப்பி வைத்தார்.
மௌலானா உபைதுல்லா தான் முதன்முதலில் நாடுகடந்த இந்திய சுதந்திர அரசு ஒன்றை நிர்மாணித்தார். மகாராஜா பிரதாப்சிங் தலைவராகவும் மௌலானா பரக்கத்துல்லா, உபைதுல்லா உள்ளிட்டோர் மந்திரிகளாகவும் பதவியேற்ற இந்த அரசின் தகவலை,
பட்டுத்துணியில் கடிதமாக வரைந்து நேச நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரசின் போர்ப்படையாக லஷ்கர் இ நஜாத் திஹிந்த் (விடுதலைப் படை) அமைக்கப்பட்டு அதன் தளபதியாக மஹ்மூதுல் ஹசன் நியமிக்கப்பட்டார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக படைநடத்த ஆதரவு கேட்டு இன்றைய சவுதி அரேபியாவுக்கு மவ்லானா மஹ்மூதுல் ஹசன் பயணப்பட,
அவருக்கு தஹ்ரீக் இ ரேஷ்மி இருமால் (பட்டுத்துணி கடிதம்) ஒன்றை உபைதுல்லா அனுப்பி வைத்தார். இந்த சதி ஆங்கிலேய அரசால் 1916 ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தம் 222 உலமாக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் மௌலானாக்கள் மஹ்மூதுல் ஹசன், ஹூசைன் அஹமது மதனீ, உபைதுல்லா சிந்தி, அபுல்கலாம் ஆசாத், கான் அப்துல் கப்பார் கான் ஆகியோர் அடங்குவர்..
இதன் பிறகுதான் 1919ல் ஜம்மியத் உலமா ஹிந்த் தொடங்கப்பட்டு முப்தி கிபாயத்துல்லா தலைமையேற்றார். முதல் உலகப் போருக்குப் பின் பெரும்பாலான இந்தியக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அகிம்சை முறைக்குத் திரும்பின.. மௌலானா பஜ்லுல் ஹக் தலைமையில் நடந்த கிலாபத் இயக்கம் மூலமாக காங்கிரசுடன் உலமாக்கள் ஒருங்கிணைந்து செயல்படத் துவங்கினர். "கிலாபத் பிரச்சினையை காங்கிரஸ் கையிலெடுக்கத் தொடங்கியதன் தாக்கம் வியக்கத்தக்க அளவில் இருந்தது. காங்கிரஸை ஆற்றல் மிக்க, வலிமைமிக்க இயக்கமாக மாற்றியது இந்துக்கள் அல்ல முஸ்லிம்களே" என்று சொன்னவர் சாட்சாத் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்..
தொடர்ந்து நடந்த ஒவ்வொரு போராட்டத்திலும் ஆலிம்கள் இரத்தம் சிந்தினர். ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றபோது, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பை வெளியுறுத்தி தீவிர பரப்புரையில் உலமாக்கள் ஈடுபட்டனர். கிலாபத் இயக்கம் ஒத்துழையாமையை வலியுறுத்தி பத்வா வழங்கியது..
இதனை தேசவிரோதச் செயலாக கருதிய பிரிட்டிஷ் அரசு, 1921 நவம்பர் 18 - 20ல் ஏறத்தாழ 30000 பேரைக் கைது செய்து கொட்டடியில் அடைத்தது.
1924 ல் பூரண சுதந்திர கோஷத்தை முன்வைத்தது ஜம்யிய்யத்.
1927ல் சைமன் கமிஷனை பகிஷ்கரித்து முதலாவதாக அறைகூவல் விடுத்தது. அப்போது தலைவராக இருந்த அன்வர் ஷா கஷ்மீரி "சுதந்திரம் வெற்றிலைப் பாக்கு வைத்து வழங்கப்படுவதில்லை.. நாம் தான் பறித்துக் கொள்ள வேண்டும்" என்று முழங்கினார்.
1928 ஆம் ஆண்டு லக்னோவில் நடந்தேறிய சர்வ கட்சி மாநாட்டில், ஜமியத் முக்கிய அங்கம் வகித்தது.. இதில் பிரிட்டிஷ் பேரரசுக்குக் கீழ் தன்னாட்சி உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட மோதிலால் நேரு அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்கள் ஆலிம்கள்.
முழு சுதந்திரம் தான் அவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது. இந்த அறிக்கையை கைவிடும் வரை காங்கிரஸுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது ஜம்மியத். சரியாக ஐந்தாண்டுகளுக்குப் பிறகே பூரண சுதந்திர கோரிக்கையை ஏற்றது காங்கிரஸ்.
அதேபோல் 1942 ஆகஸ்ட் 5ம்தேதி வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை வைத்தது ஜம்மியத். அதன் பிறகே பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆகஸ்ட் 9 ஆம்தேதி இந்த பிரபல முழக்கம் தீர்மானமாக நிறைவேறியது..
இரு தேசக் கொள்கையை ஜம்மியத் தீவிரமாக எதிர்த்தது.. அதன் தலைவர் மௌலானா ஹுசைன் அஹமது மதனீ, ஆசாத் உள்ளிட்டோர் முஸ்லிம் லீகர்களால் கடுந்தாக்குதலுக்கு ஆளாகும் அளவில் எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. பிரிவினையை வெறுத்த உலமாக்ககள், காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட்களாக முத்திரைக் குத்தப்பட்டனர்.
இந்தளவுக்கு தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தேச மற்றும் சமுதாய நலனில் எந்த சமரசத்திற்கும் இடங்கொடாது தீமையைத் தடுக்கும் கடமையில் சிறைக் கொடுமைகளைக் கண்டு சற்றும் தளராமல் தீர்க்கமாக போராடியவர்கள்தான் உலமாக்கள் சபையும்
உலமாக்களும்.
இன்றைய ஜம்யத்துல் உலமாயே ஹிந்தின் முன்னோடி மவ்லானா ஹுஸைன் அஹ்மது மதனி(ரஹ்)அவர்கள் தனது ஆசிரியர் மவ்லானா ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன்(ரஹ்)அவர்களுடன் மால்டா சிறையில் வெள்ளையர்களை எதிர்த்த காரணத்தினால் ஆறு ஆண்டுகள் இருந்தார்கள்.
மறைக்கப்படும் ஆலிம்களின்
தியாகங்கள்.
No comments:
Post a Comment