அரசு துறந்த ஞாணி இபுராஹீம்
****** ******** ******** *************
இபுனு அத்ஹம் (ரஹ்) அவர்கள்.
******** ********** ******* ************
நிகழ்வு 1 : அன்றைய ஏமன் இன்றைய ஓமான் நாட்டு அரசரின் படுக்கையறையை கனகச்சிதமாகச் சுத்தம் செய்தாள் அப்பணிப்பெண். பணியில் தவறிழைத்தால் தண்டனை உண்டென்பதை நன்கு அறிந்திருந்தாள் அவள். எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து விட்டு 'எல்லாம் சரியாக இருக்கிறதா?'வென்று ஒரு முறை படுக்கையறையின் மஞ்சத்தை பார்த்ததும் அதன் வேலைப்பாட்டில் மெய்மறந்து அமர்ந்தவள் படுத்தாள்; படுத்தவள் சற்று கண்ணயர்ந்து விட்டாள்.
யாரோ கடுமையான குரலில் அதட்டுவதை விளங்கியவள் கண் விழித்தாள். எதிரே அரசர்.
'தான் உறங்கும் மஞ்சத்தில் பணிப்பெண் உறங்குவதா?' முதலாளித்துவம் மேலோங்கி கோபம் கொப்பளிக்க சாட்டையை எடுத்து விளாசி ஓய்ந்தார் அரசர்.
அநீதம் கண்டு பொங்கிய அப்பணிப்பெண் கண்ணீர் மல்க சொன்னாள் 'சில மணித்துளிகள் உறங்கிய எனக்கே என் எஜமானனாகிய உங்களிடம் இவ்வளவு அடி என்றால், ஆண்டுக்கணக்கில் இதில் படுத்துறங்கும் உமக்கு எஜமானருக்கெல்லாம் எஜமானனாகிய இறைவனிடம் எவ்வளவு அடி கிடைக்கும்?'
அச்சொல் அரசருக்கு சவுக்கடி விழுந்தது போலாகி அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு ஆன்மிக வாழ்க்கையை நாடிச் சென்றார். அவரே ஹிஜ்ரி 2-ம் நூற்றாண்டில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) வாழ்ந்த கிரேக்கத்தில் ஷஹீதான (உயிர்த்தியாகி) இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
நிகழ்வு 2 : அரச வாழ்வைத் துறந்து 'காடே மேடே கண்ணே ரஹ்மானே' என்று இறைத்தேடலில் லயித்த இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குளிப்பதற்காக கட்டண குளியலறைக்குச் சென்றார்கள். குத்தகைதாரர் 'பணம் கொடுத்து உள்ளே செல்லுங்கள் பெரியவரே' என்றார். அவ்வளவுதான் அழுதே விட்டார்கள் மகான் அவர்கள்.
ஏன் அழுகிறீர்கள்? கேள்வி எழுப்பப்பட்டது.
'ஷைத்தான்கள் குடியிருக்கும் வீட்டினுள் (குளியலறை, கடைத்தெரு ஷைத்தானுக்கு விருப்பமான இடமாகும் - நபிமொழி கருத்து) நுழைவதற்கே பணம் கேட்கிறாயே? நபிமார்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் நல்லோர்கள், நாதாக்கள் குடியிருக்கும் சுவனத்திற்கு நான் எவ்வளவு நன்மைகளை கொடுக்க வேண்டுமோ, என் இறைவனின் கருணைப்பார்வை என் மீது விழுமா, விழாதா?' என்று நினைத்து அழுகிறேன் என்றார்கள்.
#ரஹ்மதுல்லாஹி_அலைஹி அன்னாரின் மீது இறைவன் இரக்கம் கொள்வானாக!
No comments:
Post a Comment