Sunday, 1 October 2017

நபித்தோழர் முஆவியா

தவறாகப் புரியப்பட்ட நபித்தோழர்
*முஆவியா رضي الله عنه*

முஅவியா رضي الله عنه  அவர்களுடைய
வாழ்க்கை வரலாறு சற்று விரிவாக
ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
பொதுவாக நபித்தோழர்கள்
அனைவரும் ஏனையவர்களை விட
சிறப்புடையவர்கள் என்பதனாலும்,
ஈமானிலும், நல்லமல்களிலும்
ஏனையவர்களைக் காட்டிலும்
முன்னணியில் திகழ்பவர்கள்
என்பதனாலும் அவர்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கை வரலாறும் ஆராயப்பட்டு
அவர்களிடமுள்ள நல்ல முன்மாதிரிகள்
அவர்களுக்குப் பின்னால்
படிப்பினைக்கு வைக்கப்பட
வேண்டும். இதுவே நபித்தோழர்களின்
வரலாறுகளைப் படிப்பதிலிருக்கும்
ஏற்றமிகு நோக்கமாகும். ஆனால்
இதற்கு மாற்றமாக நபித்தோழர்களின்
வரலாறு பற்றி ஆராயமுற்பட்ட
சிலரால் குறிப்பிட்ட சில நபித் தோழர்கள் பற்றிய செய்திகள்
தவறாகப் புரியப்பட்டு,
நபித்தோழர்களை அவமதிக்கும்
வகையில் அவர்களின் வரலாறு
பிழையாக எழுதப்பட்டு, இன்றுள்ள
பாட விதானங்களிலும்
நுழைக்கப்பட்டிருக்கின்றன.
பிழையாக எழுதப்பட்ட
இவ்வரலாறுகளைப் படிக்கும்
மாணவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட
சில நபித்தோழர்கள் தொடர்பாகப்
பிழையான அபிப்பிராயங்கள்
ஏற்பட்டிருக்கின்றன.
நபித்தோழர்
முஆவியா رضي الله عنه  அவர்களுடைய
வரலாறும் இவ்வாறுதான் தவறாக
எழுதப்பட்டு, அவர் மீது மாசு பூசும்
வகையில்
முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே இக்கட்டுரை மூலம் அவருடைய சரியான வரலாற்றை
வெளிக்கொணர்வதோடு, அவர் மீதான
தப்பபிப்பிராங்களை அகற்றி,
அவருக்குள்ள சிறப்புக்களை
ஆதாரபூர்வமாக சமர்ப்பிக்க
முயற்சிக்கின்றோம்.

முஆவியா رضي الله عنه  அவர்கள்தான்
கிலாபத் ஆட்சி முறையில் மன்னர்
ஆட்சி முறையைக் கொண்டு வந்தவர்
என்று கூறி அவரின் ஆட்சி முறையானது பலராலும் பலவாறும் விமர்சிக்கப்படுகின்றது.
ஆட்சி முறை இவ்வாறுதான்
இருக்கவேண்டுமென்று
பிரத்யேகமான எந்த முறையையும்
இஸ்லாம் குறிப்பிட்டுக்
கூறவில்லை. யார் ஆட்சி செய்தாலும் அவ்வாட்சிக்கு யாப்பாக
அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும்
இருக்கவேண்டுமென்பதுவே ஆட்சி தொடர்பில் இஸ்லாம்
வலியுறுத்துகின்ற
விதி முறையாகவிருக்கின்றது.
நபியவர்களுக்குப்பின்னால் ஆட்சிக்கு
வந்த அபூபக்ர்  உமர் رضي الله عنهم போன்ற
கலீபாக்கள் தெரிவு செய்யப்பட்ட
விதங்களிலிருந்து இதை அறிந்து
கொள்ளலாம். நபியவர்களுக்குப்
பின்னால் வந்த நால்வரின் ஆட்சியும்
நபித்துவத்தின் கீழ் அமைந்ததாகும்.
அதைக் கீழ்வரும் ஹதீஸ்
சுட்டிக்காட்டுகின்றது.

நுபுவ்வத்தின் ஆட்சியானது
முப்பது வருடங்களாகும். பின்னர்
அல்லாஹ், தான் நாடியவருக்கு
தனது ஆட்சியைக் கொடுப்பான்.
அறிவிப்பவர் : ஸபீனா رضي الله عنها
ஆதாரரம்: அபூதாவுத் 4648

நான்கு கலீபாக்களின் ஆட்சியையும்
இந்த ஹதீஸ் சூசகமாக சிறப்பித்துக்
கூறுகின்றது. நான்கு கலீபாக்களின்
ஆட்சிக்காலத்தை சிறப்பித்து
ஹதீஸ்கள் வந்திருப்பதைப் போலவே
அதற்குப்பின்னால் வந்த முஅவியா رضي الله عنه அவர்கள் போன்றோரின் ஆட்சிக்
காலங்களையும் நபியவர்கள் புகழ்ந்து
கூறியுள்ளார்கள் . கீழ்வரும் ஹதீஸ்
இதை அழகாகக் கூறுகின்றது.

“இந்தப் பொறுப்பு நபித்துவமாகவும்
அருளாகவும் ஆரம்பித்தது. பின்னர்
அது கிலாபத்தாகவும் அருளாகவும்
பின்னர் மன்னராட்சியாகவும்
அருளாகவும் மாறும்
என்று நபியவர்கள் கூறினார்கள்.

10975
இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள்...
நூல் : முஃஜமுல் கபீர்  லித் தபராணி.

ஷீஆக்கள், ஆட்சியை மையமாக வைத்து
இஸ்லாத்தைப் போதிப்பவர்கள்
போன்றோர் விமர்சிக்கின்ற அளவுக்கு
முஅவியா رضي الله عنه  அவர்களிடம் தவறான
நடைமுறைகள் எதுவும்
இருக்கவில்லை. மாற்றமாக மார்க்க
விளக்கமுள்ள பெரும்
நபித்தோழர்களுள் ஒருவராக அவர்
காணப்பட்டார்.

*முஆவியா رضي الله عنه அவர்களின்*
*மார்க்க  அறிவு!*

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்,
அப்துல்லாஹ் இப்னு உமர்,
அபூதர் அல் கிபாரி رضي الله عنه  போன்ற
சுமார் 23 நபித்தோழர்கள்
அவரிடமிருந்து ஹதீஸ்களை
அறிவித்துள்ளதை வரலாற்றில் காண
முடிகின்றதென்றால்
நபியவர்களிடமிருந்து
குறிப்பிடத்தக்களவிலான ஹதீஸ்களை
அவர் கேட்டிருக்கின்றார் என்பதை
அதிலிருந்து அறிய முடிவதுடன்,
மார்க்கம் பற்றிய விளக்கமுள்ள
ஒருவராகவும் அவர் இருந்துள்ளார்
என்பதையும் விளங்க முடிகின்றது.
முஆவியா رضي الله عنه  அவர்கள்
அறிவித்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹுல்
புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்
உள்ளிட்ட பிரபல்யமான ஆறு ஹதீஸ்
நூட்களிலும், அவை தவிர்ந்த ஏனைய
ஹதீஸ் நூட்களிலும் இடம்
பெற்றுள்ளன. ஆனால் நம்மில்
பலருக்கு அவர் அறிவித்துள்ள
ஒரேயொரு  ஹதீஸைக் கூட
தெரியாது. ஆனால் அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் போன்ற  ஏனைய
நபித்தோழர்கள் அறிவித்துள்ள
ஹதீஸ்கள் ஏதோ ஒரு வகையில்
பெரும்பாலும் நமக்கு
அறிமுகமாகியிருக்கின்றன. இதை
ஷீஆக்களின் தாக்கங்களில் ஒன்றெனக்
கூறலாம்.
ஷீயாக்களின் தாக்கம்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்
போது ஆண் குழந்தையின் பெயருடன்
‘அலீ’ யைச் சேர்த்துக் கொள்வதையும்,
பெண் குழந்தையின் பெயருடன்
‘பாத்திமா' என்ற சொல்லை சேர்த்துக்
கொள்வதையும் சமூகத்தில்
காண்கிறோம். ஆனால் ‘யஸீத்’ என்ற
பெயரையோ, ‘முஆவியா’ என்ற
பெயரையோ யாரும் தமது
குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை.
இதற்குக் காரணம்தான் என்ன என்று
தேடுவோமானால், இந்நபித்
தோழர்கள் பற்றிய ஷீஆக்களின் விஷம
கருத்துக்கள் நம்மை அறியாமலேயே
நம்முள் நுழைந்து விட்டன அதன்
காரணமாக அவர்களுக்கு நாம்
வழங்கவேண்டிய அந்தஸ்தும், மதிப்பும்
நமதுள்ளங்களை விட்டும்
அகற்றப்பட்டுவிட்டன என்பதுவே
இதற்குக் காரணமெனலாம். இதன்
காரணமாகவும், நபித்தோழர்களின்
வராலாறு பற்றிப் பேசும் பல
ஆய்வுகளில் முஆவியா رضي الله عنه அவர்களுக்கு உரிய  இடம் வழங்கப்
படவில்லையென்பதாலும்
முஆவியா رضي الله عنه  அவர்கள் பற்றிய
வரலாற்றை பரந்தளவில்
ஆய்வுசெய்து, சமூகத்துக்கு அதை
எடுத்துக் கூறவேண்டிய
தேவையேற்பட்டிருக்கின்றது.

முஆவியா رضي الله عنه  பற்றி
நபித்தோழர்களிலேயே மிகச் சிறந்த
நிர்வாகத்திறமை வாய்ந்த ஓர்
ஆட்சியாளர் என்று நபித்தோழர்களே
போற்றும் அளவுக்கு தகைமை
வாய்ந்தவராக அவர் இருந்துள்ளதை
வரலாறு கூறுகின்றது. தனது
நிர்வாகத்திறமையினால்
சிரியாவை சுமார் 20 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார். தனது
நிலைப்பாட்டிற்கு எதிராக
சிரியாவில் எவரும்
கிளர்ந்தெழாதளவுக்கு அற்புதமான
நிருவாகத் திறமையினை அவர்
கொண்டிருந்தார். இதைப் பார்த்து
உமர் رضي الله عنه  அவர்களே
ஆச்சரியப்பட்டிருக்கின்றார்கள்.

*முஆவியா رضي الله عنه அவர்களின்*
*குடும்பம்!*

முஆவியா رضي الله عنه  அவர்களின் தந்தை
அபூஸுப்யான் رضي الله عنه  அவர்கள். தாயின் பெயர்
ஹிந்தா رضي الله عنها.  யஸீத் எனும்
பெயரில் ஒரு மகன் இருந்ததைப் போல
அதே பெயர் கொண்ட சகோதரர்
ஒருவரும் முஆவியா رضي الله عنه
அவர்களுக்கிருந்துள்ளார். இவரின்
முழுக் குடும்பமுமே
இஸ்லாத்தைத் தழுவியது.

யா அல்லாஹ் முஅவியாவை
நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி
பெற்றவராகவும் ஆக்குவாயாக.
அவருக்கு நேர் வழி காட்டுவாயக.
அவர் மூலம் (மக்களுக்கு)
நேர்வழிகாட்டுவாயாக.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ உமைரா رضي الله عنه
ஆதாரம் : அத்தாரீஹுல் கபீர் 1405

முஆவியா رضي الله عنه  அவர்களுக்கு
நேர்வழி காட்டச் சொல்லியும், அவர்
மூலம் (மக்களுக்கு) நேர்வழி காட்டச்
சொல்லியும் நபியவர்கள்
அல்லாஹ்விடம்
பிரார்தித்திருக்கின்றார்கள் என்றால்
நபியவர்களின் இந்த துஆவலை  அல்லாஹ்
நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பான்.
எனவே அவர் மூலம் பலர் நேர்வழி
பெற்றிருப்பர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
ஆகவே மக்களுக்கு
நேர்வழிகாட்டும் ஒரு
வழிகாட்டியாக முஆவியா رضي الله عنه அவர்கள்
இருந்துள்ளார்கள். அவரின்
சிறப்பைத் தெரிந்து கொள்ள
இதுவொன்றே போதுமெனலாம்.
முஆவியா رضي الله عنه  அவர்களின் சிறப்பை
எடுத்துச் சொல்கின்ற மற்றொரு
செய்தியாகக் கீழ்வரும் ஹதீஸ்
அமைகின்றது.

முஸ்லிம்கள் அபூஸுப்யானைப்
பார்க்காமலும், அவருடன் சேர்ந்து
அமராமலும் இருந்தனர். அப்போது
அபூஸுப்யான் நபியவர்களிடம்
‘அல்லாஹ்வின் நபியே மூன்று
விடயங்களை எனக்குத் தருவீர்களா?’
என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்
‘ஆம்’ என்று பதில் கூறினார்கள்.
‘என்னிடமுள்ள அரபுகளில் மிகச்சிறந்த,
மிக அழகான உம்மு ஹபீபா பின்த்
அபீஸுப்யானை உங்களுக்கு
மணமுடித்துத் தருகின்றேன்’ என்றார்.
அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில்
கூறினார்கள். ‘(எனது மகன்)
முஅவியாவை உங்களுடைய
எழுத்தாளராக வைத்துக்
கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு
நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில்
கூறினார்கள். ‘ முஸ்லிம்களுடன்
நான் போரிட்டதைப் போல
காபிர்களோடும் போராட என்னைத்
தலைவராக்குங்கள்’ என்றார். அதற்கு
நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு
அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம் : முஸ்லிம் 6565

குறைஷிகளை வழி நடாத்திய
அபூஸுப்யானின் மகன் என்பதால்
எழுத்தாற்றல், பேச்சாற்றல்,
நிருவாகத்திறமை போன்ற சிறந்த
தேர்ச்சிகளை முஆவியா رضي الله عنه அவர்கள்
பெற்றிருந்தார்கள். இத்தகைய
விவேகமான ஒருவரைத்தான்
அதியுயர் நம்பிக்கை,
நாணயத்திற்குரிய பணியான
‘வஹீயை எழுதும் பணிக்கு’
நபியவர்கள் அமர்த்தியுள்ளார்கள்.
நபியவர்களுக்கருகிலிருந்து வஹீயை எழுதியவரென்பதால் அதிகமான
ஹதீஸ்களை
நபியவர்களிடமிருந்து அவர்
கேட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது.
அவருக்கு முன்னர் இஸ்லாத்தை
ஏற்று, காலம் முழுவதையும்
நபியவர்களோடு கழித்த அபூஹுரைரா رضي الله عنه  போன்றோரைக்
கூட நபியவர்கள் வஹீ எழுத
அமர்த்தவில்லை. எனவே முஆவியா رضي الله عنه  அவர்கள் எல்லா வகையிலும்
சிறந்தவராகவும், தகுந்தவராகவும்
இருந்துள்ளார்கள்
என்பதை
இதிலிருந்து விளங்கலாம்.
*முஆவியா رضي الله عنه  அவர்கள்*
*அறிவித்துள்ள ஹதீஸ்கள்!*

முஆவியா رضي الله عنه  அவர்கள்
அறிவித்துள்ள ஹதீஸ்களைக்
கவனிப்போமானால் மார்க்க
விடயங்களில் அவருக்கிருந்த
பேணுதலையும், கூர்மையான
அவருடைய அவதானிப்பையும்
அறிந்து கொள்ள முடிவதுடன்
மதிப்பு, மரியாதை, அந்தஸ்து
என்பவற்றுக்கப்பால் ஒர் அற்ப
விடயமாயினும் அதையும்
சுட்டிக்காட்டும் துணிவு,
தவறுகளை ஏற்றுக் கொள்ளும்
பணிவு போன்ற அதியுயர்
பண்புகளையும் காணமுடியும்.

ஒரு முறை ஹஜ் காலம் ஒன்றின்
போது முஆவியா رضي الله عنه  அவர்கள்
(மதீனாவுக்கு வந்து வந்து) மிம்பரில்
ஏறி (மதீனாவின்  அமீருடைய) மகனின்
கையிலிருந்த சில முடிகளைத்
தனது கையில் எடுத்தவராக ‘மதீனா
வாசிகளே உங்கள் அறிஞர்கள் எங்கே!
‘பனூஇஸ்ரவேலர்கள் அழிந்தது இதை
அவர்களின் பெண்கள் எடுத்த
போதுதான்’ என்று கூறியவர்களாக
நபியவர்கள் இதை தடைசெய்வதை
நான் கேட்டுள்ளேன். என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுமைதிப்னு
அப்திர்ரஹ்மான் رضي الله عنه
ஆதாரம் : முஸ்லிம் 5700

ஒட்டு முடி வைப்பதென்பது
இன்றைக்கு சர்வசாதாரணமான
ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
அதனால்தான் ஒட்டு முடி
வைக்கப்பட்டுள்ள தொப்பிகளை
சிறியோர் முதல் பெரியோர் வரை
அனைவரும் அணிவதைக்
காண்கின்றோம். ஆனால் முஆவியா رضي الله عنه  அவர்கள் மிம்பரில் சுட்டிக்
காட்டும் அளவிற்குப்
பாரதூரமானதாக அதை
விளங்கியிருந்தார்கள். ஒட்டு முடி
வைத்தவர்களை அல்லாஹ் சபித்தான் எனும் ஹதீஸ்களை
நாம்
அறிந்துள்ளோம். ஆனால் இதே ஒட்டு
முடியை வைத்ததன் காரணமாக
அல்லாஹ் ஒரு சமூகத்தையே
அழித்துள்ளான் என்பதை முஆவியா رضي الله عنه  அறிவிக்கும் இந்த
ஹதீஸிலிருந்து தெரிந்துகொள்ள
முடிகின்றது. முஆவியா رضي الله عنه அவர்கள்
இரத்தத்தையே கவனிப்பவரல்ல
என்றுதான் வரலாற்றில் நமக்குக்
காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்களோ
ஒட்டு முடியில் கூட மிகக் கவனமாக
இருந்துள்ளார்கள் என்பதை
இதிலிருந்து விளங்க முடிகின்றது.
அவர்கள் அறிவித்திருக்கும்
மற்றுமொரு ஹதீஸைக் கீழே
அவதானிப்போம்.

உமர் رضي الله عنه  அவர்கள் காலத்தில்
அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தவிர்ந்த ஏனைய
ஹதீஸ்களை அறிவிப்பதை
விட்டும் நான் உங்களை
எச்சரிக்கின்றேன். எனெனில் உமர் رضي الله عنه அவர்கள்  அல்லாஹ்வுக்காக மக்களை
அச்சத்தோடு வைத்திருந்தார்.
‘அல்லாஹ் யாருக்கு நலவை
நாடுகின்றானோ அவருக்கு
மார்க்கத்தில் விளக்கத்தைக்
கொடுப்பான். நான் சொத்துக்களைப்
பாதுகாப்பவன்தான். எவருக்கு நான்
மனமுவந்து (பைத்துல்
மாலிலிருந்து) சொத்துக்களைக்
கொடுக்கின்றேனோ அவருக்கு அதில்
அபிவிருத்தி செய்யப்படும்,
கேட்டதனாலும், எதிர்பார்த்ததன்
காரணத்தாலும் யாருக்காவது நான்
சொத்துக்களைக் கொடுத்தால் அவர்
உணவுண்டும் வயிறு
நிறையாதவரைப் போன்றவராவார்.’
என நபியவர்கள் கூறியதை நான்
கேட்டுள்ளேன். என்று முஆவியா رضي الله عنه  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு
ஆமிர் அல் யஹ்ஸபி رضي الله عنه
ஆதாரம் : முஸ்லிம் 2436

முஆவியா رضي الله عنه  அவர்கள் காலத்தில் ரோம்
பிரதேசம் போன்ற பல தேசங்கள்
வெற்றிகொள்ளப்பட்டன. அதனால்
அப்பிரதேசங்களிலிருந்து
கைப்பற்றப்பட்ட கணிசமான கனீமத்
பொருட்கள் முஆவியா رضي الله عنه அவர்களிடம்
குவிந்து கிடந்ததனால்
பலரும் முஆவியா رضي الله عنه   அவர்களிடம் வந்து
உதவி கோரத் தொடங்கினர். இந்த
வேளையில்தான் முஆவியா رضي الله عنه அவர்கள் இந்த
ஹதீஸை மக்களுக்கு
எத்தி வைக்கின்றார்கள்.

*விமர்சனத்தின்... விபரீதம்!*

முஆவியா رضي الله عنه  அவர்கள்
நுபுவ்வத்திற்கு 5 வருடத்திற்கு முன்
பிறந்தார். அன்றைய இஸ்லாத்தை
எதிர்த்தவர்களுள் ஒருவராகிய
அபூசுஃப்யான் அவர்களுடைய
மகனாவார். ஹம்ஸா رضي الله عنه
அவர்களுடைய ஈரலை மெண்டு
துப்பும் அளவுக்கு இஸ்லாத்தின் மீது
வெறுப்புக் கொண்ட ஹிந்தா
அவர்களுடைய மகனுமாவார்.
வரலாற்று சிறப்புமிக்க ஹூதைபியா
உன்படிக்கைக்குப் பிறகு இஸ்லாத்தை
ஏற்றார் ஆனாலும் தன்னுடைய, தாய்
தந்தைக்கு பயந்து அதை
வெளிப்படுத்தாமல் மறைத்தே
வைத்திருந்தார்.
மக்கா வெற்றியின் போது தான்
இஸ்லாத்தை ஏற்றிருந்ததை
வெளிப்படுத்தினார்.
ஹூதைபியாவுக்கு அடுத்த வருடம்
மதீனாவிலிருந்து முஸ்லீம்கள்
மக்காவுக்கு உம்ரா செய்ய வந்திருந்த
பொழுது அவர்களுடன் சேர்ந்து இவரும்
உம்ரா செய்ததாகவும் ஒரு
குறிப்புண்டு.

வஹி எழுதும் எழுத்தாளர்களில்
இவரையும் இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
இடம் பெறச் செய்ததால், வஹியை எழுதும் அளவுக்கு அல்லாஹ் இவரை
உயர்வு படுத்தினான்.
இன்னாரின் சிறப்புக்களை
அறிந்துகொள்ளாத ஷியாக்களும்,
ஷியாக்களால்
வார்த்தெடுக்கப்பட்டவர்களும்  முஆவியா رضي الله عنه அவர்களை ஏசுவதையும்
தாறுமாறாக விமர்சிப்பதையும்
கண்டு வருந்துகிறோம்.

”என் தோழர்களை ஏசி விடாதீர்கள்” என்று இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்கள் தடுத்து
உள்ளார்கள்.
”நூற்றாண்டுகளில் சிறந்தது என்
தோழர்கள் வாழ்ந்த நூற்றாண்டே ஆகும்” என்றும் இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
சிறப்பித்துக் கூறி உள்ளார்கள்,
”நீங்கள் உஹது மலை அளவு தர்மம்
செய்தாலும் என் தோழர்கள் கை அளவு அல்லது அதை விடக் குறைவாக
செய்ததற்கு நிகராகாது என்றும்
இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்கள் சிறப்பித்துக்
கூறி உள்ளார்கள்.
இவ்வாறு நபி صلى الله عليه وسلم  அவர்களின்
பொன்மொழிக்கு உள்ளடங்கப்பட்ட
தோழர்களில் ஒருவர்தான் முஆவியா رضي الله عنه  அவர்களாவார்.
ஏனைய நபித் தோழர்களை ஏசுவதும்
விமர்சிப்பதும் கூடாது என்று
நபியவர்கள் நமக்கு எவ்வாறு
போதித்துள்ளார்களோ அதே
போன்றுதான் முஆவியா رضي الله عنه அவர்களை ஏசுவதிலும் நமக்கு எவ்வித
உரிமையும் தகுதியுமில்லை.

*முன்னறிவிப்பு!*

உத்மான் رضي الله عنه  அவர்களுடைய ஆட்சி காலத்தில்  முஆவியா رضي الله عنه  அவர்களின்
தலைமையில் கப்பல் படை உருவாக்கப்பட
இருந்ததையும், அதில் உம்மு ஹராம் رضي الله عنها
அவர்கள் பங்கெடுக்கப்பட
இருந்ததையும் இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
முன் கூட்டியே முன்னறிவிப்புச்
செய்திருந்தார்கள்.

2800 உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் رضي الله عنها  கூறியதாக அனஸ் رضي الله عنه  அவர்கள்
கூறுகிறார்கள்:
ஒரு நாள் நபி صلى الله عليه وسلم  அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு
புன்னகைத்துக் கொண்டே
கண்விழித்தார்கள். நான், ‘ஏன்
சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘என் சமுதாயத்தைச்
சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில்
கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும்
அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்)
பயணம் செய்து கொண்டிருப்பதாக
எனக்கு (கனவில்) எடுத்துக்
காட்டப்பட்டது” என்று கூறினார்கள்.
நான், ‘அவர்களில் ஒருத்தியாக
என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன்.
(அவ்வாறே) அவர்கள் எனக்காகப்
பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம்
முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள்.
முன்பு கேட்டது போன்றே நானும்
கேட்டேன். முன்பு பதில் சொன்னது
போன்றே அவர்களும் பதில்
சொன்னார்கள். நான், ‘அவர்களில்
ஒருத்தியாக என்னை ஆக்கும்படி
அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்”
என்று கூறினேன். அவர்கள், ‘முதன்
முதலாகச் செல்பவர்களில் நீங்களும்
ஒருவர் தாம்” என்று கூறினார்கள்.

(உம்மு ஹராம் رضي الله عنها  அவர்களின் சகோதரி மகன்
அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه
தெரிவிக்கிறார்கள்:)
அவ்வாறே, தளபதி முஆவியா رضي الله عنه
அவர்களுடன் முஸ்லிம்கள் (சைப்ரஸ்
தீவில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல்  படையினரில் ஓர் அறப்போர்
வீரராக, தம் கணவர் உபாதா இப்னு
ஸாமித் رضي الله عنه  அவர்களுடன் உம்மு ஹராம்  رضي الله عنها  புறப்பட்டுப் போனார்கள்.
தம் படையெடுப்பிலிருந்து அவர்கள்
திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு
திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு
ஹராம் رضي الله عنها  ஏறிக் கொள்வதற்காக
அவர்களுக்கருகே வாகனம் ஒன்று
கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில்
ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே
தள்ளிவிட்டது; அதனால் அவர்கள்
இறந்துவிட்டார்கள்.

இறைதூதர் صلى الله عليه وسلم  அவர்களின் இந்த
முன்னறிவிப்பு உத்மான் رضي الله عنه
அவர்களின் ஆட்சிக் காலத்தில்
முஆவியா رضي الله عنه  அவர்கள் படைத்
தளபதியாக இருந்த போது
நிறைவேறுகிறது.

வீரமும் விவேகமுமிக்க முஆவியா رضي الله عنه  அவர்கள் தனது ராணுவத்தில் கப்பல்
படையை உருவாக்கினார்கள்.
இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் செய்த
முன்னறிவிப்பின் படியே உம்மு
ஹராம் رضي الله عنها  அவர்கள் முதல் படையில் கலந்து
கொண்டார்கள், இரண்டாவது
படை தயாராவதற்கு முன்னரே இறந்து
விடுகின்றார்கள்.

ஆக, முஆவியா رضي الله عنه  அவர்களின்
தலைமையில் நடபெற இருந்த ஒன்றை நபி صلى الله عليه وسلم  அவர்கள் முன்னறிவிப்புச்
செய்கிறார்கள் என்றால் அவர்கள் பற்றி ஒரு  சிறப்பில்லாமல்
சொல்லியிருக்கமாட்டார்கள்.

முஆவியா رضي الله عنه  அவர்கள் ஹிஜ்ரி 60ல் இறையடி
சேர்கிறார்கள். அப்போது
அவர்களுடைய வயது 77 அல்லது 78 இருக்கும்.

உம்மு ஹராம் رضي الله عنها  அவர்கள் பனூ நஜ்ஜார்
கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்,
அனஸ் رضي الله عنه  அவர்களுடைய தாயார் உம்மு
சுலைம் رضي الله عنها  அவர்களுடைய
சகோதரியாவார்.

உம்மு ஹராம் رضي الله عنها  அவர்கள் பால்குடி மூலம்
அல்லது வம்சா வழியின் மூலம்
சின்னம்மா (சாச்சி) எனும் உறவில்
உள்ளவர்கள். அதனால் அவர்களினதும்,
அவர்களின் சகோதரியான அனஸ் رضي الله عنه
அவர்களின் தாயார் வீட்டுக்கும்
அடிக்கடி செல்பவர்களாக இருந்தார்கள்
நபியவர்கள்.

அனஸ் رضي الله عنه  அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு தடவை நான், எனது தாயார்,
மற்றும் எனது சாச்சி உம்மு ஹராம்
அவர்கள் மட்டும் இருக்கும் போது
நபியவர்கள் வந்து தொழுகைக்குரிய
நேரமல்லாத நேரத்தில் எங்களுக்கு
தொழுகை நடத்தினார்கள், நான்
நபியவர்களின் வலது பக்கம் நின்றேன்.
(முஸ்லிம்)

எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்
ஒருவனே.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

No comments:

Post a Comment