பராஅத் இரவின் சிறப்புகள்
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பதன் சிறப்பும், அவ்விரவில் மஃரிப் பின் சூரா யாஸீன் ஓதுவதன் அவசியமும்.
♣ பராஅத் இரவு என்றால் என்ன?
ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.
இப்பெயர்கள் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
நூல் ரூஹுல் பயான் பாகம் 13,பக்கம் 110,111
♣ ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பது சுன்னத்தா?
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822
♦ ஒரு நாள் இரவு நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.
நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299)
ஆகவே இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் தெளிவாகின்றது.
♦ பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் மிஷ்காத் 1 305
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் அஹ்மத் 6642
♣ ஷஃபான் மாதம் பிறை 15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம்
ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம பெறவும், மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'.
♦ அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்; ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னுமாஜஹ்:1388
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
நூல் திர்மிதீ 2812, தாரமி 3282
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல் தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு,
நூல்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178
♦ “எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நூல் தாரமி: 3418. மிஷ்காத்: 2171), “யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் (நூல் தாரமி)
ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் அன்று (மக்ரிப்) நேரத்தில் துஆவை நாம் கேட்டு வருகிறோம். (நூல் மிஷ்காத் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 'யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது'. இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல் மிர்காத்)
♦ பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம் ஒவ்வொன்றுக்கும் தவணை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் அவன் நாடியதை அதில் அழித்து விடுவான். அவன் நாடியதை உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது”
(அல் குர்ஆன்.13:38, 39)
♦ எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்.
நூல் புகாரி: 5986, முஸ்லிம்: 1982
மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து உங்களுக்குரிய தவணையை வாழ்நாளைக் குறிப்பிட்டு நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று (அல்குர்ஆன் 6: 2-ல்) கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு அஜலை தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை மறுமையில் சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும்.
ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) வழங்கினார்கள்.
நூல் தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை
♣ பாக்கியமிகு பராஅத் இரவின் சிறப்புகள்
ஹா மீம், தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுல்லா ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.
அல் குர்ஆன் 44:1, 2, 3, 4
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழிகள் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்து நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாம முல்லா அலி காரி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
மிஷ்காத் 1305 விரிவுரை மிர்காத், தப்ஸீர் அஸ்ஸாவி பாகம் 4,பக்கம் 57,58
♦ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.
நூல் பைஹகி, மிஷ்காத்: 1302
♦ ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
நூல் முகாஷபத்துல் குலூப்
ஆகவே இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.
No comments:
Post a Comment