ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 28 February 2017

ஷாஹுல்_ஹமீத்_பாதுஷா_நாயகம

#குத்புல்_மனாகிப்_ஷாஹுல்_ஹமீத்_பாதுஷா_நாயகம்_ரலியல்லாஹு_அன்ஹு_அவர்களின்_வரலாறு

¶"சங்கைக்குரிய குத்புல் மனாகிப் நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு"¶

♦ *அறிமுகம்*

பெரும் தவசீலர், சங்கைக்குரிய குதுபு, ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களால் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். நாகூர், இந்த பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த மகானைதான். ஆம், மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித அடக்கஸ்தலம் இந்தியாவில், தமிழ் நாட்டில், நாகூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

♦ *ஜனனம்*

ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அண்மையில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறை 10 ஜமாத்துல் ஆகிர் மாதம் ஹிஜ்ரி 910 (கி.பி. 1491) இல் பிறந்தார்கள். அவர்களின் தந்தை பெயர் ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப், தாயார் பெயர் பீபி பாத்திமா.

♦ *ஜனனத்தின் மகத்துவம்*

ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் 22 ஆம் பரம்பரையிலும் குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்களின் 9 ஆம் பரம்பரையிலும் வந்துதித்தவர்கள் ஆவர். நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறக்கும் முன்னர் ஒருநாள் அவர்களின் தாயார் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை கனவில் கண்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் தாயாரிடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பார் என்றும் அவர் தன் வாழ்க்கையை இஸ்லாத்துக்காகவும் மக்களை பாதுக்காக்கவும் செலவழிப்பார் என்று கூறி சென்றார்கள்.

♦ *கல்வி*

சிறு வயது தொடக்கமே நாகூர் நாயகம் அவர்கள் ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும் மிக சிறந்த ஒழுக்க சீலராகவும் இறைதொடர்புடையவராகவும் இருந்தார்கள். எட்டு வயதிலேயே அரபி மொழி மற்றும் அதன் இலக்கணத்தை கற்றார்கள். பின்னர் தமக்கு ஆன்மீக கல்வியை போதிப்பதற்காக ஒரு ஆன்மீக வழிகாட்டியை தேடி இறுதியில் குவாலியூர் சென்று ஹஸ்ரத் சையத் முஹம்மத் கௌஸ் சாஹிப் குவால்லியூர் கல்விக்கூடத்திலே சேர்ந்தார்கள்.

♦ *இஸ்லாமிய அழைப்பு பணியும் அற்புதங்களும்*

சுமார் பத்து வருட பயிற்சியின் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர்களின் 404 மாணவர்களுடன் மாணிக்கப்பூர் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்து இஸ்லாமிய தஃவா பணி செய்தார்கள். இக்காலங்களிலே பல்வேறு கராமத்துகளை (அற்புதங்களை) செய்து காட்டினார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்தல், பிறவி ஊமையை பேச வைத்தல், முடவர்களை மீண்டும் நடக்கச் செய்தல், தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை சுகப்படுத்துதல் என பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.பின்னர் மக்கமா நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள். வழியில் லாகூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தார்கள். அப்போது காழி ஹஸ்ரத் நூர்தீன் சாஹிப் என்னும் சாலிஹான ஒரு முஸ்லிம் தனவந்தர் நாகூர் நாயகத்தை சந்தித்து தனக்கு பிள்ளை இல்லை என கூறி கலங்கி நின்றார். நாகூர் நாயகம் அன்னவர்கள் சில வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அல்லாஹ்விடம் குழந்தை கிடைக்க துஆ செய்தார்கள். அன்னவர்களின் துஆ பரக்கத்தினால் அவரது மனைவி கருவுற்று சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் என்னும் ஒரு இறைநேசரை ஈன்ரெடுத்தார்கள்.

♦ *மகனுடன் ஒன்றினைதல்*

அந்த குழந்தைக்கு ஏழு வயது வரை சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு பின்னர் தன் உண்மையான ஆன்மீக தந்தை நாகூர் நாயகத்தை காண்பதற்காக மக்கா நோக்கி பயணம் செய்து பின்னர் அவர்களை வந்தடைந்தது. பின்னர் நாகூர் நாயகம், அவர்களின் மகன் மற்றும் 404 முரீதுகள் (மாணவர்கள்) என எல்லோரும் இலங்கை, காயல்பட்டினம், கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

♦ *நாகூர் வருகை*

இறுதியாக நாகூர் நாயகம் அவர்கள் தஞ்சாவூர் வந்தார்கள். அப்போது நாய்க் வம்சத்தினர் அங்கே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர். அங்கே தீர்க்க முடியாத, நீண்டகால நோயோடு அதன் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் வாழ்ந்து வந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னருக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் அங்கே சென்று மன்னருக்கு சூனியம் செய்யப்பட்டு உள்ளதையும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களை கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்கள். தன் மகனை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து, ஓதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பில் இருந்து கழற்றி எடுத்தார்கள். அனைத்தும் நீங்கியவுடன் மன்னர் பரிபூரண சுகமடைந்தார்.கண்ணெதிரே நடந்த அற்புதத்தை பார்த்து கொண்டிருந்த மகாராணி, நாகூர் நாயகத்திடம் தனக்கும் மன்னருக்கும் இடையே குழந்தை பாக்கியம் இல்லா குறையை சொல்லி தமக்கு உதவுமாறு காலில் விழுந்து கேட்டாள். நாகூர் நாயகம் அவர்கள் அவ்வாறே துஆ (பிரார்த்தனை) செய்ய அவர்களுக்கு நல்ல ஒரு சந்ததி உண்டாயிற்று. நாகூர் நாயகம் அவர்களின் இப்பெரிய உதவிகளுக்கு கைமாறாக மன்னர் பல சொத்துக்களையும் பணங்களையும் கொடுத்தார். ஆனால் நாகூர் நாயகம் அவர்கள் அவற்றை வாங்கவில்லை. மாறாக, கடலோரத்தில் தனக்கு ஒரு துண்டு நிலம் தருமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, மன்னர் கடலோரத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை “சுவர்க்க பூமி” என கூறி நாகூர் நாயகம் அவர்களிடம் கையளித்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய நாகூர் தர்கா மற்றும் கட்டிடங்கள் அமையப்பெற்றுள்ளன.

♦ *குடும்ப வாழ்க்கை*

அவர்கள் தம் வானாளின் கடைசி காலம் வரை அங்கேயே தன் மகனோடு வாழ்ந்தார்கள். அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்களின் மகனார் சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் அவர்கள் காஜா மஹதூமுல் யமனியின் மகளாகிய சையத் சுல்தான் பீவி அம்மா சாஹிபா அவர்களை மணந்தார்கள். அவர்கள் இருவரினது மூலம் ஆறு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றனர்.

♦ *துறவு*

நாகூர் நாயகம் அவர்கள் ரஜப் மாதம் நாகூருக்கு சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள வஞ்சூர் என்னும் ஊருக்கு சென்று மரப்பலகையினால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் இருந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள். அந்த இடத்திலேயே தற்போதைய வஞ்சூர் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. மேலும் நாகூர் கடலோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள்.

♦ *மறைவு*

ஹிஜ்ரி 978 ஆம் ஆண்டு நாகூர் நாயகம் அவர்கள் தமது 68ஆம் வயதில் ஒரு வெள்ளிக்கிழமை இப்பூவுலகை விட்டும் மறைந்தார்கள். அவர்களின் அறிவுரையின்படியே அவர்களது புனித மண்ணறை (கப்ர்) அமைக்கப்பெற்றது. அவர்களின் புனித மண்ணறைக்கு வலது பக்கத்தில் அவர்களின் மகனார் மற்றும் மருமகளின் புனித மண்ணறைகள் அமையப்பெற்றுள்ளன.

♦ *நாகூர் தர்காவும் மக்கள் செல்வாக்கும்*

தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பலவழிகளில் உதவிகள் செய்துள்ளனர். துலசி மகாராஜா அவர்கள் 115 கிராமங்களையும் 4000 ஏக்கர் வேளாண்மை நிலத்தையும் பள்ளிவாசலின் பரிபாலனத்திற்காக கொடுத்துதவினார். மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அற்புதங்கள் அவர்களின் மறைவோடு நின்று விடவில்லை. இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் தினமும் சங்கை மிக்க நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள அன்னவர்களின் நாகூர் தர்காவிற்கு வந்து செல்கின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் ஒரு வியாழக்கிழமை தினமன்றே நாகூரிற்கு வருகை தந்தார்கள். எனவே, ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெருந்திரளான மக்கள் தர்காகவிற்கு வந்து நாயகத்தை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.ஒவ்வொரு வருடமும் நாகூர் நாயகத்தின் கந்தூரி விழா இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிர் மாதம் முதல் நாள் தொடங்கி 14 நாட்கள் நடைப்பெறுகின்றன. இந்த கந்தூரி விழாவிற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அரேபியா, பர்மா, மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர்பிரதேஷ், மேற்கு வங்காளம் என உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு செல்கின்றனர்.

*நன்றி Mailof Islam*

http://www.mailofislam.com/nagoor_shahul_hameed_history_tamil.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY :- Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

நாகூர் தர்கா ஷரீப் உருவான வரலாறு...
   நாகூர் நாயகம் அவர்கள் தஞ்சாவூர் வந்தார்கள். அப்போது நாய்க் வம்சத்தினர் அங்கே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர். அங்கே தீர்க்க முடியாத, நீண்டகால நோயோடு அதன் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் வாழ்ந்து வந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னருக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் அங்கே சென்று மன்னருக்கு சூனியம் செய்யப்பட்டு உள்ளதையும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களை கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்கள். தன் மகனை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து, ஓதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பில் இருந்து கழற்றி எடுத்தார்கள். அனைத்தும் நீங்கியவுடன் மன்னர் பரிபூரண சுகமடைந்தார்.

கண்ணெதிரே நடந்த அற்புதத்தை பார்த்து கொண்டிருந்த மகாராணி, நாகூர் நாயகத்திடம் தனக்கும் மன்னருக்கும் இடையே குழந்தை பாக்கியம் இல்லா குறையை சொல்லி தமக்கு உதவுமாறு கேட்டாள். நாகூர் நாயகம் அவர்கள் அவ்வாறே துஆ (பிரார்த்தனை) செய்ய அவர்களுக்கு நல்ல ஒரு சந்ததி உண்டாயிற்று. நாகூர் நாயகம் அவர்களின் இப்பெரிய உதவிகளுக்கு கைமாறாக மன்னர் பல சொத்துக்களையும் பணங்களையும் கொடுத்தார். ஆனால் நாகூர் நாயகம் அவர்கள் அவற்றை வாங்கவில்லை. மாறாக, கடலோரத்தில் தனக்கு ஒரு துண்டு நிலம் தருமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, மன்னர் கடலோரத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை “சுவர்க்க பூமி” என கூறி நாகூர் நாயகம் அவர்களிடம் கையளித்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய நாகூர் தர்கா மற்றும் கட்டிடங்கள் அமையப்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment