ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 2 September 2018

ஸஅத் பின் அபீ வக்காஸ்

மாவீரர் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤
==============
சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
---------------------
o "ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக! இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக" என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.
---------------------
o திருமறைக்குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் ஒருவராவார். இன்னும் உஹத் போரிலே அஞ்சாமல் எதிரிகளைத் துளைத்துக் கொண்டு சென்று போரிட்ட மாவீரர்களில் இவரும் ஒருவராவார்.

வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான இந்த நபித்தோழர் உஹதுப் போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். அந்தப் போர்க்களத்தில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் வில் வித்தையைக் குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறுபவர்களாக இருந்தார்கள்.

"ஒ ஸஅத்..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், உங்களது அம்புகளை வீசுங்கள்!" என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
---------------------
o சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய் மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.
---------------------
o முழு அரபுலகமும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் போர்த்திறனைப் பற்றி அறிந்திருந்தது. எந்த எதிரியையும் இவர் தன்னை மிகைத்து விட அனுமதித்ததில்லை. பிறர் கண்ணுக்கு எளிதில் புலப்படாத இரண்டு ஆயுதங்களை அவர் வைத்திருந்தார், அவை இரண்டையும் எதிரிகளின் கண்கள் பார்த்ததுமில்லை, ஒன்று அவரது அம்பு, மற்றது இறைவனை நோக்கி ஏந்தக் கூடிய அவரது கரங்கள், பிரார்த்தனைகள். உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர்.
---------------------
o சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை.

இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும் இருந்தார். அவர் இறப்பெய்திய பொழுது, மிக அதிக பெருமானமுள்ள சொத்துக்களை விட்டுச் சென்றார்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்.

அப்பொழுது, ''இறைத்தூதர் (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன்'' என்று கூறினார்கள்.

அப்பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "சஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய பொழுது, அப்படியானால் பாதிக்குப் பாதி கொடுத்து விடுகின்றேன்.

ஊஹ¤ம்! இல்லை. இதுவும் அதிகம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பின் நான் மூன்றில் ஒரு பகுதியைத் தருகின்றேன் என்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கூறிய பொழுது, அப்படியே செய்யும்..!"

இருப்பினும் மூன்றில் ஒரு பகுதி என்பதும் அதிகமே! இருப்பினும் அவ்வாறே நீங்கள் கொடுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதியாகக் கூறினார்கள். மேலும், தனது பெற்றோர் இறந்தவுடன் பொருளுக்காக ஒவ்வொருவரையும் அணுகி இரந்து பெற்றுக் கொள்வதைக் காட்டிலும், ஒருவர் தனது வாரிசுகளை பிறரிடம் கையேந்தாத அளவுக்கு, போதுமான அளவு பொருள் வசதியுடன் அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.
---------------------
o சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் உறுதி மற்றும் அதில் உண்மையாகவும் இருந்ததின் காரணமாக உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இஸ்லாத்தினை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார்.

நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடுபட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிதுடியாய்த் துடித்தார்.

அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள்.

இறுதியாக, சஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல் என்றார்.

தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை.

அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட.., அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்.

தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்:

"என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறைநம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன்வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் நான் வர மாட்டேன்" என்று கூறி விட்டார்.
---------------------
நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனிளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
---------------------
o இறுதி நாட்கள்
================
ஹிஜ்ரி 54 ல் அந்த அகீக் என்ற இடத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய 80 வது வயதில் மரணம் அவரை வந்தடைந்தது. அவருடைய இறுதி நிலை பற்றி, அவரது மகன் விவரிப்பதை நாம் இங்கு நோக்குவோம் :

என்னுடைய தந்தையின் தலை என்னுடைய மடிமீதிருந்தது, அவரது கண்கள் பார்வை வெளிச்சத்தை இழந்து, நிலை குத்தி நின்றது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

என்னை நோக்கி.., ஏன் மகனே அழுகின்றாய், பொறுமையாக இரு என்று எனக்கு ஆறுதல் கூறினார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டான், இன்ஷா அல்லாஹ்..! என்றும் கூறினார்கள்.

இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள், தனது மலரிதழால் எனக்கு சொர்க்கம் உண்டென்று நன்மாரயம் கூறியிருக்கின்றார்கள் என்று கூறி விட்டு,

மகனே! அந்த அலமாரியைச் சற்று திறப்பாயாக! என்று கூறி, அதில் நான் மடித்து வைத்திருக்கும் பழைய துணி ஒன்றை எடுத்து வருவாயாக என்று கூறினார்கள்.

நான் அந்தப் பழைய துணியை எடுத்து வந்து கொடுத்தேன்.

அதனைப் பார்த்து, இதை நான் பத்ர் யுத்தத்தின் பொழுது அணிந்திருந்தேன், அதனால் அதனை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். இன்னும் இந்த துணியைக் கொண்டே எனக்கு நீ கபனிடுவாயாக!! இந்தத் துணி பழைய துணியாக இருக்கின்றதே என்று நீ கவலைப்பட வேண்டாம். அது பழையதாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனைக் கொண்டே எனக்கு நீ கபனிட்டு அடக்கம் செய்! என்றும் கூறினார்கள்.

அவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களது உயிர் விண்ணை நோக்கிச் சென்று விட்டது. பின்பு அவரது ஜனாஸா ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கதீஸிய்யாவையும், பெர்ஸியாவையும் வெற்றி கொண்ட மாவீரரே!!
---------------------
இன்னும் தனது போர்த்திறத்தாலும், ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் மத்யனை வெற்றி கொண்ட பெருமகனே!
---------------------
தஜ்லா நதியின் மீது தனது குதிரையைச் செலுத்தி பயம் என்றால் என்ன? என்று கேட்ட பெருவீரரே!
---------------------
கூஃபா நகரை உருவாக்கிவரே!
---------------------
இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் மலரிதழால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்டவரே!
---------------------
இஸ்லாத்தின் மிகப் பெரும் படைத்தளபதியே! நெறி தவறாத ஆட்சியாளரே!
---------------------
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களே!
---------------------
உங்களுக்கு எங்கள் ஸலாம்..! உங்களுக்கு எங்கள் ஸலாம்!
---------------------
சொர்க்கத்தின் ஓடைகளின் சலசலப்பும் என்றென்றும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கட்டுமாக!! ஆமீன்!!

பிலால் பாங்கும் ஜிப்ரீலும்

பாகம்; 4

   உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், யா ரசூலல்லாஹ்! பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பிலால் "அஷ்ஹது" என்பதற்குப் பதிலாக, "அஸ்ஹது" என்று சொல்கிறார். பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபியவர்களுக்கும் தெரியும். உமையா என்பவனிடம் பிலால் அவர்கள் அடிமையாக இருந்தபொழுது, அவர்களின் நாவில் நெருப்புக் கங்கை வைத்து வேதனை செய்தான் உமையா. அதிலே பாதிக்கப்பட்ட அவர்களின் நாவிலே "ஷீன்" வராது.

    உமரே! அதற்கு என்ன செய்யலாம்? என நபியவர்கள் கேட்டார்கள். யா ரசூலல்லாஹ்! வேறு முஅத்தினை மாற்றிவிடலாம் என்று துணிந்து சொல்லிவிட்டார்கள். இந்த வார்த்தையை வேறு யாரும் சொல்லியிருந்தால் நபியவர்கள் பெரிதாக எடுக்கமாட்டார்கள். உமர் அவர்கள் ஒரு ஆலோசனையை கொண்டுவந்தார்கள் என்றால், அதற்குப் பிறகு அல்லாஹ் அதையே சட்டமாக கொண்டுவந்துவிடுவான்.

    எனவே, ஒருவேளை இது அல்லாஹ்வின் கருத்தாக இருக்குமோ என நபியவர்கள் எண்ணினார்கள். சரி, கூப்பிடுங்கள் பிலாலை. பிலால் ரலியல்லாஹு அன்ஹு வந்தார்கள். இனி நீங்கள் பாங்கு சொல்லவேண்டாம் என்று சொன்னவுடன், சரி நாயகமே என்று பிலால் அவர்கள் போய்விட்டார்கள்.

    இரவு அனைவரும் தூங்குகிறார்கள். இரவு ...நீண்டுகொண்டே செல்கிறது. தஹஜ்ஜத் நேரம் கடந்து வெளிச்சம் வரவேண்டும். நபியவர்கள் வானத்தின் வெளிச்சத்தைப் பார்க்கிறார்கள். வானம் வெளிச்சம் தரவில்லை. மீண்டும் தஸ்பீஹ் செய்கிறார்கள். வெளிச்சம் வரவில்லை. இரவு நீண்டுகொண்டே செல்வதால் உமர் அவர்கள் பயந்தவர்களாக பள்ளியை நோக்கி ஓடிவருகிறார்கள். அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்த்து நபியவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபொழுது, வலது பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தது..."ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்."

     யா ரசூலல்லாஹ்! இரவு நீண்டுகொண்டே போகிறதே என்றா நினைக்கிறீகள். இல்லை நாயகமே, இரவை பிலாலுக்காக அல்லாஹ் நிறுத்திவைத்திருக்கிறான் நாயகமே! ஒவ்வொரு நேர பிலாலின் பாங்கிற்காக ஒவ்வொரு மலக்குமார்களும் ஏங்கிக் கிடப்போம் நாயகமே! இனி பிலால் பாங்கு மேடையில் ஏறினால் மட்டுமே பூமியில் பகல். இல்லையென்றால் பகல் இல்லை என்று அல்லாஹ் சொல்லிவிட்டான் நாயகமே! உங்கள் முடிவை மாற்றுங்கள் நாயகமே! சொல்லிவிட்டு ஒரு வார்த்தைச் சொன்னார்கள்,

    "யா ரசூலல்லாஹ்! அல்லாஹ் தன் சட்டத்தையே உடைக்கிறான். இனி பிலால் 'ஸீன்' என்று சொன்னாலே, அல்லாஹ்விடம் 'ஷீன்' நாயகமே.!"

    துடித்துப்போன ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், பிலால் எங்கே? எனத் தேடுகிறார்கள். பிலால் அவர்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல், மஸ்ஜிதுன் நபவியிலே சுஜுதில் அழுதுகொண்டிருக்கிறார்கள், யா அல்லாஹ்! நான் என்ன பாவம் செய்தேன். இந்த உலகத்தில் பாக்கியங்கள் பறிக்கப்படுவதற்கு பாவங்கள் காரணமாக இருக்கும்...

    "நாம் விளங்கவேண்டிய விஷயம், மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பவரோடு அல்லாஹ்வின் தொடர்பும் நெருக்கமாக இருக்கும்."

# 30.07.2017. அன்று துவரங்குறிச்சி முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலின் (1917 - 2017) நூற்றாண்டு விழாவில், அனைவரின் கண்களையும் குளமாக்கிய "மௌலவி A.U. அபூபக்கர் உஸ்மானி" அவர்கள் (சென்னை) ஆற்றிய உரையிலிருந்து.!

Written by R. K. Basheer Ali (N. A. S.)

قال الحافظ ابن كثير رحمه الله في ترجمته رضي الله عنه :

" كانَ مِنْ أَفْصَحِ النَّاسِ، لَا كَمَا يَعْتَقِدُهُ بَعْضُ النَّاسِ أَنَّ سِينَهُ كَانَتْ شِينًا، حَتَّى إِنَّ بَعْضَ النَّاسِ يَرْوِي حَدِيثًا فِي ذَلِكَ لَا أَصْلَ لَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ( إِنَّ سِينَ بِلَالٍ عِنْدَ اللَّهِ شِينٌ ) " انتهى من "البداية والنهاية" (8/ 305) .

وقال الزركشي رحمه الله:

" قَالَ الْحَافِظ جمال الدّين الْمزيّ : اشْتهر على أَلْسِنَة الْعَوام : أن بِلَالًا رَضِي الله عَنهُ كَانَ يُبدل الشين فِي الأذان سينا، وَلم نره فِي شَيْء من الْكتب " .

انتهى من"التذكرة في الأحاديث المشتهرة" (ص: 207)

Friday, 31 August 2018

நாவிதரும் பண்டிதரும்

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று  எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..."  என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

ஆகவே,
*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
*மதிப்போம்...*
*வாழ்வளிப்போம்...*

Thursday, 30 August 2018

தர்ஹா கலாச்சாரம் ... அத்தியாயம் - நான்கு

தர்ஹா கலாச்சாரம் ...
அத்தியாயம்  - நான்கு

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமாவின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ...
" யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது  போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள்.
" நான் ஒன்றும் போதிக்கவில்லை.
அல்லாஹ்தான் போதித்தான்  " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள்.
அதாவது ....
நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம்.

இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அதனால்தான் ...
" நான் ஞானத்தின் பட்டணம். அலி அதன் தலைவாசல் " என்றார்கள் அண்ணல் நபிகளார் .

ஞானத்தின் வரிசை அலீ அவர்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது.
அதனால்தான் அலீ அவர்கள் இம்மை வாழ்க்கையில் பற்றில்லாமல் வாழ்ந்தார்கள். எல்லோருக்கும் புரியாத பல மறை ஞானங்களை அறிந்திருந்த காரணத்தால் அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் உமர் ( ரலி ) அவர்களுக்கும் ஆலோசனைக் கூறும் இடத்தில் அலீ இருந்தார்கள்.

ஒருமுறை ஹஜ்ஜை முடித்த கலீபா உமர் அவர்கள் , ஹஸ்ரத் அஸ்வத் கல்லை முத்தமிட்டார். முத்தமிட்ட பிறகு , " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னார்கள் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அலீ ( ரலி ) அவர்கள் , " உமர் அவர்களே... சற்று நிதானியுங்கள். இதை முத்தமிடுவதால் நன்மையையும் முத்தமிடாததால் இழப்பையும் ஒருவருக்கு வழங்குகிறது " என்று சுட்டிக் காட்டினார்கள்.
அலீ அவர்கள் சொன்னதைக் கேட்டுத் திகைத்த உமர் ,      "கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் " என்றார்.

" ஆன்ம உலகில் அல்லாஹ்விடம் நாம் செய்த சத்தியப் பிரமாணம் இந்தக் கல்லின் வாயினுள் வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தான் நாம் முத்தமிடுகிறோம். கல்லையல்ல " என்று என்று அலீ அவர்கள் விளக்கம் சொன்னார்கள் .
அதைக்கேட்டு தனது தவறுக்கு மனம் வருந்திய உமர் அவர்கள் , " அலீ இல்லாதிருந்தால் உமர் அழிந்திருப்பான் " என்று சொன்னார்கள்.

நபிகள் ( ஸல் ) அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த ஒரு முக்கியமான இறைநேசச் செல்வர் உவைசுல் கர்னி அவர்கள்.
கர்னி என்ற இடத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழை.
ஒட்டகங்களை மேய்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது தாயாரையும்  பராமரித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மதீனாவிலிருந்து வேகுதூரத்தில்  இருந்தது கர்னி.
நபிகளாரை சந்திப்பதற்காக தங்கள் தாயாரிடம் அனுமதி பெற்று உவைஸ்  மதீனா வந்தார்கள்.
இவர்கள் வந்த நேரத்தில் நபிகளார் வெளியே போயிருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை .
வீட்டிலிருந்தவர்கள் தாங்கள் யாரென்று கேட்ட பொது
" நான் உவைஸ்.  கர்னியிலிருந்து வந்திருக்கிறேன். பெருமானார் வந்ததும் சொல்லி விடுங்கள் " என்று கூறிவிட்டு உடனேயே ஊருக்கு போய் விட்டார்கள்.

நபிகளார் வீட்டுக்கு வந்தவுடன் உவைசுல் கர்னி அவர்கள் தங்களை சந்திக்க வந்த செய்தியை  அறிந்தார்கள்.
நபித்தோழர்கள் ," அவர் யார்?" என்று கேட்டபோது ...

" உவைஸ் ஒரு இறை நேசர். அவரை இந்த உலகத்தில் நான் பார்க்காததுபோல் மறுமையிலும் நான் பார்க்க மாட்டேன். "
என்றார்கள்.
" நான் பார்ப்பேனா " என்று கேட்டார் அபூபக்கர்.
" உங்களாலும் பார்க்க முடியாது . ஆனால் அவரை உமரும் அலீயும் பார்ப்பார்கள்." என்றார்கள்.
" அப்போது நாங்கள் அவரிடம் என்ன கேட்க வேண்டும் " என்று கேட்டார் உமர்.
" முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்கச் சொல்லுங்கள் . அவருடைய துஆவை ஏற்று அல்லாஹ்...
ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை மன்னிப்பான் " என்று பெருமானார் முன்னறிவிப்பு செய்தார்கள்.

உவைசை சந்திக்கும்போது தங்களுடைய ஸலாத்தினை அவருக்கு தெரிவிக்கும்படி கூறி அவரிடம் கொடுப்பதற்கு  தங்களின் மேலாடை ஒன்றையும் வழங்கினார்கள். உவைசின் உடல் அடையாளங்களையும் கூறினார்கள்.

காலங்கள் கடந்தது.
பெருமானாரின் வபாத்திற்கு பிறகு அபூபக்கர் கலீபாவானார்.
அபூபக்கர் அவர்கள் மரணித்த பிறகு உமர் அவர்கள் கலீபாவானார்கள்.
உவைசுல் கர்னியை சந்திக்கும் ஆசை உமருக்கும் அலீக்கும் ஏற்பட்டது.

ஒரு நாள் இருவரும் உவைசுல் கர்னியை சந்திப்பதற்காக கர்னிக்கு புறப்பட்டார்கள். வெகுதூரம் பயணித்து கர்னியை வந்து சேர்ந்தார்கள். பலரிடம் விசாரித்தபோதும் அப்படி ஒருவரைப்பற்றி தெரியவில்லை.

கடைசியில் ஒருவர் சொன்னார் ..."  உவைஸ் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் என் பெரிய தந்தை அமரின் மகன்தான். நீங்கள் தேடி வந்து பார்க்கும் அளவுக்கு அவரொன்றும் பெரிய ஆளில்லை. அவர் மிகவும் ஏழை. ஒட்டகம் மேய்ப்பவர். தன் தாயை பராமரிக்கிறார். இரவில் ஒரு வேளை மட்டும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை உண்ணுகிறார். யாருடனும் பேசுவதில்லை. மக்கள் சிரித்தால்  அவர் அழுவார். அவர்கள் அழுதால் இவர் சிரிப்பார் " என்றார்.

தாங்கள் தேடி வந்த உவைஸ் அவர்தான் என்பதை உமர் அவர்களும் அலீ அவர்களும் புரிந்து கொண்டு அவர் இருக்கும் இடத்தைத் தேடி புறப்பட்டார்கள்.

ஊருக்கு வெகு தொலைவில் ஒருவர் ஒட்டகங்களை மேய விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவரின் அருகில் சென்று சலாம் சொல்லி தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் அவரின் பெயரைக் கேட்டார்கள்.
அவர் உவைஸ் என்றார். அவரது உடல் அடையாளங்கள் பெருமானார் சொன்னதுபோல் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அப்படியே அவரை ஆரத்தழுவிக் கொண்ட உமர் அவர்கள் ,
" நபிகள் பெருமான் தங்களுக்கு சலாம் சொன்னார்கள்.
அவர்களின் இந்த மேலாடையை உங்களுக்குத் தரச் சொன்னார்கள். மேலும் ... முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் தாங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் சொன்னார்கள் " என்றார்கள்.

அதைக் கேட்டு மகிழ்ந்த உவைசுல் கர்னி அவர்கள் சற்று தொலைவுக்குச் சென்று இறைவனை பணிந்து முஸ்லிம்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
மீண்டும் மீண்டும் பணிவதும் அழுவதும் துஆ செய்வதுமாக இருந்தார்கள்.

வெகுநேரம் ஆன பின்பும் சுஜூது நிலையிலேயே கிடந்த உவைசுல் கர்னிக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து போன உமர் அவர்கள் அவரது அருகில் சென்று அவரை உசுப்பினார்கள்.

தலையை உயர்த்திய உவைஸ் அவர்கள், " அமீருல் மூமினீன் ... அவசரப்பட்டு விட்டீர்களே ... இன்னும் சற்று பொறுத்திருந்தால் உலக முடிவுநாள் வரை உலகில் தோன்றும் முஸ்லிம்களின் பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்திருப்பானே " என்று வருத்தப்பட்டார்கள்.

" இப்போது எவ்வளவு முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் ?" என்று அலீயும் உமரும் கேட்க ...

" ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் " என்றார்கள் உவைஸ் .

அதைக் கேட்டதும் உமரும் அலீயும் அப்படியே மெய் சிலிர்த்து விட்டார்கள்.
ரசூலுல்லாஹ் சொன்ன அதே எண்ணிக்கையளவுள்ள முஸ்லிம்கள்.

தாங்கள் சந்தித்தது ஒரு சாதாரண மனிதரையல்ல என்று உணர்ந்த உமர் அவர்கள் தங்களுக்காக துஆ செய்யும்படி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்களுக்காகவும் உவைஸ் துஆ செய்தார்.

கலீபா உமர் அவர்கள் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறியும் எதையும் ஏற்க மறுத்து விட்டார் உவைசுல்  கர்னி.

பிறகு உமர் கேட்ட சில கேள்விகளுக்கு ஞான விளக்கங்கள் வழங்கி விட்டு " உங்கள் வழியே நீங்கள் செல்லுங்கள் என் வழியே நான் செல்கிறேன் " என்று கூறி விட்டு சென்று விட்டார் உவைஸ்.

கலீபா உமரும் அலீ அவர்களும் உவைசை சந்தித்த செய்தி ஊருக்குள் பரவ அவரின் அந்தஸ்து ஒரே நொடியில் உயர்ந்தது. அவரை சந்திக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதையறிந்து ஒட்டகங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கிவிட்டு கண்காணாத இடத்திற்கு சென்று விட்டார் உவைஸ்.
அற்புதங்கள் நிறைந்த இவர்களின் வாழ்க்கை ...
உமர் அவர்களுக்காக அஜர்பைஜானில் நடந்த போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்ததோடு முற்றுப் பெறுகிறது. அவர்களின் உடலை அடக்கம் செய்துவிட்டு பிறகு வந்து பார்க்கும் போது அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காண முடியவில்லை.

இது ஒரு உண்மை வரலாறு.
இங்கே சொல்லப்பட்டது உவைசுல் கர்னி அவர்களின் வாழ்க்கை என்றாலும் அதன் உள்ளே புதைந்து கிடக்கும் ஞான ரகசியங்கள் ஏராளம்.

" ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா " என்று திருவை அப்துர் ரஹ்மான் எழுதி நாகூர் ஹனிபா அண்ணன் பாடியது போல் ...
ஞானத்தின் பட்டணம் நாயகம் அவர்கள்தான்.
அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட  ஞானத்தின் தலைவாசல்  அலீ அவர்கள்.
இறைநேசச் செல்வர்  உவைசுல்  கர்னி அவர்கள் .

சரி... இந்த கட்டுரைக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ?
... இருக்கிறது. முக்கியமான சம்பந்தம் இருக்கிறது.

முதலில் ... பெரும்பாலானவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உமர் அவர்கள் முத்தமிட்ட சம்பவத்தின் போது அவர்கள் ,  " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னதை மட்டும்தான்  சொல்வார்கள் .
அதற்கு அலீ ( ரலி ) அவர்கள் சொன்ன விளக்கத்தை சொல்ல மாட்டார்கள். உமருக்குத் தெரியாத அந்த ஞான ரகசியம் அலீ ( ரலி ) அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம். உமர் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருந்தாலும் ஆன்மீக படித்தரத்தில் அலீ அவர்களே முதன்மையாக இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல...
" அலீ இல்லைஎன்றால் உமர் அழிந்திருப்பான் " என்று உமர் அவர்கள் சொன்னது சாதாரண விஷயமல்ல.
ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுள்ளவன் அல்லாஹ் எனும்போது அலீ அவர்களால் உமரை அழிவிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும் ?
எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்பது நம்மை விட உயர்ந்த ஈமானின் அந்தஸ்திலிருந்த உமருக்குத் தெரியாதா ?
தெரிந்திருந்தும் அவர் அப்படிச் சொல்வாரா ?
அப்படிச் சொன்னாரென்றால் ....
" அலீயைக் கொண்டு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினான் " என்று அதற்கு அர்த்தம்.

உவைசுல் கர்னி அவர்களைப் பற்றி நபிகளார் முன்னறிவுப்பு செய்து அவரிடம் துஆ செய்யும்படியும் சொன்னார்கள்.
நபிகளாரைவிட உவைசுல் கர்னி உயர்ந்த அந்தஸ்துள்ளவரா ?

பெருமானார் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.
அல்லாஹ்வின் ஹபீப். தோழர்.
பெருமானார் துஆ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டானா ?
உவைசுல் கர்னி துஆ செய்ய வேண்டுமா ?
அதுவும் அவரிடம் துஆ செய்யும்படி நபிகளாரே சிபாரிசு செய்ய வேண்டுமா ?
இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாக இல்லையா ?

இதில்தான் ஆன்மீக ஞானம் ஒளிந்திருக்கிறது.
நபிகளின் காலத்திலேயே அல்லாஹ் இறைநேசர்களின் சிறப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
உவைசுல் கர்னி அவர்களைப் பற்றி நபிகளைக் கொண்டே அறிவிக்கச் செய்தான்.
பெருமானார் சொன்னதுபோலவே ராபியா , முளரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள
முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று உவைசுல் கர்னி அவர்கள் சொன்னார்கள்.
அது எப்படி சாத்தியம் ?
அல்லாஹ் மன்னித்த விஷயம் உவைசுக்கு எப்படித் தெரியும் ?
அல்லாஹ் வஹி அறிவித்தானா ?
வஹி அறிவிக்கவில்லை. வஹி அறிவிப்பது நபிகளின் காலத்தோடு முடிந்து போய் விட்டது.
அசரீரி வந்ததா ?
அதுவும் இல்லை.
பிறகு எப்படி அல்லாஹ் மன்னித்தான் என்று உவைசுல் கர்னியால் சொல்ல முடிந்தது ?
அதுவும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீபாவிடமும் அண்ணலாரின் மருமகனிடமும் !
உவைசுல் கர்னி சொன்னதை எந்த சந்தேகமும் இல்லாமல் அப்படியே நம்பினார்களே உமரும் அலீ அவர்களும் . எப்படி ?
அதுதான் நபிகள் கற்றுக் கொடுத்த பாடம்.

இல்ஹாம் எனும் உதிப்பை உள்ளத்தில் ஏற்படுத்துவதன்  மூலம் தான் நாடிய  இறைநேசர்களுக்கு அல்லாஹ் சில விஷயங்களை அறியச் செய்கிறான்.
ஒரு இறைநேசர் இறைவனிடம் துஆ கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான்.
அவர் கேட்கும் உதவியைக் கொடுப்பான்.
அவருக்கு மட்டுமல்ல... அவர் யாருக்கெல்லாம் கேட்கிறாரோ அவர்களுக்கெல்லாம் கொடுப்பான்
அப்படிக் கொடுப்பதை அந்த இறை நேசர்களுக்கு அவன் அறிவித்துக் கொடுக்கவும் செய்வான்.
என்பதையே உவைசுல் கர்னி அவர்களின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.

வலிமார்கள் உண்டு என்பதையும்
அல்லாஹ்  அந்த வலிமார்களுக்கு உதவி செய்கிறான் என்பதையும்
அந்த வலிமார்கள் யாருக்கெல்லாம் உதவி கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
அல்லாஹ் நாடினால் உதவி செய்வான் என்பதையும்
இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இன்ஷா அல்லாஹ் ....
அடுத்த அத்தியாயத்தில் இன்னும் சொல்கிறேன்.