தாராளமானவர்
لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ
வசதி உள்ளவர் தன்னுடைய வசதிக்கு ஏற்ப (தாராளமாகச்) செலவு செய்யட்டும். ஒருவருக்கு அவரின் வாழ்வாதாரம் (ரிஜ்க்) குறைந்த அளவில் வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு அல்லாஹ் வழங்கிய (அந்தக் குறைந்த) அளவில் அவர் செலவு செய்யட்டும். திருக்குர்ஆன்:- 65:7
தாராள மானப்பான்மை என்பது ஒருவரின் நற்குணத்திற்கான சான்றாகும். வீண்விரயத்திற்கு பெயர் தாராளமல்ல. மேலும், தனக்கோ தமது குடும்பத்தோருக்கோ ஒன்றுமில்லாமல் அனைத்தையும் வாரி வழங்குவதற்கு பெயரும் தாராளமல்ல. அது நம்மை சிரமத்திற்கு ஆளாக்கிவிடும். எந்த நற்காரியங்களுக்காக இருந்தாலும் நடுநிலையுடன், இறைப்பிரியத்தை எண்ணி செலவழிப்பதே தாராளமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَأَنْفِقْ مِنْ طَوْلِكَ عَلَى أَهْلِكَ ) உனது குடும்பத்தாருக்கு உனது வசதிக்கேற்ப செலவளிப்பீராக! அறிவிப்பாளர்:- அபூ தர்தா (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-18
வறுமைக்கு அஞ்சாதவர்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். அண்ணலார் அவற்றை கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, ( أَيْ قَوْمِ أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ ) "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-4630
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இந்த தாராள தர்மத்தால் அவர் மனம் கவரப்பட்டு முஸ்லிமாகிய பின்னர், அவரே தனியாக பரப்புரையாற்றி, தமது குலத்தார் அனைவரையும் முஸ்லிம்களாக்கினார்.
பயனுள்ளதைத் தருகிறேன்
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்க என்னை அனுப்பினார்கள். நான் ஒரு நபித்தோழரிடம் சென்று சொத்துக்களை கணக்கிட்ட பிறகு, அவரிடம் ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகக் குட்டி ஸகாத்தாகக் கொடுங்கள்; அதுதான் நீங்கள் தரவேண்டிய ஸகாத்தாகும்" என்று கூறினேன்.
அதற்கு அவர், "இது பாலும் கொடுக்காது; இதில் சவாரியும் செய்யவும் முடியாது. (வேறு ஓர் ஒட்டகத்தைக் காட்டி) இது கொழுத்த பெரிய பலம் மிக்க வாலிப ஒட்டகம். இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அப்போது நான், எனக்கு கட்டளையிடப்படாத ஒன்றை நான் எடுக்க மாட்டேன். இதோ அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு அருகில் தான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை அண்ணலாரிடம் சொல்லுங்கள்" என்றேன்.
அவர் அந்த ஒட்டகத்துடன் அண்ணலாரிடம் வந்து, நடந்தவற்றை விவரித்தார். உங்கள் தூதர் என்னிடமிருந்து வசூலிக்க மறுத்த அந்த ஒட்டகம் இதுதான். இதை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நாயகமே! (நீங்களாவது) இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அப்போது அண்ணலார், ( ذَاكَ الَّذِي عَلَيْكَ فَإِنْ تَطَوَّعْتَ بِخَيْرٍ آجَرَكَ اللَّهُ فِيهِ وَقَبِلْنَاهُ مِنْكَ ) "உன் மீது கடமையானது ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகம் தான். இந்தச் சிறந்த ஒட்டகத்தைப் பிரியப்பட்டு, நீ அதிகப்படியாகக் கொடுத்தால் அல்லாஹ் அதற்குக் கூலி அதிகமாக உனக்குக் கொடுப்பான். உன்னிடமிருந்து இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு அதை பெற்றுக் கொள்ளும்படி எனக்கு கட்டளையிட்டு, அவரின் பொருளில் அருள் வளத்திற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-1350
ஏழைவரி எனும் ஸக்காத் என்பது நமது சொத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை நாற்பதில் ஒரு பாகத்தைத் தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும். இதில் கொஞ்சம் கூடுதலாகவும் தாராளமாகவும் வழங்கலாம். அதில் ஒன்றும் சிரமம் ஏற்படாது.
ஆயிரம் பொற்காசுகள்
அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களைப் பற்றி ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் விசாரித்தார்கள். அவர் தடிப்பமான ஆடைகளை அணிகிறார். கரடுமுரடான உணவுகளையே உட்கொள்கிறார் என்று உமர் (ரலி) அவர்களுக்குப் பதிலளிக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் (ஒரு தூதரின் மூலம்) ஆயிரம் பொற்காசுகளை அபூஉபைதாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தத் தூதுவரிடம், ( انْظُرْ مَا يَصْنَعُ بِهَا ) “இவற்றைப் பெற்றுக்கொண்டதும் அவர் என்ன செய்கிறார் என்று நீ கவனிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் மென்மையான ஆடைகளை (வாங்கி) அணிந்தார்கள். இதமான உணவுகளை உண்டார்கள்.
அதனைக் கவனித்த தூதர், உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து விவரத்தை அறிவித்தார். உமர் (ரலி) அவர்கள், ( رَحِمَهُ اللَّهُ ) “அபூஉபைதாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” (தலைப்பில் காணும்) திருக்குர்ஆன் வசனத்தின் அறிவுரைக்கு செயல் வடிவம் தந்துள்ளார்” என்றார்கள். அறிவிப்பாளர்:- அபூ ஸினான் (ரஹ்) அவர்கள் நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்
பிரதி உபகாரம்
(உங்களின்) உபகாரத்திற்கு உபகாரத்தைத் தவிர (வேறு) கூலி உண்டா? திருக்குர்ஆன்:- 55:60
ஒரு முறை ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) ஆகியோர் மூவரும் பயணத்தில் இருந்தபோது உணவு தீர்ந்து விட்டது. உடனே அருகிலிருந்த குடிசைக்கு சென்று அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம், "அம்மா! நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஆவோம். எங்கள் கட்டுச்சாதனங்கள் தீர்ந்து விட்டது. அதனால் எங்களுக்கு ஏதேனும் உணவு தர முடியுமா?" என்று வினவினார்கள். உடனே அம்மூதாட்டி, தம் வீட்டில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து, அதனை சமைத்து விருந்து உபசாரம் செய்தாள்.
அன்று மாலை வீட்டுக்கு வந்த அம்மூதாட்டியின் கணவர், "நம்மிடமிருந்த அந்த ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினார். உடனே அவள், நடந்ததை சொல்ல, அது கேட்ட கணவர் "நம்மிடம் இருந்தது அந்த ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் தான். அதையும் அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டாயே!" என்று கோபித்துக் கொண்டு, தனது மனைவியை திட்டித் தீர்த்துவிட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு அம்மூதாட்டியும் அவரது கணவரும் ஒரு காரியமாக மதீனாவுக்கு வந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட ஹசன் (ரலி) அவர்கள் அவளுக்கு பிரதியுபகாரமாக 1000 ஆடுகளும், 1000 தங்கக் காசுகளும் கொடுத்து உபசரித்தார்கள். அப்போது அம்மூதாட்டி கணவரைப் பார்த்து, "இவர்களுக்கு ஒரு ஆட்டை உபகாரம் செய்ததற்கு இவர் நமக்கு எவ்வளவு பெரிய பிரதியுபகாரம் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று இடித்துரைத்து கூறினாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் அம்மூதாட்டியை அடையாளம் கண்டு அவளுக்கு 1000 ஆடுகளும், 1000 தங்கக் காசுகளும் பிரதியுபகாரமாக கொடுத்து உபசரித்தார்கள். அப்போதும் அம்மூதாட்டி கணவரிடம் மேற்கண்டது போன்று இடித்துரைத்து பேசினாள்.
மீண்டும் சிறிது நேரத்திற்கு பிறகு அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டியை அடையாளம் கண்டு அவளுக்கு 2000 ஆடுகளும், 2000 தங்கக் காசுகளும் பிரதியுபகாரமாக கொடுத்து உபசரித்தார். அப்போது அம்மூதாட்டி, "இன்னார் இருவரும் 1000 தந்தார்கள். நீங்கள் 2000 தருகிறீர்களே?" என்று வினவியபோது, அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், "ஆம்! அவ்விருவரும் அண்ணலாரின் நேரடி பேரர்கள். அவர்களுக்கு சமமான கூலியை நான் பெற வேண்டுமானால் நான் 2000 கொடுப்பது தானே சரியாகும்" என்றார்கள்.
வறுமை நிலையை மாற்று!
ஒரு முறை பேரறிஞர் இமாம் அபூ ஹனீஃபா அவர்களை சிலர் சந்திக்க வந்தனர். அவர்களில் ஒருவரின் ஆடை மிகவும் மோசமாக இருந்தது. வந்தவர்கள் புறப்பட்டபோது, இமாமவர்கள் குறிப்பிட்ட அவரை மட்டும் இருக்கச் சொன்னார்கள். பிறகு அவரிடம் தொழுகை விரிப்பை அகற்றிப் பார்க்குமாறு சொன்னார்கள். அதன் கீழே ஆயிரம் வெள்ளிக் காசுகள் கொண்ட பணப்பை இருந்தது. இமாமவர்கள், ( خُذهَا وَاَصلِح بِهَا مِن شَأنِكَ ) "இந்த வெள்ளிக்காசுகளை எடுத்துக்கொண்டு அவற்றால் உனது வறுமை நிலையை மாற்றிக் கொள்! என்று அவரிடம் கூறினார்கள்.
அவர், "நான் செல்வமும் வசதியும் உள்ளவன் எனக்கு இது தேவையில்லை" என்றார். இமாமவர்கள், ( اِنَّ اللّٰهَ یُحِبُّ اَن یَرٰی اَثَرَ نِعمَتِهِ عَلَی عَبدِهِ ) "தனது அடியான் மீது பொழிந்த அருட்கொடைகளில் அடையாளம் தென்படுவதை அல்லாஹ் விரும்புகின்றான்" என்ற நபிமொழியை நீர் செவியுற்றதில்லையா? எனவே, நம்மை மற்றவர்கள் தவறாக எண்ணிக் கொள்ளாதபடி நடந்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லீ நுஃமானி, சுவரும் மின் ஹயாத்தித் தாபிஈன்
ஆடைகளில் அக்கறை
பெரும் வியாபாரியாக வாழ்ந்த சட்ட நிபுணர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள், "தனது ஆடைகளை குறித்து மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். மிகச் சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பார்கள். 30 வெள்ளிக்காசுகள் மதிப்புள்ள மேலங்கியை அணிந்து அழகாகக் தோன்றுவார்கள். அதிக அளவில் வாசனைத் திரவியத்தை பூசிக்கொள்வார்கள். அவர்கள் அணியும் செருப்பின் வார்களைக்கூட அறுந்துவிடாதவாறு கவனித்துக் கொள்வார்கள்" என அவர்களின் மாணவரான அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்:- தாரீகுல் மதாஹிபுல் இஸ்லாமிய்யா அபூஸஹ்ரா பக்கம்-347
ஒரு நாள் இமாம் அபுல் ஹசன் ஷாதலி (ரஹ்) அவர்கள் அழகிய ஆடை அணிந்து யமன் நாட்டில் நெய்யப்பட்ட உயர்தரமான தலைப்பாகை கட்டிக்கொண்டு இவ்வுலகின் இழிதன்மையையும், அதனை வெறுக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி தன்னுடைய மாணவர்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருந்தார்கள்
அப்போது அங்கு ஒரு ஏழை மனிதரும் இருந்தார். அவருக்கு அன்னாரின் பேச்சும் செயலும் முரண்பட்டதாக தெரிந்தது. "இவர்கள் உலகை விரும்பி உயரிய உடை உடுத்திக்கொண்டு இவ்விதம் பேசுகிறார்களே! நானல்லவா உலகை வெறுத்துத் துறவை மேற்கொண்டு, பழைய ஆடையை அணிந்து கொண்டுள்ளேன்" என்று தம் உள்ளத்தில் நினைத்தார். அடுத்த கணம் அன்னாருக்கு அல்லாஹுத்தஆலா இதனை அறிவித்துத் தந்தான். பிறகு அன்னார் அவரை நோக்கி! "ஏழை மனிதரே! நீர் ஏழ்மையின் சின்னமாக பழைய ஆடையை அணிந்து கொண்டு எவரும் புத்தாடை தர மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர். இதுவே உலக ஆசையாகும். ஆனால் நானோ, செல்வச் சீமான்கள் அணியும் ஆடை அணிந்து கொண்டுள்ளேன். இது எவரிடமிருந்தும் எதிர்பார்க்காத நிலையாகும். இதுவே உண்மையான துறவு ஆகும்" என்று கூறினார்கள்.
தகுதிக்கேற்ப வழங்க வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَالشُّحَّ، فَإِنَّهُ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ ) கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் கஞ்சத்தனம் உங்களுக்கு முன்னிருந்தோரை அழித்துவிட்டது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-470
ஷர்ஹபீல் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களுக்கு அரசவை விருந்தைப் போன்று (தாராளமாக) விருந்தளிப்பார்கள். தாங்களோ வீட்டிற்குச் சென்று காய்ந்த ரொட்டியை ஸைத்தூன் எண்ணையுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் செல்வந்தராகவும் அதிக தர்ம சிந்தனை உள்ளவராகவும் இருந்தார்கள்.
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு நூறு வெள்ளிக்காசுகள் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார். அதற்கு அதீ (ரலி) அவர்கள், "இல்லை" என்று கூறிவிட்டார்கள். அவர், "(கொடை வள்ளலான) தாங்களே இல்லையென்று சொல்லலாமா?" என்று கேட்டார். அதீ (ரலி) அவர்கள், "என்னிடம் இப்படி அற்பமாகக் கேட்க கூடாது; கேட்பதாக இருந்தால் ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் தான் கேட்கவேண்டும்" என்று கூறிவிட்டு அவருக்கு கொடுத்தனுப்பினார்கள்.
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து தம் வீட்டில் உணவு சமைப்பதற்குப் பெரிய சட்டி (தேக்சா) தேவைப்படுகிறது. எனவே, கொஞ்சம் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டார்.
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள், "சரி நீங்கள் போகலாம். கொடுத்து அனுப்புகிறேன்" என்று கூறினார்கள். பிறகு சிறிதுநேரம் கழித்த பிறகு, சட்டி கேட்டவர் வீட்டிற்கு ஒரு பெரிய சட்டி நிறைய உணவு அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த அவர் அதீ (ரலி) அவர்களிடம் வந்து, "நான் சமைப்பதற்கு காலி சட்டியைத்தான் கேட்டேன்" என்றார். அதற்கு அதீ (ரலி) அவர்கள், "நீங்கள் காலி சட்டியை கேட்கலாம். ஆனால், காலி சட்டியை கொடுப்பது எங்கள் வழக்கமில்லை" என்று கூறினார்கள்.
அரபு உலகத்தின் கொடைத்தன்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர் ஹாத்திம் தாயீ. இவரின் மகனார் இந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள். அதீ (ரலி) அவர்களின் வள்ளல் தன்மைக்கு இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் சான்றாகும்.
இமாம் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, தன் கணவருக்கு உடல் நலமில்லை. எனவே, மருந்துக்காக இச்சிறிய கிண்ணத்தில் தேன் வேண்டுமென்று கேட்டு வந்தாள். அன்னார் தன் பணியாளரை அழைத்து, அந்த பெண்ணுக்கு வீட்டிலுள்ள தேன் ஜாடியையே கொண்டுவந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். அந்தப் பணியாளர், "பெருந்தகையே! அந்தப் பெண் கேட்பது கிண்ணத்தில் சிறிதளவு தேன் மட்டும்தானே!" என்று வினவினார். அன்னார், "அவள் தன் தேவைக்கேற்ப என்னிடம் கேட்கிறாள். அவளுக்கு நான் என் தகுதிக்கேற்ப வழங்க விரும்புகிறேன். எனவே,தேன் ஜாடியையே கொடுத்துவிடு!" என்று கூறினார்கள்.
இன்ப அதிர்ச்சி
பெரும் செல்வந்தரான மாமேதை அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு 700 வெள்ளிக்காசுகள் கடன் உள்ளது. அதற்கு உதவி செய்யுங்கள்" என்றார். உடனே அன்னார், ஒரு துண்டு சீட்டில் 7000 வெள்ளிக்காசுகள் கொடுக்கவும் என்று எழுதி அவரிடம் கொடுத்து, "இதை என் கணக்கரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
அவரும் அந்த துண்டுச்சீட்டை கொண்டுவந்து கணக்கரிடம் கொடுத்தபோது, அந்த கணக்கர் அவரிடம், "உனக்கு எவ்வளவு தேவை இருக்கிறது?" என்று கேட்டார். அவர், "எனக்கு 700 தேவை இருக்கிறது" என்றார். உடனே கணக்கர் அவரிடம், "700 என்பதற்கு 7000 என்று ஞாபக மறதியாக முதலாளி எழுதி விட்டார்கள் போலும், அதனால் நீ மீண்டும் முதலாளியிடம் சென்று இதைப்பற்றி விசாரித்து விட்டு வா!" என்றார். அவரும் அன்னாரிடம் சென்று விசாரித்தபோது, உடனே அன்னார், அந்தத் துண்டு சீட்டை வாங்கி 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதிக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உடனே, இதைப் பற்றி விசாரிக்க கணக்கரே நேரடியாக வந்துவிட்டார். அப்போது அன்னார் அந்த கணக்கரிடம், ( وَأَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ ) "ஓர் முஸ்லிமுக்கு அவன் எதிர்பார்த்திராத மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயலாகும்" (இப்னு அபீத்துன்யா) என்ற நபிமொழியை எடுத்துரைத்துவிட்டு, "என்னிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் கேட்டதை விட அதிகம் கொடுத்து அவர் எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தவே 7000 என்று எழுதினேன். ஆனால், நீ அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, அவருடைய இன்ப அதிர்ச்சியைத் கெடுத்து விட்டாய். அதனால் தான் மீண்டும் 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதி அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி நினைத்தேன். அதனால் அவருக்கு 14,000 வெள்ளிக் காசுகளைக் கொடுத்து அனுப்பி விடு" என்றார்கள்.
தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில் நாம் உதவி செய்யும்போது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி நமது உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உணரலாம்.
உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல் அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும்போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அனுபவித்தவர்களால் தான் உணர முடியும்.
எனவே, நாம் நற்காரியங்களில் தாராள மனப்பான்மையுடன் செயலாற்றி இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment