கராமத் 6
( 1 : 10 )
ராபியத்துல் அதவிய்யா ( ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்களின் இல்லத்திற்கு 9 நபர்கள் வந்தார்கள். வந்தவர்கள் தங்களுக்கு ஹலாலான உணவினை கொடுக்கும்படி வேண்டினார்கள். அவர்களின் இல்லத்தில் அன்று இரண்டு ரொட்டிகள்தான் இருந்தன.
வந்த விருந்தினருக்கு அந்த இரு ரொட்டிகளை அவர்கள் முன்வைத்தார்கள். அது சமயம் வாசலில் ஒரு ஏழை பசிக்கு உணவு கேட்டு நின்றான். ராபியத்தில் பஸரிய்யா அவர்கள் விருந்தினர் முன் இருந்த அந்த இரு ரொட்டிகளை எடுத்து, ஏழைக்கு வழங்கி விட்டனர். விருந்தினருக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது.
சற்று நேரம் கழித்து, ஒரு பணிப்பெண் பாத்திரத்தில் 18 ரொட்டிகளை கொண்டு வந்து கொடுத்தாள். ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க 18 ரொட்டிகள், 'இவை நமக்குள்ள உணவு இல்லை ' என்று திருப்பிக் கொடுத்தார்கள்.
மீண்டும் அவள் சென்று 20 ரொட்டிகளை கொண்டுவந்தாள். ரொட்டியை ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க, 20 ரொட்டிகள் இருந்ததை கண்டு சந்தோஷத்துடன், விருந்தினர் முன் சமர்ப்பித்து இதைப் புசியுங்கள் எனப்பணித்தார்கள்.
விருந்தினருக்கு ஒரே வியப்பாக இருந்தது. அது சமயம் ராபியா (ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் திருமறையில் :
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள் (அல்குர்ஆன் : 6:160)
ஒரு நன்மை தர்மம் செய்ய அல்லாஹ் பத்து மடங்கு நன்மை தானம் வழங்குவான் என்று கூறி இந்த ஆயத்தை ஓதி காண்பித்தார்கள். நான் இரு ரொட்டிகளை தர்மம் செய்தேன். முதலில் 18 ரொட்டிகள்தான் வந்தது. திருப்பிக் கொடுத்து விட்டேன். பின்பு அல்லாஹ் 20 ரொட்டிகளை வழங்கியுள்ளான். நான் பெற்றுக் கொண்டேன்" என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுவது பொய்யல்ல ! உண்மை என்றுரைத்தார்கள்.
...... x ................ x ........... x ............... x ............. x ............ x........... x................ x.................... x....
இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் இல்லத்தில் ஒருநாள் ஏழை தம் பசியை கூறி முறையிட்டார். தன் மனைவியிடம் ஏதும் இருந்தால் கொடுத்து அனுப்புங்கள் என்று பணித்தார்கள்
இமாம் அவர்கள் வீட்டில் எந்த உணவும் அன்று இல்லை. இரண்டு நல்ல முட்டையும் ஒரு கூமுட்டையும்தான் இருந்தது. அதை அந்த ஏழைக்கு அறமாக வழங்கி விட்டார்கள் .
சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்தாள் . அவள் கூடை நிறைய முட்டைகளை வைத்து இமாம் அவர்களிடம் கொடுத்தாள் . அவள் கோழிப்பண்ணை வைத்திருக்கலாம் . இமாம் அவர்கள முட்டைக் கூடையை பெற்று , தன் மனைவியிடம் கொடுத்தார்கள் .
அந்த பெண் கொடுத்த கூடையில் உள்ள முட்டைகளை எண்ணிப் பார்க்க 30 முட்டைகள் இருந்தது. அதை பரிசோதித்ததில் 20 நல்ல முட்டையும் பத்து கூமுட்டையும் இருக்கிறதே... என்று மனைவி தன் கணவரிடம் முறையிட,
" நீ கொடுத்த ரெண்டு முட்டையில் ஒன்றுக்கு கூமுட்டைதானே.. நீ வழங்கியது போன்று அல்லாஹ் உனக்கு 1க்கு 10 வீதம் கொடுத்துள்ளான் என்று கூறி,
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:160)
என்கின்ற இந்த வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
அவுலியாக்கள் தங்களுக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். குர்ஆன் அல்லாஹ் தஅலாவின் வார்த்தையல்லவா ...
ரஹ்மத் ராஜகுமாரன் .
No comments:
Post a Comment