ஷாம்(சிரியா) நாட்டின் மிக பிரபலமான கடைவீதி அது.அதன் பெயர் மதஹ் பாஷா கடைவீதி.அங்கே மக்களிடத்தில் ஒரு நல்ல பழக்கம் இருந்தது."யாராவது வெளியூர் அல்லது ஹஜ் பயணம் செல்வதாக இருந்தால் தங்களிடம் இருக்கும் பணத்தையோ அல்லது உயர்தரமான பொருட்களையோ, அங்கிருக்கும் கடைகளில் ஏதாவது ஒரு கடையில் கொடுத்துவிட்டு அவர் திரும்பி வந்ததும் அந்த கடையில் இருந்து பொருளை வாங்கி கொள்ளலாம்".யாரும் கொடுத்த பொருளை திரும்ப தராமல் ஏமாற்ற மாட்டார்கள்.இந்த ஒரு காரணத்தால் அந்த கடைவீதியின் புகழ் பரவியிருந்தது .
ஒரு நாள் வெளியூரில் இருந்து ஒரு மனிதர் அந்த கடைவீதிக்கு வந்தார் அவரிடத்தில் சிகப்பு நிற பை இருந்தது. அதில் 3000 திர்ஹம்களை வைத்திருந்தார். அங்கிருந்த கடைகளில் ஒரு கடைக்கு சென்று "இந்த பையை அமானிதமாக வைத்திருங்கள் நான் ஹஜ் சென்று திரும்பியதும் இதை வாங்கிக் கொள்கிறேன் " என்றார்
கடைக்காரரும் சரி என்று அந்த பையை வாங்கி வைத்துக்கொண்டார்.
சில மாதங்கள் கழிந்தது.....
அந்த மனிதர் ஹஜ் வணக்கங்களை நிறைவேற்றி விட்டு அந்த பையை வாங்குவதற்காக அந்த கடைக்கு சென்றார்,கடையின் உரிமையாளர் அங்கே இல்லை அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தார்,அவர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் நீங்கள் உட்காருங்கள் என்று சொல்ல அவரும் அமர்ந்தார்.
கடையின் உரிமையாளரும் வந்தார்,அவரிடம் தான் கொடுத்த பையை கேட்டார்.
உரிமையாளர்: நீங்கள் எவ்வளவு பணம் அந்த பையில் வைத்திருந்தீர்கள்?
வந்தவர்: 3000 திர்ஹம்கள்
உரிமையாளர்: உங்கள் பெயர் என்ன?
வந்தவர் அவரின் பெயரை கூறிவிட்டு, என்னை உங்களுக்கு நினைவில்லையா?
உரிமையாளர்: என்றைக்கு என்னை நீங்கள் சந்திக்க வந்தீர்கள்?
வந்தவர்: இந்த நாளில் என்று ஒரு சில விஷயங்களை சொன்னார், அவர் ஏன் இப்படி கேள்விகளை கேட்கிறார் என வந்தவருக்கு சந்தேகம் வந்தது.
உரிமையாளர்: நீங்கள் கொடுத்த பையின் நிறம் என்ன?
வந்தவர்: சிகப்பு நிறம்
உரிமையாளர்: இப்போது உணவு வரும் சாப்பிடுங்கள் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது விரைவில் வந்து விடுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.
அவர் சொன்னதைப் போல சாப்பிட்டு முடிப்பதற்குள் விரைவாக வந்துவிட்டார் அவருடைய கையில் சிகப்பு நிற பை இருந்தது.அதை அவருடைய கையில் கொடுத்து விட்டார்.பையை திறந்து பார்த்தால் அதில் 3000 திர்ஹம்கள் சரியாக இருந்தது.(அல்ஹம்துலில்லாஹ்) என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் .... (இதோடு கதை முடிந்தது என்றால் அதுதான் இல்லை)
பையை வாங்கிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார் சில அடிகள் நடந்திருப்பார் அங்கே இன்னொரு கடை இருந்தது அங்கே சென்று பார்த்தார் ஆச்சரியம் என்னவென்றால் அந்த கடையில் தான் அவர் பையை கொடுத்திருந்தார்.
கடையின் உரிமையாளருக்கு ஸலாம் கூறினார்
அவர் பதில் சொல்லிவிட்டு அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஏற்றுக்கொள்ளட்டும் இதோ உங்களுடைய பை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார். நாம் தான் தவறான கடைக்கு சென்றுவிட்டோம் அதனால்தான் அக்கடையின் உரிமையாளருக்கு நம்மை யாரென்று தெரியவில்லை.ஆனால் அவர் எப்படி இந்த பையை கொடுத்தார் ?ஏன் ? இதற்கான பதிலை அந்த கடையின் உரிமையாளர் தான் சொல்ல வேண்டும் என்று அவரிடம் சென்று கேட்டார்.
உங்களிடத்தில் நான் பையை கொடுக்கவில்லையே பிறகு எப்படி கொடுத்தீர்கள்? என்ன காரணம்?
உரிமையாளர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை யாரென்றே எனக்கு தெரியாது,உங்களுடைய பொருள் எதுவும் என்னிடம் இல்லை,ஆனாலும் இவ்வளவு உறுதியாக நீங்கள் சொல்லும்போது எனக்கு சில விஷயங்கள் புரிந்தது.
[நீங்கள் இந்த ஊருக்கு புதியவர்,ஒரு வேளை நான் உங்களுடைய பையை தரவில்லை என்றால் நீங்கள் கவலையோடு மனமுடைந்து செல்வீர்கள் , உங்கள் வீட்டிற்கு சென்று ஷாம் நாட்டின் மதஹ் பாஷா கடைவீதியில் என் பை திருடுபோனது என்று சொல்வீர்கள் எங்கள் நாட்டின் நன்மதிப்பு பாழாகி விடும்.சில ஆயிரம் திர்ஹம்களுக்காக என் நாட்டின் மரியாதை கெடுவதை நான் விரும்பவில்லை]. அல்லாஹ்வின் இந்த வசனத்தை நினைத்து பார்த்தேன்..
فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ.
உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்;
(அல்குர்ஆன் : 2:283)
எனவே என்னிடம் 1000 திர்ஹம்கள் இருந்தது மீதி 2000 திர்ஹம்களை கடன்வாங்கி உங்களுக்கு கொடுத்தேன் என்றார்.
வந்தவர் மிகவும் நெகிழ்ந்துபோனார் அவர் கொடுத்த திர்ஹம்களை திருப்பிக் கொடுத்து விட்டு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அல்லாஹு அக்பர் அமானிதத்தை பாதுகாக்க தன் பொருளை கொடுத்த அவர்கள் எங்கே!
அமானிதத்தை வீணாக்கும் நாம் எங்கே!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அமானிதம் வீணடிக்கப்பட்டால் (நீங்கள்) மறுமை நாளை எதிர்ப்பாருங்கள்....
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவான் இன்ஷாஅல்லாஹ்...
Muhammed Musthafa
No comments:
Post a Comment