இம்ரவுல் கைஸ் - பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்திற்கு முன்பு வாழ்ந்தவன்.
இவன் அரேபிய கவிதை இலக்கியத்தில் உச்சத்தில் இருந்தான். அவனது கவிதை இலக்கிய தரமாக இருந்தாலும் கருத்தில் படு கேவலமாக இருக்கும். ஆனாலும் இவனை கவிதையில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி அடைந்தவர்கள் எவரும் இல்லை.
ஒரு முறை இவனது எதிரிகளின் வசத்தில் இவன் தனியாக மாட்டி விட்டான். எதிரிகள் கொல்வதற்காக வாளெடுத்த போது இவன் சொல்கிறான் தனது எதிரிகளிடம், “என்னை எபபடியும் கொல்லத் தான் போகிறீர்கள். என் முடிவு எனக்கு தெரிந்து விட்டது. ஆனால் எனக்கு இரண்டு பெண் மக்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் எனது செய்தியை கொண்டு போய் அவர்களிடம் தயவு செய்து கொடுத்து விட வேண்டும்.”
அவனது எதிரிகள் அந்த வேண்டுகோளுக்கு ஒத்துக் கொண்டார்கள்.
அவனிடம் எழுதி கேட்டார்கள், அவன் எழுதி கொடுத்தான். வாளை எடுத்தார்கள். ஒரே போடு போட்டார்கள். இவன் இறப்பெய்தினான்.
இவன் எழுதிக் கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு இவனது வீட்டிற்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற கொலைகாரன்கள் வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட இம்ரவுல் கைஸின் மகள்கள் இருவரும் உரலில் உலக்கையை வைத்து உதாரணமாக கோதுமையை கொத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவனது பெண்மக்களை சந்தித்த அந்த கொலைகாரார்கள், “வழியில் உங்களது தந்தையை பார்த்தோம், அவர்கள் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறார்கள், அவர் உங்களிடம் இந்த செய்தியை ஒப்படைக்க சொன்னார்கள்” என்கிறார்கள்.
அப்பெண்மக்கள் வந்தவர்களை அழைத்து இருக்க சொல்லிவிட்டு உள்ளே போய் அந்த தகவலை படிக்கிறார்கள். அதிலே ஒரு கவிதை முடிவில்லாமல் பாதியில் இருக்கிறது.
அந்த கவிதையை அவர்கள் மீண்டும் படிக்கிறார்கள்...
”யப்னதய் இம்ரவுல் கைஸி இன்ன அபாகுமா”
இது தான் அந்த கவிதை.
காஃபியா எனும் இலக்கண அமைப்பில் அமைந்த இந்த கவிதை ஒரு வரி மட்டும் இருந்து இன்னொரு வரி இல்லாமல் இருக்கிறது. காஃபியா வகை கவிதை கண்டிப்பாக இரண்டு வரி இருந்தே தீர வேண்டும்.
”இந்த கவிதையின் பொருளாவது.. இம்ரவுல் கைஸுடைய இரண்டு பெண் மக்களே! நிச்சயமாக உங்களுடைய தந்தை..”
அவ்வளவு தான் உள்ளது.. தந்தை என்ன செய்தார்? தந்தைக்கு என்ன? போன்ற விபரங்கள் அதில் இல்லை.
உடனே, இலக்கிய சூழலில் வளர்ந்த இலக்கிய தந்தையின் குணம் மாறாத அந்த இரண்டு இலக்கிய பெண் மக்களும் பொருத்தமான அரபி வார்த்தைகளை போட்டு போட்டு பார்க்கிறார்கள்.
காஃபியா கவிதை அவ்வளவு சுலபமல்ல.. இரண்டு வரிகள் கொண்ட கவிதையில் உதாரணமாக மேலே உள்ள வரியில் எத்தனை ‘ஜெபர், ஜேர்” வருதோ அத்தனை “ஜெபர் ஜேர்” கீழே உள்ள இரண்டாவது வரியிலும் வர வேண்டும்.‘ எந்த வார்த்தையில் முடியுதோ உதாரணமாக இங்கே ‘..குமா..” என்று முடிந்தால், இரண்டாவது வரியிலும் “..குமா” என்று தான் முடிய வேண்டும்.
தந்தை எழுதிய கவிதையை படிக்கிறார்கள்..
யபனதய் இம்ரவுல் கைஸி இன்ன அபாகுமா - இது தந்தை எழுதிய கவிதை
இந்த கவிதையை இரண்டு பெண் மக்களும் பூரணப் படுத்துகிறார்கள்.
யபனதய் இம்ரவுல் கைஸி இன்ன அபாகுமா
(இம்ரவுல் கைஸுடைய இரண்டு பெண் மக்களே! நிச்சயமாக உங்களுடைய தந்தை..)
கதீலுன். ஃப இன்னல் காதிலைனி லதய்குமா
(கொல்லப்பட்டு போய் விட்டார். அவரை கொன்ற இருவரும் இப்போது உங்கள் இருவரிடத்தில்)
கவிதை பூரணமாகிவிட்டதல்லவா?
கையில் இருந்த உலக்கையை இருவரும் எடுத்து கொலைகாரர்களின் மண்டையில் ஒரே போடாக போடுகிறார்கள். இருவரும் இறக்கிறார்கள்.
இந்த அளவுக்கு இலக்கியத்தை உயிராக மதித்து இலக்கியத்தின் மூலமாகவே உயிரையும் எடுக்கிற அளவுக்கு துணிந்த மக்களிடையே தான் - அரபு பேசாதவர்களை வாயே இல்லாதவர்கள் என்று வர்ணிக்கக் கூடிய மக்களிடையே தான் - இறைவன் தனது வேதத்தை அனுப்பினான்.
நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தனது அற்புதமாக குரான் ஷரீஃபையே அடையாளமாக சொன்னார்கள்.
மக்கமா நகரத்து மறுப்பாளர்களும் “இது மனிதனின் வார்த்தை அல்ல” என்று ஒப்புக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment