இறைஞானியின் பார்வையில் அரசியல் தலைவர். (ஆன்மீக அரசியல் 9)
அப்பாஸீய கலீபாக்களில் சிறப்புமிக்கவரான ஹாரூனுர் ரஷீது ஹஜ் செய்து விட்டு திரும்பும்போது கூபாவில் சில நாட்கள் தங்கி இருந்தார். பின்னர் அங்கிருந்து தம் பணியாட்களுடனும் , பரிவாரங்களுடனும் அவர் புறப்பட்டபோது , வழிமறித்து ஒருவர் நின்று கொண்டு " ஹாரூன் ! ஹாரூன் !
ஹாரூன் ! என்று உரக்க கூவியழைத்தார்
சக்கரவர்த்தியாக விளங்கிய அதுவும் கலீபாவை பெயர் சொல்லி அழைப்பவர் யார் என்று வியப்புடன் கேட்டார் ஹாரூன் .
அவர்தாம் "பஹ்லூல் மஜ்னூன்" என்றும் மக்கள் அவரை 'புத்தி சுவாதீனமானவர்' என்றே அழைக்கப்படுவார் என்று ஹாரூனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
உடனே தம் வாகனத்தை நிறுத்தத் சொல்லி , ஹாரூன் கீழே இறங்கினார்.
அப்பாஸிய கலீ்பாக்கள் ஒரு திரைக்கப்புறம் அமர்ந்துதான் பிறரிடம் பேசுவார்கள் . ஆனால் ஹாரூன் திரையை அகற்றிச் சொல்லி நேருக்கு நேர் அவரைப் பார்த்ததும்,
புத்தி சுவாதீனமானவரான பஹ்லூல் (ரஹ்) அவர்களின் முகத்தில் வீசிய சுடரொளியும் , அவர் கண்களிலிருந்த தீட்சண்யத்தையும் ,கூர் மதியையும் கண்ட ஹாரூன் , அவர் இறைநேசச் செல்வர் - "வலியுல்லாஹ் " என்பதை நன்கு உணர்ந்து கொண்டார் .
" என்னை நீங்கள் அறிவீர்களா ?" என்றார் கலீபா ஹாரூன் .
" ஆமாம் ! நான் உம்மையறிவேன் ".
" அப்படியா ? நான் யார் தெரியுமா ? " என்று மீண்டும் கேட்டார் ஹாரூன்.
" நீங்கள் மேலை நாட்டில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும்போது , கீழை நாட்டில் ஓர் அக்கிரமம் செய்யப்பட்டாலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக அல்லாஹூதஆலா விசாரணை செய்வானே அத்தகைய ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர். சரிதானே ?"
பஹ்லூல் (ரஹ்) அவர்களின் பேச்சிலுள்ள உட்பொருளையும் , நுட்பமான கருத்தையும் உணர்ந்த ஹாரூனுர் ரஷீதுக்கு அச்சத்தினால் கண்ணீர் கசிந்தது. பரந்த தம் பேரரசில் எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு தாம் இறைவனிடத்தில் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற பயம் அவரைப் பதற வைத்து விட்டது.
இருந்தாலும் ஒரு நப்பாசை அப்பாஸீய வம்ச ஆட்சி தன் மூதாதை ஹஜரத் அப்பாஸ் (ரலி) பெருமானாரின் தந்தைக்கு சகோதரர் ஆவார்கள் .எனவே அந்த உறவு , இறுதித் தீர்ப்பு நாளில் தமக்குக் கை கொடுக்கும் என்று மனதிற்குள் ஆறுதல் பட்டுக் கொண்டு இருக்கும் போதே,
ஹாரூன் மனதில் உதித்த இந்த ஆறுதல் எண்ணத்திற்குரிய பதிலாக பஹ்லூல் (ரஹ்) அவர்கள் : " எக்காளம் ஊதப்படும் இறுதி தீர்ப்பு நாளில் பந்தத்துவம் இல்லை , வம்ச வழி்கள் இல்லை , தலைமுறை சரித்திரங்கள் இல்லை , பின்னே அந்த நாளில் ஒருவருக்கொருவர் இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கவும் மாட்டார்கள் . அந்நாளில் அல்லாஹ்வின் திருவேதம் கூறுவது போல , " நல்லோர் நயீம் என்னும் சுவர்த்தில் இருப்பார்கள், தீயோர் ஜஹீம் என்னும் நரகத்தில் இருப்பார்கள் என்று கூறியதும் ஹாரூனுக்கு கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் இழந்து பதறி அழுதே விட்டார்.
" தாங்களுக்கு ஏதேனும் தேவை இருக்குமாயின் சொல்லுங்கள் நிறைவேற்றி வைக்கிறேனே ! என்றார் ஹாரூன்.
புன்முறுவல் பூத்தவாறு " ஆம் ! நமக்கு ஒரு தேவையிருக்கிறது ; அதாவது என் பாவங்கள் மன்னிக்கப்பட்டு , நான் சுவர்க்கத்திற்குள் புக வேண்டும் இதை அப்பாஸிய கலீபாவான உம்மால் முடியுமா ? என்றார் பஹ்லூல்
அப்பாஸியப் பேரரசின் அளப்பரிய செல்வமும் , செல்வாக்கும் ஒருவரை சுவர்க்கத்தில் புகுத்துவதற்கு ஆற்றல் படைத்தவையா ? என்பதை பஹ்லூல் மறைமுகமாக உணர்த்துகிறார் என்பதை அறிந்து ஹாரூன் ....
"இறை நேசரே ! அது என்னால் இயலாதது ; என்னால் இயன்றதைச் சொல்லுங்கள் . உங்களுக்காக செய்யக் காத்திருக்கிறேன் . தாங்களுக்கு கடன் சுமை இருப்பதாகத் தெரிய வந்தேன் .உங்கள் சார்பில் அக்கடன்களை முழுமையாக அடைத்து விடுகிறேனே , அதற்காவது எனக்கு சம்மதியுங்கள்."
" கலீபாவே ! என் கடனை நீர் எப்படி அடைக்க முடியும் ? ஏற்கனவே நீர் பெரிய கடனாளியாக இருந்து , நிறைய கடன்பட்டிருக்கும் உம் பொருளைக் கொண்டு எப்படி அடைக்க முற்படுவீர் ? இது என்ன விந்தை ! " என்றார்கள் பஹ்லூல் (ரஹ்)
" என்ன , நான் கடன்பட்டிருக்கின்றேனா யாரிடம் ?" என்று வியப்போடு கேட்டார் ஹாரூன் .
" ஆம் , மக்களிடமிருந்து நிலவரி, நீர்வரி, வீட்டுத்தீர்வை , பயிர் - விவசாய வரி, கிஸ்தி என்ற என்னென்னவோ பெயர்களில் வரி வசூலிப்பவை யெல்லாம் அதே மக்களுக்கு திருப்பிக் கொடுக்கும் கடன்தானே ? இக் கடனை மக்களுக்கு தக்க ரூபத்தில் திருப்பிக் கொடுத்து விடும் . இல்லையேல் , அதில் ஒவ்வொரு காசுக்கும் , நீர் இறைவனிடம் கணக்கு காட்டியாக வேண்டுமே " - என்று எச்சரித்தார் .
ஹஜ்ரத் பெருந்தகையே ! இறுதிக் காலம் வரை தங்கள் உபகாரச் சம்பளமாக கணிசமான ஒரு தொகை கிடைக்குமாறு நான் ஏற்பாடு செய்கிறேன் . அதை ஏற்றுக் கொண்டு என்னோடேயே இருந்து விடுங்களேன் "
" ஹாரூன் ! நீயும், நானும் அல்லாஹ்வின் அடியார்கள்தாம் உம்மையும், என்னையும் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானதைத் தந்து இறுதிவரை காக்கும் பொறுப்பு அந்த இறைவனுக்கு மட்டுமே உண்டு. உபகாரச் சம்பளம் ஏற்படுத்தும் அளவுக்கு அல்லாஹு தஆலா உம்மை நினைவில் வைத்திருப்பான் ; ஆனால் என்னை மறந்து விடுவானே அப்போது நான் என்ன செய்வது ?
ஹாரூனுர் ரஷீதால் அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணில் நீர் ததும்ப, அந்த நல்லடியாரின் கரங்களைப் பிடித்து தம் கண்களில் ஒற்றிக் கொண்டார் .
பஹ்லூல் (ரஹ்) அவர்கள் அப்போது கூட மஜ்னூன் மாதிரியே மற்றவர்களின் கண்களுக்கு தெரிந்தார். ஆனால் ஹாரூனுர் ரஷீது கண்களுக்கு ......?
اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا
(நபியே!) சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை, நீங்கள் கவனித்துப் பாருங்கள்! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் எவ்வளவோ பெரிது; சிறப்பிப்பதாலும் எவ்வளவோ பெரிது.
(அல்குர்ஆன் : 17:21)
No comments:
Post a Comment