ஹழ்ரத் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
கிஃபார் கோத்திரத்தார்
மக்காவிலிருந்து சிரியா செல்லும் பாதையில் ‘வத்தான் பள்ளத்தாக்கு’ அமைந்திருந்தது. அங்கு கிஃபார் என்றொரு கோத்திரம். வர்த்தகர்கள் கடந்து செல்லும்வரை பாதையில் இவர்களது ஊர் அமைந்திருந்ததால் வருமானத்திற்கு எளிதான ஒரு வழியை இவர்கள் கையாண்டனர்.
அவர்களைக் கடந்து செல்லும் வணிகர்கள், கப்பம் கட்டுவதுபோல் இவர்களுக்கு ஒரு தொகையைக் கட்டிவிட வேண்டும். கொடுக்கவில்லை என்றால் கொள்ளை அடித்து எடுத்துக் கொள்வார்கள். ‘கொடுங்கள் பெறப்படும்; இல்லையேல் பிடுங்கப்படும்’ என்ற எளிய தத்துவம்.
இஸ்லாத்திற்கு முன் அபூதர் அவர்களின் நிலை.
இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்துப் இப்னு ஜுனாதா. பரீர் இப்னு ஜுனாதா என்றொரு பெயரும் இவருக்கு இருந்தாக ஓர் அறிவிப்பு உள்ளது. அவர், நமக்கெல்லாம் வரலாற்றில் பிரபலமடைந்த அபூதர் அல்கிஃபாரி.
அந்தக் குலத்து மக்களுக்கே உரிய இயல்பான துணிவு அவரிடம் இருந்தபோதும் அவர்களது குணத்திற்குச் சற்று மாற்றமான சில குணங்களும் இயற்கையாகவே அவரிடம் அமைந்து போயிருந்தன. கேலித்தனமற்ற அக்கறையான மனோபாவம், தொலைநோக்கு போன்றவை தவிர, அக்கால அரபியர்கள் மத்தியில் வேரூன்றியிருந்த சிலை வணக்கத்தின் மீது அவருக்கு இயல்பாகவே ஒரு வெறுப்பு. அவர்களது மூடநம்பிக்கைகளையும் வழிபாட்டுமுறைகளையும் பார்த்து வெறுத்துப்போய், "என்ன இது காரிருள் வாழ்க்கை? வெளிச்சம் தோன்றாதா?" என்று இனந்தெரியா எதிர்பார்ப்புடன் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
அபூதர் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுவையான நிகழ்வு
இந்நிலையில் மக்காவில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ள செய்தி ஒருநாள் பயணிகளின் கூட்டத்துடன் அவரது ஊரையும் கடந்து சென்றது. அரசல் புரசலாக விழுந்ததே தவிர என்ன ஏது என்று சரியான விபரங்கள் தெரியாமல் அது அவரது ஆர்வத்தை அதிகரித்தது. அபூதர்ருக்கு அனீஸ் (அல்லது உனைஸ்) என்றொரு சகோதரர். அவரை அழைத்து, “உடனே கிளம்பி மக்காவுக்குச் செல். அங்கு நபியொருவர் தோன்றியிருக்கின்றாராம். விண்ணிலிருந்து செய்தி வருகிறது என்கின்றாராம். அவர் என்ன சொல்கின்றார் என்பதை விசாரித்து வந்து என்னிடம் சொல்” என்று அனுப்பி வைத்தார் அபூதர்.
சகோதரர் சொல்லைத் தட்டாத அனீஸ் மக்காவுக்கு வந்தார். நபியவர்களைச் சந்தித்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ஊருக்குத் திரும்பி வந்து தம் சகோதரரிடம் செய்தியைச் சொன்னார். “அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அவர் மக்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கின்றார். இறை வசனங்கள் எனச் சிலவற்றை உரைக்கின்றார். அவை நிச்சயமாகப் நாட்டுப்புறப் பாடலோ கவிதையோ அல்ல.”
“மக்கள் அவரைப்பற்றி என்ன சொல்கின்றனர்?”
“அவர் ஒரு மந்திரவாதி என்கின்றனர். இல்லையில்லை குறிசொல்பவர் என்கின்றனர் சிலர். அவர் கவிதை சொல்கின்றார் என்கின்றனர் மற்றவர்கள்.”
அந்தத் தகவல்கள் அபூதர்ருக்கு திருப்தி அளிக்கவில்லை. “நீ சொன்ன செய்திகளில் எனக்குத் திருப்தி இல்லை. என்னுடைய கேள்விகளுக்கு விடையும் கிடைக்கவில்லை. ஒன்று செய். என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளை நீ கவனித்துக்கொள். நானே ஓர் எட்டு மக்கா சென்று என்ன, ஏது என்று பார்த்து விசாரித்துவிட்டு வருகிறேன்.”
சரி என்றார் அனீஸ். “ஆனால் ஒன்று. மக்க நகர மக்களிடம் கவனமாக இருக்கவும்” என்று எச்சரித்து அனுப்பினார். இஸ்லாமிய மீளெழுச்சி குரைஷிகளிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் வெறுப்பையும் விரோதத்தையும் கண்ணால் கண்டு வந்திருந்ததால் எழுந்த கவலை அது.
அபூதர் ரழி மக்காவை நோக்கி...
பயணத்திற்குத் தேவையான உணவு, தோல் துருத்தியில் தண்ணீர், இதர ஏற்பாடுகள் செய்துகொண்டு மக்காவுக்குப் பயணமானார் அபூதர். வந்து சேர்ந்தார். ஆனால் யாரிடம் கேட்பது, எவரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை. நபியவர்களின் ஏகத்துவ அழைப்பு குரைஷிகளிடம் ஏற்படுத்தியிருந்த ஆத்திரத்தை அனீஸ் மூலமாக அறிந்திருந்ததால் ‘தாம் சென்று விசாரிக்கும் மனிதர் நபியவர்களின் ஆதரவாளராக இருந்தால் 'நல்லதாப் போச்சு' என்று மகிழலாம். இல்லையென்றால் 'எல்லாம் போச்சு என்றாகி விடுமே. வம்பை விலைகொடுத்து வாங்கியதாக ஆகி விடுமே’ என்ற யோசனையுடன், ஜம்ஜம் தண்ணீரைக் குடித்துக்கொண்டு கஅபாவின் அருகிலேயே அமர்ந்து விட்டார்.
பொழுது சாய்ந்தது. இரவானது. எந்த வழியும் தென்படவில்லை. ‘சரி. இப்பொழுது உறங்குவோம். காலையில் எழுந்து யோசிப்போம்’ என்று கஅபாவின் அருகே படுத்துக்கொண்டார். அச்சமயம் அவ்வழியே வந்தார் அலீ ரலியல்லாஹு அன்ஹு. படுத்திருப்பவரைப் பார்த்ததுமே அண்ணன் ஊருக்குப் புதுசு என்று தெரிந்தது. அவரை அணுகி, “என்னுடன் வந்து தங்கிக்கொள்ளுங்கள்” என்று அழைத்துச் சென்றார்.
பயணக் களைப்பு தீர நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் அபூதர். பொழுது விடிந்தது. தமது பொருள்களை எடுத்துக்கொண்டு, “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி” என்று அலீயிடம் தெரிவித்துவிட்டு கஅபாவிற்கு நடையைக் கட்டினார்.
“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று அலீயும் அவரிடம் கேட்கவில்லை. அவரும் அலீயிடம் தாம் தேடிவந்தவரைப் பற்றி விசாரிக்கவில்லை. அடுத்த நாள் பொழுதும் அபூதர்ருக்கு அப்படியே கழிந்தது. இரவானது. அங்கேயே படுத்துக் கொண்டார். அன்றைய இரவும் அலீ ரழியல்லாஹு அன்ஹு
அவ்வழியே சென்றவர், முந்தைய நாளைப் போலவே அபூதர்ரைத் தம்முடன் அழைத்துச் சென்றார், தங்க வைத்துக்கொண்டார்.
மூன்றாவது நாள் இரவும் கஅபாவின் அருகே அபூதர்ரைச் சந்தித்த அலீ, “தாங்கள் இன்னும் தங்களுக்குரிய குடியிருப்பைக் கண்டுகொள்ளவில்லையா?” என்று விசாரித்தார். 'வந்த வேலை முடியவில்லையா?' என்று நாம் விசாரிப்போமே அப்படி அது அவர்களின் பழக்கம் போலும்.
“இல்லை” என்றார் அபூதர்.
“வாருங்கள்” என்று தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். இம்முறைதான் விசாரித்தார். “நீர் எதற்காக மக்காவுக்கு வந்தீர்?”
“நான் என்ன தேடி வந்திருக்கிறேனோ அதை நான் கண்டுகொள்ள உதவுவதாக நீர் வாக்குறுதி அளித்தால்தான் நான் சொல்வேன்” என்றார் அபூதர்.
“உதவுகிறேன்” என்று வாக்குறுதி அளித்தார்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு
“தொலை தூரத்திலுள்ள ஊரிலிருந்து நான் வந்துள்ளேன். இங்குப் புதிதாக நபி ஒருவர் தோன்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, விசாரித்து வரும்படி என்னுடைய சகோதரரை அனுப்பியிருந்தேன். அவர் திரும்பி வந்து அளித்த பதில் எனக்குத் திருப்திகரமாக இல்லை. எனவே அந்த நபியை நானே சந்திக்க வேண்டும்; அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிய வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டேன்”
‘ஆஹா’ என்று மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது அலீயின் முகம்! “அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். அவர் மெய்யாகவே அல்லாஹ்வின் தூதர்…” என்று ஆரம்பித்து விரிவாக விளக்க ஆரம்பித்துவிட்டார். அடடா! வெண்ணெய்க் கடையில் படுத்துக்கொண்டா நெய்யைத் தேடியிருந்திருக்கிறேன் என்று அபூதர்ருக்கும் உற்சாகமாகிவிட்டது.
“பொழுது விடிந்ததும் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். வழியில் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எனக்குத் தெரிந்தால் காலணியைச் சரிசெய்வதுபோல் நின்று விடுவேன். நான் தொடரும்போது யாரும் அறியாமல் என்னைத் தொடருங்கள். நான் நுழையும் இல்லத்தினுள் நீங்களும் நுழைந்து விடுங்கள்” என்று மறுநாள் நபியவர்களைச் சந்திக்கத் திட்டம் சொன்னார் அலீ.
மகிழ்ச்சியில் அன்றிரவு அபூதர்ருக்குத் தூக்கமே வரவில்லை. தேடிவந்த நபியைக் காணப் போகிறோம்; வேத அறிவிப்பைச் செவியுறப் போகிறோம் என்று பேராவல். பொழுது விடிந்தது. நபியவர்களைச் சந்திப்பதற்குக் கிளம்பினார்கள். யாருடைய கவனத்தையும் கவராமல் அலீயைப் பின்தொடர்ந்தார் அபூதர்.
ஒரு வீட்டினுள் அலீ நுழைய, அபூதர்ரும் நுழைந்தார். நபியவர்களுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
“உங்கள்மீது சாந்தி உண்டாவதாக அல்லாஹ்வின் தூதரே!” என்றார் அபூதர்.
“உங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் வளமும் உண்டாகட்டும்!” என்று பதில் அளித்தார்கள் நபியவர்கள்.
தம்மைப் பற்றியும் தாம் கிளம்பி வந்ததன் நோக்கம் பற்றியும் அபூதர் நபியவர்களிடம் விவரித்தார். அவருக்கு இஸ்லாத்தைப் பற்றி விவரித்து, குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்து விளக்கமளித்தார்கள் நபியவர்கள். அழைப்பு விடுத்தார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டு வந்திருந்தார் அபூதர். ஏற்றுக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற முதன்மையானவர்களுள் நான்காவதோ ஐந்தாவதோ என்று வரலாற்றுக் குறிப்புகள் குறிக்கும் அளவிற்கு, 'முந்திக்கொண்ட' வெகு சிலருள் ஒருவரானார் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு.
அபூதர் ரழியல்லாஹு அன்ஹு
மரணம்
அபூதர் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் ஹிஜ்ரி 32-ம் ஆண்டு ரபதா என்ற நகரில் மரணமடைந்தார்கள்.தங்களின் குடும்பத்தாரிடம் வஸிய்யத் செய்யும் பொழுது இவ்வாறு கூறினார்கள்."நான் மரணித்த பின் என்னை குளிப்பாட்டி,கஃபன் செய்து பாதையில் வைத்து விடுங்கள்.தன்னந்தனியாக அவர்களின் ஜனாஸா பாதையில் வீற்றிருந்தது.அப்பாதை வழியே கூஃபாவாசிகள் கடந்து சென்றனர்.அக்கூட்டத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
ரழியல்லாஹு அன்ஹு
அவர்களும் இருந்தார்கள்.
அபூதர்ரின் ஜனாஸாவை கண்டவுடன் அதிகமாக அழுதார்கள்.
அப்பொழுது அபூதர் அவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறிய ஹதீஸை நினைவுபடுத்தினார்கள்.
அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக.
அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்” என்றார்கள்.
(இபுனு ஹிஷாம் 2/524).
المراجع:
1)سير أعلام النبلاء
2)تهذيب الكمال للمزي
3)أسد الغابة في معرفة الصحابة لابن أثير الجزري
4)الاصابة في تمييز الصحابة لابن حجر العسقلاني
5)الطبقات الكبرى لابن سعد
No comments:
Post a Comment