﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *"பத்ர் குறிப்பு 01-06-18"*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு:-*
*"பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்"*
🌸🌸 *ஆக்கம்:-*
https://sufimanzil.org/பத்ரு-ஸஹாபாக்களின்-சிறப்/
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*
https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்"*
ஷுஹதாக்களின் மகத்துவம்:
وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل احيآء عند ربهم يرزقون
‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்;ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும் ஹதீதை குறிப்பிட்டார்கள்:
‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை சுற்றி வரும். பிறகு இறைவனின் சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று கூறினார்கள். இத்தகைய மாபெரும் பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும் கிடைத்தது.
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நபிகளார், ‘ ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான். அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமாரும் பெறவில்லை. அவையாவன:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே கைப்பற்றுவான்.
2.அனைத்து நபிமார்களும் மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும் குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.
3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள். நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில் அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.
4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள் என்று கூறப்படும். நானும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஒரு திருமறைவசனத்திலும், மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று மேற்கூறிய வசனத்திலும் இறைவனே கூறுகிறான்.
5. எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். –நூல்: தப்ஸீர் குர்துபி 1518ஃ3
சிறிது நேரம் இறைவன் பாதையில் சண்டை செய்வது 50 தடவை நபிலான ஹஜ்ஜு செய்வதை விட சிறந்தது. – அல்ஹதீது.
பத்ரு போர் நடக்க காரணங்கள்:
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருந்த போது அவர்களுடன் முனாபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள் (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள்) ஸஹாபாக்கள் போல் நடித்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை நோக்கி படை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொய்யான செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் மக்கத்து குறைஷிகள் போருக்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதுசமயத்தில் குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் மக்காவாசிகளான முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார். அவரது குழுவை வழிமறித்து முஸ்லிம்கள் கொள்ளை அடிக்கப் போவதாக வதந்தி நிலவியது. இதனையறிந்த அபூசுப்யான் மக்காவிற்கு தூதனுப்பி பாதுகாப்பு கேட்டிருந்தார். இவர்கள் மக்காவிற்கு மதீனாவின் வழியாக செல்லும் வழமையான வழியை விட்டு வழியை மாற்றி செங்கடல் வழியாக சென்று மக்காவை சென்றடைந்தனர்.
வர்த்தகக் குழுவிற்கு பாதுகாப்பு தேவை என்ற செய்தி குறைஷி காபிர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டி வர்த்தக பாதுகாப்புக் குழு என்ற பெயரில் புறப்பட்டார்கள். எவ்வித இடையூறுமின்றி வழியை மாற்றி மக்கா சென்றடைந்த அபூசுப்யான் ‘மக்காவிற்கு திரும்பி விடுங்கள்’ என்று செய்தியனுப்பினார். அபூஜஹல் அதை நிராகரித்து பத்ரில் படையை இறக்கினான்.
குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்பாதுகாப்புக்காக 313 ஸஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி புறப்பட்டார்கள். படை பத்ரில் பாளையம் இறங்கியது. இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 அன்று நடைபெற்றது. இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் இது.
முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.
எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.
இரண்டு தரப்பினர்களின் பலங்களையும் சீர்தூக்கி பார்த்து விட்டு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். இப்போரில் சொந்த பந்தம் என்று பார்க்காமல் முஸ்லிம்கள், காபிர்கள் என்றே பார்க்கப்பட்டது.
நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். போhக்களத்தில் ஐவேளைத்தொழுகை,திக்ரு, பிக்ரு, தராவீஹ் தொழுகை மற்ற இபாதத்துக்கள் தவறாமல் நடைபெற்று வந்தன.
இப்போரில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு கொடுத்தான். முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். அவர்களின் திருநாமங்கள்:
1. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு
2. ரபீஃஉ இப்னு முஅல்லா ரலியல்லாஹு அன்ஹு
3. ஸஃது இப்னு கய்சமா ரலியல்லாஹு அன்ஹு
4. யஜீது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
5. உபைதா இப்னு ஹாரிது ரலியல்லாஹு அன்ஹு
6. ஆகில் இப்னு புகைரு ரலியல்லாஹு அன்ஹு
7. உமைர் இப்னு ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு
8. முஅவ்விது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
9. திஷ்ஷிமாலைன் இப்னு அம்து அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
10. மிஹ்ஜா இப்னு சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு
11. உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. ஹாரிஸா இப்னு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு
13. சஃப்வான் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு.
குறைஷிக் காபிர்களில் 70 பேர் மடிந்தார்கள். இந்த சடலங்களை பத்ரு என்ற கிணற்றில் போட்டு மறைக்கும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கிணற்றுக்கு சென்று செத்த மய்யித்துகளிடம் பேசினார்கள்.
அபூஜஹலே, உமையாவே, உத்பாவே எங்களுக்கு எங்கள் நாயன் சொன்ன வாக்குறுதியை உண்மையாகவே பெற்றுக் கொண்டோம். உங்களின் கடவுள்களின் வாக்குறுதியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் எங்களுக்கு செய்த பலவித இன்னல்கள் துன்பங்கள் இவைகளுக்குரிய தண்டனையை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுதாவது என்னைப் பற்;றியும் நான் சொன்ன ஆண்டவனைப் பற்றியும் விளங்கிக் கொண்டீர்களா? என்று கேட்ட போது,
அவர்கள் அருகில் நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகமே! மரணித்து விட்டவர்கள் எப்படி உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள்? என்று வினவ அதற்கு நாயகம் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு பதிலுரைக்க முடியாது. இதுதான் உங்களிருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று சொன்னார்கள்.
பத்ரில் ஏற்பட்ட சம்பவங்கள்:
ஹழரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு யுத்தம் நிகழ்வதற்கு முன் அந்தப் போரில் இறந்து போகக் கூடிய சிலரின் பெயர்களையும் அவர்கள் பத்ரு களத்தில் இன்ஷாஅல்லாஹ் இன்னின்ன இடங்களில் இறப்பார்கள் என்பதையும் தங்களின் கையிலுள்ள அசாவினால் கோடு போட்டுக் காட்டினார்கள்.
இதை ஹழரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முதல் நாள் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளில் யார் யார் எவ்விடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதைக் கோடு போட்டுக் காண்பித்தார்களோ அவரவர்கள் அவ்வவ்விடங்களில் கொல்லப்பட்டார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு துரும்பளவாவது கூட கொல்லப்பட்ட இடங்கள் மாறவில்லை. இதுவும் பத்ரு யுத்தத்தில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகும். – முஸ்லிம்.
பத்ரு யுத்தத்தின் போது நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தமது தோழர்களை நோக்கி, ‘எழுந்திருப்பீராக! வானத்தையும், பூமியையும் விட விசாலமானதும் தக்வா கொண்டவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டதுமான சுவர்க்கத்தின்பால் விரைவீராக!’ என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஹழ்ரத் உமைர் இப்னு ஹம்மாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஆஹா, ஆஹா’ என்றனர். அண்ணலார் அவர்கள் உமைரை நோக்கி, எதற்காக ஆஹா ஆஹா என்று கூறினீர் என்றார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அத்தகையவர்களில் நானும் ஒருவனாக இருக்க விருப்பப்படுகின்றேன்’ என்று பதில் கூறினார். உடனே அண்ணலார் அவர்கள் நீரும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்’ என்றார்கள்.
ஹஜ்ரத் உமைர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு பையிலிருந்து சில பேரீத்தங்கனிகளைப் பசியின் கொடுமையைத் தணிக்கத் தின்றார்கள். ஓரிரண்டு கனிகளைத் தின்றதும் அவர்கள் கையிலிருக்கும் கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம் ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு அதுவரை என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்’ என்று கூறியவாறு கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை விட்டு உயிர் பிரியும் வரை போராடி ஷஹீதாய் விட்டார்கள்.
பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாகும். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள். 1. எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி 2. லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம். 3. பிலால் ரலியல்லாஹு அன்ஹு 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்: தப்ஸீர் இப்னு கதீர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனான ஸஃது இப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள். அதற்கு ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை. சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.
அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
பத்ரீன்களின் திருநாமத்தின் பிரயோஜனங்கள்:
இமாம் புகாரி நாயகம் அவர்கள் தங்கள் புகாரி கிரந்தத்தில் பத்ரு போர் பற்றிய பாடத்தில் அந்தப் போரில் கலந்துகொண்டவர்கள் அனைவர்கள் பெயரையும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். அந்தப் பெயர்களை நாம் படிக்கும் பொழுது நம்முடைய நாட்டங்களும், கேட்கும் துஆக்களும் உடனே ஒப்புக் கொள்ளப்படும். இது அனுபவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.
-நூல்: தாரீகுல் கமீஸ் 402/1
முஅவ்விது இப்னு அஃப்ராவு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’ தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன். அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது. அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் ‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை’ என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.
இந்த ஹதீதை பைஹகீ இமாம் தன்னுடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள். நூல்: பைஹகீ 115/7
பத்ரு ஸஹாபாக்களின் பெயர்கள் இருக்;கும் இடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்றும், அவர்களின் திருநாமங்களை அவ்ராதாக விடாமல் முறையாக ஓதி வருபவருக்கு விலாயத்தின் அந்தஸ்து கிடைக்கிறது என்றும் மகான்கள் கூறியிருக்கிறார்கள். ஏராளமான சம்பவங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ரு ஸஹாபாக்களின் பொருட்டால் அனைத்து நாட்டங்களையும் நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்.
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
No comments:
Post a Comment