Saturday, 30 September 2017

ஜிஹாது தெளிவான விளக்கங்கள்

ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, "கடுமையாக முயற்சி செய்தல்" அல்லது "வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்" அல்லது "விடாப்பிடியான எதிர்ப்பு முயற்சி (Struggle)" என்று பொருள்.ஒருவர் தன்னுடைய இலட்சியத்தை அல்லது நோக்கத்தை அடைய தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயற்சி செய்தல் என்பது தான் இதன் அர்த்தம்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்களுக்குக் கட்டளையிடப்பட்டவிஷயங்களில் எல்லா இடையூறுகளையும் எதிர்த்து பல வழிகளில் கடுமையாக போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் இஸ்லாம் "ஜிஹாத்" என்ற சொல்லை பயன்படுத்துகின்றது.

தனக்கு மிகவும் அன்பானவர்களையும், தன்னையும், தன் செல்வத்தையும் விட, இறைவனையும் இறைத் தூதரையும் நேசிக்க அதாவது சுருக்கமாக இறைவனின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்ற ஒரு முஸ்லிம் அல்லும், பகலும் போராடும் அந்த அடிப்படை விஷயத்தை பிரதிபலிக்கும் ஒரு சொல்லாகவே ஜிஹாத் தொன்றுதொட்டு இருந்தும் வந்திருக்கின்றது.

ஆனால் அதே நேரம் இன்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி ஜிஹாதின் அர்த்தமாக உலகமெல்லாம் ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்படும் "புனிதப்போர்" என்ற சொல்லுக்கு அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்று வழங்கப்பெறும். அதாவது அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்றாலே "புனிதப்போர்" என்று பொருள் வரும். இது திருக்குர்ஆனில் எங்குமே காணக்கிடைக்காத ஒரு சொல்லாகும். போர் என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு அரபுப்பதம் "கித்தால்" என்று அர்த்தம். எனவே போர் என்றாலும் புனிதப்போர் என்றாலும் ஜிஹாத் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

போர் என்பது தற்செயலாக, எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டு நிகழ்வது. இது எப்பொழுதாவது நிச்சயம் முடிவுக்கு வரும்; வந்தே ஆக வேண்டும். ஆனால் ஜிஹாத் என்பது தொடர்ந்து இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயல்; இரவிலும் பகலிலும் இறை நம்பிக்கையாளனின் மனதில் நீக்கமற ஊன்றி நிலைபட்டிருக்கும் எண்ணம் அது.

இடையறாது நிகழும் இந்த ஹிஜாத் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் அடிபணிய முயல்வது, இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிவதில் ஏற்படும் தடங்கல்கள், இடர்பாடுகள் எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு அதில் உறுதியாக இருத்தல் ஆகிய பண்புகள் ஆகும். இது நபருக்கு நபர் அவரவரின் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும்.

பரந்து விரிந்த பல பொருள் கொண்ட இவ்வார்த்தை இடத்திற்கும், கால சூழலுக்கேற்பவும் மாறுபடுகிறது. சமாதான சூழலில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; போர் முனைகளில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; செல்வந்தன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; ஏழை செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; பலசாலி செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; பலகீனமானவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; கற்றவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; கல்லாதவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு.

எடுத்துக்காட்டாக சுயவிருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற மனத்தூண்டுதல்கள், சமுதாய மரபுகளால் ஏற்படும் நிர்பந்தங்கள், சொத்து செல்வம் மீது உண்டாகும் பற்று, தான் எனும் அகங்காரம் ஆகிய யாவும் நற்கிரியைகளைத் தடை செய்யக்கூடியவை, தீமைகளில் ஈடுபட வழி வகுப்பவை இவற்றிலிருந்து மனதைக் கட்டுபடுத்துவதும் ஜிஹாத் ஆகும்.

அப்படியிருக்க இன்று உலகில் "ஜிஹாத்" என்றாலே "புனிதப்போர்" தான் என்பது போன்ற அர்த்தம் வலிந்து திணிக்கப்படுகிறது. அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக " தீவிரவாதிகள்" என்ற சொல் கொண்டு அடையாளப்படுத்தி இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற வார்த்தையை கொண்டு களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இறைவழியில் இடைவிடாது கடின முயற்சியில் ஈடுபடுவோரை அரபியில் முஜாஹித் என்பர். அதாவது ஜிஹாத் செய்பவர்கள் முஜாஹித் என்று அழைக்கப்படுகின்றனர். இம்முஜாஹித்களின் சில பணிகளைக் குறித்து முஸ்னத் அஹ்மத் எனும் நபிமொழி நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை

1. அல்லாஹ்விற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.

2. அல்லாஹ்விற்காக (நற்செயல்கள் புரிந்து) போராடுபவன் முஜாஹித்.

3. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணிவதற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.

மேற்கண்ட முஜாஹித்களின் பணிகளில் ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு தெளிவான விளக்கங்கள் உள்ளன.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயத்திற்கான விளக்கம் வெறும் வார்த்தைகளின் அர்த்தங்களோடு முடிந்து போவது அன்று. அதற்குத் தெளிவான விளக்கம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையாகும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தனது வாழ்வில் கடைபிடிக்கும் எவ்விஷயத்திற்கும் நடைமுறை விளக்கத்திற்கு முன்மாதிரியாக இறைத்தூதரின் வாழ்வை தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கு அனைத்திற்கும் முன்மாதிரி உள்ளது. எனவே ஜிஹாதிற்கான விளக்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி ஒன்று நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டின் பொதுவான ஒரு நெறிமுறையை அறிவிக்கின்றது.

"இரண்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது நபி(ஸல்) அவர்கள் அவற்றுள் எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள். ஏதேனும் ஒரு காரியத்தில் இரு கருத்துக்கள் எழும்போது அவற்றுள் கடினமானதை விட்டுவிட்டு எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் இதற்குப் பொருள்" என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இந்த வழிமுறை அன்றாட விவகாரங்களுக்குப் பொருந்துவதோடு கடினமான வழிமுறையைப் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் காரியங்களுக்கும் பொருந்தும்.

அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் அவர்கள் ஏன் அதிகமான போர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இக்கேள்வியை அடிப்படையாக வைத்து ஜிஹாத் என்றாலே அர்த்தம் போர் தான் என விளங்கி விடக்கூடாது. அதற்கான காரணம் முன்னரே விளக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நபி(ஸல்) அவர்கள் போர்களில் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வை அக்காலகட்டத்தோடு ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆராயும் போது, அவர்கள் தாமாகவே எந்த போர் நடவடிக்கைகளையும் பரிந்துரைத்ததில்லை என்பதை அறிய முடியும். அன்னாருடைய எதிரிகள் அவர்களைப் போரில் சிக்க வைக்க முயன்றபோதெல்லாம் ஏதாவது ஒரு வழிமுறையை உபயோகித்துப் போரைத் தவிர்க்கவே முயன்றார்கள். வேறு வழி அறவே இல்லாமலிருந்த சூழ்நிலையில் தன் மீது போர் திணிக்கப்பட்ட போது தான் போரிடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். எனவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறைபடி ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ பிடிப்பதற்காக அல்லது தாக்குவதற்காக போரிடுவது என்பது இஸ்லாமிய வழி முறையன்று. இஸ்லாம் தற்காப்புக்காக மட்டுமே போரிட அனுமதித்துள்ளது. அதுவும் வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே.

ஒருமுறை தபூக் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் நபி(ஸல்) அவர்கள் "சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதிற்கு நீங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்" என சஹாபா பெருமக்களை நோக்கிக் கூறினார்கள். சஹாபாக்கள் ஆச்சரியமாக "அது என்ன?" எனக் கேட்டபொழுது "உங்கள்மனோஇச்சை" என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உண்மையான ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு இச்சம்பவம் தெளிவான பதிலைத் தருகிறது. ஜிஹாத் என்ற பதத்திற்கு "புனிதப்போர்" தான் உண்மையான பொருள் எனில் நபி(ஸல்) அவர்கள் ஏன் இவ்வாறு கூற வேண்டும். தீயவற்றிற்கு எதிராக , தீய எண்ணங்களுக்கு எதிராக போராடும் மனவலிமையைத் தான் உண்மையான ஜிஹாதாக இஸ்லாம்இங்கு வரையறுக்கிறது.

இஸ்லாம் தீமைக்கெதிராக, அடக்கு முறைக்கு எதிராக, அநியாயத்திற்கு எதிராக நம்பிக்கையாளர்கள் எப்பொழுதும் முன்னணியில் இருக்க வலியுறுத்துகிறது. இதற்காக நம்பிக்கையாளர்கள் தனது மனதை பக்குவப்படுத்துவதை தான்மனோஇச்சைக்கு எதிரான போராட்டமாக - ஜிஹாதாக இஸ்லாம் கற்றுத்தருகிறது.

இதனை மற்றொரு நபி மொழியின் மூலமாகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்".

இதற்கு உதாரணமாக திருக்குர்ஆன் நபி மூஸா(அலை) அவர்களின் வரலாற்றை நம்பிக்கையாளர்களுக்கு கற்றுத்தருகிறது.

மிகப்பெரும் கொடுங்கோலனான ஃபிர்அவ்னின் முன்னிலையில் நன்றாக வாய் பேச இயலாத திக்கு வாய் கொண்ட மூஸா(அலை) அவர்கள் அவனின் அநியாயங்களை நெஞ்சுறுதியுடன் எடுத்துக் கூறி அவனை எதிர்த்த சம்பவம் அநியாயத்திற்கெதிரான போராட்டத்தின் "ஜிஹாதின்" மணிமகுடமாகும்.

"அல்லாஹ்வையும் அவனது தூதரையும், உலகின் மற்ற எவரையும் , எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கும் வரை ஒருவர் உண்மை நம்பிக்கையாளராக ஆக முடியாது" என்று இறை தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது. நன்றாக வாய்பேசக்கூட இயலாமல் இருந்த மூஸா(அலை) அவர்கள் எதற்காக ஒரு கொடிய கொடுங்கோல் அரசனின் முன் சென்று அவனுக்கு எதிராக அடக்குமுறைக்கு ஆளான பாவப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும்? இங்கு இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமேமூஸா(அலை) அவர்களின் நோக்கமாக இருந்தது. இதிலிருந்து நம்பிக்கையாளர் ஒருவர் இறைவன் காட்டிய நேர்வழியில் நடப்பதற்கும் அவனின் கட்டளையை நிறைவேற்றப் போராடுவதும் தான் ஜிஹாத் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் என்ற அர்த்தம் கிடையாது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் உதாரணமாக கூற இயலும். ஒருமுறை பெண்களும் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்ட போது இறை தூதர் நபி(ஸல்) அவர்கள், "மிகச்சிறந்த ஜிஹாத் என்பது சிறப்பான, பிழையற்ற முறையில் நிறைவேற்றப்படும் ஹஜ் ஆகும்" என்று கூறினார்கள். இங்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் நம்பிக்கையாளர் எடுக்கும் சிரத்தையும் முயற்சியும் மட்டுமே ஜிஹாதாக இறைத்தூதரால் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில் ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் தான் அர்த்தம் எனில் பெண்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஏவியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இறைக்கட்டளையை முன்பின் மாற்றம் இல்லாமல் உள்ளதை அப்படியே எடுத்துரைப்பதிலும் வழிகாட்டுவதிலும் எம்பெருமானார்(ஸல்) அவர்களை சிறந்த முன்மாதிரியாக இறைவன் அடையாளம் காட்டியுள்ளான்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில், ஒருவர் இறை தூதர்(ஸல்) அவர்களிடத்தில் ஒருபோரில் பங்குபெற அனுமதி கேட்டார்.அதற்கு இறை தூதர்(ஸல்)அவர்கள், அவரிடம் அவருடைய பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? என வினவினார்கள். ஆம் என்று பதிலளித்த அந்த மனிதரிடம், இறை தூதர்(ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு சேவை செய்வதன் மூலம் ஜிஹாத் செய்யுங்கள்" என்று கட்டளையிட்டார்கள்.

ஜிஹாத் என்றால் போர் செய்வது மட்டும் தான் அர்த்தம் எனில் எதற்காக நபி(ஸல்) அவர்கள் இம்மனிதரைத் தடுத்து பெற்றோர்களுக்கு சேவை செய்ய அனுப்பினார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல பரந்து விரிந்த பொருளை கொண்ட, யாருக்கு வேண்டுமெனிலும் அவரவருக்கு இயைந்தது போல் எப்படி வேண்டுமெனிலும் திரித்துக் கூறவும் அதன் அடிப்படையில் விளக்கமளிக்கவும் முடியக்கூடிய ஒரு சொல்லே ஜிஹாதாகும். எனவே அதன் உண்மையான பொருளையும் அது எங்கே யாருக்கு எதிராக எவ்வாறு செய்யப்பட வேண்டியது என்பது போன்றவற்றின் விளக்கத்தினை இஸ்லாத்தின் பார்வையில் பார்த்தலே சரியான அணுகுமுறையாகும். தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஜிஹாதைக் குறித்து இன்னும் தெளிவான விளக்கங்களை இஸ்லாத்தின் பார்வையில் இன்ஷா அல்லாஹ் இனி வரும் பகுதிகளில் காண்போம்.

ஆக்கம்: இப்னு ஆதம்

நல்லெண்ணம் வேண்டும்

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார்.
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்
“ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்!
“இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!
அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!

இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!

அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!
அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!

அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்!

அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்!

பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “

*நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!*
*மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்...

Wednesday, 27 September 2017

வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் இறைவனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !

உடலும் உயிரும்- மவ்லானா ரூமி

லைலாவை பார்க்க மஜ்னூன் ஒட்டகத்தில் ஏறினான் ..

லைலாவின் காதலில் மயங்கி கிடந்த மஜ்னூனுக்கு ஒட்டகம் லைலாவின் வீட்டை கடந்தது தெரியவில்லை .
சுய நினைவு வந்து விழித்த பின் ஒட்டகம் லைலாவின் வீட்டை கடந்து விட்டது தெரிந்தது ..

மஜ்னூன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்
லைலாவை நான்தான் காதலிக்கிறேன் ஒட்டகம் அல்ல ..

மஜ்னூனின் நிலையில்தான் நம் உயிர் இருக்கிறது .(உயிரை பற்றியே அறியாத உயிர் நிலை )

நம் உடலை ஒட்டகம் என்று வைத்துக்கொள்வோம்
நம் உள்ளத்தை அதில் பிரயாணம் செய்யும் ஒட்டக வீரன் என்று வைத்துக்கொள்வோம்
ஒட்டக வீரன் என்ற நம் உள்ளம் வெற்றி பெற வேண்டுமென்றால்
ஒட்டகம் எனும் நம் உடலை கட்டுப்படுத்த வேண்டும் .. இல்லாவிட்டால் உடல் தான் திரும்பும் திசையில் நடை போட ஆரம்பித்து விடும் .

பிறகு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கும் ,ஒட்டகம் சென்ற இடத்திற்கும் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டு விடும்

உங்கள் உடல் வளர்ச்சிக்கு நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் நான் குறுக்கே நிற்கவில்லை .அதே வேளையில் உங்கள் உள்ளத்தையும் நீங்கள் மறந்து விடக்கூடாது ..
உடலுக்கு எது உணவாக பயன்படுகிறதோ அது நிச்சயமாக உள்ளத்திற்கு உணவாக பயன்படாது .

ஏனென்றால் ஒட்டகத்தின் உணவும் ஒட்டக வீரனின் உணவும் ஒன்றல்ல ..

உங்கள் உள்ளம் புனிதமானது .அதற்குரிய உணவு முற்றிலும் மாறுபட்டது .அந்த உணவு உள்ளத்திற்கு பலம் கொடுக்கும் .இதனால் உடலை அடக்கி ஆண்டு இறை வழியில் உடலை திருப்பும் ஆற்றல் உள்ளத்திற்கு வந்துவிடும் .
உடலுக்குரிய உணவை விட உள்ளத்திற்குரிய உணவு சிறப்பானது .

ஏனெனில் முந்தியது

உடலை மட்டுமே வளர்க்கும்
பிந்தியது உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் ...

- மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி