ஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு
பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) யின் எஜமான் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்த உமைய்யா பின் கலஃப் என்பவன்.
பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். நபிகளார் ஏகதெய்வ வழிபாட்டை வலியுறுத்தி இஸ்லாத்தை எடுத்துரைத்தபோது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர். அடிமைகளாயிருந்தவர்களில் முதன்முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே.
உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை ‘அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.
அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விலைக்கு பின்னர் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விடுதலை செய்தார்கள்.
மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு)யை நியமிக்கிறார்கள். முதல் முஅத்தீன் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) என நாம் அறிகிறோம்.
பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொன்றார்கள்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே.
ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வாங்கி வேறொருவர் பாங்கு சொன்னபோது, சற்று நேரம் கழித்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘ஏன் இன்னும் பாங்கு கூறவில்லை? என்று வினவினர்.
வேறொருவர் இன்று பாங்கு கூறினாரே!’ என்றனர் அண்ணல். அது கேட்ட ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘பிலாலின் பாங்கு அர்ஷு வரைக்கும் கேட்குமே. இன்று கேட்கவில்லையே என்றுதான் வினவினேன்’ என்றனர்.
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபினீசியாவில் பிலாலே முதல் முஸ்லிம்’ என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர்.
மற்றொரு சமயம் அண்ணலார் வழக்கமாக பால் அருந்திவந்த கோப்பையை கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட போது, இவர்கள் மீது பெரிதும் வெகுண்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபிகளார் வந்ததும் ‘நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக்குறைவாக நடந்து கொண்டார். அவரைக் கண்டித்து வையுங்கள். அல்லது விலக்கி விடுங்கள் என்று சொன்னார்கள்.
அதுகேட்ட அண்ணலார், ஒருவர் ஒரு செயலை ஆற்றும்போது அதில் அவருடைய கவனம் குறையின் அது வேறொன்றில் போய் பதிகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும்போது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறாய்? ஒருவேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சனை ஏற்படின் உன்னையே விலக்கி விடுவேனேயன்றி பிலாலை விலக்கி விடமாட்டேன் என்றனர்.
ஒருமுறை குறைஷிகளை சிறிது குறைவாகப் பேசியதற்காக நபித்தோழர் ஒருவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது சினந்து, அச்செய்தியை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சொன்னபோது, எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமொ அவருடைய மனத்தையா நீர் நோவினை செய்தீர்?’ என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல் பெருமானார். அக்கணமே அவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டார்.
இவர்களை கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்யிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர்.
அண்ணலார் அவர்கள் மேற்கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட இவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்ததும் மதீனாவைக் காணச் சகியாமல் சென்று அங்குள்ள கூலான் என்ற இடத்தில்; வாழ்ந்து வந்தனர். இதன்பின் இவர்கள் தம் வானாளில் இரண்டு தடவைகள்தாம் பாங்கு சொல்லியுள்ளனர்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜெருஸலம் வந்தபோது ளுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்ல கலீபா அவர்களும், மற்றவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.
இரண்டாவது, அண்ணல் நபிகளார் இவர்களின் கனவில் தோன்றி இவர்களை மதீனா வருமாறு அழைக்க அதன்படி மதீனா சென்று அண்ணலாரின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வேண்டியதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.
பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. இதன்பின் திமிஷ்க் சென்று வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டில் தம் 70 வது வயதில் காலமாகி அங்குள்ள பாபுஸ் ஸகீர் என்ற கோட்டை வாயிலின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
மிஃராஜ் சென்று திரும்பிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment