S S AHAMED BAQAVI ▼ Friday, 25 March 2016 அல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் ? أن معاذ بن رفاعة أخبره عن أبيه قال : قام أبو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه و سلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو و العافية فإن أحد لم يعط بعد اليقين خيرا من العافية ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு அழுதார்கள்.பின்பு மக்களை நோக்கி அல்லாஹ்விடம் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேளுங்கள். ஏனென்றால் ஈமானுக்குப்பிறகு ஆரோக்கியத்தை விட சிறந்த ஒரு நிஃமத்தை எவரும் வழங்கப் படவில்லை என்றார்கள். (சுனனுத் திர்மிதி) அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை அதிகமாக நபியவர்கள் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். العفو என்றால் மன்னிப்பு.العافية என்றால் ஆரோக்கியம். மற்றொரு ஹதீஸில் ; நபி (ஸல்) அவர்கள் المعافاة ஐ கேட்கச் சொன்னார்கள். المعافاة என்றால் மக்களுடைய தொந்தரவுகளை விட்டும் நம்மையும், நமது தொந்தரவுகளை விட்டும் மக்களையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பொருள். 1. العفو மன்னிப்பு, 2. العافية ஆரோக்கியம், 3. المعافاة தொந்தரவுகளை விட்டும் பாதுகாப்பு. இந்த மூன்றையும் கேட்கும்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். عن العباس بن عبد المطلب قال قلت : يا رسول الله علمني شيئا أسأله الله عز و جل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سلوا الله العافية في الدنيا والآخرة நபி (ஸல்) அவர்களின் சச்சா அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ்! நான் வழமையாக செய்து வரும்படியான ஒரு துஆவைக் கற்றுத் தாருங்கள் எனக் கேட்ட பொழுது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்றார்கள், மறுநாளும் வந்து அதே கேள்வியைக் கேட்டார்கள், அப்போதும் இதே பதிலை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மூன்றாவது நாளும் இதே கேள்வியைக் கேட்ட பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ; எனது சிறிய தந்தை அவர்களே நான் உங்களை நேசிக்கின்றேன். நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள். (சுனனுத் திர்மிதி) ஆஃபியத் - ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது என்பதினால் நபியவர்கள் அதையே வேண்டும் படி ஏவினார்கள். ஆஃபியத் என்றால் ஆரோக்கியம்.ஆரோக்கியம் என்பது பாதுகாப்பு என்று அர்த்தம்.பாதுகாப்பு என்றால் உடலுக்கு நோய் வராமல் பாதுகாப்பது என்பது மட்டும் அதன் பொருளல்ல.மனிதனுக்கு தீங்கான,அவனுக்கு கெடுதியையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய எல்லாக் காரியங்களை விட்டும் பாதுகாப்பது என்பது அர்த்தம். يا أيها الناس لا تتمنوا لقاء العدو ، وسلوا الله العافية ، நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; எதிரிகளை சந்திக்க வேண்டும், யுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேளுங்கள். (புகாரி) மேற்கூறிய ஹதீஸின் மூலம் யுத்தம் வராமல் பாதுகாப்பு பெறுவதற்கும் ஆஃபியத் என்று சொல்லப்படும் எனத் தெரிகிறது. அது போல நோயை விட்டும் உலகிலும், வேதனையை விட்டும் மறுமையிலும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பதற்கும் ஆஃபியத் என்று சொல்லப்படும்.எனவே இந்த துஆ மனிதனுக்கு எல்லா வகையான வெற்றியையும் பெற்றுத் தந்து விடும். ஞானிகள், மற்றும் மேன்மக்கள், தீனுடைய விஷயத்தில் எவ்வித தடைகள் கஷ்டங்கள் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அப்பாஸ் பின் முர்ஸி (ரஹ்) அவர்கள் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்களுடைய பிரதானமான சீடராக இருந்தார்கள். அப்பாஸ் பின் முர்சி (ரஹ்) அவர்கள் ஒருநாள் வேதனையோடு இருந்த போது அவரைப் பார்க்க வந்தவர் அவரிடம் நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்கிறேன் என்றார். அப்பாஸ் (ரஹ்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இதையே மூன்று முறை கூறிய போது அப்பாஸ் (ரஹ்) அவர்கள், எனது நிலையைப் பார்த்து நீங்கள் ஆஃபியத் அற்ற நிலையில் நான் இருப்பதாக விளங்கி விட்டீர்கள். நான் எந்த நிலையில் இருக்கிறேனோ அது தான் எனக்கு ஆஃபியத். ஏனென்றால் நீங்கள் எதை ஆஃபியத் என்பதாக நினைக்கின்றீர்களோ அதை நான் கேட்கவில்லை. எந்த ஆஃபியத் எனக்கு கிடைப்பது நலவாக இருக்குமோ அந்த ஆபியத்தை அல்லாஹ்விடம் நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். ஒருநாள் அவர்கள் மதினாவில் ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ருக்கு ஜியாரத் செய்வதற்கு சென்றிருந்த போது அங்கு ரிஜாலுல் கைப் (மறைந்தும் வாழும்) வலிமார்கள் நிற்பதை தனது அருள்பார்வையினால் பார்த்து இது துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் என்பதை விளங்கிக் கொண்டார்கள். தன்னோடு வந்தவரிடம் இது துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம். எனவே உனக்கு எது தேவையோ அதைக் கேள் என்றார்கள்.அவரோ யாஅல்லாஹ் எனக்கு ஒரு தீனாரைத் தா என்றார். அப்பாஸ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத் தையும், மன்னிப்பையும் எல்லா விதமான முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பையும் கேட்டார்கள். ஜியாரத் முடிந்து மதீனா நகரின் எல்லையில் ஒருவர் இவருக்கு ஒரு தீனார் யாசகம் கொடுத்தார். ஊருக்குள் சென்ற போது அங்கு அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். ஜியாரத்தின் போது நடந்த விஷயத்தை தனது கஷ்பின் மூலம் தெரிந்து கொண்டு அந்த மனிதரிடம் என்ன மனிதரே! நீங்கள் அல்லாஹ்விடம் இவ்வளவு சாதாரண விஷயத்தை மட்டும் கேட்டு விட்டீர்களே! அப்பாஸ் முர்ஸியைப் போல ஆஃபியத்தைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார்கள். அப்பாஸ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்டார்கள். இப்போது அவருக்கு கொஞ்சம் சுகவீனமாக இருப்பதைக் கண்டு அவர் நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்கிறேன் என்ற போது அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் எதை ஆஃபியத்தாக நினைக்கின்றீர்களோ அதை நான் அல்லாஹ்விடம் கேட்கவில்லை. நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனது விஷயத்தில் எதை அல்லாஹ் ஆபியத்தாக நினைக்கிறானோ அதையே நான் அவனிடம் கேட்கிறேன்.ஆஃபியத் என்பது, உடலில் நோய் மற்றும் எவ்வித தங்கடமும் வராமல் இருப்பது மட்டும் அதனுடைய அர்த்தமல்ல என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அனைவர்களையும் ஆஃபியத்தை கேட்கும்படி சொன்னார்கள் மட்டுமல்ல, தானும் ஆஃபியத்தைக் கேட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது விஷம் கலந்த ஆட்டின் இறைச்சி பரிமாறப்பட்டு அதை சாப்பிட்டதின் விளைவாக நபியவர்களின் மரண நேரத்தின் போது அன்று சாப்பிட்ட விஷம் இப்போது வேலை செய்கிறது, எனது நரம்புகள் துண்டிக்கப்பட்டு வேதனையளித்துக் கொண்டிருக்கிறது என்றார்கள். ஆரோக்கியத்தைக் கேட்ட நபியவர்களுக்கும் இந்த நிலை வந்தது, மட்டுமல்ல அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் இந்த துஆ கேட்டார்கள். அவருக்கு குகையில் தீண்டிய பாம்பினுடைய விஷத்தின் காரணமாக வஃபாத்தானார்கள், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்டார்கள். அவர்களும் தொழுகையில் குத்தப்பட்டு ஷஹீதானார்கள். உஸ்மான் (ரலி) அவர்களும் ஆஃபியத்தைக் கேட்டார்கள் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். அலி (ரலி) அவர்களும் ஆஃபியத்தைக் கேட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே ஆஃபியத் என்பது உடல் ரீதியான வேதனை மற்றும் அசௌகரீகம் வரக்கூடாது என்பது மட்டுமல்ல. தீனுடைய, இபாதத்துடைய விஷயத்தில் எவ்வித ஆபத்தும் வராமல் இருப்பது தான் முதன்மையான ஆஃபியத் என்பதாக மேன்மக்கள் கருதினார்கள். அது சரியான முறையிடுதலாகும்.ஆக நாம் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும் கேட்க வேண்டும். நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் ஒருமுறை இப்படி பேசினார்கள். யாஅல்லாஹ்! நான் அல்லாஹ்வாக இருந்து நீ மூஸாவாக இருந்தால் நீ எதை என்னிடம் கேட்பாய்? எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் ஆஃபியத்தைக் கேட்பேன் என்றான். மேற்கூறிய நிகழ்வின் மூலம் ஆரோக்கியம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரிகிறது. கியாமத் நாளின் போது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய நிஃமத்களைப் பற்றி கேள்வி கணக்கு கேட்பான். அதில் முதலாவது கேள்வி, உனக்கு நான் ஆரோக்கியத்தை தரவில்லையா....? என கேட்பான். ஆரோக்கியம் என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் முதன்மையான முக்கியமான நிஃமத்தாகும். அந்த நிஃமத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியதற்காக வேண்டி நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆரோக்கியம் இருக்கும் போது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. பணம், பொருள் அனைத்தையும் எதிர் பார்க்கின்றோம். கிடைத்தால் சந்தோஷப்படுகிறோம், கிடைக்கவில்லையென்றால் கவலைப் படுகிறோம். ஆனால் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது நமக்கு ஆரோக்கியமாக தெரிவதில்லை. அல்லாஹ்விடம் அதிகமாக ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும். அது கிடைக்கப் பெற்றதற்காக அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும். மட்டுமல்ல கிடைத்த ஆரோக்கியத்தைப் உடல் நலத்தைப் பேண வேண்டும். #ஆக நிறைவாக, ஆரோக்கியம் என்பது பணம் காசு இருப்பது மட்டுமல்ல,உடல் நலத்தை,மனநலத்தை,தீனுடைய நலத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.முக்கியமாக உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்திற்காக அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.பணம் சம்பாதிப்பதற்காக வேண்டி உடல் நலத்தைக் கெடுத்து விடக்கூடாது.மார்க்கத்தின் நன்மைகளையும் கெடுத்து விடக்கூடாது. இப்போது மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால்,இளமையில் பணம் பணம் என்று ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இறுதியில் முதுமையில் இழந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்கிறார்கள். ஆக பணத்திற்காக ஆரோக்கியத்தை இழந்து அந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பணத்தை செலவு செய்கிற அந்த நிலை வராமல் வரும் முன் காப்போம்.எல்லா நலனையும் ஆரம்பத்திலேயே நாம் பாதுகாத்து அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேட்டு அந்த ஆரோக்கியத்தைப் பெறுவோம்.அல்லாஹ் நல்லருள் புரிவானாக. قيل لحكيم ما العافية قال ان يمر بك اليوم بلا ذنب ஆஃபியத் என்றால் என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள்,பாவமில்லாமல் உன்னை ஒரு நாள் கடந்து செல்வதாகும் என பதிலளித்தார்கள். பதிவேற்றம் செய்பவர்; மவ்லவி,ஹாபிழ். முஹம்மத் ஷாபி வாஹிதி.
No comments:
Post a Comment