Monday, 28 April 2014

நடுநிலையே சமுதாயத்தின் வெற்றி

நடுநிலையே சமுதாயத்தின் வெற்றி

''ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.பிரிந்துவிடாதீர்கள் . (அல்குர்ஆன்  )
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மேற்கொண்ட முதல் பணி அவ்ஸ், கஃஜ்ரஜ் கோத்திரத்தாரின் 200 ஆண்டுகால விரோதப் போக்கை ஒழித்து அன்சாரிகள் எனும் கௌரவ பெயரோடு அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினார்கள்.
அரபு மக்கள் அறியாமை காலத்தில் குலப் பெருமை ,கோத்திரப் பெருமை கொண்டு நீண்ட காலமாக சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.
நபிகளாரின் வருகைக்குப் பின்னால் முஸ்லிம்கள் எனும் பொதுப் பெயரோடு அழைக்கப்பட்டார்கள்.
நபிகளாரின் இந்த மாபெரும் புரட்சிக்கு பெரும் காரணம்  அவர்கள் கடைபிடித்த நடுநிலைப் போக்குதான் .
''நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்'' (3:159)
ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தனர். உடனே நபியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ''அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவரையணுகி, ''இப்பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்குத் தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை 'திக்ர்' செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்'' என்று கூறிவிட்டு, ஒருவரை அழைத்து, ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு இந்த அம்சத்தையே போதித்தார்கள். 'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)
'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்)
ஹஜருல் அஸ்வத் வரலாறு
மக்காவில்  ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை நாட்டுகின்ற சந்தர்ப்பம் வந்தபோது பெரும் சச்சரவு எழும்பிற்று. ஒவ்வொரு குலத்தாரும் இந்தப் புனிதப் பணியினைத் தாம்தான் செய்ய வேண்டும் என்று எண்ணினர். பெரும் போர் ஒன்று மூண்டுவிடுவது போன்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. நான்கு நாட்கள் இந்தச் சச்சரவு நடைபெற்ற வண்ணமாயிருந்தது.

ஐந்தாம் நாள் குறைஷிக் குலத்தின் மிக வயதான முதியவர் ஒருவர், ‘நாளை அதிகாலை நேரத்தில் முதலாவதாக எவர் வருகிறார்ரோ அவரையே நடுவராக நியமித்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார். எல்லோரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

இறைவனின் செயலைப் பாருங்கள்: அடுத்த நாள் அண்ணலாரே முதன்முதலாக கஅபாவிற்கு வந்தார்கள்! எனவே அண்ணலார், ‘எந்தெந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை அதன் இடத்தில் நாட்ட விரும்புகிறார்களோ அவர்கள் தத்தமக்கென்று ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று ஆனையிட்டார்கள். பின்னர், அண்ணலார் (ஸல்) தம் திருக்கரங்களால் ஒரு போர்வையை விரித்து அதன்மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்தார்கள்.

பிறகு அத்தலைவர்களிடம் அப்போர்வையின் மூலைகளைப் பிடித்து, கல்லைத் தூக்கும்படிக்  கூறினார்கள். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அக்கல்லை தாமே எடுத்து அதன் இடத்தில் பதித்து விட்டார்கள். இவ்விதம் ஏராளமான உயிர்களும் உடைமைகளும்  சேதமாகயிருந்த ஒரு பெரும் கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய அந்த தன்னிகரற்ற சமூகமானது பரந்த மனப்பான்மையோடும், நடுநிலை பேனும் முக்கியமான பன்போடும், எந்த விஷயத்தையும் நிதானமாக அனுகும் போக்கோடும் சிறந்து விளங்கியதால் தான் அவர்களால் தம் இலக்கை இலகுவாக எய்த முடிந்தது.
இன்று உலகலவில் ஒரு தாய் மக்களாக இருக்கும் இந்த பரந்து விரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு தொற்று நோயாக வீண் வாதங்களும், இயக்க வெறிகளும் தாண்டவமாடுகின்றன.
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்).
ஒருவர் முஸ்லிமாக இருப்பினும்கூட, நன்மையான விஷயங்களில் மாத்திரமே உதவ வேண்டும். தீமைகளுக்குத் துணைபோகக்கூடாது. தனது இனத்திற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அநீதியிலும், அத்துமீறலிலும் தீமையான விஷயங்களிலும் துணை போவதே இனவாதமாகும் என்பதை மேற்கண்ட  ஹதீஸின் மூலம் பார்த்தோம்.

மாற்று மதத்தவராயினும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. இதற்கு நபி முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்விலே நடந்த ஒரு சம்பவம் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபிகள் வியப்பாகக் கேட்கவே, "இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?" எனக் கூறினார்கள்.
இன்று யுத்தம், பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவம், மதத் தீவிரவாதம், வறுமை, சுயநலமிக்க ஆட்சியாளர்கள், உட்பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள்,  மோசடி, கடத்தல், தீவிர மேற்கத்திய மோகம், வரட்டுத்தனம் முரட்டுத்தனம் என நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு இன்று உதாரணமாக காட்டப்படுவது முஸ்லிம்கள் தான் என்பது துரதிர்ஷ்டவசமான ஓர் உண்மை.
இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி முஸ்லிம் சமுதாயம் எல்லா விதமான வேற்றுமைகளுக்கு அப்பால் சென்று ஒற்றுமையைப் பேனுவதே.
ஒற்றுமையை பேண வேண்டுமெனில் நபிகளார் வழிகாட்டுதலின் படி பல்லின மக்களிடையே நாம்  நடுநிலை போக்கை கையாள வேண்டும்.அப்போதுதான் நல்லிணக்கமும் நம் சமூக வெற்றியும் தொடரும்.
'உங்களது இந்த உம்மத் ஒரே உம்மத்தாகும்  (அல்முஃமினூன் 52)

உம்மத் என்பது முஸ்லீம்களை மட்டும் குறிக்கும் பதமல்ல. முஸ்லிமல்லாதவரையும் குறிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
முஸ்லிம் சமுதாயம் வெற்றி இலக்கை அடைய வேண்டுமெனில் சில அணுகுமுறைகளை கையாளுவது மிக்க அவசியமாகும்.
தீமையான சமூக விரோதச் செயல்களுக்கு முஸ்லிம்கள் துணைபோகாதிருக்க வேண்டும். ஆடம்பர, வீண்விரயங்களை முற்றாக தவிர்த்திட வேண்டும் , வீடு வாகனங்கள் போன்றவற்றை தேவைக்கேற்ற அளவு மட்டும் அமைத்துக் கொள்ள வேண்டும் .
வறுமை, பிணி போன்ற கஷ்டங்களினால் கஷ்ட்டபடுவோர் எந்த மதத்தவராயினும் அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுவதை இஸ்லாம் மிகவும் வரவேற்கிறது.
 தவறான விஷயங்களுக்கு பிற மத்தவர்களைக் காட்டி, அவற்றைத் திருத்த முனைவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
 பிற சமூகத்தவரது மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களது மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மார்க்க விஷயமாயின் சமூகச் சூழலைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாகச் செயற்பட வேண்டும்.

وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்.     (அல்-குர்ஆன் 2: 143).


29.04.2014

No comments:

Post a Comment