Friday, 25 August 2023

நஃபீஸா மிஸ்ரிய்யா- ரஹ்

*வரலாற்றில் ஓர் ஏடு-341*

பெருமானாரின் குலக்கொழுந்து இமாம் ஹஸன் (ரலி) அவர்களுடைய பேரர் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களுக்கு ஹிஜ்ரி 145ம் ஆண்டு மக்காவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களும் அவர்களின் துணைவியார் ஜைனப் (ரஹ்) அவர்களும் மகிழ்ச்சி அடைந்து *நஃபீஸா* என பெயரும் வைத்தனர்.

நடக்கும் பருவத்தை  நஃபீஸா அடைந்த போது அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு மதீனா வந்து, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித ரவ்ளாவின் முன் நின்று *("தலைவரே! தங்கள் பேத்தியை தாங்கள் பொருந்திக் கொள்ள வேண்டும்!" என்று கூறி)* ஜியாரத் செய்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். 

(ஒரு அறிவிப்பில் இரவில் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் *"உம்முடைய மகளை நான் பொருந்திக் கொண்டேன். அல்லாஹ்வும் உம் மகளை பொருந்திக் கொள்வான்!"* என கூறினார்கள்.) 

வளர்ந்து எட்டு வயதை அடைகிற போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழாவாக ஆனார் நஃபீஸா. 

பருவ வயதை அடைவதற்குள்ளாக அரபி இலக்கணம், இலக்கியம் போன்ற கல்வியைப் பயின்றார் நஃபீஸா. 

பருவ வயதை அடைந்ததற்குப் பின்னர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் முஅத்தாவையும், ஹதீஸ் துறைக்கல்வியையும் பயின்று ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றார்கள்.

திருமண வயதைத் தொட்டு நிற்கிற போது மிகச் சிறந்த மார்க்க மேதையாக திகழ்ந்தார்கள். 

பலரும், பல செல்வந்தர்களும், பல பாரம்பர்யமான குடும்பத்தினரும் பெண் கேட்டு வந்த போதும் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்ட ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்கள்.

இறுதியாக இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரர் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்களின் மகனார் இஸ்ஹாக் அல் முஃதமன் (ரஹ்) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.

திருமணம் முடித்த பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நஃபீஸா (ரஹ்) அவர்கள் மதீனாவில் பல்வேறு மார்க்க சேவைகளை மக்களுக்கு ஆற்றி வந்தார்கள். 

எங்கு காணினும் இவர்களின் மார்க்க அறிவும், ஹதீஸ், தஃப்ஸீர் புலமையும் பரவலாக பேசப்பட்டு வந்தது. மதீனாவில் மிகப்பெரிய புகழை நஃபீஸா (ரஹ்) அவர்கள் பெற்றார்கள்.

வணக்க வழிபாடுகளில் மிகப்பெரிய பேணுதல் உள்ளவர்களாக திகழ்ந்ததோடு, எந்நேரமும் குர்ஆனை ஓதக்கூடியவர்களாகவும், அதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாகவும் விளங்கினார்கள்.
முப்பது ஹஜ் செய்திருக்கும் அவர்கள் இரவு வணக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

அவர்களின் 48 வது வயதில் ஹிஜ்ரி 193 ல் மதீனாவில் இருந்து மிஸ்ருக்கு கணவரோடு இடம் பெயர்ந்தார்கள். அங்கேயும் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். பல்வேறு மார்க்க மேதைகள் இவர்களிடம் கல்வி பயின்றார்கள்.

அதில் குறிப்பிடும் படியாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் பிஷ்ர் இப்னுல் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் நஃபீஸா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் வகுப்பில் பங்கேற்று ஹதீஸ் துறை சம்பந்தமான கல்வியைப் பெற்றார்கள். 

குறிப்பாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் இருந்து சில நபிமொழிகளை அறிவிக்கவும் செய்கின்றார்கள்.

மிஸ்ருக்கு வந்த புதிதில் ஆண்களும், பெண்களும் திரளாக வந்து அவர்களிடத்திலே கல்வி கற்க வருவதும் போவதுமாய் இருப்பார்கள். மிகப் பெரிய இட நெருக்கடி ஏற்பட்ட போது நஃபீஸா (ரஹ்) அவர்கள் மக்களிடம் *"அடிக்கடி வருவதை குறைத்துக் கொள்ளுமாறு"* கூறினார்கள்.

அப்போது மிஸ்ரின் ஆளுநராக இருந்த ஸாரி இப்னு அல் ஹிகம் அவர்கள் நேரில் வந்து *"உங்கள் மார்க்க சேவைக்காக நானே ஒரு விசாலமான வீட்டை வாங்கித் தருகின்றேன்!"* என்று கூறி ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தார்கள்

மேலும், நஃபீஸா (ரஹ்) அவர்கள் அஹ்லே பைத்தாக இருந்ததால் அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்கள். 

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் ஒருவரை அனுப்பி *துஆ செய்யுமாறு* வேண்டிக்கொள்வார்கள். அனுப்பப்பட்ட அவர் வருவதற்குள்ளாகவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நோய் குணமாவதை உணரவும் செய்தார்கள்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது முன்பு போல ஒருவரை அனுப்பி நோய் குணமாக துஆச் செய்யுமாறு நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் கோரிக்கை வைத்த போது *"அல்லாஹ் அவருக்கு அவனுடைய சங்கையான திரு(முகத்தை) அனுபவிக்கச் செய்வானாக!"* என்று துஆச் செய்தார்களாம். 

இதை அந்த நபர் வந்து சொன்ன போது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து வஸிய்யத் செய்தார்கள். 

அந்த வஸிய்யத்தில் *தம்முடைய ஜனாஸாத் தொழுகையில் நஃபீஸா (ரஹ்) அவர்கள் பங்கேற்று தனக்காக துஆச் செய்ய வேண்டும்* என்று குறிப்பிட்டார்கள். 

அதே போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) இந்த உலகத்தை விட்டு விடை பெற்றதன் பின்னர் அவர்களின் ஜனாஸா நஃபீஸா (ரஹ்) அவர்களின் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டு அங்கேயே ஜனாஸாத் தொழுகையும் நடத்தப்பட்டது. நஃபீஸா (ரஹ்) வீட்டிலிருந்தவாறே ஜனாஸாத் தொழுகையை பின் தொடர்ந்து தொழுதார்கள்.

*"அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுக்கு அருள் புரிவானாக! இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் உளூவை அழகிய முறையில் செய்யக்கூடியவராக இருந்தார்கள்!"* என்று சிலாகித்துக் கூறி துஆச் செய்து விட்டு கடுமையாக அழுதார்களாம்.

மிஸ்ருக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து மகத்தான மார்க்க சேவை செய்து, பேணுதலான வாழ்க்கையை மேற்கொண்ட அம்மையார் ஹிஜ்ரி 208ம் ஆண்டு தங்களது பாட்டனார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வயதான 63ம் வயதில் நோய் வாய்ப்படுகின்றார்கள்.

அந்நிலையிலும் நோன்பு வைத்திருந்த அம்மையாரை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து விட்டு *"நீங்கள் உடனடியாக நோன்பு திறக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு மருத்துவம் பார்க்க முடியும்!"* என்று கூறினார்கள். 

நோன்பு திறக்க மறுத்த நஃபீஸா (ரஹ்) அவர்கள் *"அல்லாஹ்விடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக 'நான் நோன்பு வைத்த நிலையில் என் ரூஹ் பிரிந்து, ரப்பை சந்திக்க பிரியப்படுவதாக' நான் பிரார்த்தித்து வருகின்றேன்!"* என்று கூறினார்கள்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் நோன்பு திறக்க மறுத்துவிடவே அங்கிருந்து மருத்துவர்கள் கிளம்பி விட்டார்கள். 

இதற்கிடையே தங்களின் வீட்டிலேயே தனக்கான மண்ணறையை அவர்களே தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

மருத்துவர்கள் கிளம்பியதும் குர்ஆனைக் கையில் எடுத்து சூரா அல் அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள் 128வது வசனமான *"அவர்களுக்கு அவர்களது ரப்பிடம் – இறைவனிடம் தாருஸ்ஸலாம் – சாந்தியின் இல்லம் உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லறங்களுக்காக! மேலும், அவன் அவர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்!"* என்ற வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது, நோன்பு நோற்றிருந்த நிலையில் அம்மையாரின் ரூஹ் பிரிந்தது. 
இன்னா லில்லாஹ்…

தீனறிந்த மக்களுக்கு மத்தியில் *நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா* என்றழைக்கப்படும் அம்மையாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!!

(நூல்: அல் மவாயிளு, வல் இஃ(த்)திபாரு பி திக்ரில் ஹி(த்)ததி வல் ஆஸார் லி இமாமி அல் மக்ரீzஸீ)

Tuesday, 7 March 2023

பராஅத் இரவு 2023

*பராஅத் இரவு பற்றி குத்பு நாயகம் பேசுகிறார்கள்*

சங்கை மிக்க ஷஅபான் மாதத்தின் மத்திய இரவிற்கு பராஅத் இரவு என்றழைக்கப்படும்.

பராஅத் என்னும் பாக்கியம் பெற்ற இனிய இவ்விரவின் இனிமையையும் மகிமையினையும் குறித்து குவலயத்திரு குருநாதர் குத்புல்அக்தாப் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு  அன்ஹு அவர்களின் ஞானக் கருவூலமாம் ‘குன்யத்துத்தாலிபீன்’ எனும் கிரந்தத்தின் சாரமே இக்கட்டுரை.

பராஅத் இரவைப் பற்றிய ஏராளமான ஹதீஸ் சான்றுகள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

இது கௌது நாயகம் ரழியல்லாஹு  அன்ஹு அவர்களின் ஆன்மீக சீடர்களுக்காக, அவர்கள் அமல்களில் ஆர்வம் செலுத்துவார்கள் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை. 

*பெருநாள்*

குத்பு நாயகம்  ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
ஈதுல் பித்ரு, ஈதுல் அழ்ஹா இவ்விரு நாட்களும் முஸ்லிம் மனிதர்களுக்கு பெருநாளாக அமைந்தது போல், வானவர்களுக்கும் இரு பெருநாள் உண்டு. 
அவை:
1) லைலதுல் பராஅத் 
2) லைலதுல் கத்ரு 

அதற்கான விளக்கத்தையும் அவர்களே கூறுகிறார்கள். மனிதர்கள் உறங்குபவர்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு பகலிலும், உறக்கமில்லா வானவர்களுக்கு இரவிலும் பெருநாளை அமைத்தான். அந்த இரவிலும் யார் விழித்திருந்து வணக்கம் புரிவார்களோ அவர்களுக்காக வானவர்களும் பிழை பொறுக்கத் தேடுவர்.

மேலும் பராஅத் இரவு தெளிவு படுத்தப்பட்டதையும் லைலதுல் கத்ரு இரவு மறைக்கப்பட்டதையும் பின் வருமாறு விவரிக்கிறார்கள்.

லைலதுல் கத்ரு, அருள் சொரியும் இரவு, கருணாகரன் அல்லாஹ் தன் கருணையை அள்ளி வழங்கும் அந்த இரவு ஒன்றே போதும் என்று குறுமதி கொண்டு ஏனைய கால வழிபாடுகளை விட்டு விடக் கூடும். எனவே, லைலதுல் கத்ரு மறைக்கப்பட்டது.

பராஅத் இரவு தீர்ப்பு வழங்கப்படும் இரவு, கட்டளைகள் இறங்கும் இரவு அந்த இரவில் மகிழ்ச்சியும் உண்டு, மன நொம்பலமும் உண்டு.

 அவர்களின் எண்ணங்கள் ஏற்கப்படுவதும் உண்டு. எடுத்து ஏறியப்படுவதும் உண்டு. நலமும், நஷ்டமும் நிறைந்த இவ்விரவை பயன்படுத்தி நன்மையை பெற்றுக் கொள்வதற்காக இறைவன் பராஅத் இரவை தெளிவுபடுத்தினான்.

*சோபனம்*

திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தின்ணைத் தோழர்களில் ஒருவரும், பூமான் நபியின் இதயத்தில் இடம் பெற்ற  ஹதீது கலையின் சக்கரவர்த்தியுமான அபூ ஹுரைறா ரழியல்லாஹு  அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரு நாள் இரவு, வானவர் கோமான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,
நாயகமே, தலையை உயர்த்தி வானத்தை பாருங்கள் என்றார்கள். தலையை உயர்த்திய தாஹா நபியவர்கள் இது எந்த இரவு என வினவினார்கள்.

இந்த இரவில் இறைவன் தன் அருள் வாசலில் பல வாசலை திறந்து விட்டான்.
இறைவனுக்கு இணை வைத்தவர்கள் குறி, ஜோதிடம், மது, மாது, வட்டி இவைகளில் ஈடுபடுவோரை தவிர்த்து மற்றோரை மன்னித்து விட்டான். அவர்களும் கூட தன் பாவம் உணர்ந்து தவ்பா செய்வார்களாயின் அவர்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்றார்கள்.

இரவின் நாளிலொரு பகுதி சமீபித்த போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்து, நாயகமே, தலையை உயர்த்துங்கள் என்றார்கள். அவ்வமயம் சுவனத்தின் வாசல் திறக்கப்பட்டிருந்தது.

 முதல் வாசலில் நின்றிருக்கும் வானவர்
طوبى لمن ركع في هذه الليلة
 இந்த இரவில் ருகூவு செய்பவர்களுக்கு சோபனம் என்றார்.  

இரண்டாம் வாசலின் வானவர் 
طوبى لمن سجد في هذه الليلة
இந்த இரவில் ஸஜ்தா செய்பவர்களுக்கு சோபனம் என்றார்.

மூன்றாம் வாசலின் வானவர் 
طوبى لمن دعا في هذه الليلة
இந்த இரவில் துஆ (பிரார்த்தனை) செய்வோருக்கு சோபனம் என்றார்.

நான்காம் வாசலின் வானவர் 
طوبى للذاكرين في هذه الليلة
இந்த இரவில் இறை தியானத்தி(திக்ரி)ல் ஈடுபடுவோருக்கு சோபனம் என்றார்.

ஐந்தாம் வாசலின் வானவர் 
طوبى لمن بكى من خشية الله في هذه الليلة
இந்த இரவில் யார் அல்லாஹ்வைப்  பயந்து  அழுதாரோ அவருக்கு  சோபனம் என்றார்.

ஆறாம் வாசலின் வானவர் 
طوبى للمسلمين في هذه الليلة
இந்த இரவில் முஸ்லிம்களுக்கு சோபனம் என்றார்.

ஏழாம் வாசலின் வானவர், 
هل من سائل فيعطى سؤاله
யாரும் வேண்டுவோர் உண்டா? அவரின் தேவை வழங்கப்படும் என்றார்.

எட்டாம் வாசலின் வானவர் 
هل من مستغفرفيغفرله
பிழைகளை மன்னிக்க வேண்டுவோர் யாரும் உண்டா? அவரின் பிழைகள் மன்னிக்கப்படும் என்றார்.

ஜிப்ரீலே எதுவரை சுவன வாசல்கள் திறந்திருக்கும் என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவிய போது, இரவின் முற்பகுதியிலிருந்து ஃபஜ்ரு வரை என பதிலளித்தார்கள்.

كم من كفن مغسول
 و صاحبه في السوق مشغول 
و كم من قبر محفور
 و صاحبه بالسرور مغرور 
و كم من فم ضاحك
 و هو عن قريب هالك
وكم من منزل كمل بناؤه
 و صاحبه قد ازف فناؤه

எத்தனையோ பேரின் மரண ஆடைகள் (கபன்) கழுவப்படுகிறது. அவர்களோ கடை வீதிகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். 

எத்தனையோ பேரின் கப்ருகள் தோண்டப்பட்டிருக்கும். அவர்களோ மகிழ்ச்சியிலும், மறதியிலும் மூழ்கிப் போயிருப்பார்கள்.

எத்தனையோ வாய்கள் சிரித்துக் கொண்டிருக்கும், ஆனால் அவர்களோ நாசத்தை நெருங்கிக்கொண்டிருபார்கள்.   

கட்டி முடிக்கப்பட்டு நிறைவை எட்டிக் கொண்டிருக்கும் தன் மாளிகைகளின் கற்பனையில் மூழ்கியிருப்பார்கள். ஆனால், அவர்களின் மரண வாசலோ திறந்து வைக்கப்பட்டிருக்கும். 

இது போன்று ஏமாற்றங்கள் நிகழ்ந்து விடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.

*பராஅத் இரவை உயிர்ப்பித்து கப்ரில் உய்வடைவோம்*

முஹம்மது பின் அப்துல்லாஹ் ஜாஹிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

எனது நண்பர் ஒருவர் இறந்து விட்டார். ஆப்த நண்பர் அவரை நானே முன் நின்று குளிப்பாட்டி, தொழ வைத்து, நல்லடக்கம் செய்தேன். அதன் பின்னர் எட்டு மாதங்கள் வரை அவரை மறந்து விட்டேன். ஒரு நாள் அவரின் ஞாபகம் என்னுள் ஏற்பட்டது. அன்றிரவே அவரை கனவில் கண்டேன்.

பேதலித்துப் போன முகமாய், மஞ்சணிந்து அகோரமாக இருந்தார். அதிசயித்துப் போன நான் பரிதாபப் பட்டவனாக அவருக்கு ஸலாம் சொன்னேன். அவரும் பதில் கூறவில்லை. ஏன் பதில் ஸலாம் கூறாதிருக்கிறீர்?  எனக் கேட்டேன். பதில் ஸலாம் கூறுவதும் ஒரு வகை வணக்கத்தை சார்ந்தது. எங்களுக்கோ வணக்கத்தின் வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்றார்.

ஏன் உம் முகம் கருத்து சுருங்கி போனது எனக் கேட்டேன். ஆமாம் என்னை நீங்கள் அடக்கி விட்டு சென்ற பின் ஒரு மலக்கு வந்தார். கடந்து போன என் வாழ்வின் தீய செயல்களை எடுத்துக் காட்டினார்.தூண் போன்ற தடியைக் கொண்டு என்னை அடித்தார். எனது கப்ரு எனது இரட்சகனை நீ வெட்கப்பட வேண்டாமா? என்று கேட்டு என்னை நெருக்கியது.
அதனால், எனது இரு விலா எலும்புகளும் ஒன்றோடு ஒன்று நெருங்கி நொறுங்கிப் போய் விட்டது.

இந்த தண்டனை இந்த பிறை பிறக்கும் வரை இருந்தது. ஷஅபான் பிறை பிறந்த உடன்  வானவரே இந்த மனிதரை வேதனை  செய்வதை நிறுத்தும். இந்த மனிதன் இந்த மாதத்தின் மத்திய பராஅத் இரவில் கண் விழித்து வணங்கினான். அன்றைய பகல் பொழுதில் நோன்பிருந்தான் என ஒரு அசரீரீ வந்தது. பின்னர் சுவர்க்கத்தைக் கொண்டும், ரஹ்மத் கொண்டும் எனக்கு நன்மாராயம் சொல்லப்பட்டது என்று அவர் கூறியதைக் கேட்டதும் அதிசயமடைந்து கண் விழித்தேன்.       (நூல் ஜுஹ்ரதுர் ரியாழ்)


வல்ல ரஹ்மான் இது போன்ற இரவுகளின் புனிதத்தால் விதிகள் நிர்ணயிக்கப்படும் இவ்விரவில் விழிகள் திறந்து வணக்கம் செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன். 

 அவனின் அருள் பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்ப்பானாக,

 நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மைப் பேரன்பை உள்ளத்தில் நிறைந்திருக்கச் செய்வானாக ஆமீன். 

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.

தொகுப்பு: TSA அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி 
ஆசிரியர் - அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ் 
98415 67213

*பாக்கியம்  நல்கும் பராஅத் இரவு*

*பராஅத் இரவு என்றால் என்ன ?*

 ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத்செய்யப்பட்டஇரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும். 

 'பராஅத்' எனும் அரபி சொல்லுக்கு  விடுதலை என்பது பொருளாகும். புனித மிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு 'லைலதுல்பராஅத்' (விடுதலைபெறும்இரவு) என பெயர் வந்தது. (நூல்: ரூஹுல் பயான்)

*கிப்லா திருப்பப்பட்டதும் பராஅத் நாளில் தான்*   

மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு சென்ற பின் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி தொழுமாறு திருப்பப்பட்டார்கள். அப்படியே தொழுது வந்தார்கள். ஆனால் அவர்களின் உள்ளமெல்லாம் புனித கஅபாவை முன் நோக்கித் தொழ வேண்டும் என்ற ஆசையே நிறைந்திருந்தது.

எனவே எழில் கஅபாவை முன்னோக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் தொழுகையிலும் கூட தன் தலையை உயர்த்தி வஹி வருகிறதா என பார்த்து வந்தார்கள்.

 அண்ணலின் பிரியம் இங்கனம் இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் என்ன இன்னொரு பிரியமா? 

தன் நேசர் விரும்புவதையே தானும் விரும்பும் நாயன் நாயகத்தின் எண்ணத்தை ஏற்று அருள் வசனத்தை அருளினான்.

قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ

(நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக.
(அல்குர்ஆன் 2: 144)

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு நடைபெற்றதும் ஷஃபான் மாதத்தின் மத்திய நாளிலே தான் என்று தஃஸீர் இபுனு கதீரில் கூறப்பட்டிருக்கிறது. எனினும் இத்தகவலை இக்காலத்தின் தஃஸீர்களிலே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.

*ஸலவாத் ஆயத் அருளப்பட்டதும் பராஅத்திலே தான்* 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.  (அல்குர்ஆன் 33:56)

என்ற சிறப்பு மிகு ஆயத் அருளப்பட்டதும் இந்த நாளிலே தான் என்று இமாம் கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாக "மாதா ஃபீ ஷஃபான்" என்ற நூலில் புனித மக்கா ஷரீஃப் முஃப்தி அஸ்ஸெய்யிது அலவி மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகிறார்கள். 

*இரவில் தொழுகை, பகலில் நோன்பு*

 கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

ஷஃபான் மாதத்தின் 15 ம்நாள் வந்து விட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள், பகலில் நோன்பு வையுங்கள்.

 ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் (இரணம்) வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். இவ்வாறு சுபுஹ் நேரம்வரை சொல்லிக் கொண்டேயிருப்பான்.              
                                                                                      அறிவிப்பாளர்: ஸையிதுனாஅலி (ரலியல்லாஹுஅன்ஹு) 
நூல்கள்: இப்னுமாஜா 1388, பைஹகி - ஃபீ ஷுஃபில் ஈமான் 3822

*கப்ரு ஜியாரத்*

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிகிறார்கள்:

ஒருநாள் இரவு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்).

 அவர்களோ ஜன்னத்துல்பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள்.

 (நான் திகைத்துப் போய் இருப்பதைக்கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்றுகேட்டார்கள். 

நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் சென்றிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன்.

 அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹு தஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய மத்திய இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமானவர்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள். 

 (நூல்கள்; திர்மிதி 739, இப்னுமாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299) 

 இதிலிருந்து பராஅத் இரவைப் போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத் தக்கது என்பதும் தெளிவாகின்றது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிகிறார்கள்:
 பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். 

அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன்.

 அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரவில் தான் இந்த வருடத்தில் பிறக்க விருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்க விருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகின்றது. மேலும் இந்த இரவில் தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. இந்த இரவில் தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.  
நூல் : பைஹகி
மிஷ்காத் 1/ 305,  1302

 கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தின் மத்திய  இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.  
( பைஹகீ ஃ பீ ஷுஃபில் ஈமான் 3837)

*மன்னிக்கப்படாதோர்*

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

ஷஃபான் மாதத்தின் மத்திய இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத்முஆத்இப்னுஜபல் (ரலியல்லாஹுஅன்ஹு)
நூல்கள்: இப்னுஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல்அவ்ஸத்) 6776 

அபூமூஸல்அஷ்அரீ (ரலியல்லாஹுஅன்ஹு) இப்னுமாஜா 1390

இவர்களும் மனம் வருந்தி தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிப்பான். 

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதம் மத்திய இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரைத் தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன். 
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹுஅன்ஹு, நூல்:அஹ்மத் 6642)

இந்த இரவில்

ஏற்றம் மிகுந்த இவ்விரவில் செய்ய வேண்டிய நற்கிரியைகளில் இறை மறையின் இதயப் பகுதியாம் சூரத்துல் யாஸீன் மூன்று முறை ஓத வேண்டும்.

1) முதல் முறையில் (அல்லாஹ், ரசூலுக்கு வழிபட்டு) நீண்ட ஆயுள் வாழ்வதற்காக ஓத வேண்டும்.

2) இரண்டாம் முறையில் நோய் நொடிகள், சோதனைகள் துன்பங்களை விட்டு நிவாரணமும், சுகமும், கார்மாணமும் தேடி ஓத வேண்டும்.

3) நம்முடைய தேவைகளில் யாரிடமும் எதற்காகவும் முன்னிற்காமல் தன்னிறைவு பெறுவதற்காகவும் ஓதி துஆ செய்து கொள்ள வேண்டும்.

என்னுடைய மாதம் என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மாதத்தின் எழிலோங்கும் இவ்விரவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் ஓத வேண்டும்.

ஏழை, எளியவர்கள், பசியாளிகள் இவர்களுக்கு உணவு வழங்கி அவற்றின் நன்மையை மரணித்து விட்ட நம் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு சேர்த்து வைக்க வேண்டும்.

நம் அமல்கள் இறைவனிடம் எடுத்துச் செல்லப்படும். இந்நாளின் பகல் பொழுதில் நோன்பிருப்பதும் சுன்னத்தாகும்.

*தொழுகை*

இந்த இரவில் செய்ய வேண்டிய நபிலான தொழுகைகளும் உண்டு.
பல்வேறு விதமான தகவல்கள் இதில் உண்டு. அவைகளிலிருந்து எமது குருமகான் அவர்கள் எமக்கு போதித்ததை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இரண்டிரண்டாக ஆறு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.

முதல் ரக்அத்தில் சூரத்துல் காபிருன் ஓதவும் அடுத்த ரக்அத்தில் சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு) ஓதி தொழுது துஆச் செய்ய வேண்டும்.

*துஆ*

மிஷ்காத் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் எழுதுகிறார்கள்.

ஹழ்ரத் உமர் இப்னுகத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹுஅன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 

'யாஅல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களை பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உறுதிப் படுத்துவாய் உன்னிடம் மூல நூல் உள்ளது'. இந்த துஆவை ஷஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல்: மிர்காத்)

பராஅத் இரவில் நாமும் ஸஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.

அல்லாஹும்ம இன் குன்த கதப்தனா அஷ்கியாஅ ஃபம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ.

 வஇன் குன்த கதப்தனா சுஅதாஅ ஃபஅஸ்பித்னா. ஃபஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது. வஇன்தக உம்முல்கிதாப்

(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது.

 நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து. ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).

இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)

பராஅத் இரவில் நாமும் ஸஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.

நாம் ஓதும் பராஅத் துஆவின் மிகுதமான வாசகம் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும்.

இமாம் சுயூதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அத்துர்ருல் மன்தூர் என்ற அவர்களின் தப்சீரில் 13:39 என்ற வசனத்தின் விளக்க உரையில் கூறுகிறார்கள்;

 இப்னு அபீ ஷைபா அவர்கள் தனது அல்முஸன்னஃப் என்ற ஹதீஸ் கிரந்தத்திலும் இப்னு அபித்துன்யா அவர்கள் தனது அத்துஆ என்ற ஹதீஸ் தொகுப்பிலும் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். 

وأخْرَجَ ابْنُ أبِي شَيْبَةَ في «المُصَنَّفِ»، وابْنُ أبِي الدُّنْيا في الدُّعاءِ عَنِ ابْنِ مَسْعُودٍ قالَ: ما دَعا عَبْدٌ قَطُّ بِهَذِهِ الدَّعَواتِ إلّا وسَّعَ اللَّهُ لَهُ في مَعِيشَتِهِ يا ذا المَنِّ ولا يُمَنُّ عَلَيْهِ يا ذا الجَلالِ والإكْرامِ يا ذا الطَّوْلِ لا إلَهَ إلّا أنْتَ ظَهِيرَ اللّاجِئِينَ وجارَ المُسْتَجِيرِينَ ومَأْمَنَ الخائِفِينَ إنْ كُنْتَ كَتَبْتَنِي في أُمِّ الكِتابِ شَقِيًّا فامْحُ عَنِّي اسْمَ الشَّقاءِ وأثْبِتْنِي عِنْدَكَ سَعِيدًا وإنْ كُنْتَ كَتَبْتَنِي عِنْدَكَ في أُمِّ الكِتابِ مَحْرُومًا مُقَتَّرًا عَلَيَّ رِزْقِي فامْحُ حِرْمانِي ويَسِّرْ رِزْقِي وأثْبِتْنِي عِنْدَكَ سَعِيدًا مُوَفَّقًا لِلْخَيْرِ فَإنَّكَ تَقُولُ في كِتابِكَ الَّذِي أنْزَلْتَ ( ﴿يَمْحُو اللَّهُ ما يَشاءُ ويُثْبِتُ وعِنْدَهُ أُمُّ الكِتابِ﴾ ) .


ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ய ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.

தொகுப்பு: TSA அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி 
ஆசிரியர் - அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ் 
98415 67213
www.faheemiyapublishers.com