Monday, 28 October 2019

லஞ்சம் வாங்குறது தப்பா?"

நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

“லஞ்சம்” - சுஜாதா கட்டுரை

லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக ‘கையூட்டு‘ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் ‘சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்‘ என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas‘ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்… அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் ‘இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து இருக்கிறதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங் கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் ‘சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு‘ என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.

லஞ்சம் – தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. ‘வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்‘ என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்… எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.

மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு – லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்றொரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்றொருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு ‘ஸாஷே‘ (sachet)அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் – இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், ‘நமக்கேன் வம்பு‘ என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் – பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.
கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் – தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.

முதல் வகையான ‘பெட்டி கரப்ஷன்‘ (petty corruption) என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் – ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். ‘ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன்மெண்ட்‘ (transparent government) என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. ‘தெஹல்கா‘(Tehelka) போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி – ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக – 91 வயதில்!

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!
***********************************************************************
அந்நியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:

"அஞ்சு பைசா லஞ்சம் வாங்குறது தப்பா?"
"தப்பு இல்லைங்க "

"அஞ்சு லட்சம் பேரு, அஞ்சு லட்சம் தடவை அஞ்சு பைசா லஞ்சம் வாங்கினா...??"

"தப்பு மாதிரிதான் தெரியுது,"

"அதுதாண்டா நடக்குது இங்க."
======================================

இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:

"ஏங்க, ஒலகத்துல என்னவோ யாருமே லஞ்சம் வாங்காத மாதிரி சொல்றீங்களே, இந்தியாவுல மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்களா என்ன?"

"லஞ்சம் ஒலகம் பூரா இருக்குடா, என்ன, மத்த நாடுகள்ல கடமையை் மீறத்தாண்டா லஞ்சம், இங்க, கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குறீங்க."

சோழர் காலம் 1000 வருடம்தான் ஆனால் 1400 வருடத்திற்கு முன் இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் லஞ்சம் பற்றி பேசுகிறது .

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ 
(அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:188)

ர.ரா

Sunday, 20 October 2019

நல்லதையே கற்றுக்கொள்ளட்டும்

"எதைக் கற்றுக் கொண்டோம்?...
எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?..."
~~~~~~~.     ~~~~~~~.    ~~~~~~~
மிகச் சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தன் அவர்களின் கதைகளில் ஒன்று.....

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

ஆனால் .. அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின்பு பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான். 

ஆக.... நாம் நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கைக்கான அர்த்தமே....

நம்மிடமிருந்து பிறர் நல்லதையே கற்றுக்கொள்ளட்டும்....

Friday, 18 October 2019

நபி ஜக்கரியா

நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் விண்ணுலகப் பயணம் –மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்,,,

”நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை
செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்...,,,

அதற்கு, நபி ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்,,,

“எனது மகன் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க,நல்லொழுக்கமுள்ள, தெளிவான
சிந்தனையும்,

பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.

இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம்
கொண்டு,

அவருடன் தவறான உறவு
கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள்.

பல முறை அவள் தூதனுப்பினாள்.
ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார்....!!

அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.

இதனால் என் மகன் மீது
சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.

இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும்
அவர்களின் பண்டிகை நாளும் வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு
அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.
இந்நிலையில்,

எல்லா நாட்களையும் விட
அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக்
கண்டு

“இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்” என்றான் அரசன்.

அதற்கவள், ”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலை தான் வேண்டும்” என்று கூறினாள்.

இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்”
என்றான் அரசன்.

ஆனால், அவளோ ”எனக்கு
யஹ்யாவின் தலை தான் வேண்டும்” என்றாள்.
மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த
அரசன்

”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலையைக்
கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை
பிறப்பித்தான்.

அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள்.

நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று
தொழுது கொண்டிருந்தோம்...!!

அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை
வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு
தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம்
கொண்டு சென்றார்கள்.

அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்...

“நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக
இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு,

ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம் )அவர்கள் ”நான் என் ரப்போடு உரையாடிக்
கொண்டிருந்தேன்....

தொழுது கொண்டிருந்தேன் நடந்த எதுவும் எனக்குத்
தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத்
தெரிந்தது” என்று பதில் கூறிவிட்டு…,,,,,

யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை
நேரத்தில் அரசனும்,

அவன் மனைவியும்,
குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும்
அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த
இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்...!!

இதை அறிந்து கொண்ட
இஸ்ரவேலர்கள்,,,, “ஜகரிய்யாவின் இறைவன்
ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான்....!!

இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம்.

நாமும் ஜகரிய்யாவை
ஒன்று திரண்டு கொல்வோம்” என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.

இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன்.

ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது,,,,

எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம்“அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து
கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்றது.

நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ்
வழிகாட்டிக் கொண்டு வந்தான்....,,,,

ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான்.

பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.
இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும்,,,

இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த
இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.

ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இருகூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான்.

அதன் பின்னர் ரம்பத்தால்
மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்”
என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்
“அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு,

ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் “அல்லாஹ் தான்
எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என
நாடியுள்ளான்;

அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை,,,

எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது
ஏற்படவில்லை” என்று பதில் கூறினார்கள்...!!

ஸுப்ஹானல்லாஹ்

( நூல்: அல்பிதாயா வன்
நிஹாயா லி இமாமி இப்னு கஸீர்(ரஹிமஹுமுல்லாஹு அலைஹி)

Sunday, 13 October 2019

உமறுப் புலவர்

வலிமார்களின் வாழ்வினிலே!!!!

அந்த ஊரிலே அவர்கள் மிகபெரும் வள்ளல்
எழைகளுக்கு பொன்னும்,பொருட்களும் அள்ளிக் கொடுத்து இவர்கள் கைககள் சிவந்தே போகும் அந்த அளவுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளல் அவர்கள்..

அவர்களுக்கு அண்ணலம் பெருமானார் நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும் அவர்களது நீண்ட நாள் ஆசை.

அதற்காக ஒரு தமிழ் முஸ்லிம் புலவரை நீண்ட நாட்கள்  தேடுகிறார்கள். ஒருநாள் அப்புலவர் பெருமானை அந்த வள்ளல் சந்திக்கிறார்கள்.

அப்புலவர் பெருமானிடம் நீங்கள் தான் பெருமானார் நபிகள் நாயகம் அண்ணவர்களின் வாழ்க்கை  வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும் என அன்போடு வள்ளல் அவர்கள் கேட்டுக் கொள்ள,,,

அந்த புலவர் அவர்களும் பெருமானார் அண்ணவர்களை பற்றி எழுதுவது என் கடமை என ஒப்புக்கொள்கிறார்கள்.

வள்ளல் அவர்கள் நாம் இக்காரியத்தை செய்யும்  முன் நாம் ஆன்மீக குருவிடம் நாம் அனுமதி வாங்கிக் கொள்வோம் என இருவரும்  குருவைக் காணச் செல்கிறர்கள்
வள்ளல் அவர்கள் குருவிடம் சென்று குரு அவர்களே நான் நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்ப்பதற்க்கு முஸ்லிம் புலரை அழைத்து வந்துள்ளேன் நீங்கள் அனுமதி தந்தால் அதற்கான செயல்பாடுகளை செய்துவிடுவோம் என்றார்கள்.

குரு அவர்கள் அந்த புலவரின் முகத்தை பார்த்தவுடன் பெரிதும் கோபமிட்டார்கள்
அவர்கள் முகம் கோபத்தினால் சிவந்தது
காரணம் பெருமானார் நபிகளாரின் சுன்னத்தான தாடி இவர்முகத்தில் இல்லை..

நபிகளாரின் சுன்னத் இல்லாத இவரா
பெருமானார் அண்ணவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மொழிப்பெயர்க்க போகிறார் என அந்த புலவர்பெருமானை திட்டி அனுப்புகிறார்கள் அந்த ஆன்மீக குரு அவர்கள்.

மிகுந்த மனவேதனையுடன் அந்த புலவர் பெருமான் அந்த இடத்தைவிட்டு எதுவும் பேசாமல் செல்கிறார்கள்

வள்ளல் அவர்களும் எதுவும் பேசமுடியாமல் அழுகிறார்கள்.

மனவேதனையுடன் சென்ற அந்த புலவர் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் இறையஞ்சுகிறார்கள் .

பின்பு கவலையின் காரணமாக தூக்கம் அவரை ஆட்க்கொள்கிறது.

புலவர் அவர்கள் தூங்கும் போது அவர்களின் கனவில் எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அண்ணவர்கள் தோன்றி

புலவரே! எம்முடைய வாழ்க்கை வரலாறை நீம் தான் மொழிப்பெயர்க்க வேண்டும் அந்த ஆன்மீக குருவிடம் நான் பேசிக்கொள்கிறேன் நீர் அங்கே செல்லும்  அவரே  என்னுடைய வாழ்க்கை வரலாறை உம்மிடம் தருவார்
நீர் பாடும் ! என்று சொல்லி மறைகிறார்கள்.

தூக்கத்தில் இருந்து விழித்த புலவர் பெருமான் அவர்கள் அந்த ஆன்மீக குருவை பார்க்க செல்கிறார்கள்

அதே போல் அந்த ஆன்மீக குருவின் கனவில் சென்ற எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அண்ணவர்கள் ,,,
சீடரே! புலவர் உன்னிடம் வந்த பொழுது அவரின் உள்ளத்தை பார்க்காமல்  தோற்றத்தை வைத்து தவறாக புரிந்து கொண்டீரே.

அவர் நாளை உம்மிடம் வருவார் அவருக்கு என்னுடைய வாழ்க்கை வரலாறு உரையை கொடும் என்று சொல்லி மறைகிறார்கள்.

பெருமானாரின் திருக்காட்சியை கண்டு பதறி  எழுந்த அந்த ஆன்மீக குரு அவர்கள் காலை பஜர் தொழுகையை முடித்துவிட்டு

தம் வீட்டுவாயிலை திறந்து வைத்து அந்த புலவர்பெருமானுக்காக காத்திருக்கிறார் அந்த ஆன்மீக குரு அவர்கள்
அந்ந புலவர் அவர்களும் அங்கு வந்தார் அப்பொழுது அங்கு நிலவிய மகிழ்சிக்கோ அளவில்லை வள்ளல் அவர்களையும் அங்கே வரவழைத்து அன்று இரவு நடந்த சம்பவங்களை அந்த ஆன்மீக குரு அவர்கள் அந்த புலவர் பெருமானிடம் கூறினார்கள்.

அந்த புலவர் பெருமானும் நபிகளார் தோன்றியதை ஆன்மீக குருவிடம் கூறினார்கள்  பின்பு அந்த ஆன்மீக குரு அவர்கள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை அந்த புலவர் பெருமானிடம் கொடுக்கிறார்கள்

அந்நூல் தான் தமிழ் வரலாற்றில் இஸ்லாமிய மக்களிடம் மட்டுமில்லாது எல்லா மதமக்களிடமும் இன்றும் நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய எம்பெருமானாரின் வரலாற்று நூலாகிய
"சீறாப் புராணம்" என்னும் தீந்தமிழ் அழியப் புகழ்பெற்ற தமிழ் காவியம்

இப்பெரும் நூல் தமிழில் மொழப்பெயர்க்க காரணமாக இருந்த அந்த வள்ளல்
இன்றைக்கும் மக்களால் புனைப்பெயரால் அவர்களின் பெயர் அழைக்கப்படும்
"மறைந்து கொடை கொடுத்தார் " இறைநேசர்
வள்ளல் சீதக்காதி ஷெய்கு அப்துல் காதிர் மரக்கையார்(ரஹ்) அண்ணவர்கள்.

பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை மொழிப்பெயர்க்க  அனுமதி கொடுத்த அந்த ஆன்மீக குரு அவர்கள் "இறைநேசர்"
ஞானமேதை கீழக்கரை
சதக்கத்துல்லாஹ் அப்பா(ரஹிமஹூல்லாஹ்)அண்ணவர்கள்

இப்பெரும் அழியா தமிழ் காவியத்தை கொடுத்தவர்கள் மக்களால் இறைநேசர்
"உமறுப் புலவர் " என்று அழைக்கப்டும்
காசிம் புலவர்(ரஹிமஹூல்லாஹ்)அண்ணவர்கள்...

Sufi Cisthi

Saturday, 12 October 2019

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

مصابيح المحراب

மிஹ்ராப் விளக்குகள்

WEDNESDAY, 16 APRIL 2014

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...



 

    

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழும் வாழ்க்கையின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். தன் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தான கனவுகளும் இருக்கும்.

எதிர்பார்ப்புகளும் எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளும் இல்லாதவன் சிறந்த மனிதனாகவே கணிக்கப்படமாட்டான்.

ஆம்! ஓர் இறை நம்பிக்கையாளனிடத்திலும் இத்தகைய அம்சங்களும், அதற்கான தேடல்களும் இருக்க வேண்டுமெனெ இஸ்லாம் விரும்புகின்றது.

இல்லையென்றால் “இன்ஷா அல்லாஹ்..” என்ற வார்த்தைப்பிரயோகம் அவசியமில்லாத ஒன்றாக ஆகிப்போயிருக்கும்.

ஆகவே, ஓர் முஃமின் அவனது எதிர்பார்ப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் இறைவனின் விருப்பப்படியும் இறைத்தூதரின் முன்மாதிரியின் படியும் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.

தகாத எதிர்பார்ப்புகளும், அழிவில் ஆழ்த்துகிற எதிர்காலக் கனவுகளும் ஓர் இறை நம்பிக்கையாளனின் ஈமானின் இன்பத்தையே பொசுக்கிவிடும் வல்லமை கொண்டது.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நன்மையானவற்றில் நீங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்.

عَنْ حُسَيْنِ بن عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ يُحِبُّ مَعَالِيَ الأُمُورِ وأَشْرَافَهَا ، وَيَكْرَهُ سَفَاسِفَهَا ".

ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்பாடுகளில் மிக உயர்வானதையும், சிறப்பானதையுமே நேசிக்கின்றான். காரியங்களில், செயல்பாடுகளில் மிகவும் கீழானவற்றை வெறுக்கின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                        (நூல்: தப்ரானீ, 2856)

எதிர் காலத்தைப்பற்றிய இலட்சியங்களாக இருக்கட்டும், வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகளாக இருக்கட்டும் அதற்கான எல்கை எது என்பதை மேற்கூறிய ஆயத்தும், நபிமொழியும் நமக்கு உணர்த்துகின்றது.

முஸ்லிம்களின் தலைமையும்... எதிர்காலமும், எதிர்பார்ப்பும்….

இந்த உம்மத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சமுதாய அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்களுக்கு மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்கூடாக கண்டுவருகின்றோம்.

ஏற்கனவே 58 இஸ்லாமிய அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாய் ஓர் அமைப்பு உதயமாகி விட்டது.

பதவிகளிலும், அதிகாரங்களிலும் இருந்து சுகம் கண்டவர்கள் ஏதேனும் சில்லரைக் காரணங்களுக்காக ஓர் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டோ, அல்லது விலகும் சூழல் ஏற்படும் போதோ உடனடியாக புதிதாய் ஓர் அமைப்பை தோற்றுவித்து முஸ்லிம்களின் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்தி தங்களின் சுகபோகத்தை தொடர்கின்றனர்.

தேர்தல் நேரங்களில் ஆளுக்கு ஒரு அரசியல் கட்சிகளை தேர்ந்தெடுத்து முஸ்லிம் சமுதாயத்தை அடகுவைத்து மதிப்புமிக்க வாக்குகளை சேதாரமாக்கி, சமுதாயத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.

நம் காலத்து அரசியல் கட்சிகளின் நிலையை நம் இஸ்லாமிய அரசியல் & இயக்க தலைவர்கள் ஒரு போதும் அறிந்து வைத்திட முற்பட்டதில்லை.

கடந்த (2009 – 2014) நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் 162 பேர் ரவுடிகள், கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள்.

இது 30% சதவீதமாகும். இதுவே அதற்கு முந்தைய (2004 – 2009) நாடாளுமன்றத்தில் 24% சதவீதமாக இருந்தது.

 நடக்க இருக்கும் இப்போதைய தேர்தலிலும் இத்தகையவர்கள் தாம் அதிகமாக வெற்றிபெற வாய்ப்பு இருக்கின்றது.

     (வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014,Times Of India: 12.2.2014.)

நமது தேசத்தின் மிகப் பெரும் கட்சியும், தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் கொலைகாரர்.

நமது தேசத்தை ஆளத்துடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மூன்றில் ஒருவர் கொலைகாரர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014 Association Of Democratic Rights)

நமது தேசத்தின் பிரபல கட்சிகளைப் பற்றி அதிர்ச்சியூட்டும் இன்னொரு புள்ளி விபரம்.

நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் (80%சதவீதம் பேர்) கொண்ட கட்சி சிவசேனைகட்சி.

அதற்கு அடுத்து பாரதீய ஜனதா கட்சி 41.7% சதவீதம் பேர்.              ஐக்கிய ஜனதா தளம் 36.84% சதவீதம் பேர். பகுஜன் சமாஜ் கட்சி 28.57% சதவீதம் பேர்.

சமாஜ்வாதி கட்சி 27.27% சதவீதம் பேர். காங்கிரஸ் கட்சி 23.88% சதவீதம் பேர். கம்யூனிஸ்ட் கட்சி 18.75% சதவீதம் பேர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16.16% சதவீதம் பேர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014, The Numbers Story: March 17, 2013.)

கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கிச் செல்வோம். 1947 இந்திய விடுதலைச் சட்டம் ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்த தருணம் அது.

கிளிமண்ட் அட்லி அன்றைய ஆங்கிலேய அரசின் பிரதமர், இந்தியாவிற்கு சுதந்திரம் விரைவில் தந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.

அப்போதைய ஆங்கிலேய அரசின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான வின்ஸ்டன் சர்ச்சில் இப்படிக்கூறினார்:

“You are entrusting the reigns of government in the hand of Rowdies, rascals and free booters they will not stop at anything the very air people breath will be taxed one day.

It will take millions and millions Of Years for the Indians to enter into the periphery of politics”

அதாவது, “இந்தியாவின் பரிபாலனத்தை நீங்கள் கொலைகாரர்கள், குண்டர்கள் கொள்ளையர்கள் ஆகியோரின் கையில் ஒப்படைக்கின்றீர்கள். அவர்கள் அநீதி இழைப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

ஒரு நாள் மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கும் வரி போட்டு விடுவார்கள். அவர்கள் உண்மையான அரசியல் எல்லையைத் தொடுவதற்கு பல நூறு நூற்றாண்டுகள் ஆகும்..”

                      (நன்றி: வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014)

இந்தியா சுதந்திர நாடாக வேண்டும் என்பதில் இஸ்லாமியர்கள் காட்டிய தீவிரம் எத்தகையது என்பதை இந்திய சுதந்திரத்தின் இரத்த வரலாற்றில் பக்கங்களில் நிரம்பவே காணப்படுகின்றது. (அது வேறு விஷயம்)

ஆனால், அன்றைக்கு வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது எவ்வளவு பொருந்திப்போகின்றது இன்றைய நவீன கால அரசியலில்…

இந்த அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் நம்முடைய இயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் நம் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தன்மைகள் கொண்டதாக அடையாளப் படுத்துகின்றனர்.

நபிகளாரின் வாழ்வினிலே….

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் புறப்பட்டு பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வழியில், சுராக்கா இப்னு மாலிக் என்பவர் சிவப்பு நிற நூறு ஒட்டகைகளுக்காக துரத்திக்கொண்டு வருவதை அபூபக்ர் (ரலி) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிக்கின்றார்கள்.

இன்னும் வேகமாக செலுத்துகின்றார்கள் குதிரையை, ஆனாலும் அருகாமையில் வந்து விட்ட சுராக்காவை கண்ட அபூபக்ர் (ரலி) மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முறையிட, அப்படியே குதிரையை விட்டு கீழிறங்கி நின்று கொண்டு பின் தொடர்ந்து வருவதின் நோக்கம் என்ன வென்று சுராக்காவிடம் கேட்டார்கள் {ஸல்} அவர்கள்.

சுராக்கா சொன்னார் “உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினர்” அதற்காகவே பின் தொடர்கின்றேன்.

وروى ابن عيينة، عن أبي موسى، عن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال لسراقة ابن مالك: كيف بك إذا لبست سواري كسرى ومنطقته وتاجه؟ قال: فلما أى عمر بسواري كسرى ومنطقته وتاجه، دعا سراقة بن مالك وألبسه إياهما.

وكان سراقة رجلاً أزب كثير شعر الساعدين، وقاله له: ارفع يديك، وقل: الله أكبر، الحمد لله الذي سلبهما كسرى بن هرمز، الذي كان يقول: أنا رب الناس، وألبسهما سراقة رجلاً أعرابياً، من بني مدلج، ورفع عمر صوته.

அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் சுராக்காவை நோக்கி “சுராக்காவே! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை நீர் அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்? உமது தோற்றம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள்.

சுராக்கா அண்ணலாரிடம் “பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலனையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை வென்றெடுக்கும்! அதன் அணிகலன்கள் உங்களை அலங்கரிக்கும்!” என்று கூறினார்கள்.

ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. சுராக்கா இப்னு மாலிக் (ரலி) அழைக்கப்பட்டு பாரசீக மன்னன் கிஸ்ராவின் அணிகலன்களை அணிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்கள் “மக்களின் இறைவன் நானே என்று சொல்லிக்கொண்டிருந்த ஹுர்முஸின் மகன் கிஸ்ராவினுடைய அணிகலனை ஏகனாம் அல்லாஹ்வின் அடிமையாகிய ஓர் அரபியான சுராக்காவிற்கு அணிவிக்க துணை செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! என்று உரத்த குரலில் முழங்கினார்கள்.

                                   (நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:422)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரசீக வெற்றி சாத்தியமானது.

ஆனால், ”20 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமும், முஸ்லிம்களும் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதில் பெருமானார் {ஸல்} அவர்கள் எதிபார்ப்போடும், வளமான எதிர்கால இலட்சியத்தோடும் இருந்தார்கள்” என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

கைபர் யுத்தத்திலே ஒல்லியான தேகம் கொண்ட வாலிப நபித்தோழர் ஒருவர் ஆயுதத்தைச் சுமந்தவாறு களத்திலே நுழைகின்றார். அவரால் அந்த ஆயுதத்தை இரு கரங்களால் மட்டுமே தூக்க முடியும் என்றொரு நிலை.

பெருமானார் {ஸல்} அவர்கள் அந்த வாலிபரை அழைத்து ”நீர் போரில் கலந்து கொள்ள வேண்டாம்! போய் படைவீரர்கள் அழைத்து வந்துள்ள குதிரைகள் மற்றும் ஒட்டகைக்கு தீனிபோடும் பணியை மேற்கொள்ளுங்கள்!” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

கைபர் வெற்றி கொள்ளப்பட்டது. கனீமத் பங்கு வைக்கப்பட்டது. அந்த வாலிபருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு பங்கை கொடுத்தனுப்பினார்கள்.

அதைப் பெற்றுக்கொண்ட அவர் அதை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் ததும்ப பெருமானார் {ஸல்} அவர்களின் சபை நோக்கி வந்து “அல்லாஹ்வின் தூதரே! இந்தாருங்கள்! நான் இந்த வெகுமதிகளுக்காக போர்க்களத்திற்கு வரவில்லை! உண்மையில் அல்லாஹ்வின் பாதையில் போராடி வீரமரணம் அடைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தான் வந்தேன்! ஆனால் போர்க்களத்தில் நீங்கள் என்னை பங்கெடுக்க அனுமதிக்க வில்லை” என்றார்.

அது கேட்ட நபிகளார் {ஸல்} அவர்கள் அந்த நபித்தோழரை ஆறுதல் படுத்தினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் போர் ஆயுதங்களைக்கூட தூக்க முடியாத அந்த மெலிந்த தேகமுடைய வாலிபரை கைபர் யுத்த களத்தில் அடகு வைத்திருக்க முடியும். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அதை விரும்பவில்லை.

ஆனால், இன்றைய நம் அரசியல் & இயக்க தலைவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் ஏதோ சில லாபங்களுக்காக அடகு வைப்பதைக் காண முடிகின்றது.

ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தையும், சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்கள்.

நபித்தோழர்கள் வாழ்வினிலே…..

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள் “காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்” என்று பேசிக்கொண்டனர்.

”உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி) அவர்கள் தளபதி காலித் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) கடிதத்தைப் பிரித்தார்கள். படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோ “ஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபூ உபைதா (ரலி) நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் “ஸைஃபுல்லாஹ்” என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப்பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன். உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனைகொண்டவனாகவோ காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்! அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்” என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

                              (நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:186-187)

பத்ர் யுத்தகளத்தில் கைதியாக பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுன் நபவீயின் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த சுஹைல் இப்னு அம்ர் அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் பல்லை உடைத்து விடுகின்றேன்! இனி மேல் ஒரு போதும் உங்கள் முன்னால் வந்து நின்று குறைஷிகள் சார்பாக உரையாட மாட்டார்” என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார் “உமரே! அவரை விட்டு விடுங்கள்! பின்னாளில் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிற உரையொன்றை நிகழ்த்துவார்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாகிப் போனது. குறைஷிகளின் பேச்சாளராக – கதீபாக விளங்கிய சுஹைல் (ரலி) அவர்கள் இஸ்லாமிய கதீபாக விளங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித உயிர் இப்பூலகை விட்டு பிரிந்திருந்த தருணம் அது.

மயக்க நிலையில் சில முஸ்லிம்கள். நபி {ஸல்} மிஃராஜ் சென்றிருக்கின்றார்கள் என சில முஸ்லிம்கள். உருவிய வாளோடு உமர் (ரலி) அவர்கள் என பல்வேறு நிலைகளைக் கொண்டிருந்த தருணம் அது.

நாயகத்தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனத்து முஸ்லிம்களிடம் உரையாடிய அந்த உரை நாம் அறிந்ததே.

ஆனால், மக்காவில் முஸ்லிம்களின் நிலை என்ன வென்பதை வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது…

ஹரமுக்கு அருகே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்பு அநாயசமாக நின்று கொண்டு எழுச்சியான உரை நிகழ்த்தினார் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.

சுஹைல் (ரலி) மக்கள் வெள்ளத்தை நோக்கி “ சத்தியமாக முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான். அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமைபடுத்தி முடித்த பின்னரே அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அவர்கள் தங்களது தூதுத்துவத்தை நம்மிடையே மிகச்சரியாகவே கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளார்கள். நம்மை விட்டு முஹம்மத் {ஸல்} பிரிந்து சென்றிருக்கிற இந்த வேளையில் உண்மையில் ஓர் இறைவிசுவாசி அவர்கள் காட்டித்தந்த வழியிலேயே நடை போடுவான்” என்று முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்தச் செய்தி மதீனா நகர மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது, அங்கிருந்த உமர் (ரலி) அவர்கள் ”முன்னரே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இது குறித்து சொல்லியிருக்கின்றார்கள்” என்றார்கள்.

                        (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:590)

உண்மையில் பிளவின் அருகே அந்த சமூகம் நின்று கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மதீனாவில் அபூபக்ர் (ரலி) அவர்களும், மக்காவில் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்களும் அன்றைக்குச் செய்த அந்தப் பிரசங்கம் தான் இந்த உம்மத்தை பெரும் அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்றியது.

இது போன்ற தலைமைப் பண்புகளை கொண்ட தலைவர்களால் மட்டும் தான் இந்த முஸ்லிம் சமூகம் மிகச்சிறந்த எதிர்காலத்தையும், உயரிய எதிர்பார்ப்புகளையும் எய்தப் பெற முடியும்.

சமுதாயத் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து, தங்களைப் புதுப்பிக்க வேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது.

விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் ஒரு போதும் தம் எதிர்பார்ப்புகளை அடைந்து கொண்டது கிடையாது.

உண்மையை உணராத எந்த ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும் பிரகாசமாய் அமைந்தது கிடையாது.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِم

அல்லாஹ் கூறுகின்றான்: “எந்த ஒரு சமூகமும் தம் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை..”

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போன்று இருக்கமாட்டார்கள்..”

ஆகவே, எதிர்காலக் கனவுகளை தூய்மையாக்குவோம்! வாழ்வின் மீதான எதிர்பார்ப்புகளை வாகாய் அமைப்போம்!

நல்ல தலைமையைப் பெற்று, எல்லாமும் பெற ஏகனாம் அல்லாஹ் அருள் புரிவானாக!

                    ஆமீன்! வஸ்ஸலாம்!!










vellimedaiplus at 22:06


7 comments:

samsudeen maslahi16 April 2014 at 22:38

masha allah good kalidh rali nihalchi inraya pala suyanala aasaamyhal& iyakkangalukku nalla paadam

Reply


mohamed ali Rahmani16 April 2014 at 23:24

காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களாக மக்களுக்கு மத்தியில் வலம் வரும் போலிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அற்புதமான வரலாறு! அவர்களிடம் இருந்த இறையச்சத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

Reply


abdur rahman17 April 2014 at 07:43

மௌலானா என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து விட்டீர்கள்! மிக முக்கியமான, அருமையான கட்டுரை,; வாழ்த்துக்கள்! Keep it up

Reply


Abdul Kader17 April 2014 at 11:06

Subject ku poruthamane nigalvugal vasanangal , zajakumullah

Reply


Abdul Kader17 April 2014 at 11:10

Subject ku poruthamane nigalvugal vasanangal , zajakumullah

Reply


M.HAYATH KAN.USMANI18 April 2014 at 08:59

கலத்துக்கு தோதுவான அற்புதமான கட்டுறை. அல்லாஹ் உங்களுடைய கல்வியில் மேலும் பரகத் செய்வானாக. ஆமீன்.

Reply


Karimullah K.m22 April 2014 at 04:57

Jazakallah

Reply



Home

View web version

ABOUT ME

vellimedaiplusView my complete profile

Powered by Blogger.