Sunday, 29 January 2017

முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்)

*அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்கள்*

_மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA, JP_

ஹிஜ்ரி 560ம் ஆண்டு ரமழான் பிறை 27 அன்று (கி.பி 1165 ஆகஸ்ட் 7ம் நாள்) ஸ்பைன் நாட்டின் முர்ஸிய்யா எனும் ஊரில் ​ஷெய்கு அலீ அறபி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்கள்.

முஹ்யித்தீன் இப்னு அறபி(றஹ்) அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களிடம் இவர்களின் தந்தை ஐம்பது வயதாகியும் தனக்கு மகப்பேறு இல்லை என முறையிட்ட போது உங்களின் விதிப்பலகையில் மகப்பேறு எழுதப்படவில்லை. ஆயினும் கவலைப்படாதே என்னுடைய விதியில் எனக்கு ஒரு குழந்தை என் முகுகந்தண்டில் இன்னும் மீதியுள்ளது. அதனை நான் உமக்குத் தருகின்றேன் நீர் என் பின்னே வந்து என் முது கோடு உம் முதுகை வைத்து உரசுவீராக என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் செய்தார். அதன் பின் “உமக்கு ஓர் அறிவார்ந்த ஆண் குழந்தை பிறக்கும் அவருக்கு முஹம்மது முஹ்யித்தீன் எனப் பெயரிடுங்கள். அவர் தம் காலத்தில் குத்புஸ் ஸமானாக விளங்குவார். அவரது புகழ் அகிலமெங்கும் பரவும் என சுபச் செய்தி கூறினார்கள். இவர்கள் பிறந்த போது ஜீலானி நாயகம் வபாத்தாகி ஐந்து மாதங்கள் கழிந்திருந்தன.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் தமது தந்தையிடம் திருக்குர்ஆனை ஓதக்கற்றார்கள். பின்னர் மாலிக் மத்ஹபின் அடிப்படை சட்ட திட்டங்களையும் தம் தந்தையிடமே பயின்றார்கள். பின்னர் திருக்குர்ஆன் விரிவுரையை அபூபக்ர் இப்னு கலாஃபியிடமும், ஹதீதுக் கலையை முஅல்லிப் அபுல் ஹசன் ஷரீஹிடமும் மாலிக் மத்ஹபின் விரிவான சட்ட திட்டங்களை அபுல் காசிம் ஷர்ராத்திடமும் பயின்றார்கள். இப்னு அறபி (றஹ்) அவர்களின் அறிவுக் கூர்மையும் அபார நினைவாற்றலும், நற்குணங்களும் அவர்களை மதித்து மரியாதை செய்யுமாறு முதியோர்களையும் தூண்டியது. இளைஞராக இருந்த இப்னு அறபி அவர்களை ஹதீதுகளுக்கு விளக்கம் சொல்லுமாறு கூறி அவர்களது விளக்கங்களை செவி தாழ்திக் கேட்டுக் கொண்டிருந்தனர் முதியோர்கள்.
இளமையில் இருந்தே இப்னு அறபி (றஹ்) அவர்கள் ஆன்மீகவாதிகளுடன் உறவாடுவதில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன. இக்காலப்பகுதியில் மாபெரும் தத்துவ ஞானியும், கிரேக்க அறிஞருமான அரிஸ் டோட்டிலின் நூல்கஞக்கு விளக்கம் எழுதியவரும் மனித இனத்தின் மாமேதை என்றும் அக் காலத்தில் கருதப்பட்ட அபுல் வலீத் இப்னு ருஷ்த் அவர்களை சந்தித்தார்கள். சந்தித்த பின்னர் இப்னு ருஷ்த் அவர்கள் இப்னு அறபி அவர்களைப் பற்றி கூறும் போது “ நான் ஆராய்ந்து கண்ட முடிவுகளை இப்னு அறபி அவர்கள் அனுபவித்து அறிந்துள்ளார்கள். இத்தகு ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறைவனுடைய கதவுகளை திறந்த ஒருவர் வாழ்ந்த காலத்தில் என்னையும் வாழச்செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்! அவரை என் கண்களால் காணும் பாக்கியத்தை எனக்கு வழங்கிய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்.
இவ்வாறு பல்வேறு இறை நேசச் செல்வங்களையும், அறிஞர்களையும் சந்தித்து அளவளாவினார்கள் இப்னு அறபி (றஹ்) அவர்கள். இதன் போது நாளுக்கு நாள் அவர்களின் ஆன்மீகப் படித்தரம் உயர்ந்து வந்தது. தனிமையை நாடிய அவர்கள் ஒரு சிற்றூர் சென்று அங்குள்ள அடக்க விடத்தில் அமர்ந்து தவம் செய்தார்கள். பெரும் பாலும் பட்டினியாயிருக்கும் அவர்கள், சில வேளை ​வெளியில் வந்து காய்ந்த ரொட்டியை எடுத்து தண்ணீரில் நனைத்து உண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். இக் காலப்பகுதியில் ஹிஜ்ரி 594 ல் ஒரு விஷேட கனவொன்று கண்டார்கள்.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் அதை புதூஹாத்துல் மக்கிய்யா எனும் நூலில் அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள். “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அரிய​ணையில் வீற்றிருக்கிறார்கள். அவர்களைச் சூழ ஆதம் (அலை) அவர்கள் முதல் உலகில் தோன்றிய 124000ம் நபிமார்களும், பின்னர் வலிமார்களும் அமர்ந்துள்ளார்கள். இவ்வாறான சிறப்பு மிக்க பேரவை கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அறிய நான் ஆசைப்பட்டேன். அதற்கான காரணத்தை ஹூத் (அலை) அவர்கள் பின்வருமாறு விபரித்தார்கள். இத்திருச்சபை உமக்காகவே கூட்டப்பட்டுள்ளது. நபீ (ஸல்) அவர்கள், நபீமார்கள், வலீமார்கள் முன்னிலையில் உம்மை இன்றைய தினம் விலாயத்தே முஹம்மதிய்யாவின் இறுதி வலீயாக பிரகடனம் செய்யப் போகிறார்கள். என்று கூறினார்கள். அவர்கள் இவ்வாறு கூறி வாய் மூடு முன் நபி (ஸல்) அவர்கள் அப்பிரகடனத்தை ​வெளியிட்டார்கள்.
இப்பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களின் புகழ் மேலும் பரவியது. பலரிடமிருந்தும் அன்புக் காணிக்கை பல நூறு திர்ஹங்கள் கிடைத்தன. அவற்றில் தம் குடும்பச் செலவுக்கு போக எஞ்சியதை ஏழைகளுக்கு வழங்கி வந்தார்கள். பிறரின் உதவிப்பணத்தை கொண்டு வாழ விரும்பாத அவர்கள் டமஸ்கஸ் நகரில் வியாபாரம் செய்தார்கள்
அங்கு அவர்களுக்கு பிடவைக்கடை ஒன்றும் இரத்தினக்கடை ஒன்றும் இருந்தன. ஒரு நாள் அவர்களின் கடைக்கு மார்க்க விற்பன்னர் ஒருவர் வந்தார். அவர்களை சோதிப்பதற்காக. மாபெரும் ஞானநூல்களை எழுதும் இவர்கள் எவ்வாறு வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள். என்பது விளங்காத புதிராக இருந்தது. கடைக்குள் நழைந்தும் அவர்கள் பணத்தை குவித்து வைத்து எண்ணிக்கெண்டு இருந்தார்கள். வந்தவரை அமரச் செய்து விட்டு எண்ணுவதில் ஈடுபட்டிருந்த அவர்கள் பாங்கொலியை கேட்டதும் அந்தப்பணத்தை எல்லாம் பெட்டியில் போட்டு விட்டு அவரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு விட்டார்கள். இது வந்தவருக்கு பெரு வியப்பை அளித்தது. பள்ளியில் அவர்களே இமாமாக நின்று தொழவைத்தார்கள். வந்தவரும் பின்னால் நின்று தொழுதார். அப்பொழுது தம் கைத்தடியை , ஹவ்ழுக்கு அருகில் மறந்து வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அது வௌ்ளிப் பூண் கட்டப்பட்ட ஐந்து திர்ஹம் மாத்திரம் பெறுமானம் உள்ள கைத்தடி. தொழுகையை விட்டுவிட்டு அதனை எடுந்து வந்து மீண்டும் தொழ அவர் எண்ணினார். அதற்கு மார்க்கத்தில் இடம் உள்ளது என்று அவரின் ​வெளி மனம் கூறியது.
எனினும் இந்த அற்பப் பொருளுக்காகத் தொழுகையை விட்டுச்செல்வதா என்று அவரின் உள் மனம் வாதித்தது. இப்படியான தடுமாற்றத்துடன் தொழுகையை இமாமுடன் சேர்ந்து தொழுது முடித்தார்கள்.
தொழுது முடித்ததும் “ஹவ்ழ்” அருகே சென்று தம் கைத்தடியை பார்த்தார்கள். அது வைத்த இடத்தில் வைத்த படியே இருந்தது. அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு வந்த பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களும் துஆ ஓதி விட்டு வெளியில் வந்தார்கள். தம் முன் எதிர் பட்ட அவரையும் அழைத்துக் கொண்டு உணவுண்ணத் தம் இல்லம் வந்தார்கள். வீட்டில் வகை வகையான உணவுகள் அவர் முன் கொண்டு வந்து பரத்தப்பட்டன. அவரின் உள்ளத்தில் ஒரு கோடி எண்ணங்கள் ஓடி மறைந்தன. “என்ன துறவு இது? பட்டு வாணிபம் செய்து கொண்டு பல வகையான உணவுகளை உண்டு வாழ்வதுவா துறவு?” என தம்முள்ளே தம்மை வினவிக் கொண்டார்.
‘உண்ணுங்கள்’ என்று உபசரித்த வண்ணம் அவரின் முன் பரத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அவரின் உணவுத்தட்டில் எடுத்து வைத்து உண்ணுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
“தாங்கள்?” என்று வினவினார் அந்த மார்க்க விற்பன்னர். “எனக்கான உணவுகள் இப்பொழுது வரும்” என்று கூறினார்கள் அவர்கள்.
இவற்றை விட மேலான உணவுகள் அவர்களுக்கென விஷேடமாக தயாரிக்கப்பட்டிருக்கும் போல் இருக்கிறது. என்று எண்ணிக் கொண்டு அவர் சாப்பிட்டார். அப்போது அவர்களின் ஊழியன் ஒரு கோப்பையில் கஞ்சியையும், ஒரு தட்டில் துவையலையும் கொண்டு வந்து அவர்களி்ன் முன் வைத்தார். துவையலை தொட்டுக் கொண்டு அந்தக் கஞ்சியை பிரியத்துடன் குடித்தார்கள். அவர்கள் அதைக் கண்டதும் அவருக்கு தம் கண்களையே தம்மால் நம்பமுடியவில்லை அப்போது அவர்கள் அவரை நோக்கி “சோதித்தது போதுமா? இன்னும் சோதிக்க வேண்டுமா?” என்று புன்முறுவலுடன் வினவியவண்ணம் “நான் இந்த வியாபாரத்தை பிறருக்கு பிழைப்புக்கு வழி ஏற்படுத்துவதற்காக நடத்தி வருகின்றேனே தவிர, வேறில்லை.
இங்குகுவித்துக்கிடக்கும்பட்டு,நவரத்தினங்களிலோ, பணத்திலோ என்மனம் இலயிக்க நான் ஒரு போதும் அனுமதிப்பதில்லை பட்டும் நவரத்தினமும் கடையில் உள்ளன.பணம் பெட்டியில் உள்ளது. அவற்றை என் உள்ளத்தில் நான் ஒரு போதும் கொலுவேற்றி வைப்பதில்லை”
“நானோ ஒரு சாமான்யன். என்னையே நான் துன்பத்திற்காளாக்கிப் பழக்கப்பட்டவன். பல தடவைகள் ‘ஹவ்ள்’ நீரை அருந்திக் கொண்டு பட்டினி கிடந்துள்ளேன். பாயில் படுக்காது சந்தூக்கில் படுத்துறங்கியுள்ளேன். நான் இப்பொழுது உண்பதோ இந்த எளிய கஞ்சியேயாகும். “ஆனால் தங்களோ மார்க்க விற்பன்னர். தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஹவ்ள் அருகே தாங்கள் மறந்து வைத்து விட்டு வந்த கைத்தடியின் நினைவு வர, தக்பீரை விட்டுவிட்டு அதனை எடுத்து வர எண்ணிணீர்கள். ஐந்து திர்ஹம் மட்டும் பெறுமதியான அதன் மீது தங்களின் உள்ளம் இலயித்து நின்றது. தங்களின் உடல் தான் குனியவும் குப்புறவிழவும், எழுந்து நிற்கவும் செய்தது என்று கூறினார்கள். அத்துடன் அவர் அவர்களிடம் மன்னிப்புக் கோரி மீண்டார்.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஆன்மீக இரகசியஙகளை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்தரைத்த முதல் மனிதராக விளங்கினார்கள். இதனால் ஷைகுல் அக்பர் (மாபெரும் குருநாதர்) என அழைக்கப்படுகின்றார்கள்.
புதூஹாத்துல் மக்கிய்யா, புஸூஸூல் ஹிகம், புதூஹாத்துல் மதனிய்யா, தர்ஜூமானுல் அஷ்வாக், கீமியா அல் ஸஆதத், ஹில்யதுல் அப்தால் முதலான முன்னூற்றுக்குமேற்பட்ட நூல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள்.
அவர்களின் நூல்களின் தனித்தன்மை என்னவென்றால், அவற்றை ஒருவர் படித்துச் சிந்திப்பின் அவரின் இதயம் விசாலமடைகிறது. அவரின் துன்பங்கள் அகழ்கின்றன. அவரின் சிக்கல்களுக்கு ஒரு முடிவு காணப்படுகிறது.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதியில் திருக்குர்ஆனுக்கு ஒரு விளக்கவுரை எழுதத் தொடங்கி பதினைந்து பாகங்களுக்கு விளக்கவுரை எழுதினர். இதன் போது அவர்களுக்கு நோய் ஏற்பட்டது. ‘சூரதுல் கஹ்ப்’க்கு விளக்கவுரை எழுதும் போது அதன் 65 வது வசனம் “இவ்விருவரும் வந்த போது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள் அவர் மீது நாம் அருள் புரிந்து நமக்குச் சொந்தமான ஒரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்தோம்” என்பதற்கு விளக்கம் எழுதும் போது அவர்களின் மூச்சு நின்றது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 638 ரபீஉல் ஆகிர், பிறை 28 (கி.பி 1240 நவம்பர் 16) வௌ்ளிக்கிழமை இரவிலாகும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன்
வலீமார்கள் இவ்வுலகில் சூரியனைப் போன்றவர்கள். இங்கு மறைவது போன்று தெரியும் அங்கு உதயமாகி விடுவார்கள். அங்கு மறைவது போன்று தெரியும் இங்கு உதயமாகி விடுவார்கள்.

இப்னு அரபியும் ,உஸ்மானிய கலீபா முதலாம் சலீமும்

கி.பி 1240ம் ஆண்டு நவம்பர் மாதம் 08ம் திகதி செய்ஹுல் அக்பர் இமாம் முஹியத்தீன் இப்னு அரபி அவர்களை சந்திப்பதற்காக ஓர் அறிஞர் குழுவினர் டமஸ்கஸ் நகருக்குச் சென்றார்கள். எவ்வாறாவது இப்னு அரபியை குப்பார் என்று முத்திரை குத்தி அவர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்ட அவர்களை சந்திக்கச் செல்கிறார்கள். இமாம் இப்னுல் அரபியுடன் விவாதம் உச்சகட்டத்திற்கு செல்கிறது. அங்கு வந்த அறிஞர்களுடனான வாதம வலுப்பெற ஆரம்பிக்கிறது. (வஹ்ஜதுல் வுஜூத் என்ற கோட்பாட்டை காரணங்காட்டி செய்ஹ் இப்னுல் அரபியை கொலைசெய்ய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தொற்றுமையை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்). சிறப்பு நீதிமன்றத்தில் செய்ஹ் இப்னு அரபிக்கெதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது செய்ஹ் இப்னு அரபி அவர்கள் தீடீரென்று 'நீங்கள் வணங்கும் இறைவன் எனது காலுக்கு கீழே இருக்கிறது' என்று கூறினார்;. இப்னு அரபி குப்ரான வார்த்தைகளை பேசினார் என்ற  குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டணை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் இப்னு அரபி அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்தவர்களைப் பார்த்து ' ஷீ'னை நோக்கி 'சீ'  செல்லும் போது உண்மையை மக்கள் உண்மையை அறிந்துகொள்வார்கள் என்று கூறினார். மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது. செல்ஜூக் ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலத்தில் செய்ஹ் இப்னு அரபி அவர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. சுமார் 276 வருடங்களின் பின்னர் உஸ்மானிய கிலாபத்தில் தோன்றிய சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் சுல்தான் சலீம் அல் அவ்வல் (கலீபா முதலாம் சலீம்) அவர்கள் சிரியாவை (ஷாமை) கைப்பற்றினார்கள். உஸ்மானிய கலீபா சலீம் அவர்கள் இமாம் இப்னு அரபி மீது அதிகம் நேசம் வைத்திருந்தார்கள். சிரியா கைப்பற்றப்பட்டவுடன் உடனடியாக கலீபா இமாம் அவர்கள் அடக்கஸ்தலத்திற்கு சென்று ஸியாராவை நிறைவேற்றினார்கள். அங்கிருந்த அறிஞர்களை அழைத்து இமாம் இப்னு அரபி அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை  நடத்தப்பட்ட மண்டபத்தை தனக்கு காட்டுமாறு  கேட்டுக்கொண்டார்கள். வழக்கை விசாரித்தவர்கள் 270 வருடங்களுக்கு முன்னர் அமர்ந்திருந்த இடம் கலீபா அவர்களுக்கு காட்டப்பட்டது. உஸ்மானிய கிலாபத்தின் படைவீரர்கள் அழைக்கப்பட்டு இப்னு அரபி அவர்கள் விசாரிக்கப்பட்ட இடத்தின் நிலத்தை தோன்டுமாறு  கட்டளையிட்டார். ஆச்சரியம் 'இரண்டு செம்புப் பாத்திரங்களில் தங்கம் குவிக்கப்பட்டிருப்பதைக் அங்கிருந்தவர்கள்' கண்டுகொண்டார்கள். இமாம் இப்னு அரபி அவர்கள் 'நீங்கள் வணங்கும் இறைவன் எனது காலுக்கு கீழே இருக்கிறது' என்று மரண தண்டணை வழங்கப்படுவதற்கு முன்னர் தெரிவித்த கூற்றின் உண்மையை சிரியாவின் அறிஞர்கள் அன்றைய தினத்தில் உணர்ந்துகொண்டார்கள். உண்மையில் இமாம் இப்னு அரபி அவர்கள் அன்றை அறிஞர்கள் செல்வத்தின் மீது கொண்டிருந்த பற்றையே 'இறைவன்' என்று கூறினார்கள்.  'ஷீ' 'னை நோக்கி 'சீ'  செல்லும் போது உண்மையை மக்கள் உண்மையை அறிந்துகொள்வார்கள் என்ற கூற்றுக்கான அர்த்தத்தை கலீபா சலீம் அறிந்துகொண்டார்கள். இங்கே என்பது ش ஷாமை குறிக்கிறது. س என்பது சலீமைக்  குறிக்கிறது. சுல்தான் سليم  அவர்கள்  الشام  ஐ கைப்பற்றியதைத் தொடர்ந்து  270 வருடங்கள் மர்மமாக இருந்த அரசியல் கொலை அம்பலமானது. இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறான அரசியல் கொலைகள் நிறையவே இடம்பெற்றிருக்கின்றன. செய்ஹ் மன்ஸூர் அல் ஹல்லாஜ் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

பஸ்ஹான் நவாஸ் 
2017.01.31

ஈமானை மூன்று வகை- 72 கிளைகளில்

காலத்தின் மீது சத்தியமாக  - 2

ஈமானும் தக்வாவும் ஒன்றுகொன்று நெருங்கிய தொடர்புடையது ஈமான் அதிகரிக்க அதிகரிக்க ஒரு மனிதனின் தக்வாவும் அதிகரிக்கும் .
தக்வா அதிகரிக்க அதிகரிக்க குர்ஆனின் விளக்கமும் அதிகமாகும் .
உதராணமாக நபியவர்கள் ஈமானின் கிளை எழுபதுக்கும் மேல் என்று கூறினார்கள் .
அணைத்து ஹதீஸ்களையும் ஆய்வுகள் செய்து ஈமானை மூன்று வகையாக முஹத்தீஸீன்கள் பிரித்திருக்கிறார்கள் .

1. உள்ளம் சார்ந்த ஈமான்,
2. நாவு சார்ந்த ஈமான்,
3. உடல் சார்ந்த ஈமான்.

உள்ளம் சார்ந்த ஈமான்:
இதில் 24 கிளைகள் இருக்கின்றன.

1. அல்லாஹ்வை நம்புதல்,
2. வானவர்களை நம்புதல்,
3. வேதங்களை நம்புதல்,
4. இறைத் தூதர்களை நம்புதல்,
5. விதியை நம்புதல்,
6. மறுமையை நம்புதல்,
7. இறைவனை நேசித்தல்,
8. இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, வெறுப்பது,
9. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும், மதிப்பதும்.
10. நபி வழியைப் பின்பற்றுவது.
11. இக்லாஸ் - மனத்தூய்மை.
12. தவ்பா - பாவமன்னிப்புக் கோருவது,
13. அல்லாஹ்வை அஞ்சுவது,
14. இறையருளை நம்புவது,
15. நன்றி செலுத்துவது,
16. வாக்கை காப்பாற்றுவது,
17. பொறுமை காத்தல்,
18. விதியை ஒப்புக்கொள்ளல்,
19. தவக்கல் - இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது,
20. இறக்க குணம் கைக்கொள்வது,
21. பணிவு,
22. தற்பெருமையை கைவிடுவது,
23. பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுவது,
24. கோபத்தை அடக்குவது.

நாவு சார்ந்த ஈமான் :
இது 8 கிளைகளாகும்.

1. ஏகத்துவக் கலிமா(லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)வை உரைப்பது,
2. குர்ஆன் ஓதுவது,
3. கல்வி கற்பது,
4. கல்வி கற்பித்துக்கொடுப்பது,
5. துஆ - பிரார்த்தனை செய்வது,
6. திக்ர் - அல்லாஹ்வை தியானம் செய்வது,
7. வீண் பேச்சுக்களை தவிர்ப்பது.
8. ஒவ்வொரு (நற்)காரியத்தை துவங்கும்போதும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று சொல்லி துவங்குவது .
உடல் சார்ந்த ஈமான் :
இது 38 கிளைகளாகும்.

1. சுத்தம் செய்வது,
2. மர்ம உறுப்புகளை மறைப்பது,
3. தொழுவது,
4. ஜகாத் கொடுப்பது,
5. அடிமையை விடுதலை செய்வது,
6. தர்மம் செய்வது,
7. ஹஜ் செய்வது,
8. நோன்பு நோற்பது,
9. உம்ரா செய்வது,
10. தாஃப் - புனித கஃபாவை வலம் வருவது,
11. இஃதிகாஃப் - இறை இல்லத்தில் தங்கி இருப்பது,
12. லைலத்துல் கத்ர் எனும் சிறப்பு மிக்க இரவை தேடல்,
13. மார்க்க நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் செய்வது (ஊர் துறப்பது).
14. நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது,
15. சத்தியங்களில் நேர்மையாக இருப்பது,
16. குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது,
17. திருமணம் செய்து கொள்வது,
18. குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது,
19. பெற்றோருக்கு நன்மை செய்வது,
20. குழந்தைகளை வளர்ப்பது,
21. உறவைப் பேணுவது,
22. எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவோடும், அடிமைகள் எஜமானர்களிடம் விசுவாசத்தோடும் நடந்து கொள்வது,
23. நீதமான ஆட்சி செலுத்துதல்,
24. சமூக உறவைப் பேணுவது,
25. பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது,
26. சமாதானம் செய்து வைத்தல்,
27. நன்மையான செயல்களுக்கு ஒத்துழைப்பது,
28. குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது
29. அறப்போர் புரிவது,
30. அமானிதத்தைக் காப்பது,
31. கடனைத் திருப்பிச் செலுத்துவது,
32. அண்டை வீட்டாரிடம் அன்பு காட்டுவது,
33. முறையோடு சம்பாதிப்பது மற்றும் செலவழிப்பது,
34. ஸலாமுக்கு பதிலுரைப்பது,
35. தும்மியவர் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறும்பொழுது அவருக்கு "யர்ஹமுக்குல்லாஹ்" என பதிலளிப்பது,
36. மக்களுக்கு தொல்லை தராமலிருப்பது,
37. வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது,
38. நடைபாதையில் கிடக்கும் முற்களை அகற்றுவது.

ஆக மொத்தம் 24+8+38 = 70 கிளைகள் ஈமானில் உள்ளன.ஸஹீஹுல் புகாரியின்.. (விரிவுரையான ஃபத்ஹுல் பாரி)

(இதில் இருக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக சுருக்கமாக பேசினால் கூட 70 பகுதிகள் வெளியிட வேண்டியது இருக்கும்  இன்ஷா அல்லாஹ் அதை பற்றி விரிவாக பிறகு பேசலாம் )

இந்த 70 பதில் ஒவ்வொன்றாக ஒரு மனிதனுக்கு வரும்போது அவனின் ஈமான் அதிகரித்துக்கொண்டே இருக்கும் .ஈமான் அதிகரிக்க அதிகரிக்க இறை அச்சமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் ..

இறை அச்சம் அதிகரிக்க அதிகரிக்க குர்ஆனின் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பிக்கும் .
காரணம் இறைவன் ஹுதல்லில் முத்தகீன் -தக்வா (இறையச்சம்) உடையவர்களுக்கு நேர்வழி காட்டும் என்று கூறுகிறான் ..

(இன்ஷா அல்லாஹ் நாளை)

Friday, 27 January 2017

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை சரிதைகள்

🌾 *"இமாமே தரீகத் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் மாமேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை சரிதைகள்"🌾*

♣ *இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு பிறப்பு*

எமது ஆத்மீக ஞான ஆசிரியர், சத்தியத்தின் வழிகாட்டி, அறிவுக்கடல், மாபெரும் சிந்தனையாளர், இஸ்லாமிய எழுத்துலக மாமன்னர், தத்துவ பேரறிஞர், ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், ஜமாலுல் இஸ்லாம், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூஹாமித் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  அபூ ஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் தாவுஸ் அஹ்மத் அத்தூஸி என்பதே இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முழுப் பெயர் ஆகும். எனினும் அவர் கஸ்ஸாலி என்றே அழைக்கப்பட்டார் ஈரான் நாட்டில் தற்காலத்தில் குராசான் பகுதியிலுள்ள மஷ்ஹத் என்று அழைக்கப்படுவதும் அன்று "தூஸ்" என்று அழைக்கப்பட்டதுமான பிரதேசத்துக்கு அருகேயுள்ள தப்ரானில் உள்ள கஸ்ஸால் எனும் கிராமத்தில் ஹிஜ்ரி 450 ரபீயுல் ஆகிர் பிறை 27 (கி. பி. 1058)
இல் பிறந்தார். இவர்களின் தந்தையார் முஹம்மது கியாமுத்தீன் கஸ்ஸாலி ஆவார்கள்.

♣ *இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கல்வி*

இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிறு வயதிலேயே திருக்குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, ஸுபியாக்களின் வரலாறுகள், ஸுபிக்கதைகள் ஆகியவற்றை கற்றார்கள். ஹிஜ்ரி 470 (கி. பி. 1077) இல் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நிஷாப்பூர் சென்று அங்கே புகழ்பெற்று விளங்கிய நிஜாமியா அரபிக்கல்லூரியில் மாணவராக சேர்ந்தார்கள். அங்கே ‘இமாமுல் ஹரமைன்” அபுல் மஆலி அல் ஜுவைனி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெரியாரிடம் மார்க்க கலை, தத்துவ கலை, தர்க்க கலை, மொழி ஆராய்ச்சி, இயற்கை விஞ்ஞானம், ஆத்மஞானக் கல்வி ஆகியவற்றை கற்று சிறந்த மார்க்க மேதையாக விளங்கினார்கள். இவற்றை கற்ற பிறகு மஃரிபா என்னும் ஆத்ம ஞானத்தை யூஸுப் அல் நஸ்ஸாஜ் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெரியாரிடம் கற்றார்கள்.

அவர்களின் நூல்கள் இவ்வளவு சிறப்புற்று விளங்கிய இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திறமைகள் சிறு வயது முதல் வெளிவர தொடங்கிவிட்டது. அவர்கள் எழுதிய முதல் கிதாபு “கிதாபுல் மங்கூல்” ஆகும். இந்த கிதாபை தன்னுடைய ஆசிரியரிடம் காட்டியபோது, அதைப்பார்த்த ஆசிரியர், இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறினார்கள்: “நான் உயிரோடு இருக்கும் போதே என்னை நீங்கள் நல்லடக்கம் செய்து விட்டீர்கள். நான் மரணிக்கும் வரை காத்திருக்கக்கூடாதா? உங்களுடைய இந்த கிதாபு, நான் இதுவரை எழுதியவற்றை எல்லாம் இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது” என்று புகழ்ந்தார்கள்.

பின்னர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாக்தாத்திலுள்ள நிஜாமியா கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். இவர்களின் பயான்களை அரசர்களும், தலைவர்களும், அமீர்களும், மாணவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கேட்டார்கள். இவர்களின் பேச்சு எல்லோரின் மனதையும் கவர்ந்தது. இவர்களின் இஹ்யாவு உலூமித்தீனை உலகத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் ஆர்வத்தோடு விரும்பி படித்தார்கள். ரிபாய் தரீக்காவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் அஹ்மது கபீர் ரிபாயீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் “புர்ஹானுல் முஅய்யத்” என்ற நூலிலும், ஸுஹ்ரவர்த்தி தரீக்காவின் ஸ்தாபகர் இமாம் ஸுஹ்ரவர்த்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய “அவாரிபுல் மஆரிப்” என்ற நூலிலும் இஹ்யாவு உலூமித்தீனிலுள்ள கருத்துக்கள் பல காணப்படுகிறது.

இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மஃரிபா போதனையை பின்பற்றியே, ஷைகுல் அக்பர் முஹியித்தீன் இப்னு அரபி (ரலியல்லாஹு அன்ஹு) தமது நூல்களை எழுதியுள்ளார்கள். கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “குன்யதுத் தாலிபீன்” என்ற தனது நூலில் நாதாக்களின் ஆதாரங்களை கூறுவதைவிட அதிகமாக இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூல்களில் இருந்தே ஆதாரங்களை கூறியுள்ளார்கள்.  இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூல்கள் ஐக்கிய நாட்டு சபையின் கல்வி கலாசார பிரிவால் ஐரோப்பிய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதன் மூலம் அவர்களின் சிறப்பை விளங்கிக் கொள்ளலாம்.

♣ *இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய சில நூல்கள்*

அவர்களின் நூற்றுக்கணக்கான நூல்களில் சில முக்கியமான நூல்களின் பெயர்கள் பின்வருமாறு:உலக புகழ்பெற்ற இஹ்யாவு உலூமுத்தீன், மின்ஹாஜுல் ஆபிதீன், முன்கித் மினல் ழலால், கஸிதாவுத் தையா, முகாஷபத்துல் குலூப், கிதாபுல் அர்பயீன், அல் ஹிக்மத் – பி – மக்லூகத் தல்லாஹ், ரவ்லத்துத் தாலிபீன், அல் மஆரிபுல் அக்லியா, மிஷ்காத்துல் அன்வர், மீஸானுல் அமல், அர்ரிஸாலத்துல் லதுன்னியா, அல் துர்ரல் பகீராஹ், கீமியாயே ஸஆதத் போன்றவையாகும்.

♣ *இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துறவு*

ஹிஜ்ரி 488 (கி. பி. 1096) இல் பக்தாத்தை விட்டு சிரியா நாட்டுக்கு சென்று காடுகளிலும், மண்டபங்களிலும், தங்கி தியானத்திலும், தொழுகையிலும், நப்ஸை அடக்குவதிலும் ஈடுபட்டு துறவை மேற்கொண்டார்கள். இந்த நேரத்தில்தான் தனது உலக புகழ் பெற்ற மகத்தான நூலான “இஹ்யாவு உலூமித்தீன்” என்ற மாபெரும் கிரந்தத்தை எழுதினார்கள். பின்னர் மக்கா சென்று ஹஜ் செய்தார்கள். பிறகு காஹிரா, இஸ்கந்திரியா போன்ற ஊர்களுக்குச் சென்று வலிமார்களுடைய கப்ரு ஷரீபுகளை ஸியாரத் செய்தார்கள். அங்குள்ள தியான மண்டபங்களில் அமர்ந்து தியானம் செய்தார்கள்.

♣ *இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அழகிய நற்குணம்*

இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கருணை உள்ளமும், தயாள குணமும், விருந்தினரை முக மலர்ச்சியோடு உபசரிக்கும் பண்பும் கொண்டவர்களாக விளங்கினார்கள். எவரையும் இழிவாக பேசுவதையும், புறம் பேசுவதையும் வெறுத்தார்கள். அவர்களிடம் பொறுமை குணம் அதிகமாக காணப்பட்டது. அறிவுக்கும், சிந்தனைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இமாமவர்கள் அறிவைப்பற்றி கூறும்போது, “அறிவு ஒளிமயமானது, அது ஒளி தரக்கூடியது, மனிதனை ஒளிவுடையவனாக ஆக்கக்கூடியது” என்ற கருத்தை கூறுகிறார்கள். மேலும் சிந்தையின் சிறப்பைப்பற்றி கூறும்போது, “சிந்தனை என்பது சிறப்புக் குணம், மனிதன் சிந்தித்தால் எத்தனையோ விதமான அறிவுகளை மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்” என்ற கருத்தை கூறுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட அறிவு மாமேதையின் புத்தகங்களை நாம் வாசித்து பயன்பெற முயற்சிக்கவேண்டும்.சிறப்புகள்உலகமே அவர்களின் சிறப்பை உணர்ந்திருந்த போதும், சில மடையர்கள் அவர்களை குறை கூறிக்கொண்டு இருந்தார்கள். இவ்வாறு ஒரு அறிஞர் எந்நேரமும் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் இஹ்யாவு உலூமித்தீனை குறை கூறிக்கொண்டே இருந்தார்.

ஒரு நாள் இஹ்யாவு உலூமித்தீன் கிதாபை கையில் எடுத்துக்கொண்டு தான் படித்து கொடுக்கும் மத்ரஸாவுக்கு வந்தார். தன் மாணவர்களை பார்த்து, “என் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள், “இஹ்யாவு உலூமித்தீன்” என்றார்கள். அதற்கு அந்த அறிஞர் கூறினார்: “நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் வந்து, என்னை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இழுத்துக் கொண்டு போய், “அல்லாஹ்வின் ரஸுலே! இவர் எனது நூலான இஹ்யாவு உலூமித்தீனை குறை கூறுகிறார். நான் அதில் நீங்கள் சொல்லாத ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கிறேனா?” என்று கேட்டார்கள். அதற்கு எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், ‘இல்லை’ என்று கூறிவிட்டு, நான் குறை சொன்னதற்காக எனக்கு 70 கசையடி கொடுக்க சொன்னார்கள்” என்று இதை கூறி விட்டு அந்த அறிஞர் தனது சட்டையை திறந்து காட்டினார். அவரின் உடலில் இரவில் பட்ட கசையடிகளின் தழும்பு அப்படியே இருந்தது. இதிலிருந்து இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பையும், கண்ணியத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பை, மிகவும் அழகாக எடுத்துக்காட்ட ஷாதுலி தரீக்காவின் ஸ்தாபகர் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் கண்ட ஒரு அருமையான கனவை தெரிவிக்கின்றார்கள்: “ஒருநாள் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டேன். பள்ளிவாசலின் வெளியே ஹரத்தின் நடுவில் சிம்மாசனம் ஒன்று போடப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு வந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அந்த சிம்மாசனத்தை பார்த்தேன். அங்கே எங்கள் பெருமானார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்), மூஸா (அலைஹிஸ்ஸலாம்), ஈஸா (அலைஹிஸ்ஸலாம்), நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) ஆகிய நபிமார்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பேசுவதை நான் கவனித்துக் கேட்டேன். ஸைய்யதுனா மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் “உங்கள் உம்மத்திலுள்ள உலமாக்கள் பனீ இஸ்ராயீல்களின் நபிமார்களை போன்றவர்கள் என்று கூறினீர்களே, எவ்வாறு” என்று கேட்டார்கள்.

உடனே எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இதோ” என்று இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சுட்டிக் காட்டினார்கள். இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) தனது இடத்திலிருந்து எழுந்து பணிவோடு நின்றார்கள். அப்போது நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 10 பதில்கள் அளித்தார்கள். உடனே நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நான் கேட்டதோ ஒரே ஒரு கேள்வி. ஆனால் உங்கள் பதிலோ பத்தாக இருக்கிறதே” என்று கூறினார்கள். அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள். “நீங்களும் இதைப்போன்று தானே செய்தீர்கள். “மூஸாவே உமது வலது கையில் இருப்பது என்ன?” என்று ஒரே ஒரு கேள்வியைத்தானே அல்லாஹ் அஸ்ஸவஜல் உங்களிடம் கேட்டான். அதற்கு இது என் கைத்தடி என்று ஒரே பதிலில் சொல்லி இருக்கலாமே! ஆனால் நீங்களோ இது என் கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்துக் கொள்வேன், இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இல்லை, குலைகளை பறிப்பேன், இன்னும் இதன் மூலம் எனக்கு பல பிரயோசனங்கள் இருக்கின்றது என்று பல பதில்கள் அளித்தீர்களே!” என்று இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதில் கொடுத்தார்கள்.
(தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் – 1, பக்கம் – 230)

இதிலிருந்து இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பையும் அறிவுக்கூர்மையையும் விளங்கிக்கொள்ளலாம்.எனவே இத்தகைய அறிவு மாமேதையின் புத்தகங்கள் தமிழிலும் வெளிவந்துள்ளதால் நாமும் அவற்றை வாசித்து பயன் பெற முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக நாம் இஹ்யாவு உலூமித்தீன் போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் அறிவும், சிந்தனையும், நற்குணமும், ஒழுக்கமும் உண்டாகும். இத்தகைய சிறப்புக்குரிய இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு கொடுத்து அறிவைப் போன்று, ஒரு சிறிதளவாவது ஏழைகளான நமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் தந்தருள்வானாக

*நன்றி : Mail of Islam*

http://www.mailofislam.com/imam_ghazzali_history_tamil.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY :- Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

கல்விக் கடல்  என்றும், ஆன்மீக ஊற்று என்றும் நாமெல்லாம் கொண்டாடும் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் ஒரு தாயின் பேணுதலான வளர்ப்பில் உருவானவர்கள்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் தாயாருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் முஹம்மத் அல்கஸ்ஸாலி- இன்னொருவர் அஹ்மத் அல் கஸ்ஸாலி. இவர்களின் தாயார் இவ்விருவரையும் மிகச்சிறந்த அறிஞர்களாகவும் வணக்கசாலிக  ளாகவும் உருவாக்கினார்கள்.

இதில் முஹம்மத் அல்கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்று மக்களுக்கு இமாமத் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டார்கள். இவர் சகோதரர் அஹ்மத் அல் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் மாபெரும் வணக்கசாலி என்றாலும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்குப் பின்னால் தொழமாட்டார். இது அவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர்களின் தாயாரிடம் முறையிடுகிறார்கள். அவர்களின் தாயாரும் அஹ்மத் அவர்களை அழைத்து நீ உன் சகோதரருக்குப் பின்னால் தொழவேண்டுமென கண்டிப்புடன் கூறவே அதை ஏற்றுக்கொள்கிறார்.

ஒருநாள் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்கு பின் தக்பீர் கட்டித் தொழ ஆரம்பித்தார். இரண்டு இரக்கஅத் தொழுகையில் முதல் இரக்கஅத்தை இமாம் அவர்கள் நிறைவு செய்தபோது அவர்களின் சகோதரர்  தக்பீரை நிறுத்தி விட்டு இடையிலேயே சென்றுவிட்டார். இது இமாம் கஸ்ஸாலிக்கு இன்னும் மிகுதியான வேதனையளித்தது.

மீண்டும் அவர்களின் தாயாரிடம் முறையிட்டபோது, அவ்விருவரையும் அழைத்து அவர்களின் தாயார் விசாரித்தார்கள்.
அப்போது  இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் சகோதரர் - "தாயார் அவர்களே! என் சகோதரர் முதல் இரக்கஅத்தில் இறைச் சிந்தனையுடன் தொழுதார். இரண்டாவது இரக்கஅத்தில் அல்லாஹ்வின் சிந்தனை அவருக்கு தவறிவிட்டது. இதை நான் கஷ்பின் மூலம் தெரிந்து கொண்டேன். எனவே நான் தக்பீரை நிறுத்தி விட்டுத் தனியாக தொழுதேன்" என்று கூறினார்கள்.

இது குறித்து இமாம் கஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி அவர்களிடம் விசாரித்தபோது, மறுக்காமல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார்கள். நான் தொழுகைக்கு முன் நிபாஸ் எனும் மார்க்கச்சட்டம் குறித்து கிதாபை ஆய்வு செய்துகொண்டிருந்தேன்.   இந்நிலையில் தொழுகையின் நேரம் வரவே கிதாபை மூடி வைத்துத் தொழ வந்துவிட்டேன்.எனவே தான் இரண்டாவது இரக்கஅத்தில் நிபாஸ் பற்றிய சட்டங்களில் கவனம் வந்து விட்டது. என்றார்கள்.
அப்போது அவர்களின் தாயார், நீங்கள் இருவரும் தவறு செய்தவர்கள். இமாம் கஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி அவர்களை நோக்கி அல்லாஹ்வின் சிந்தனை தொழுகையில் தப்பிப்போக என்ன காரணத்தை நீ சொன்னாலும் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அவர்களை நோக்கி நீ முதல் இரக்கஅத்தில் அல்லாஹ் வின் சிந்தனையுடன் தொழுதாய். ஆனால் இரண்டாவது இரக்கஅத்தில் உன் சகோதர ரின் குறையின் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டாய் எனவே நீங்கள் இருவரும் நான் விரும்பிய பிள்ளைகளாக இல்லை என்று எச்சரித்தார்கள்.

இதையடுத்து சகோதர ர்கள் இருவரும்
தமது தாயாரிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமன்றி தமது சகோதர உறவையும் பலப்படுத்திக் கொண்டனர்.

இச் சம்பவம் நமக்குத் தரும் படிப்பினை என்ன? என்று சிந்திப்பீர்களா?.... இமாம் கஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி போன்ற மேதைகளுக்கே தொழுகையின் போது தவறுகள் ஏற்பட்டிருக்கும் போது, நம்மைப் போன்ற சாதாரண அடியார்களின் தொழுகைகளை எந்தளவுக்கு அல்லாஹ்தாலா ஏற்றுக் கொள்வான் என்பதை
உணர வேண்டாமா? எனவே அதற்கேற்றவாறு நமது தொழுகைகளை நாம் பக்குவப்படுத்திக் கொள்வோமாக!
நம்மனைவரையும் அந்த கருணையுள்ள றப்பில் ஆலமீன் ஸாலிஹான நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்து வாயிலில் நுழையச் செய்வானாக ஆமீன்..யா றப்பல் ஆலமீன்!

நூல்:-
குதுபாத் துல்பிகார்